Monday, April 30, 2018

சிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு


May 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள். அவர்களுடன் சோஷலிஸ்டுகள், அனார்க்கிஸ்ட்கள் போன்ற பல இடதுசாரி அமைப்புகளும் சேர்ந்து கொண்டன.

 1886 ம் ஆண்டு, மே 1 அன்று தடைசெய்யப் பட்ட பேரணியை நடத்தியதால், கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்ததுடன், துப்பாக்கிப் சூடும் நடத்தியது. அன்றிலிருந்து இன்று வரையில், எட்டு மணி நேர வேலை உரிமைக்காக மரித்த தியாகிகளின் நினைவாக, உலகம் முழுவதும் மேதினம் நினைவுக்கூரப் படுகின்றது.

1969 ம் ஆண்டு, மே 1, இலங்கை அரசு பௌத்த மதப் பண்டிகையை காரணமாகக் கூறி. மேதினத்தை தடை செய்தது. அந்தத் தடையால் துவண்டு விடாத கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள், யாழ் நகரில் ஒன்று கூடி மேதினப் பேரணியை நடத்த திட்டமிட்டன.

தடைசெய்யப் பட்ட பேரணி என்பதால், இரகசியமாக சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க செல்வது போல ஒன்று கூடினார்கள். செங்கொடிகளை சிறிதாக மடித்து சட்டைக்குள் மறைத்துக் கொண்டு சென்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பேரணி ஆரம்பமானது. (தகவலுக்கு நன்றி: Valliammai வள்ளியம்மை சுப்பிரமணியம் Subramaniam)

அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் நடக்கலாம் என எதிர்பார்த்திருந்த படியால், யாழ் நகரில் பொலிஸ் கெடுபிடி அதிகரிக்கப் பட்டிருந்தது. மேதின ஊர்வலத்தை நகர விடாமல் பொலிஸ் தடுத்து தடியடிப் பிரயோகம் செய்து, பலரைக் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

1886 ம் ஆண்டு சிக்காகோவில் அமெரிக்கத் தொழிலாளர்களும், 1969 ம் ஆண்டு யாழ் நகரில் இலங்கைத் தொழிலாளர்களும், ஒரே குறிக்கோளுக்காக தான் போராடினார்கள். அதற்குப் பெயர், பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடு. அமெரிக்காவிலும், இலங்கையிலும், அவர்களை ஒடுக்கிய அதிகார வர்க்கமும் ஒன்று தான். அதற்குப் பெயர், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும் வர்க்க உணர்வுகள் மாறுவதில்லை.

*****

யாழ் நகரில் நடந்த மேதினப் பேரணியை ஒழுங்கு படுத்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் கே.சுப்பிரமணியத்தின் நினைவாக அவரது மனைவி வள்ளியம்மை சுப்பிரமணியம் முகநூலில் எழுதிய பதிவு:

மீண்டும் 1969 மே நாள் மனசைக் கனக்க வைக்கிறது.

“அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. (அத்தோடு உலகின் பல நாடுகளும் தொழிலாளர் உரிமைக்காய் போராடிக்கொண்டிருந்தனர். )

மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 8மணித்தியால வேலையே வேண்டுமென வெண்கொடி ஏந்திய தொழிலாளர்மேல் , அதிகாரவர்கத்தின் ஆணவம் இரத்தம் சிந்தவைத்து , செங்கொடியாக்கியது . ஆனால் இன்றைய அமெரிக்காவில், புரட்டாசி மாத முதல் திங்களே தொழிலாளர் தினம்! நிற்க, பௌத்தவாத அரசியலமைப்புக் கொண்ட இலங்கையில் , 1969 ஆம் ஆண்டு ‘மே’ தினத்தன்றும் இதே போல ‘வெசாக் ‘தினத்தைக் காரணமாக்கி, அம்மேதினத்தைக் கொண்டாடுவதை ஜே ஆர் இன் யூ.என்.பி அரசு தடைசெய்தது. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி யாழ்பாணத்தில் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது. இக்கதையை நான் , பல தடவைகள் தோழர் மணியம் வாயிலிருந்தும் ,சக தோழர்கள் மூலமும் கேட்டிருக்கிறேன். மீண்டும் அதைப் பகிர நினைக்கிறேன்.

கூட்டத்திற்கும்,ஊர்வலத்திற்குமான வியூகத்தை - தலைமை ஏற்றிருந்த தோழர் கே ஏ சுப்பிரமணியம் வகுத்தார். யாழ் நகரில் , மூன்று திரையரங்குகளும் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன் தியேட்டர் சந்தியில் ( இன்றைய லிங்கம் கூல்பார்) இருந்து ஆரம்பிப்பதாகத் தீர்மானம். முதல் நாளிரவே கொடி பிடிப்பதற்கான கம்புகள் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டது. தேவையான கொடிகள் கைக்குட்டைகள் போல மடித்து சேர்ட், டவுசர்களினுள் மறைத்து வைத்துவிட்டு, தியேட்டரில் படம் முடிந்து வெளிவருவது போலவும் , படத்திற்காய் காத்திருப்போர் போலவும் ஊர்வலத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நண்பர்களுக்கும். புகைப்படம் எடுப்போருக்கும் நிச்சயம் ஊர்வலம் நடைபெறும் என்ற செய்தி சொல்லப்பட்டது. இதை பொலிசாரும் அறிந்து கொள்வர் என்பது அவர்கள் அறிந்ததே. ஆனால் மேலதிக தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டது. வழமைபோல அன்று, மூன்று சிறு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு , எனக்கு நம்பிக்கை சொல்லி அவர் கிளம்பி விட்டார். அரசு -மேதினத்திற்கு அனுமதி அளிக்காத்தால் , சந்திப்பு மட்டுமே நிகழும் என நினைத்தேன். அது யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது. .

குறித்த நேரத்தில் எழுச்சியுடன் ஆரம்பித்த அவ்வூர்வலம், எங்கு ஆரம்பித்தது என்பதைப் பொலீசார் கண்டறிவதற்கு முன்னரே , ஊர்வலம் பிரதான பஸ் நிலையத்தை அடைந்து விட்டது. அதனால் கிலேசமும்,கோபமும் அடைந்த போலீசார் மூர்கத்துடன் கண்ணீர்க்குண்டுகளை வீசித் தாக்கினர் பொலிசாரும் ஊர்வலத்தினரும் .தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயங்களுக்கு ஆளாகினர். தோழர் மணியம் மிகவும் தடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு , பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர்.

66இல் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் உடல் நொருங்கி மாறிவந்த வேளையில் , மீண்டும் அவர் நொருக்கப்பட்டது ,என்னை நிறையவே பாதித்தது. தலைமைத் தோழர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். மற்றைய தோழர்களின் உணர்வும், அன்புமே அன்று ஆறுதலாக இருந்தது. ஒரு மாதங்கள் கடந்தும் காயங்கள் மாறாத நிலையில் , ஊர்திரும்பிய தோழர் சண் வீட்டில், தோழர் கன்சூர் அவர்களால் பராமரிக்கப்பட்டார். நித்திரையின்றித் தவித்தார்.

அந்நேரங்களின் நினைவுகள், இன்றும் எனக்கு வலிக்கிறது. அவர் வாழ்வு ஐம்பது வருடங்களாக சுருங்கியதற்கு இவையெல்லாம் காரணமோ? போராட்டங்களுக்கும், தாக்குத ல்களுக்கும் ஒளித்து, எந்த உடல் வலிகளும் அற்று அரசியல் பேசியோர் மத்தியில் , நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சேல் என்ற சொல்லுடன் -தோழர் இறுதிவரை வாழ்ந்தார்.

அக்காலத்தில் பாராளுமன்றத்திற்கு உண்மையான அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் -ஆயுதப்படை, பொலிஸ்டை, விமானப்டை, கடற்படை, நீதிமன்றம், சிறைச்சாலைகள், உயர் அரச உத்தியோகத்தர்கள் இவர்களிடமே இருந்தது. இவற்றை அடித்து நொருக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஐனநாயக அரசு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்ற மாக்ஸ், லெனினஸ வகுப்புகளில் கூறி, பின் புதிய தோழர்களுடன் இணைந்து, இன்றுவரை தளராது, தயங்காது தொடர இத் தியாகங்களே காரணம். 74% இற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் உள்ள எம்நாட்டில் 70% க்கு மேற்பட்டோர் பௌத்தர்கள்.

அவர்களின் மத உணர்வையும், தொன்றுதொட்டு நடந்துவரும் எழுச்சியையும் சரியாக எப்படிப்ப கையாள்வது என்பது கூடத் தெரியாத, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ், மீண்டும் மக்களுருமைக்கான எழுச்சிக்கு தடைவிதிப்பது எவ்வகையில் நியாயம்? அவரை,இடது சாரிய கொள்கையுடையவர் என பெருமைபேசியோரும் உண்டு. சனாதிபதி தனது பதவிக் காலத்தில் தன்னால் செய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்தும் செய்யாமல் விட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக அவர்மீது விதிக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தும்...... 

ஹம் என்ன சொல்ல?

*****

No comments: