Saturday, August 01, 2015

இலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளின் சோஷலிசம்


ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல தசாப்த காலமாகவே மக்களுக்கான இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எழுபதுகளில் எழுந்த இலவச சைக்கிள் திட்டம் உலகப் புகழ் பெற்றது. (அன்றைய பொலிஸ் நிர்வாகம், இலவச சைக்கிள்களை பறிமுதல் செய்து வந்த படியால், பின்னர் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.)

அண்மைக் காலமாக, "இலவச நூலகத் திட்டம்", ஆம்ஸ்டர்டாம் நகரின் பல பகுதிகளிலும் பரவி வருகின்றது. பலர் தமது வீடுகளுக்கு அருகில், தெருவோரமாக புத்தக அலுமாரிகளை வைக்கின்றனர். அவற்றில் பாவித்த புத்தகங்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துச் சென்று வாசிக்கலாம்.

புத்தகங்களை வாசித்து முடித்து விட்டு, திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற உணர்வில், பலர் நூல்களை திரும்பக் கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஒரு பரிமாற்றமாக நடப்பதால், எல்லோருக்கும் வெவ்வேறு தலைப்புகளினான நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. நூல்கள் மட்டுமல்ல, பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் இவ்வாறு பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலவச நூலகத் திட்டத்தின் நோக்கம் என்ன? மேலை நாடுகளிலும் மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகின்றது. அதனால், இது போன்ற திட்டங்கள் வாசிப்பை தூண்டலாம். அதை விட மிக முக்கியமானது இடதுசாரிகளின் பாரம்பரிய சிந்தனை மரபு. அதாவது, பூமியில் உள்ள அத்தனை வளங்களும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது இடதுசாரிய சிந்தனை. 

முதலாளிகள் இலாபம் கருதி, எல்லாவற்றையும் சந்தைப் படுத்தும் நடைமுறை, இன்று தண்ணீரையும், வெகு விரைவில் காற்றையும், விற்பனை செய்யுமளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதனால், முதலாளித்துவ பொருளாதாரம், பலரின் வெறுப்பை சம்பாதித்திருப்பதில் வியப்பில்லை. இருப்பினும், ஒரு சிலரே மாற்று வழி என்னவென்று தேடுகின்றார்கள்.


ஆம்ஸ்டர்டாம் நகரிலும், பிற நகரங்களிலும் வீட்டுத் தோட்டம் செய்யும் நடைமுறையும் பெருகி வருகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளிலும், (கியூபாவில் இன்றைக்கும் உள்ளது), வீட்டுத் தோட்டம் வைத்திருப்பது ஊக்குவிக்கப் பட்டது. அதாவது, நாங்களே சில காய்கறிகளை வீட்டில் வளர்க்கலாம். பூஞ்சாடிகளில் பூக்களுக்கு பதிலாக, காய்கறிகளை வளர்க்குமாறு அரச மட்டத்திலான பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஒவ்வொருவரும் தமது உணவுத் தேவையில் ஒரு பகுதியை, தாமாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பது தான் அதன் நோக்கம்.

முதலாளித்துவ நாடுகளில், பல தசாப்த காலமாக, வீடுகளுக்குள் பூஞ் செடிகளை வைப்பது தான் "வழமையாக" இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், காய்கறிகளை வைக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தான் வாழ்கிறார்கள். அதனால், தோட்டம் வைத்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. 

ஆனால், நகரசபையில் உள்ள இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் விடா முயற்சி காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் காய்கறித் தோட்டங்கள் உருவாகின. நகரசபை நிர்வாகம், அதற்கான நிலம் ஒதுக்குவதுடன், விதைகளையும் இலவசமாக வழங்கியது. யார் வேண்டுமானாலும் தோட்டம் செய்ய உரிமையுண்டு. இருப்பினும், நிலப் பற்றாக்குறை காரணமாக, முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரப் படுகின்றது. சில இடங்களில் சுழற்சி முறையில், பலருக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது.

இவற்றைத் தவிர, பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதாவது, ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவர் சிற்பக் கலைஞராக இருக்கலாம். ஒருவர் கற்பிக்கும் திறமை கொண்டவராக இருக்கலாம். எதுவும் இல்லாவிட்டாலும், உடல் ரீதியாக உழைக்கக் கூடியவராக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அதற்கு செலவிட்ட நேரத்தையும், "பணத்தையும்" குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேவையை பெற்றவர் அதற்கு உடன்பட்டு கையெழுத்திட்டு கொடுப்பார். எதிர்காலத்தில் உங்களுடைய வீடு திருத்த வேண்டியிருக்கலாம். அதற்கு அவரைக் கூப்பிடுகிறீர்கள். அவர் வந்து செய்த வேலையை, அதே மாதிரி நேரத்தையும், "பணத்தையும்" கணக்கிட்டு குறித்துக் கொள்கிறார். 

இங்கே "பணம்" என்பது, நாம் கண்ணால் காணும் பண நோட்டுக்கள் அல்ல. உழைப்பை அளவிடும் கருவி மட்டுமே. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. பரிமாற்றம் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, மனிதர்கள் தமது உழைப்பை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

இதை வாசிக்கும் பலர், "இதெல்லாம் உண்மையா?" என்று திகைப்படையலாம். நெதர்லாந்தில் பல நகரங்களில், இது பல தசாப்த காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. பணமற்ற சமுதாய அமைப்பில் யார் வேண்டுமானாலும் சேரலாம். எந்த சந்தர்ப்பத்திலும் பணம் பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. 

தவிர்க்க முடியாத சில விடயங்களுக்கு மட்டும் பணம் செலவிடப் படுகின்றது. உதாரணத்திற்கு, முன்னர் இதற்காக ஒரு மாத இதழ் வெளியிட வேண்டி இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தமக்கு என்னென்ன வேலை தெரியும் என்று விளம்பரம் செய்வார்கள். அதற்கு ஒரு சிறிய கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. மற்றும் படி, சேவைகள் யாவும் "இலவசம்". அதாவது, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கடமைப் பட்டுள்ளனர்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!
மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!
இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்

1 comment:

SaraK said...

அருமையான ஒரு முயற்சி, நம்ம ஊர்லையும் வைக்கலாம் ஆனா நூல் மறுபடியும் தரமாட்டங்க.. (தமிழன்டா.. லொல்லு ஹி ஹி ஹி......)

உலகில் இதே நோக்கில் இயக்கும் சில இனையங்கள்..

Mark Boyle (Moneyless Man) http://freeconomy.info/
http://streetbank.herokuapp.com/splash?locale=en
justfortheloveofit.org