Tuesday, January 31, 2017

முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூல்


"நலன்புரி முதலாளித்துவம்"! - முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யோதிலிங்கம் எழுதிய அரசறிவியல் பாடநூலில் இருந்து:

//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// (அரசறிவியல், பக்கம் 87)

சிறிலங்கா அரச பாடத் திட்டத்திற்கு அமைய, யோதிலிங்கம் எழுதிய இந்த நூலானது, அந்நாட்டில் தற்போது இருப்பதைப் போன்ற "தாராண்மை வாத (லிபரல்) அரசு" கட்டமைப்பு உலகில் சிறந்தது என்று கூறுகின்றது. அதற்காக முதலாளித்துவம் பற்றி இல்லாத கற்பனைகளை புனைகின்றது. அதில் ஒன்று தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்ற கட்டுக்கதை.

நலன்புரி அரசு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன, "நலன்புரி முதலாளித்துவம்"? முதலாளித்துவம் எப்போதும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே நலன்புரிவதாக இருக்கும். அது இயற்கை. அனைத்து மக்களுக்கும் நலன்புரியும் முதலாளித்துவம் உலகில் இருக்க முடியாது. அப்படியானால் அதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல, சோஷலிசம்.

யோதிலிங்கம் வாழும் இலங்கையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகளை போன்றவற்றை அரசு பொறுப்பேற்று செய்கின்றது. ஆனால், அதைச் செய்வது முதலாளித்துவம் அல்ல. இது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.

உதாரணத்திற்கு, இலவச சேவை வழங்கும் அரச மருத்துவமனைகளுக்கு போட்டியாக, தனியார் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துள்ளன. அங்கு நின்றால் காசு, நடந்தால் காசு, லிப்டில் ஏறினால் காசு என்று, நோயாளிகளிடம் பணத்தைக் கறந்து, அவர்களை மனநோயாளிகளாக மாற்றி விடுகின்றன. இதுவா "நலன்புரி முதலாளித்துவம்"?

ஓய்வூதியம் பெற்ற பின்னர், பிரான்ஸில் இருந்து சென்று இலங்கையில் சிலகாலம் இருந்து விட்டு வந்த நண்பர் சொன்னார். "இலங்கையில் தனியார் மருத்துவமனைகளுக்கு செலவிடும் தொகை, பிரான்ஸ் மருத்துவ செலவுகளை விட அதிகம்!" அந்த நண்பர் முன்பு மருத்துவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்குப் பேர் நலன்புரி முதலாளித்துவம் அல்ல, கொள்ளைக்கார முதலாளித்துவம்!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் "நலன்புரி முதலாளித்துவம்" இருக்கிறது தானே என்று கேட்கலாம். ஐயா, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் முதலாளிகளின் குணம் மாறுவதில்லை. நியூ யோர்க்கில் இருக்கும் நாயும் "வவ்....வவ்..." என்று தான் குரைக்கும்! எல்லா முதலாளிகளும் தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, சுரண்டித் இலாபத்தை கூட்டிக் கொள்வது வழமை.

"நலன்புரி முதலாளித்துவம்" நிலவும் நாடுகளில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு இடையிலேயே ஏற்றத்தாழ்வான ஊதியம் வழங்கப் படுகின்றது. அது சிலநேரம் பத்துப், பன்னிரண்டு மடங்கு அதிகம்! உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அடிமட்ட ஊழியரின் சம்பளம் ஆயிரம் டொலர் என்றால், அதே நிறுவனத்தில் நிர்வாகியின் சம்பளம் பன்னிரண்டாயிரம் டொலர்!

நான் நெதர்லாந்திற்கு வந்து இருபது வருடங்களாகின்றன. இத்தனை வருட கால அனுபவத்தில், ஒரு தடவையாவது "நலன்புரி முதலாளித்துவத்தை" காணவில்லை. மாறாக கொள்ளைக்கார முதலாளித்துவம் மட்டுமே கண்டிருக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமல்ல. இங்குள்ள அனைத்து உழைப்பாளிகளும் ஒத்துக் கொள்ளும் உண்மை.

வழமையாக எல்லா நிறுவனங்களிலும் மூன்று பேர் செய்யும் வேலையை, ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் தொழிலாளியாக இருந்தாலும், வங்கியில் கணக்குப் பார்க்கும் ஊழியராக இருந்தாலும், Burn out என சொல்லப் படும் மித மிஞ்சிய வேலைப் பளுவால் பாதிக்கப் படுகின்றனர்.

ஐரோப்பிய தொழிலகங்களில் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்போர் அதிகம். தாங்கு சக்தியை விட அதிகமாக வேலை செய்வதால், பலருக்கு மன உளைச்சல் வந்து நோயாளிகளாக மாறி விட்டனர். ஐரோப்பாவில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் பலர், நாற்பது வயது தாண்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். காரணம், சக்திக்கு மீறிய வேலைப்பளு.

எமது கண் முன்னாலேயே எமது உழைப்பு சுரண்டப் படுகின்றது. இலவசமாக உறிஞ்சப் படும் எமது உழைப்பு, முதலாளிகளின் இலாபமாக மாறுகின்றது. நிர்வாகிகளின் போனசாக மாறுகின்றது. இவர் என்னவென்றால் அது தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பது நலன்புரி அரசு, அது முதலாளித்துவம் அல்ல. அரசு வேறு, முதலாளித்துவம் வேறு. இந்த வித்தியாசம் அரசறிவியல் எழுதிய யோதிலிங்ககத்திற்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. இங்குள்ள முதலாளிகள் மக்களின் நலனுக்காக ஒரு சதம் கூட கொடுப்பதில்லை. அவர்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சுயநலவாதிகள்.

இந்த முதலாளிகள் மக்களின் நலனுக்காக தானம் தர்மம் எதுவும் செய்யத் தேவையில்லை. குறைந்த பட்சம் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உறுதிப் படுத்தினாலே போதும். அந்த விடயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கடந்த தசாப்த காலத்தில் மட்டும் இலட்சக் கணக்கானோர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பல வறுமையில் வாடுகின்றன. அதற்குக் காரணம், கணணி மயமாக்கல், ரோபோ மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி. நூறு தொழிலாளர்கள் செய்த வேலையை ஒரு ரோபோ செய்யும் காலம் வந்து விட்டது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டு, பெருந்தொகை பணத்தை மிச்சம் பிடிக்கின்றன. அதனால் தான் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கின்றது.

அதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு கொடுக்கும் இலட்சக் கணக்கான போனஸ் பணம், பங்குதாரர்களுக்கு கிடைக்கும் இலாபம் போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. வேலையிழந்த தொழிலாளர்கள் தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளட்டும். அதனால், முதலாளிகளுக்கு என்ன கவலை?

இது தான் "நலன்புரி முதலாளித்துவத்தின்" மகத்துவம்! யோதிலிங்கத்தால் எப்படி இவ்வாறு மனச்சாட்சிக்கு விரோதமாக எழுத முடிகின்றது? கொள்ளைக்கார முதலாளித்திற்கு "நலன்புரி" என்று மனிதாபிமான முகமூடி அணிவித்து மாணவர்களை ஏமாற்றுவது நியாயமா? முதலாளிகளின் கொள்ளையை மறைப்பதற்காக "நலன்புரி முதலாளித்துவம்" என்று வெள்ளை அடிப்பது ஒரு பிழைப்பா?

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்
ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

No comments: