Wednesday, March 02, 2016

ஈழத்தில் ஒளிந்திருக்கும் சாதிவெறி அதிசயம்

சாதிவெறியர் துரைரத்தினம் 

"இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்?" 
"புலிகளின் ஆட்சிக் காலத்தில் சாதி முற்றாக ஒழிந்து விட்டது..." 
"ஈழத் தமிழர்களில் சாதிப் பாகுபாடு இல்லை..." 
தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், இப்படியான கருத்துக்களை பொதுத் தளத்தில் அடிக்கடி சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிப்பது போன்று, ஒரு தமிழ் தேசியவாதியே பொதுத் தளத்தில் நடந்து கொண்டுள்ளார். (பார்க்க: உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது! http://kalaiy.blogspot.nl/2016/02/ibc.html)

அவர் ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. புலம்பெயர்ந்து வாழும், புலிகளின் ஆஸ்தான ஊடகவியலாளர் என்பது மாதிரி காட்டிக் கொண்டவர். புலிகளின் நேரடி சிபாரிசின் பேரில் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டவர். இன்று வரைக்கும் தமிழ் தேசிய கொள்கை வகுப்பாளர் போன்று, தினக்கதிர் இணையத் தளத்தில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பவர். அவர் பெயர் இரா. துரைரத்தினம்.

IBC வழங்கிய "வாழ்நாள் சாதனையாளர் விருது"

"உலகத் தமிழ் தொலைக்காட்சி" என்று அழைத்துக் கொள்ளும் IBC நிறுவனம், சுவிட்சர்லாந்தில் நடந்த விழாவில் வைத்து, துரைரத்தினம் என்ற சாதிவெறியருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கியது. இது நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே, சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆயினும் அந்த கண்டனங்களை உதாசீனப்படுத்தி விட்டு விருது வழங்கப் பட்டது.

IBC நிறுவனத்திற்கு நெருக்கமான நிராஜ் டேவிட் செய்த சிபாரிசு காரணமாகத் தான் விருது வழங்கப் பட்டதாக தெரிய வருகின்றது. சுவிட்சர்லாந்தில் வாழும் இன்னொரு "ஊடகவியலாளர்" நிராஜ் டேவிட், துரைரத்தினத்தை தனது குருவாக கருதுபவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுபவர்கள்.

இரண்டு "ஊடகவியலாளர்களுக்கும்", அதே நேரம் IBC க்கும் இடையில், சில ஒற்றுமைகள் உள்ளன. இவர்கள் எல்லோரும் தீவிர வலதுசாரிகள். பழமைவாத மரபுகளை பேண விரும்புபவர்கள். இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள். இனம் இனத்தோடு தானே சேரும்? அதிலென்ன அதிசயம்? 

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை முழுவதிலும் சாதிய ஒடுக்குமுறை அதிகமாக இருந்த இடம் யாழ் மாவட்டம் ஆகும். எண்பதுகள் வரையில் அங்காங்கே சாதிக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்படியான காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் மனதில் சாதிய மேலாதிக்க உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்திருக்கும். 

சாதியவாதிகள் ஒரே நேரத்தில் இனவாதிகளாகவும், மதவாதிகளாகவும் இருப்பதைக் காணலாம். அதற்கு இந்த துரைரத்தினமும் விதிவிலக்கு அல்ல. அவரது தினக்கதிர் இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகளிலேயே இனவெறியும், மதவெறியும் அடிக்கடி தலை நீட்டும். 

வழமையாக முஸ்லிம்கள் மீது வெறுப்புக் கொண்ட துரைரத்தினம், சிரிய அகதிகள் பிரச்சினையின் போது கூட தனது துவேஷத்தை காட்டத் தயங்கவில்லை. ஒரு தடவை, லெபனானில் இருந்த சிரியா அகதிகள் சிலரை, கனடா அரசு அகதி விசா கொடுத்து வரவழைத்திருந்தது. அப்போது "சும்மா போன சனியன்களை, கனடா தனது நாட்டுக்குள் வரவழைத்திருக்கிறது" என்று கட்டுரை எழுதினார். இத்தனைக்கும் அவரும் இதே மாதிரியான அகதி விசாவில் சுவிட்சர்லாந்துக்கு சென்றவர் தான். 

ஈழப்போரில் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட, நூற்றுக் கணக்கான தமிழர்கள், முன்னாள் போராளிகள் உட்பட, சுவிட்சர்லாந்து சென்று அகதியாக தஞ்சம் கோரியுள்ளனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களது அகதி மனுவை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்துள்ளது. சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியும் உள்ளது.

அதே நேரத்தில், போராட்டத்தில் எந்தப் பங்களிப்பையும் செய்திராத இரா. துரைரத்தினத்திற்கு அகதி விசா கொடுத்து வரவழைத்துள்ளது. இதை துரைரத்தினத்தின் மொழிநடையில் எழுதினால்: "சும்மா போன சனியனை, சுவிட்சர்லாந்து தனது நாட்டுக்கு வரவழைத்துள்ளது." என்று சொல்லலாம். 

சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளிநொச்சியில் சமாதான செயலகம் இயங்கியது. அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன், நோர்வே நாட்டை சேர்ந்த அனுசரணையாளர்களும் அங்கிருந்தார்கள். 

அந்தக் காலத்தில், இரா. துரைரத்தினம் சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். தூதரக அதிகாரிகள் சமாதான செயலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வன் செய்த சிபாரிசுக்குப் பின்னர் தான் அகதி விசா கொடுத்தார்கள். 

தமிழக தலித் அரசியல் ஆர்வலர் ரவிக்குமாரை, துரைரத்தினம் "பற நாயே" என்று திட்டிய சம்பவம் அப்போதே நடந்திருந்தால், தமிழ்ச்செல்வன் தனது முடிவை மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம். தமிழ்ச்செல்வன் ஒரு தலித் (தாழ்த்தப் பட்ட சாதியினர்) என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிற்காலத்தில் நிகழ்ந்த தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு, உயர்சாதியை சேர்ந்த நடேசன் காரணமாக இருந்தார் என்ற வதந்தியும் வன்னியில் பரவியிருந்தது. அது வேறு கதை. 

"பற நாய்" என்பது பொதுவான வசைச் சொல், அது ஒரு சாதியை குறிப்பதில்லை என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இந்திய சூழலில் அல்லாமல், இலங்கை சூழலில் இதைப் புரிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினை கிளர்ந்தெழுந்த காலத்தில் இருந்து, சிங்கள இனவாதிகள் தமிழர்களை "பறத் தெமளோ" என்று சொல்லித் திட்டுவதுண்டு. அமெரிக்காவில் "Nigger" என்று சொல்வதற்கொப்பான வசைச் சொல்லாக பாவிக்கப் படுகின்றது. 

இலங்கையில், சிங்களவர்களிலும், தமிழர்களிலும் உள்ள ஆதிக்க சாதியினர், தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் "பறை", "சக்கிலி" என்று சொல்லித் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆதிக்க சாதியினர், தமது உறவினர்களுடனான சண்டை சச்சரவுகளில், "பற நாய்" என்று சொல்லித் திட்டுவார்கள். 

யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் மத்தியில், ஒரு சாதிய சொற்றொடர் அடிக்கடி பாவிக்கப் படுகின்றது. "பேப்பரையா பாக்கிறாய்?" என்று கேட்கும் பொழுது, "பேய்ப் பறையா பார்க்கிறாய்" என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் கூறுவார்கள். அதே மாதிரி, "மழை வரும் போல இருக்கு" என்று சொன்னால், "நளவரைப் போல இருக்கு" என்று இரட்டை அர்த்தத்துடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கீழ்த்தரமான நகைச்சுவை, யாழ்ப்பாணத்தாரின் நாசூக்கான சாதிய மனோபாவத்திற்கு ஓர் உதாரணம். 

ஆகையினால், பேஸ்புக் விவாதம் ஒன்றில், ரவிக்குமாருடன் வாக்குவாதப் பட்ட துரைரத்தினம், "பற நாயே" என்று அர்த்தம் தெரியாமல் பேசி விட்டார் என்று கூற முடியாது. பொதுவாக மற்றவர்கள் நாலு சுவருக்குள் பேசும் வார்த்தையை, துரைரத்தினம் பொதுவெளியில் பேசி விட்டார் என்பது மட்டும் தான் வித்தியாசம். நுணலும் தன் வாயால் கெடும்.  

இந்த இடத்தில் தமிழ் தேசியவாதிகளிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. "ஈழப் போராட்டம் காரணமாக சாதியம் முற்றாக அழிந்து விட்டது" என்று இனிமேலும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? சாதியத்தை ஒழிப்பதற்கான தமிழ் தேசிய அரசியல் திட்டத்தை, தமிழ் மக்கள் முன்வைப்பீர்களா? 

அன்பான தமிழ் தேசியவாதிகளே! குறைந்த பட்சம், தமிழ்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் உள்ள, சாதிவெறியர்களையாவது உங்களால் திருத்த முடியவில்லையா? நீங்கள் எவ்வாறு ஈழத் தமிழ் சமூகத்தில் உள்ள சாதியவாதத்தை  ஒழிக்கப் போகிறீர்கள்? சாதிவெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்?  "இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?" என்றும் சிலர் உங்களைப் பார்த்துக் கேட்கலாம். 

அதாவது, புலிகளின் பாணியில், சாதிவெறியர்களை சமூகவிரோதிகளாக குற்றஞ்சாட்டி, அவர்களை சமூகத்தில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதாடலாம். புலிகளின் மீது கண்மூடித்தனமான விசுவாசம் காட்டும் தமிழ் தேசியவாதிகள், அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்? உங்களால் தேசியத் தலைவராக புகழப்படும் பிரபாகரன் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக இருந்தார். எதிரிகளும் ஏற்றுக் கொள்ளும் உண்மை இது. 

தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களில் பலர் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உலக நாடுகளில் புலிகளின் பிரதிநிதியாக வலம் வந்த தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்த மரியாதை, சாதிய சமூகத்தில் நடந்த மாபெரும் புரட்சி ஆகும். இன்றைக்கு மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற பிரதிநித்துவத்தை கூட கொடுக்க மறுத்து வருகின்றது. ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்துள்ளது. 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது!
கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது
காதலுக்கு மரியாதையில்லை! சாதியம் இன்னும் சாகவில்லை!
சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்

1 comment:

Kaththukutti Communist said...

நீங்கள் இதற்கு முன் உரையாடலில் புலிகள் இருத்து இருத்தால் சாதி மறைத்து இருக்கும் ஆனால் ஏற்ற தாழ்வான் சமுதாயம் இருக்கும் என்று குறிப்பிட்டு இருத்தீர்