Thursday, September 21, 2017

யேசிடி : சாதியம் பேணும் "ஈராக்கின் இந்துக்கள்", அழிந்து வரும் புராதன மதம்!

ஆர்மேனியாவில் உள்ள யேசிடி ஆலயம்
ஈராக்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களுக்கு காலத்தால் முந்திய யேசிடி மதத்தை பின்பற்றும் மக்களைப் பற்றி, நீண்ட காலமாக உலகம் அறிந்திருக்கவில்லை. ஏன், மத்திய கிழக்கிலும், அந்த மக்களின் தேசமான ஈராக்கிலும் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 2014 ம் ஆண்டு, ஐ.எஸ். அல்லது ISIS என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து யேசிடிக்களை படுகொலை செய்த பின்னர் தான், உலகின் கவனம் அவர்கள் மேல் திரும்பியது.

யார் இந்த யேசிடிக்கள்?

வட ஈராக்கில் வாழும், குர்திய மொழி பேசும் இந்தோ - ஆரிய இன மக்கள். அவர்கள் பின்பற்றும் யேசிடி மதம் இஸ்லாத்திற்கு முந்தியது. அரேபியப் படையெடுப்புகள் காரணமாக, இன்றைய ஈராக் முழுவதும் இஸ்லாமிய மயமாகிய போதிலும், யேசிடி மக்கள் புராதன மத நம்பிக்கைகளை கைவிடவில்லை. பெரும்பாலான குர்தியர்கள் காலப்போக்கில் இஸ்லாமியராக மதம் மாறிய போதிலும், இவர்கள் மட்டும் தமது பழைய மதத்தை பின்பற்றினார்கள். 

உதாரணத்திற்கு இப்படி ஒன்றைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக, அல்லது இஸ்லாமியராக மாறி விட்ட பின்னர், சில ஆயிரம் பேர் மட்டும் இந்துக்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் ஈராக்கி - குர்திஸ்தானில் உள்ளது. இதுவே அண்மைக் காலத்தில் அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளின் அடித்தளமும் ஆகும்.

பொதுவாக, ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், யேசிடிகள் பற்றிய அறியாமை நிலவுகின்றது. அவர்கள் பேய், பிசாசை வழிபடுவதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. யேசிடி மதத்தில் பிசாசு, அல்லது சாத்தான் என்ற ஒன்று கிடையாது. அதை ஓரளவுக்கு இந்து மத நம்பிக்கையுடன் ஒப்பிடலாம். "இந்து" என்பது கூட, இந்தியாவில் இருந்த புராதன மதங்களுக்கான பொதுப் பெயர் தான். ஆகவே, யேசிடியையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

யேசிடிக்கள் தினந்தோறும் சூரிய வணக்கம் செய்ய வேண்டும். ஆகையினால், அவர்களை "ஒளியின் குழந்தைகள்" என்றும் அழைப்பார்கள். அதே நேரம், ஏழு அல்லது எட்டு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். மயில் தெய்வம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு புராணக் கதையும் உள்ளது. இறைவன் ஆதாம் என்ற முதல் மனிதனை படைத்து விட்டு, அனைத்து ஜீவராசிகளையும் வணங்குமாறு சொன்னாராம். ஆனால், மயில் மட்டும் மறுத்து விட்டதாம். அந்தக் கதை கூட பிற்காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதாவது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பரம்பலுக்கு எதிர்வினையாக உருவாகி இருக்கலாம். ஏனென்றால், "ஆதாமுக்கு அடிபணியாத மயில் தேவதைக் கதை" இன்றைக்கும் யேசிடிகளின் மதப் பெருமிதங்களில் ஒன்று.

ஆச்சரியப் படத் தக்கவாறு, யேசிடிக்கள் இன்று வரைக்கும் சாதியக் கட்டமைப்பை பேணி வருகின்றனர். இதுவும், அவர்களுக்கு இந்திய இந்துக்களுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. திகைக்காதீர்கள்! நான் சரியாகத் தான் எழுதி இருக்கிறேன். அது சாதி அமைப்பு தான். குறிப்பாக மூன்று வகையான பெரிய சாதிப் பிரிவுகள் உள்ளன. பூசாரிகள் சாதி. இந்தியாவில் பிராமணர்கள் மாதிரி, யேசிடிகள் மத்தியிலும் பூசாரிகள் சாதியில் பிறந்த ஒருவர் மட்டுமே கோயில் பூசாரி ஆகலாம். அதற்கு அடுத்த படியாக கோயில்களுக்கான பல்வேறு பணிவிடைகள் செய்வோர் தனியான சாதியாக உள்ளனர். மூன்றாவது சாதியாக உடல் உழைப்பாளிகள் உள்ளனர்.

சாதிகளுக்குள் உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் பிராமணர்களுக்கு இடையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்றெல்லாம் கோத்திரங்கள் இருப்பதைப் போன்றது. இவற்றை விட, வர்க்க வேறுபாடுகள் தனியானவை. அது எல்லா சாதிகளிலும் ஊடுருவி உள்ளது. வர்க்கப் பிரிவினையானது நவீன காலத்திற்கு உரியது என்பதால், ஒவ்வொரு சாதியிலும் இரண்டு வர்க்கங்கள் இருக்கலாம். 

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம்: திருமணம். யேசிடிகள் தத்தமது சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குள்ளும் குலம், கோத்திரம், வர்க்க வேறுபாடுகளை பார்ப்பதுண்டு. மேலும் ஒருவர் யேசிடி தாய், தந்தையருக்கு பிறப்பதால் மட்டுமே அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். யாரும் மதம் மாறி வர முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட தகவல்களை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அண்மைக் கால அசம்பாவிதங்கள், எவ்வாறு யேசிடி சமூகத்தை பாழ்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். மிகக் கடுமையான சமூக- மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றிய யேசிடிகள், யுத்த அனர்த்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டனர். அண்மைய யுத்தமானது தீராத வடுக்களை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தில் சமூக சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஈராக்கில் யேசிடிகளின் வாழ்விடமான சின்ஜார் மலைப் பிரதேசம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வடக்கே இஸ்லாமிய குர்தியர்கள், தெற்கே இஸ்லாமிய அரேபியர்கள். இரண்டுக்கும் நடுவில் தனித் தன்மை பேணும் யேசிடிக்கள். இது எவ்வளவு கடினமான விடயம் என்று சொல்லத் தேவையில்லை. யேசிடிகள் மொழி அடிப்படையில் குர்தியர்கள். ஆகையினால், குர்திஸ்தான் பாதுகாப்புப் படையான பெஷ்மேர்கா வீரர்கள் தமது பிரதேசத்தை காவல் காப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அதே நேரம், யேசிடி பிரதேசத்தில் கணிசமான அளவு அரேபியர்கள் வாழ்ந்தனர். அவர்களது வீடுகளும் அருகருகே இருந்தன. யேசிடிகளும், அரேபியரும் ஒரே பள்ளிக்கூடங்களில் படித்தார்கள். ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்தார்கள். மற்றைய சமூக வணிகர்களின் கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு சகோதர உணர்வுடன், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2014 ம் ஆண்டு நடந்த ஐ.எஸ். படையெடுப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

அப்போது ஐ.எஸ். இயக்கம் ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குர்திய பெஷ்மேர்கா காவல் காப்பதால், தமது பிரதேசத்திற்கு ஐ.எஸ். வர மாட்டாது என்று யேசிடி மக்கள் நம்பினார்கள். ஆனால், நடந்ததோ வேறு. ஒரு நாள் இரவோடு இரவாக ஐ.எஸ். போராளிகள் யேசிடி கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். காலையில் எழுந்து பார்த்தால், காவல் கடமையில் இருந்த பெஷ்மேர்கா வீரர்களை காணவில்லை. தமது சொந்த இனத்தவர்களே தமக்கு துரோகம் செய்து விட்டனர் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.

ஐ.எஸ்., யேசிடி கிராமங்கள், நகரங்களை கைப்பற்றியதும், சிலர் தற்காப்பு நடவடிக்கையாக தம்மிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டனர். இந்த சண்டைகள் நடந்து கொண்டிருந்த குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏராளமானோர் சின்ஜார் மலைகளின் மேல் ஓடித் தப்பினார்கள். அங்கு உணவு, தண்ணீர் இன்றி பலர் உயிரிழந்தனர். நாட்கணக்காக எந்தவொரு உதவியும் வரவில்லை. பழமைவாதிகளின் குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியில், சிரியாவில் இருந்த PKK/YPG குர்திய படையணிகள் வந்து தான் காப்பாற்றினார்கள். அவர்கள் ஒரு பாதை அமைத்து, அதன் வழியாக யேசிடி மக்களை சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈராக்கி குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஈராக்கி குர்திஸ்தான் அரசியல் தலைமையானது பழமைவாத- தேசியவாதிகளின் கைகளில் உள்ளது. ஆகவே, ஒரு  பிற்போக்கான- பழைமைவாத அரசாங்கம், "வேற்றினமாக நடத்தப்பட்ட" யேசிடிகளுக்கு உதவ மறுத்ததில் வியப்பில்லை.

சின்ஜார் மலையில் PKK/YPG போராளிகள்
ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையில் மத வெறுப்புணர்வும் இருந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய குர்தியர்கள் யேசிடி குர்தியர்களை வெறுத்தனர். குர்தியர்கள் என்றால் இஸ்லாமியர் மட்டுமே என்பதும், ஒரே மொழி பேசினாலும் யேசிடிகள் வேறு இனம் என்பது போலவும் நடந்து கொண்டனர். இது ஈழத்தில் தமிழர் - முஸ்லிம் வெறுப்புணர்வு போன்றது.

அதற்கு மாறாக, PKK/YPG இயக்கத்தினர், மதச்சார்பற்ற சோஷலிசவாதிகள். அதனால் தான் தக்க சமயத்தில் வந்து உதவினார்கள். (பார்க்க: அமெரிக்காவின் "மனிதாபிமான வான் தாக்குதல்" - அம்பலமாகும் பொய்கள் ) இன்றைக்கும் சின்ஜார் மலைப் பகுதி, PKK போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால், யேசிடிகளின் பிரதேசம், எதிர்கால அரசியல் உரிமை கோரல்களுக்கு காரணமாக வாய்ப்புண்டு.

ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளுடன் இருந்த திருமணமான பெண்களும் பண வசதி படைத்த ஐ.எஸ். முக்கியஸ்தர்களால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். அவர்கள் பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலையாட்களாகவும் கொடுமைப் படுத்தப் பட்டனர்.

அந்த வீடுகளில் இருந்த அரேபியப் பெண்களும் யேசிடி பெண்கள் மீது இரக்கப் படவில்லை. அவர்கள் உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல், இன்னும் அதிகமாக கொடுமைப் படுத்தினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமது கணவன் பாலியல் அடிமையை வைத்திருப்பதால் ஏற்பட்ட பொறாமை. இரண்டு, யேசிடிகள் மனிதர்களே அல்ல என்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வு. 

தற்போது யுத்தம் முடிந்து, ஐ.எஸ். வசம் இருந்த பிரதேசங்களை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. அதனால், ஆயிரக் கணக்கான யேசிடி பெண்களுக்கு விடுதலை கிடைத்தது. இருப்பினும் இன்னும் சிலர், குறைந்தது ஆயிரம் பேராவது, சிரியாவில் சுருங்கி வரும் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கலாம். சிலர் அடிமைகளாக சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாம்.

ஐ.எஸ். எதற்காக யேசிடிகளை அடிமைகளாக்கியது? அதற்கு அவர்கள் பின்பற்றிய கடும்போக்கு மதவாதம் முக்கியமான காரணம். ஒரு  இஸ்லாமிய தேசத்தினுள், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மட்டுமே சிறுபான்மை மதத்தவராக அங்கீகரிக்கப் படலாம். அதற்காக அவர்கள் ஒரு வரியை கட்டி வந்தால் போதும் என்று குரான் சொல்கிறது. ஆனால், யேசிடி போன்ற "குரானுக்கு அப்பாற்பட்ட மதத்தவர்களை" என்ன செய்வது என்று சொல்லப் படவில்லை. 

இது குறித்து ஐ.எஸ். தனது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டது. அவர்கள், இஸ்லாமிய மதம் தோன்றிய காலத்தில், புராதன மதங்களை பின்பற்றிய மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது, "அவர்கள் ஒன்றில் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும், அல்லது கொல்லப் படலாம், அடிமைகளாக விற்கப் படலாம்." 1500 வருடங்களுக்கு முந்திய அரேபியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, ஐ.எஸ். நவீன உலகத்தின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டியது.

தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ள யேசிடி பெண்கள், ஈராக்கி குர்திஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பலர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மறு திருமணம் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மிகவும் பழைமைவாத கட்டுப்பாடுகளை கொண்ட யேசிடி சமூகத்தில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.

ஏனெனில், சிறுவயது முதலே கற்பை வலியுறுத்தி வரும் சமூகம் அது. திருமணம் செய்யும் வரையில் ஒரு பெண் (ஆணும் தான்) கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் மணமுறிவு பெறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறான பழைமைவாத சமுதாயத்தில், ஐ.எஸ். கொடூரர்களால் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப் படுத்தப் பட்ட பெண்களை என்ன செய்வது?

இது தொடர்பாக உள்ளூரிலும், வெளிநாடுகளில் இருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டது. இறுதியில் தலைமை மதகுருவானவர் பாதிக்கப் பட்ட பெண்களை மீண்டும் மதத்தில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். அதற்காக புனித நீர் தெளித்து தூய்மைப் படுத்தும் சடங்கு நடைபெற்றது. இது அந்த மதத்தைப் பொறுத்தவரையில், ஒரு நவீன தோற்றப்பாடு எனலாம். ஏனெனில், வழமையாக வேறு மதத்திற்கு மாறியவர்களை கூட மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

ஒரு தடவை, 2007 ம் ஆண்டு, ஒரு பருவ வயது யேசிடி இளம்பெண், இஸ்லாமிய குர்திய இளைஞனுடன் காதல் வசப் பட்டு கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள். சில மாதங்களின் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரிந்து வந்துள்ளாள். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினரே மறுத்து விட்டனர். அவளது மைத்துனர்களால், பட்டப் பகலில், பலர் கூடிப் பார்த்திருக்க, கல்லால் அடித்து கௌரவக் கொலை செய்யப் பட்டாள்.

ஐ.எஸ். பிரதேசத்தில், பாலியல் அடிமைகளாக சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பெண்களில் சிலர், தாமாகவே முன்வந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்குக் காரணம், இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் அவர்கள் அடிமைகளாக நடத்தப் படவில்லை. சாதாரண "இஸ்லாமிய தேசப் பிரஜையாக" வாழ முடிந்தது. 

இருப்பினும், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு, தப்பியோட முனையக் கூடாது என்றும், அவர்களுக்கு பொறுப்பான முல்லா சுட்டிக்காட்டும் ஒருவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு இருந்தது. இன்று இஸ்லாமியராக மதம் மாறிய யேசிடி பெண்கள், திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சிலநேரம், அவர்களது பிள்ளைகளே "யேசிடிகள் பிசாசை வணங்குவோர்" என்று சொல்கின்றன.

யேசிடி சமூகத்தினரின் இன்னொரு பிரச்சினை, அது தற்போது விரைவாக அழிந்து கொண்டிருக்கும் மதமாக உள்ளது. கனடா உட்பட, பல மேற்கத்திய நாடுகள் ஆயிரக் கணக்கான யேசிடிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துச் சென்றுள்ளன. ஏற்கனவே, ஜெர்மனியில் மிகப்பெரியதொரு புலம்பெயர்ந்த யேசிடிகள் சமூகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து சென்று குடியேறியவர்கள். அண்மைக் காலம் வரையில் ஈராக்கில் மட்டுமே குறிப்பிடத் தக்க யேசிடி சமூகம் பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளது. சிரியா, துருக்கி, ஆர்மேனியா, ஜோர்ஜியாவில், இன்னமும் யேசிடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

யேசிடிகள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணம், அந்தப் பிரதேசத்தில் யாரையும் நம்ப முடியாது என்பது தான். "ஒரே மொழி பேசும்", "சொந்த இனமான" (இஸ்லாமிய) குர்தியர்களைக் கூட நம்பத் தயாராக இல்லை. பெஷ்மேர்கா வீரர்கள் காட்டிக் கொடுத்த துரோகம் காரணமாகத் தான், அவர்களது பிரதேசத்தை ஐ.எஸ். ஆக்கிரமிக்க முடிந்தது. அதே காலத்தில், இன்னொரு அதிர்ச்சியையும் சந்தித்தனர். 

நேற்று வரையில் சகோதரர்கள் போன்று பழகிய அயலவர்களான அரேபியர்கள், ஐ.எஸ். வந்தவுடன் அவர்களுக்கு பின்னால் திரிந்தார்கள். ஒரு சில அரேபியர்கள் பாதுகாப்பு வழங்கியதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையானோர் ஐ.எஸ்.க்கு காட்டிக் கொடுத்ததுடன், சொத்துக்களையும் சூறையாடினார்கள். அந்தப் பிரதேசத்தில், இனப் பிரச்சினை எந்தளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால், எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணரும் யேசிடிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதே பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புள்ள முன்னைய பதிவுகள்: 

1 comment:

Dr.Anburaj said...


இந்த விபரங்களை அறிந்து கொள்ள விரும்பினேன். கிடைத்துவிட்டது.சுவனப்பிாியனில் பதிவு செய்துள்ளேன். வெளியிடலாம் . ஆனால் யேஷ்டி மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகளை ஏதோ சாதாரண விசயம் போல் பட்டும்படாமல் உணா்ச்சியற்று கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது ஒரு குறையாக என் மனதில் பட்டது. பிற மக்களை காபீா் என்?று பட்டம் கட்டி கொலை செய்வது குரான் போதிக்கும் பண்பாடு. இசுலாமிய வரலாறு முழுவதும் இது ஏராளமாக காணப்படுகின்றது.முஹம்மதுவின் மனைவி ஆயிசா ” கலிபா-3 உதுமானை காபீா் என்று திட்டினாா். சில நாட்களில் அவா் கொலை செய்யப்பட்டாா் .உதுமான முஹம்மது -கதிஜா க்கு பிறந்த இரு மகள்களை மணந்தவா்.