Saturday, May 14, 2016

எல்லோரும் முதலாளிகள் ஆகலாம் என்பது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல்


"எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்" என்பது ஒரு பித்தலாட்டம். மிகப் பெரிய பொய். அது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல். சிலநேரம், தொழிலாளர்களை விட, சிறு "முதலாளிகள்" தான் அதிகமாக சுரண்டப் படுகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

"முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர் என்று சொல்லுங்கள்! ஏனென்றால் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்!" இவ்வாறு பிதற்றிக் கொண்டு திரியும், முதலாளித்துவத்தை ஆதரிக்கும் தற்குறிகளுக்கு இந்த ஆவணப்படம் சரியான பதிலடி கொடுக்கிறது. 

நெதர்லாந்து நாட்டில், எல்லோரையும் தொழில் முனைவோர் ஆகுமாறு அரசு ஊக்குவித்து வருகின்றது. ஆனால், நடைமுறையில் பெரிய நிறுவனங்கள் அவர்களை தொழிலாளர்களை விட மிகவும் மோசமாக சுரண்டி வருகின்றன. இதனால் பல "சுதந்திரமான" "தொழில் முனைவோர்", தம்மை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று கோரிப் போராடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது! 

தபால் துறையை தனியார்மயமாக்கியதால் ஏற்படும் அவலங்களை பற்றிய ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. "Baas in eigen bus" (சொந்த வாகனம் வைத்திருக்கும் முதலாளி) என்ற தலைப்பிலான ஆவணப் படம், எவ்வாறு சிறுதொழில் முனைவோர்கூட பெரும் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர் என்பதை விளக்குகின்றது.

தொண்ணூறுகள் வரையில் அரச நிறுவனமாக இருந்த PTT Post (தந்தி, தொலைபேசி, தொலைத்தொடர்பு நிறுவனம்) அவ்வளவு காலமும் ஊழியர்களுக்கு முழுநேர வேலை கொடுத்து வந்தது. தனியார்மயமாக்கிய பின்னர், பெருந்தொகை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர் அல்லது பகுதி நேர வேலையில் வைத்திருந்தனர். மின்னஞ்சல் வந்த பின்னர் கடிதப் போக்குவரத்து குறைந்துள்ளமையை அதற்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது.

தற்போது, தபால் தொழில்துறையை PostNL என்ற தனியார் நிறுவனம் நடத்துகின்றது. (அதன் பெயரில் "மன்னருக்குரிய" என்ற அடைமொழியும் இருப்பதால், அரச குடும்பத்தின் பங்குகளும் இருக்க வேண்டும்.) இன்றைய நவீன யுகத்தில், கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டாலும், மறுபக்கத்தில் பார்சல்கள் அனுப்பவது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், இன்றைக்கு நிறையப் பேர் இணையக் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர்.

அதனால் PostNL நிறுவனத்திற்கு நிறைய பார்சல் விநியோகஸ்தர்கள் தேவைப் பட்டனர். அதற்காக யாரையும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, "தனியார் தொழில்முனைவோர்களுடன்" ஒப்பந்தம் செய்து கொள்கின்றது.

யார் இந்த "தனியார் தொழில் முனைவோர்"? ஒரு தனி நபர் தன்னை ஒரு நிறுவனமாக பதிவு செய்து கொள்கிறார். அவர் குறிப்பிட்ட சேவையை செய்து கொடுப்பதற்கு பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். இது தான் "சுதந்திரமான", தனியார்", "தொழில்முனைவோர்" என்பதன் அர்த்தம்.

ஆனால், PostNL நிறுவனத்தை பொறுத்த வரையில், அவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. சாதாரண தொழிலாளர்கள் போன்று PostNL க்கு மட்டுமே வேலை செய்ய முடியும். இது சட்டப்படி தவறாகும். விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த கமிஷன் காரணமாக, அவர்கள் PostNL க்கு மட்டும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஒரு பக்கம் அனுப்பப் படும் பார்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், மறு பக்கம் கமிஷன் தொகை குறைக்கப் பட்டுள்ளது.

PostNL க்கு வேலை செய்யும் தனியார் தொழில் முனைவோர் சொந்தமாக வாகனம் வைத்திருக்க வேண்டும். அதாவது பார்சல்கள் எடுத்துச் செல்வதற்கான சிறிய வேன் இருந்தால் தான் ஒப்பந்தம் செய்வார்கள். பெரும்பாலான தொழில் முனைவோரிடம் கையில் பணம் இருப்பதில்லை. அவர்கள் குறைந்தது இருபதாயிரம் யூரோ பெறுமதியான வாகனத்தை, லீசிங் கடனில் வாங்குகிறார்கள். 

அதனால், வருமானத்தில் ஒரு தொகை கடனுக்கான மாதாந்த தவணைப்பணம் கட்டுவதற்கு செலவாகின்றது. நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்தாலும், கையில் சிறு தொகையே மிஞ்சுவதால் தமது ஓய்வூதிய கட்டுப்பணத்தை கூட செலுத்த முடியாமல் கஷ்டப் படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது, பார்சல் விநியோகஸ்தர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப் படுகின்றனர். "லைசன்ஸ் இருக்கிறதா? சீருடை அணிந்துள்ளனரா? பேட்ஜ் குத்தி இருக்கிறதா? வாகனத்தின் கதவு மூடப் பட்டுள்ளதா?" என்றெல்லாம் கண்காணிக்கிறார்கள். பத்து தடவைக்கு மேல் குற்றம் கண்டுபிடிக்கப் பட்டால் ஒப்பந்தம் இரத்து செய்யப் படும். ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். ஆகவே, "தனியார் தொழில் முனைவோர்", உண்மையில் பதிவு செய்யப் படாத தொழிலாளர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகும்.

கடந்த வருடம் (2015ல்) கொடுமைகளை தாங்க முடியாத தொழில் முனைவோர் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைச்சரிடம் மனுக் கொடுத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்தனர். இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். அதற்குப் பிறகு தான் PostNL இறங்கி வந்தது. 12% தொழில் முனைவோரை, நிரந்தர தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ள முன்வந்தது. அதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

ஆயினும், தமக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை என்று, பார்சல் விநியோகஸ்தர்கள் குறைப் படுகின்றனர். அது மட்டுமல்லாது, வேலை நிறுத்தத்தை ஒழுங்கு படுத்தியவர்களின் ஒப்பந்தமும் முறித்துக் கொள்ளப் பட்டது. "விரும்பத் தகாத நடவடிக்கை காரணமாக" ஒப்பந்தத்தை முறிப்பதாக, PostNL அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

"சேவை வழங்குனர்" தன்னுடன் ஒப்பந்தம் செய்யும் "தொழில் முனைவோருடனான" உறவை எந்நேரமும் துண்டித்துக் கொள்ளலாம் என்பது ஒரு பாதகமான அம்சம். இதனால் சாதாரண தொழிலாளிக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை. ஒப்பந்தம் இழந்தவர்கள், PostNL நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால், நீதிபதி அவர்களை தொழிலாளர்களாக கருதாமல், "முதலாளி அல்லது தொழில் முனைவோர்" என்று குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.


ஆவணப் படத்தை பார்வையிடுவதற்கு:

No comments: