Wednesday, August 17, 2016

அவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக்கும் வன்கொடுமைகள்


அகதிகள் தமது தாயகத்தில்  நடக்கும் வன்கொடுமைகளுக்கு அஞ்சி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆனால், புகலிடம் கொடுக்கும் நாடுகளே வன்கொடுமையில் ஈடுபட்டால் அகதிகள் யாரிடம் முறையிட முடியும்? 

கடந்த பத்தாண்டு காலத்திற்குள், ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் சென்றுள்ளனர். தமிழர்கள் மட்டுமல்லாது, ஈரானியர், ஈராக்கியர், ஆப்கானியர், ஆப்பிரிக்கர் என்று பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் அவுஸ்திரேலிய அரசு நாட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக அகதிகளை தொலைதூர தீவுகளில் உள்ள தடுப்புமுகாம்களில் தங்க வைக்கின்றது.

நவுரு, மானுஸ் ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் உள்ளன. நவுரு தீவு ஒரு தனியான தேசம். மானுஸ் தீவு பாப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமானது. சில தினங்களுக்கு முன்னர், மானுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை பறிக்கின்றது என்று, பாப்புவா நியூகினியாவில் வழக்குப் போடப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்மையில் அது மனித உரிமை மீறல் தான் என்பதை ஏற்றுக் கொண்டு தடுப்பு முகாமை மூடி விட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

பாபுவா நியூகினியா அரசும், அவுஸ்திரேலிய அரசும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தன. ஆனால், அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும், அவர்கள் பாபுவா நியூகினியாவில் தொடர்ந்தும் தங்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அகதிகளை பராமரிக்கும் செலவுகளை பொறுப்பேற்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.

ஆனால், நவுரு தீவில் நிலைமை பல மடங்கு மோசமானது. அவுஸ்திரேலிய நிதியுதவியில் பெரிதும் தங்கியிருக்கும் நவுரு அரசு, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதில்லை. வெளியாரை அனுமதிக்காத படியால், முகாம்களுக்குள் என்ன நடக்கின்றது என்ற தகவல் வெளியுலகை அடைவதில்லை. அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஒருவர், இரகசியமாக சென்று முகாமில் வாழும் அகதிகளை சந்தித்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் உலகை உலுக்கின.

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழும் அகதிகள், ஒரு போர் நடக்கும் நாட்டிற்குள் சிக்கிக் கொண்ட மக்களைப் போன்று, கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே சிலர் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அல்லது அது குறித்து யோசித்துள்ளனர். தான் சந்தித்த ஒன்பது வயது சிறுவன் கூட தற்கொலை செய்ய எண்ணியதாக, சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்வலர் தெரிவித்தார். அந்தளவுக்கு, அனேகமாக எல்லா அகதிகளும், ஆண், பெண், சிறுவர் வேறுபாடின்றி மன உளைச்சலால் வருந்துகின்றனர். 

நவுரு தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு. அதனால் நோய் வாய்ப்பட்டவர்கள் கடுமையாக சுகவீனமடைவது மாத்திரமல்ல, யாராலும் பராமரிக்கப் படாமல் கைவிடப் படுகின்றனர். கழிவறைகள் குறைவாகவும், நிலங்கள் அசுத்தமாகவும் காணப்படுகின்றன. சவர்க்காரம் கிடைப்பதில்லை. 

மேலும் பாலியல் அத்துமீறல்களும் தாராளமாக நடக்கின்றன.  குறிப்பாக பெண்கள் முகாமுக்கு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். நவுரு ஆண்களினால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அகதிகள் வேட்டையாடப் படும் மிருகங்கள் போன்று மனிதாபிமற்ற முறையில் நடத்தப் படுகின்றனர்.

உண்மையில், முகாம்களில் நடக்கும் கொடுமைகள் யாவும், அவுஸ்திரேலிய, நவுரு அரசுக்களின் மறைமுக அங்கீகாரத்துடன் நடக்கின்றன. அதனால் யாரிடமும் முறையிட முடியாத நிலையில், அகதிகள் பலர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதனால் தமக்குத் தாமே கத்தியால் கீறி காயமேற்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் வாயை கம்பியால் தைத்துக் கொள்கிறார்கள்.

நவுரு தீவில் உள்ள தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. முகாம் கட்டப்பட்டதில் இருந்து, பராமரிப்பது வரையில் அவுஸ்திரேலிய நிதியில் தான் எல்லாம் நடக்கிறது. 

காவலாளிகள் போன்றவர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அவுஸ்திரேலிய அரசின் நிதியில் தான் இயங்குகின்றன. இதை விட, அவுஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்கின்றனர். நவுரு அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து இயங்குகின்றனர். ஆகவே, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


மேலதிக தகவல்களுக்கு:
Life in Nauru detention: a dark, wretched Truman Show without the cameras
'This is critical': 103 Nauru and Manus staff speak out – their letter in full
Documenten gelekt over misstanden Australisch opvangcentrum

1 comment:

vidiyalgowri.blogspot.in said...

தமிழ் அகதிகள் உட்பட உலகளாவிய அகதிகளும் அவர்களின் தாயக மக்களும் தேச அரசுகளற்ற தேசங்களின் மைந்தர்கள். தேசத்தை கப்பலுக்கு உவமைப்படுத்தினால், இத்தேசங்களின் மக்கள் கப்பல் இன்றி கடலில் தவிக்கும் மக்கள் கூட்டங்கள். நாடுகள் எனும் சாகரத்தில் இவர்கள் கப்பல்கள் இன்றி அலைபாய்ந்து திரிகிறார்கள். இவர்களில் சிலர் தமது சொந்தமண்ணில்(சொந்த தேசத்தில் அல்ல) அலைந்து திரிகிறார்கள். அகதிகள் கடலிலும் மாற்றன் மண்ணிலும் அலைந்து திரிகிறார்கள். தேச உருவாக்கம் ஒன்றுதான் அமது அலைச்சலுக்கு முற்றுப்புள்ளிவைக்கும். அதுவரை அலைந்து திரிதல் தொடரும், அதிலிருந்து நாலாவது உலகத்தவர்களாகிய நாம் தப்பிக்க முடியாது. நிலையாக ஓரிடத்தில் நிம்மதியாக நீடித்து வாழ்வோம் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், சொந்த மண்ணிலும் சரி, அன்னிய மண்ணிலும் சரி, கடலிலும் சரி எமது அவல நிலையைப் பயன்படுத்தி எம்மை ஏமாற்றுபவர்களை எதிர்கொள்வதில் திறமைசாலிகளாக இருக்கவேண்டும். அலைந்து திரிவதற்கான எமது சொந்தப் பொறிமுறையை உருவாக்கவேண்டும். இதற்காக நாம் எம்மை அணிதிரட்டிக்கொள்ளவேண்டும்.