Saturday, March 28, 2015

சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்


போலித் தமிழ்த் தேசியவாதிகள், மறைந்த சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூவுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொழுதே, பேரினவாத அரசுக்கு சார்பான அடிவருடித்தனம் அவர்களையும் மீறி வெளிப்படுகின்றது. 

தெருக்களில் எச்சில் துப்புவதை தடை செய்த தலைவர் என்று லீகுவான்யூவை புகழ்கின்றனர். இலங்கையில் ராஜபக்சே கூட, பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று தடை செய்திருந்தார். இத்தாலியில் முசோலினி, நேரத்திற்கு ரயில் விட்ட பெருமைக்குரியவர்.

உலகம் முழுவதும் பாசிஸ்டுகள், நாட்டை சுத்தமாக வைத்திருந்து நல்ல பெயர் சம்பாதித்துள்ளனர். இவற்றை மட்டும் குறிப்பிட்டுப் பேசி, அவர்கள் மக்கள் மீது பிரயோகித்த கொடுங்கோன்மையை மறைப்பதன் மூலம், போலித் தமிழ்த் தேசியவாதிகள் பேரினவாத சர்வாதிகார அரசுக்கு துணை போகின்றனர். அது சிங்கப்பூராக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் அவர்களது அரசியல் ஒன்று தான்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச, தனக்கு எதிரான சக்திகளை அரசியல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஊடகங்களின் மேல் கட்டுப்பாடுகளை விதித்தார். எதிர்த்துப் பேசியவர்களை சிறையில் அடைத்தார் அல்லது காணாமல் போகச் செய்தார். சிங்கப்பூரில் லீகுவான்யூவும் அதையே தான் செய்தார். இன்றைக்கும் அங்கே எந்த ஊடகமும் லீயை விமர்சித்து எழுத முடியாது. 

சிங்கப்பூர் அரசை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான அடக்குமுறைகளை சந்திக்க வேண்டும். குறைந்த பட்சம், அரச எதிர்ப்பாளர்களுக்கு தொழில் செய்யும் உரிமை, வசதியாக வாழும் உரிமை மறுக்கப் படும். இதனால் பல அரச எதிர்ப்பாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ராஜபக்சேயின் ஆட்சிக்கும், லீகுவான்யூ ஆட்சிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

சிங்கப்பூர், சிறிலங்காவுக்கு இடையில், வரலாற்று ரீதியாகவும் ஒற்றுமைகள் உள்ளன. பூகோள அடிப்படையில், இரண்டுமே தீவுகள் தான். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் இருந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான துறைமுக நகரங்கள் அமைந்துள்ளன. அது மட்டுமல்ல, இரண்டுமே பிரிட்டிஷாரால் தனித்தனி நிர்வாக அலகுகளாக ஆளப் பட்டு வந்தன. அறுபதுகளில் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் தலையீட்டினால் இரண்டாகப் பிரிக்கப் பட்டன.

சிங்கப்பூர் சனத்தொகையில், 75% சீனர்கள் (இலங்கையில் 75% சிங்களவர்கள்), 15% மலேயர்கள் (இலங்கையில் 15% தமிழர்கள்), 10% இந்தியர்கள் (இலங்கையில் 7% முஸ்லிம்கள்)

கலாச்சார ரீதியாகவும், சிங்கப்பூர், சிறிலங்காவுக்கு இடையில் ஒற்றுமைகள் காணப் படுகின்றன. இலங்கை எவ்வாறு இந்தியாவுடன் தொடர்பு பட்டிருந்ததோ, அதே மாதிரி சிங்கப்பூர் மலேசியாவுடன் நீண்ட கால கலாச்சார தொடர்புகளை பேணி வந்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள், இலங்கையில் சிறுபான்மையாக உள்ளனர். அதே மாதிரி, அயல் நாடான மலேசியாவில் பெரும்பான்மையாக வாழும் மலே மக்கள், சிங்கப்பூரில் சிறுபான்மையாக உள்ளனர். 

அது மட்டுமல்ல, இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக, சிங்களப் பேரினவாதிகளின்  இனக் கலவரம் தூண்டி விடப் பட்டு, அவர்கள் ஒடுக்கப் பட்டு வந்ததைப் போன்று, சிங்கப்பூரில் மலே மக்களுக்கு எதிராக நடந்தது. சிங்கப்பூரில் மலே மக்களுக்கு எதிராக, சீனப் பேரினவாதிகள் இனக்கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தை முன்நின்று நடத்திய முக்கியமான தலைவர் யார்? வேறு யாருமல்ல, நமது போலித் தமிழ்த் தேசியவாதிகளின் நன்மதிப்பை பெற்ற லீகுவான் யூ தான்! (1964 race riots in Singapore; http://en.wikipedia.org/wiki/1964_race_riots_in_Singapore )

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மை இனத்தவர்கள், "இந்தியர்களாக, அல்லது இந்திய விஸ்தரிப்புக்கு துணை போகும் ஐந்தாம் படையாக" கருதப் பட்டனர். சிங்கப்பூரில் மலே சிறுபான்மை இனத்தவர் மீதும் அதே மாதிரியான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டன.

லீகுவான்யூ மலே சிறுபான்மை இனத்தவர்களை மட்டும் ஒடுக்கவில்லை. கம்யூனிஸ்டுகளையும் ஒடுக்கி வந்தார். இன்று வரைக்கும் சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இலக்கியங்களுக்கும் தடை உள்ளது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான "தெருச் சண்டியன்" என்ற புகழும் லீகுவான்யூவை சேரும். இலங்கையிலும், "கம்யூனிஸ்ட் அபாயத்தை" ஒடுக்குவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. ஐம்பதுகளில் பொது வேலை நிறுத்த காலத்தில் நடந்த அரச அடக்குமுறைகளை அதற்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், "இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று யாருமில்லை. நாம் எல்லோரும் இலங்கையர்கள்..." என்று அறிவித்தார். லீகுவான்யூ சிந்தனையும், அதே மகிந்த சிந்தனை தான். "சிங்கப்பூரில் சீனர், மலே, இந்தியர் என்று யாரும் இல்லை. நாம் எல்லோரும் சிங்கப்பூரியர்கள்..." என்றார். இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

இலங்கையில் பெரும்பான்மை சிங்களவரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போன்று, சிங்கப்பூரில் பெரும்பான்மை சீனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு, தனது முதன்மை எதிரிகளாக கருதிய தமிழர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில், மூன்றாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

சிங்கப்பூரில் லீகுவான்யூ செய்ததும் அதே தான். முதன்மை எதிரிகளாக கருதிய மலேயர்களுடன் முரண்பாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழர்களுக்கு சலுகைகள் கொடுத்து அவர்களின் ஆதரவை சம்பாதித்திருந்தார். லீ அரசில் தமிழர்கள் அமைச்சராக இருந்ததைக் கூறி பெருமைப் படுகின்றனர். சிறிலங்கா அரசும் அதையே தான் செய்தது. பல முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தது. என்ன வித்தியாசம்?

லீகுவான்யூ "தமிழர்களுக்கு ஆதரவாக" பேசி விட்டாராம். மகிந்த ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசியதைப் போன்று தான் இதையும் பார்க்க வேண்டும். தங்களது நாடுகளில் மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் சர்வாதிகாரிகள், பிற நாட்டுப் பிரச்சினையில் நடுநிலையாளராக காட்டிக் கொள்வார்கள். இவர்கள் முன்வைக்கும் "தீர்வுகளும்" ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்ட தீர்வுகள் தான் என்பதை சொல்லத் தேவையில்லை.

லீகுவான்யூ தமிழர்களின் நண்பன் என்று சொல்லிப் பெருமைப்படும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், இதே லீகுவான்யூ தான் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தார் என்ற உண்மையை மறைப்பது ஏனோ? புலிகளை அழிப்பதற்கான இறுதிப்போர் நடந்த காலத்தில், புலிகளின் ஆயுதக் கடத்தல் கப்பல்களை காட்டிக் கொடுத்ததில் சிங்கப்பூர் கடற்படைக்கும் பங்கிருந்ததை மறந்து விட்டார்களா? புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்த சிங்கப்பூர் பிரஜையை அமெரிக்காவில் பிடித்துக் கொடுக்க உதவிய விடயம் தெரியாதா?

இவர்களை எதற்காக "போலித் தமிழ்த் தேசியவாதிகள்" என்று அழைக்கிறோம் என்பதை உணர வேண்டும். அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்கள் சார்பாகவும் பேசவில்லை, புலிகளையும் ஆதரிக்கவில்லை. ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதும், முதலாளிய சர்வாதிகாரத்திற்கு மக்களை அடிபணிய வைப்பது மட்டுமே அவர்களது குறிக்கோள்.


சிங்கப்பூரில் லீகுவான்யூவின் சர்வாதிகார ஆட்சி பற்றிய ஆவணப்படம்:

1 comment:

Unknown said...

அண்ணா லீ மலே மக்களுக்கு எதிராக செயற்பட்டதற்கான சான்றுகள் தாங்க பார்ப்பபோம்.