Tuesday, December 23, 2014

திருமுருகன் காந்தி குறை கூறும் "புலி ஆதரவு இடதுசாரிகள்" என்ன செய்தார்கள்?



பல வருட காலமாக, இடதுசாரியத்தை வசை பாடுவதும், மார்க்சியத்தின் மீது சேறு பூசுவதுமாக பலர் இயங்கி வருகிறார்கள். ஈழப் போரில் தமது விலை மதிக்க முடியாத உயிர்களை அர்ப்பணித்த, தமிழ் உழைக்கும் வர்க்க மக்களை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் இதன் மூலம், உழைக்கும் மக்களை ஒடுக்கும் முதலாளிய வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கிறார்கள் என்பது, இடது சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் போதே தெரிந்து விடுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் ட்ராஸ்கிஸ்ட் அமைப்புகள், தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ளும் அதே நேரம் "நாங்கள் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை" என்று கூறி அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வார்கள். அதே மாதிரி, தமிழ் நாட்டில் இயங்கும் மே 17 அமைப்பினரும் நடந்து கொள்கிறார்கள். தங்களையும் இடதுசாரிகளாக காட்டிக் கொள்ளும் அதே நேரம், "நாங்கள் மார்க்சிஸ்டுகளோ அல்லது மாவோயிஸ்டுகளோ அல்ல" என்று கூறுவதன் மூலம், இந்திய அரசுக்கு நல்ல பிள்ளைகளாக காட்டிக் கொள்கிறார்கள். 

 //உலக அளவில் இருக்கும் இடதுசாரிகளின் நிலைப்பாடுகள், எந்த அளவின் இன்றும் இருக்கிறது? ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை இதுவரை உலக இடதுசாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் ?// என்று மே பதினேழு இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கேட்கிறார்.

இந்தக் கேள்வியை அவர் யாரிடம் கேட்கிறார் என்று புரியவில்லை. இதைக் கேட்டு எமக்கெல்லாம் தலை முடியை பிய்த்துக் கொள்ளாத குறை.

எனது குழப்பத்திற்கு காரணம் இவை தான்:

  1. அவர் தன்னைத் தானே ஓர் இடதுசாரியாகவும் காட்டிக் கொள்பவர். தோழர் என்று அழைத்துக் கொள்வார். ஏகாதிபத்தியம் பற்றியும் பேசுவார். 
  2.  அவர் தன்னை ஒரு கடும்போக்கு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்பவர். புலிகளுக்காக விட்டுக் கொடுக்காமல் வாதாடி வருபவர்.

இப்போது நாங்கள் தான் அவரிடம் அதே கேள்விகளை தொடுக்க வேண்டும். ஏனென்றால், எனக்குத் தெரிந்த வரையில், உலக அளவில் செயற்படும் புலிகளின் முகவர்கள் பலர், தத்தமது நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் அங்கம் வகிக்கிறார்கள். அநேகமாக அவை எல்லாம், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சிகளாக இருக்கும்.

பிரிட்டனில் Labour Party, பிரான்சில் Parti Socialiste(PS), ஜெர்மனியில் Sozialdemokratische Partei Deutschlands (SDP), நோர்வேயில் Arbeiderspartiet, நெதர்லாந்தில் Partij van de Arbeid (PvdA), கனடாவில் New Democratic Party (NDP) ... இப்படி ஒவ்வொரு மேற்கத்திய நாட்டிலும் உள்ள இடதுசாரிக் கட்சியில், பெருமளவு புலி ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.

Labour Party, Arbeiderspartiet, Partij van de Arbeid ஆகிய கட்சிகளின் பெயரே அந்தந்த மொழிகளில் "தொழிற் கட்சி" என்றிருக்கிறது. Parti Socialiste, Sozialdemokratische Partei Deutschlands ஆகிய கட்சிகளின் பெயரில் "சோஷலிசம்" இருக்கிறது.    மேற்குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சிகள், பல தடவைகள் அரசாங்கம் அமைத்துள்ளன என்பதும், ஏகாதிபத்திய போர்களுக்கு தலைமை தாங்கியுள்ளன என்பதும் இரகசியம் அல்ல.

புலிகளை ஆதரிக்கும் தமிழ் இடதுசாரிகள், சாதாரண கட்சி உறுப்பினர்களாக மட்டுமல்லாமல், பாராளுமன்ற உறுப்பினராகக் கூட வந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கனடாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் "தமிழ் இடதுசாரி" ராதிகா சிற்சபேசன், NDP எனும் இடதுசாரிக் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவானார். அவர் கனடாவில் புலிகள் ஒழுங்கு படுத்தும், மாவீரர் தின நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்பவர். புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வருபவர். 

திருமுருகன் காந்தி குற்றஞ்சாட்டும் "உலக அளவில் இருக்கும் இடதுசாரிகள்", புலிகளாகவும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை, இப்போது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகி இருக்கும்.

அவரது அடுத்த கேள்வி: "ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை இதுவரை உலக இடதுசாரிகள் எவ்வாறு கையாண்டார்கள்?"

இது கட்டாயம், சம்பந்தப் பட்டவர்களினால் பதில் கூறப் பட வேண்டிய நியாயமான கேள்வி தான். ஒரு பக்கம் புலிகளை ஆதரித்துக் கொண்டே, மறுபக்கம் இனப்படுகொலைகளை நடத்திய ஏகாதிபத்திய அரசியல் கட்சிகளில் தொடர்ந்தும் உறுப்பினர்களாக இருப்பது எப்படி? இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுசரணையாக இருந்த, புலிகளுக்கு பல விட்டுக்கொடுப்புகளை செய்த எரிக் சொல்ஹைம் ஒரு நோர்வீஜிய இடதுசாரி (Sosialistisk Venstreparti). அப்போது ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசாங்கத்தின்(Arbeiderspartiet, Sosialistisk Venstreparti கூட்டணி) சார்பாக, பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராக இருந்தார். பேச்சுவார்த்தை காலம் முழுவதும், அவருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதம் கிடைத்திருந்தது.

இறுதி யுத்தத்தின் பின்னர், முன்பு எரிக் சொல்ஹைம் புகழ் பாடிய புலி ஆதரவாளர்கள், இனப்படுகொலையை / போரினை தவறாகக் கையாண்டதாக அவரைத் திட்டினார்கள். அதற்குப் பிறகு, எத்தனை புலி ஆதரவாளர்கள், Arbeiderspartiet கட்சியில் இருந்து விலகினார்கள்? அல்லது அதற்கு வாக்களிக்காமல் விட்டார்கள்? இன்றைக்கும் நோர்வேயில் பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் Arbeiderspartiet க்கு தான் தேர்தலில் ஒட்டுப் போடுகின்றார்கள்.

பிரிட்டனில், டோனி பிளேரின் லேபர் பார்ட்டி ஆட்சியில் இருந்த காலத்தில் தான், புலிகள் இயக்கம் தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் போடப் பட்டது. லேபர் அரசு, இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்தது. இந்த உண்மைகள் எல்லாம் ஊடகங்களில் பகிரங்கமான பின்னர், எத்தனை புலி ஆதரவாளர்கள் லேபர் கட்சியை விட்டு விலகினார்கள்?

லேபர், கன்சர்வேட்டிவ் ஆகிய இரண்டு கட்சிகளும் தான் பிரிட்டனை மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிர்வகிப்பதும் அந்த இரண்டு கட்சிகள் தான். "இடதுசாரி" லேபர் கட்சியும் ஒரு ஏகாதிபத்தியக் கட்சி தான் என்பது, ஈராக் மீதான படையெடுப்புக்கு ஆதரவு கொடுத்த நேரமே வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். 2003 ம் ஆண்டு ஈராக்கில் நடந்த இனப்படுகொலை/போரில் நேரடியாகப் பங்கெடுத்திருந்தது.

அப்போது பிரதமராக இருந்த டோனி பிளேர், மகிந்த ராஜபக்சேவுக்கு நிகரான இனப்படுகொலையாளி/போர்க்குற்றவாளி என்று உலகம் முழுவதும் குற்றஞ்சாட்டப் பட்டவர். இந்த உண்மைகள் தெரிந்த பின்னர், எத்தனை தமிழர்கள் லேபர் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தார்கள்? அல்லது அதற்கு ஒட்டுப் போடாமல் விட்டார்கள்? அவர்களில் எத்தனை பேர் புலி ஆதரவாளர்கள்?

ஏகாதிபத்திய லேபர் கட்சியை நிராகரித்த, எத்தனை "இடதுசாரி" தமிழர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) அல்லது அது போன்ற வேறு சிறிய இடதுசாரிக் கட்சிகளில் சேர்ந்தார்கள்? பலருக்கு பிரிட்டனில் அப்படி ஒரு கட்சி இருப்பதே தெரிந்திருக்காது. தெரிந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஆர்வம் இருந்திருக்காது.

அமெரிக்காவில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியும் ஓர் "இடதுசாரிக்" கட்சி தான். இன்றைக்கும் வலதுசாரி குடியரசுக் கட்சியின் கடும்போக்காளர்கள், ஒபாமாவை "கம்யூனிஸ்ட்" என்றும் திட்டுவார்கள். அதற்குக் காரணம், ஒபாமா அனைவருக்குமான மருத்துவக் காப்புறுதி திட்டத்தை நடைமுறைப் படுத்த விரும்பியது தான்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் (புலி ஆதரவாளர்களும் தான்) ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு தான் ஒட்டுப் போடுவார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர், அதே ஜனநாயகக் கட்சி சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு, புலிகள் இலட்சக் கணக்கான டாலர்களை தேர்தல் நிதியாக வழங்கினார்கள்.

"இடதுசாரி" ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. பல நூறு அப்பாவி மக்கள் பலியானார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் ஏகாதிபத்திய சுயரூபம் தெரிந்த பின்னர் தான், 2008 ம் ஆண்டு "ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு" உருவாக்கப் பட்டது.

ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பினை ஸ்தாபித்தவர்களும், தற்போதும் அதை நடத்திக் கொண்டிருப்பவர்களும் அமெரிக்கப் புலி ஆதரவாளர்கள் தான்.  "நாடு கடந்த தமிழீழ அரசு", இன்றைக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையை / போரினை, "புலி ஆதரவு தமிழ் இடதுசாரிகள்" இவ்வாறு தான் கையாண்டார்கள்.

ஒரு பல்கலைக்கழக பட்டதாரியான திருமுருகன் காந்தி, இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் பேசுகிறார் என்று நாங்கள் கருத முடியாது. இடதுசாரிகள் என்பது, பல வகையான அரசியல் கோட்பாடு கொண்ட கட்சிகளை, அமைப்புகளை அல்லது தனி நபர்களை குறிக்கும். அது ஒருபோதும் ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களை குறிப்பிடாது.

மேற்கத்திய நாடுகளில், பொதுவாக சமூக ஜனநாயக கட்சிகளை, இடதுசாரிகள் என்று தான் அழைப்பார்கள். அவர்களும் நாட்டில் தாங்கள் மட்டுமே இடதுசாரிகள் என்று பாவனை செய்து கொள்வார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாகவே, இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகள், ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளனர். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அது நடந்தது.  அதனால் தான் அதிருப்தி கொண்ட பிரிவினர் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் பிரிந்து சென்றார்கள். அது வரலாறு.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இடது என்று சொல்லிக் கொள்ள விரும்பாத டோனி பிளேர், தனது கட்சிக்கு "New Labour" என்று பெயரிட்டுக் கொண்டார். ஏனென்றால், முதலாளித்துவ ஜனநாயகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அதற்கு ஏற்றவாறு மாற வேண்டுமாம்.

"ஆஹ்... நான்... வந்து... அந்த... மார்க்சிய - லெனினிச கட்சிகளை பற்றிக் குறிப்பிட்டேன் ..." என்று திருமுருகன் காந்தி மழுப்பலாம். அப்படியானால், அவருக்கு ஐரோப்பிய அல்லது உலக வரலாறு பற்றிய அறிவு மிகச் சொற்பம் என்று நினைக்க வேண்டியுள்ளது.

ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை இனப்படுகொலை செய்து முடித்திருந்தது. வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, குவாத்தமாலா, அங்கோலா, மொசாம்பிக்.... இந்த நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளில் கொல்லப் பட்டோர் எத்தனை?

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஈழப் புலிகள் மாதிரி ஆயுதப் போராட்டம் நடத்திய, நூற்றுக் கணக்கான கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கொன்று குவிக்கப் பட்ட வரலாறு தெரியுமா? மார்க்சிய - லெனினிசம் பேசிய குற்றத்திற்காக, எத்தனை பேர் பயங்கரவாதிகளாக சிறைகளில் அடைக்கப் பட்டனர் என்பது தெரியுமா? இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. சிலநேரம், இப்போது தான் வாழ்க்கையில் முதல் தடவையாக கேள்விப் படுவீர்கள்.

அநேகமாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான கருத்து ரீதியிலான அழித்தொழிப்பு நடந்துள்ளது. அதாவது, கொலை செய்வதில்லை, சித்திரவதை செய்வதில்லை, ஆனால் மனிதர்களை நடைப்பிணமாக அலைய விடுவார்கள். படிக்க விடாமல், வேலை வாய்ப்பை பறித்து, குடும்பங்களை சிதைத்தார்கள். அதுவும் ஒரு வன்முறை தான்.

அமெரிக்காவில் மக்கார்த்தி ஒடுக்குமுறைக்கு பலியான கம்யூனிஸ்டுகள் எத்தனை? ஏன் மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது? ஹங்கேரி மீதான சோவியத் படையெடுப்புக்கு பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கம்யூனிஸ்டுகளை விரட்டி விரட்டி கல்லெறிந்து தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன என்பது தெரியுமா?

பாடசாலைகளிலும், ஊடகங்களிலும் ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்ற இடையறாத பிரச்சாரத்தின் மூலம், மக்கள் மனதில் கம்யூனிச வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்தார்கள். ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைக்கு சந்தா கட்டினாலும், அவரது வேலை பறிபோகும். இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும், மார்க்சிய லெனினிஸ்டுகள் என்று சொல்லக் கூடிய யாராவது அரசியலில் நிலைத்து நிற்க முடிந்திருக்குமா?

ஏகாதிபத்தியத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டு, வசதியாக ஈழ அரசியல் பேசலாம். ஆனால், மார்க்சிய- லெனினிசம் பேச முடியாது. உலகமயமாக்கப் பட்ட உலகில், எங்கேயும் அதற்கு இடமில்லை. ஏனென்றால், உலகில் எல்லா நாடுகளிலும், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டு தானிருக்கும். நீங்கள் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், ஏகாதிபத்தியத்தின் பார்வையில் உழைக்கும் மக்களின் விடுதலை பற்றிப் பேசுவோர் எல்லோரும் எதிரிகள் தான்.

நிலவுக்கஞ்சி பரதேசம் போக முடியாது.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

No comments: