Wednesday, July 19, 2017

பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு


[தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : ஏழு)
"இஸ்ரேலின் (முதலாவது) பிரதமர் மெனகம் பெகின் ஒரு பாசிஸ்ட்!" - பிரபல யூத விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Letter to the New York Times, December 4, 1948)
"யூத தேசக் கோட்பாடு, யூத மதத்திற்கே பாதகமாக அமையும்... யூதர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதை விட, அரேபியருடன் சமாதான சகவாழ்வு வாழ்வதே மேல்..." - Albert Einstein (April 17, 1938, in a speech at the Commodore Hotel in New York City)
[Einstein on Israel and Zionism: His Provocative Ideas About the Middle East, by Fred Jerome, (New York: St. Martin’s Press, 2009)]

"நாடற்ற மக்களுக்கு, ஒரு மக்களற்ற நாடு காத்திருக்கின்றது." சியோனிசவாதிகளின் இத்தகைய பிரச்சாரங்களை செவிமடுத்த ஐரோப்பிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனம் யாருமே வாழாத பாலைவனப் பிரதேசம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். பாலஸ்தீனத்தின் (இன்றைய இஸ்ரேல்) தென் பகுதியில் மட்டுமே (நகேவ்) பாலைவனம் உள்ளது என்பதும், பிற பகுதிகள் பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்வளத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஐரோப்பிய யூதர்கள் குடியேறுவதற்கு முன்னரே, பாலஸ்தீன ஒரேஞ் பழங்கள் ஐரோப்பிய சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. தாம் வந்த பின்னரே, பாலைவனத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, இஸ்ரேலில் குடியேறி வாழும் யூத பாமரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத பாமரர்களின் அறியாமையை, சில படித்த தமிழர்களும் பிரதிபலிக்குமளவுக்கு, அது ஒரு பிரச்சார உத்தியாக முன்னெடுக்கப் பட்டது.
1891 ல், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து பாலஸ்தீனம் சென்று வந்த யூதரின் வாக்குமூலம் இது:
"இஸ்ரேல் யாருமே வாழாத பாலைவனம் என்று, இஸ்ரேலுக்கு வெளியே வாழும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கு சில அரேபிய நாடோடிக் குழுக்கள், கழுதைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறோம். அங்கே நிலம் யாருமே வாங்காமல் தரிசாக கிடப்பதாக கருதுகிறோம். ஆனால் உண்மை அதற்கு எதிர்மறையானது. செம் (நோவாவின் புதல்வன்) மின் வழித்தோன்றல்களான அரேபியர்களும் புத்திசாலிகள் தான்...." (ரஷ்ய யூதரான
Asher Ginzberg எழுதிய நூலில் இருந்து.)

அன்றைய பாலஸ்தீனாவின் சனத்தொகை விகிதாசாரம் பின்வருமாறு அமைந்திருந்தது:
முஸ்லிம்கள் 600000
கிறிஸ்தவர்கள் 70000
யூதர்கள் 80000
(பாலஸ்தீன யூதர்கள் 80000 பேர் மட்டில் அங்கே வாழ்ந்து வந்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய யூதர்கள் மட்டுமே வாழ்ந்ததாக, ஐரோப்பாவில் சியோனிசவாதிகள் பரப்புரை செய்தனர்.)

மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 60 % பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் யூத விவசாயிகளும் அடக்கம். ஜெருசலேம் ஆண்டு தோறும், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புனித நகராகும். ஆகவே ஜெருசலேமில் வாழ்ந்த மக்கள் சுற்றுலாத் துறையால் நல்ல வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். யூதர்கள் விவசாயிகளாக மட்டுமல்லாது, அரச உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் போன்ற பதவிகளையும் வகித்து வந்தனர். பாலஸ்தீனத்தில் அரைவாசி காணிகள், முஸ்லிம் நிலவுடமையாளர்களின் சொத்தாக இருந்தது. அவர்கள் தமது நிலத்தை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, பெய்ரூட், டமாஸ்கஸ், இஸ்தான்புல் போன்ற நகரங்களில் சுக போகமாக வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தின் தலைஎழுத்தை மாற்றியதில் இந்த நிலவுடமையாளர்களுக்கும் பங்குண்டு.

முதலாம் உலகப்போரில், பாலஸ்தீனத்தை ஆட்சி செய்து வந்த துருக்கி (ஓட்டோமான் சாம்ராஜ்யம்) தோல்வியுற்றது. பலவீனமடைந்த துருக்கி ஆட்சியாளர்களுக்கு எதிராக அரேபியர்கள் விடுதலைப் போரை நடத்தினார்கள். அரபு விடுதலைப் போராளிகளுக்கு பிரித்தானியா ஆயுத விநியோகம் செய்தது. (பார்க்க : Lawrence of Arabia திரைப்படம்) ஆனால் துருக்கியர்கள் வெளியேறிய உடனேயே, பிரிட்டன் பாலஸ்தீனாவை காலனிப்படுத்தியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக பாலஸ்தீன தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அன்று அரேபியரும், யூதர்களும் தோளோடு தோள் சேர்ந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடினார்கள். பாலஸ்தீன தேசிய காங்கிரஸ், லிபரல் கட்சி, சுதந்திரக் கட்சி போன்ற ஜனநாயகக் கட்சிகள், சுதந்திர பாலஸ்தீனத்தை பொறுப்பேற்க தயாராக இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீன விடுதலைப் போரை நசுக்கின. பாலஸ்தீன எழுச்சியை நிரந்தரமாக ஒடுக்குவதற்காக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனதில் ஒரு சூழ்ச்சித் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.

Mawat Land Ordinance (1920), என்ற நிலவுரிமைச் சட்டம் யூத குடியேற்றங்களை இலகுவாக்கியது. அந்த சட்டத்தின் படி, தொடர்ந்து மூன்று வருடங்கள் பயிர் செய்யப்படாத நிலம் அரசுடமையாகும். மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் யூத முதலாளிகளின் நிதியில் இயங்கிய "யூத தேசிய நிதியம்", சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன நிலங்களை வாங்கியது. அரபு நிலவுடமையாளர்களும் நல்ல விலைக்கு நிலங்களை விற்று விட்டு, குடும்பத்துடன் வெளிநாட்டில் தங்கி விட்டனர். யூத தேசிய நிதியம் வாங்கிய நிலங்களில், கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் குடியேற்றம் இடம்பெற்றது. உண்மையில் பிரிட்டனும் அதை விரும்பியது. அன்றைய வெளியுறவு அமைச்சர் பல்போர் எழுதிய பிரகடனம், யூதர்களை தனி இனமாகவும், இஸ்ரேலை அவர்களுக்கான தேசமாகவும் ஏற்றுக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட காலப்பகுதியில், மொத்த பாலஸ்தீன சனத்தொகையில் 2 % மட்டுமே யூதர்கள்! ஆனால் பல்போரின் நோக்கம் வேறு. அமெரிக்க யூத முதலாளிகளின் முதலீட்டில், ரஷ்ய யூதர்களை குடியேற்ற விரும்பினார். இதனால் பிரிட்டனுக்கு என்ன இலாபம்? அமெரிக்க யூதர்களிடம் இருந்து கடன் பெறலாம். அப்போது தான் உருவாகியிருந்த கம்யூனிச ரஷ்யாவில் இருந்து யூதர்களைப் பிரிக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இல்லை, மூன்று மாங்காய்கள் விழுந்தன. பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது.

யூத குடியேற்றங்கள் அன்று கிப்பூத்ஸ் (Kibbutz) என்று அழைக்கப்பட்டன. அதாவது கூட்டுறவுப் பண்ணைகள். கிப்பூத்ஸ் உறுப்பினர்கள், சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல. பலதரப்பட்ட தொழில்நுட்ப அறிவு படைத்தோராகவும் இருந்தனர். கைத்தொழில் பட்டறைகள், சிறு தொழிற்சாலைகள் என்பன கூட்டுறவுப் பண்ணையில் தோன்றின. எந்த தேவைக்காகவும் அவர்கள் பண்ணையை விட்டு வெளியேறத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைத்தன. ஆரம்ப கால கிப்பூத்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். மேற்கு ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறுவதை விட, அமெரிக்கா செல்வதையே விரும்பினார்கள். கிழக்கைரோப்பிய யூதர்களும் அவர்களை பின்பற்றி அமெரிக்கா சென்று கொண்டிருந்தார்கள். சாதாரண மனிதர்கள் எப்போதும் தொழில் வாய்ப்பை, பணத்தை தேடித் தான் ஓடுவார்கள். யூதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஈழத்தமிழர்கள் எதற்காக இந்தியா செல்வதை விட, செல்வந்த நாடுகளுக்கு சென்று குடியேறுவதை விரும்புகிறார்கள்? ஒரு சாதாரண இந்திய இளைஞன், அமெரிக்கா சென்று வாழ விரும்புவானா, அல்லது ஆப்பிரிக்கா சென்று வாழ விரும்புவானா? அன்று யூதர்களிடம், "இஸ்ரேலில் குடியேற வருகிறீர்களா?" என்று யாராவது கேட்டால், பைத்தியம் என்று நினைப்பார்கள். "அங்கே சென்று என்ன செய்வது? வேலை கிடைக்குமா?" என்று பதில் கேள்வி போடுவார்கள். அதனால் அவர்களுக்கு வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே, கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. "யூதர்கள் தமது மத நம்பிக்கை காரணமாக, அல்லது கொள்கைப் பிடிப்பு காரணமாக இஸ்ரேலுக்கு செல்ல விரும்பினார்கள்." என்பதெல்லாம் சியோனிஸ்ட்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகள். ஆனால், ஹிட்லரின் யூத இனவழிப்புக்கு பிறகு, பெருமளவு யூதர்கள் உணர்வுபூர்வமாக இஸ்ரேல் செல்ல விரும்பியது உண்மை தான். அப்போதும் இஸ்ரேலுக்கு சென்றவர்களை விட, அமெரிக்கா சென்றவர்களே அதிகம். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழ்பவர்களை விட இரண்டு மடங்கு யூதர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றார்கள்.

சியோனிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள் பல ரகசியத் திட்டங்கள் வைத்திருந்தார்கள். கூட்டுறவுப் பண்ணைகளில் வசித்த குழந்தைகளுக்கு ஹீபுரு மொழி வகுப்புகளை நடத்தினார்கள். அவர்களது பாடத்திட்டம், பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கல்விக்கு போட்டியாக அமைந்தது. யூதர்கள் மூடப்பட்ட கல்விக் கூடங்களில் ஹீபுரு மொழி பயின்றது மட்டுமல்ல, மொழியோடு கூடவே தேசியவாதத்தையும் வளர்த்தனர். பாலஸ்தீனர்கள் ஆங்கிலக் கல்வி கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். ஆனால் தமது சமூகத்திற்கென தனியான அரபு வழிக் கல்வியைக் கொண்டிருக்கவில்லை. அன்று பிரிட்டிஷார் அதற்கு அனுமதிக்கவுமில்லை. அதனால் பாலஸ்தீன தேசியவாதம் தோன்ற நீண்ட காலம் எடுத்தது. அது பிற்காலத்தில், யூத பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. "பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் பாலஸ்தீன தேசியவாதத்தை வளர்த்தது.

இலங்கையின் இனப்பிரச்சினையும் இதே மாதிரியான மூலத்தைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்திலேயே, பௌத்த சங்கங்கள் சிங்கள மொழிக் கல்வியளித்து வந்தன. சிங்களத் தேசியவாதமும் கூடவே வளர்ந்தது. பாலஸ்தீனரைப் போலவே, தமிழர்களும் ஆங்கிலம் கற்ற மத்திய தர வர்க்கமாக பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பணியாற்றினார்கள். அதனால் அன்று தமிழ்த் தேசியவாதம் தோன்றுவதற்கான சூழல் நிலவவில்லை. அது பிற்காலத்தில் சிங்கள பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது. இனப்பிரச்சினை தீவிரமடைந்த பின்னரே, "தமிழர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அகதிகளாக அலைகிறார்கள்." போன்ற கதையாடல்கள் உருவாகின. தமது புலம்பெயர் வாழ்வுக்கு, "யூதர்களை உதாரணமாக காட்டுவது" தமிழர்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களும் அவ்வாறே சொல்லிக் கொள்கின்றனர். (பாலஸ்தீனர்கள், தாமும் யூதர்களைப் போல இரண்டாயிரம் வருடம் காத்திருந்தேனும் பாலஸ்தீனம் அமைக்கப் போவதாக சபதமெடுக்கின்றனர்.)

கிப்பூத்ஸ் பண்ணைகள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக இயங்கிக் கொண்டிருந்தன. மேற்குலக யூத நிறுவனங்கள் இரகசியமாக ஆயுதங்களைக் கடத்தி வந்தார்கள். கிப்பூத்ஸ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. முன்னர் ஒரு காலத்தில் "கிப்பூத்ஸ் ஆயுதக் குழுவாக" இருந்த "ஹகானா", பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாகியது. 1929 ம் ஆண்டு, ஜெருசலேம் நகரில், சீருடை தரித்த யூத இளைஞர்கள் இஸ்ரேலிய கொடியுடன் அணிவகுப்பு செய்த பொழுது, அரேபியருடன் கைகலப்பு ஏற்பட்டது. உண்மையில் கூட்டுறவுப் பண்ணைகளில் என்ன நடக்கின்றது என்பது அரேபியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தமது அயலில் ஐரோப்பியர்கள் வந்து குடியேறுவதை, அரேபியர்கள் அச்சத்துடன் அவதானித்தார்கள். ஜெருசலேம் அணிவகுப்பு அந்த அச்சத்தை அதிகரித்தது. இதனால் அரேபியரும், யூதரும் ஆங்காங்கே மோதிக் கொண்டார்கள். பாலஸ்தீன யூதர்களும், இனவுணர்வு கொண்டவர்களாக ஐரோப்பிய யூதர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அரேபியர்களையும், யூதர்களையும் நிரந்தரமாக பிரித்து வைத்த மகிழ்ச்சியில் பிரிட்டிஷ் கனவான்கள், ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தார்கள்.

ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்த யூதர்கள், பிரிட்டனின் அனுமதி இன்றி பாலஸ்தீனாவில் குடியேறி இருக்க முடியாது. யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு தமது மூதாதையர் வாழ்ந்த இடம் என்ற உரிமை பாராட்டினார்கள். ஆனால், பாலஸ்தீன அரேபியர்கள் அதனை ஐரோப்பியரின் காலனியாதிக்கமாக பார்த்தார்கள். ஏனெனில் பாலஸ்தீனாவில் வந்து குடியேறிய அனைவரும் வெள்ளை நிற ஐரோப்பியர்கள். யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக உரிமை பாராட்டிக் கொண்டு, சிங்களக் குடும்பங்கள் குடியேறி வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் எத்தனை ஆக்ரோஷமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்? தமிழ் தேசியவாதிகள் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் நடப்பதாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். இதே போன்ற நிலையில் தானே அன்று பாலஸ்தீன அரேபியர்கள் இருந்திருப்பார்கள்?

அரேபியரின் எதிர்ப்புக் காரணமாக, மேலதிக யூதர்களின் வருகையை பிரிட்டன் தடை செய்தது. இரண்டாம் உலகப்போர் முடிவில், சைப்ரசில் இருந்து யூத அகதிகளை ஏற்றி வந்த கப்பல் கரையை அண்ட விடாமல் தடுத்தது. ஹைபா துறைமுகத்தில் நிறுத்தி வைத்த கப்பலை கிளம்ப விடாமல் தடுப்பதற்காக ஹகானா வைத்த குண்டு, நூற்றுக் கணக்கான அகதிகளை கொன்றதுடன் கப்பலை மூழ்கடித்தது. இந்தப் பிரச்சினை காரணமாக ஹகானாவுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையில் போர் மூண்டது. ஆனால், சர்வதேச அரங்கில், ஐ.நா. மன்றில் இஸ்ரேலை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேறியதால், பிரிட்டன் பாலஸ்தீனாவை விட்டு வெளியேறியது. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய புதிய வல்லரசுகளின் அழுத்தமும் அதற்கு முக்கிய காரணம். அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்பின. அதனால் பாலஸ்தீன பிரச்சினையில் எந்தத் தீர்வையும் காணாமலே, பிரிட்டன் வெளியேறியது.
(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:
6.
இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

2 comments:

sivakumar said...

//அதனால் அன்று தமிழ்த் தேசியவாதம் தோன்றுவதற்கான சூழல் நிலவவில்லை. அது பிற்காலத்தில் யூத பேரினவாதத்தின் எதிர்வினையாகவே உருவெடுத்தது.//"சிங்களப் பேரினவாதத்தின்" என்பதற்கு பதிலாக "யூத பேரினவாதத்தின்" என்று உள்ளது.

//யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக உரிமை பாராட்டிக் கொண்டு, சிங்களக் குடும்பங்கள் குடியேறி வருகின்றன// தமிழர்களின் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்தது உண்மையா?

Kalaiyarasan said...

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்.
யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே ஒரு சிங்களப் பாடசாலை கூட இருந்தது. பெரும்பாலான சிங்களவர்கள் வெதுப்பகம் (bekery) நடத்தி வந்தார்கள். 1983, அதாவது யுத்தம் தொடங்கிய போது, சில சிங்களப் பொது மக்கள் கொலை செய்யப்பட்டதால், பாதுகாப்பு அச்சம் காரணமாக இடம்பெயர்ந்தார்கள். ஆனால் இன்று மீள்குடியேற்றத்திற்கு வந்த சிங்களவர்கள் அனைவரும் முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களா என்பது தெரியாது.