Monday, October 13, 2014

குர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச் சாலை


ஐரோப்பிய நகரங்களில், புலம்பெயர்ந்த குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னர், மேற்கத்திய நாடுகளின் துரோகம் அம்பலப் பட்டது. ஏற்கனவே, ஈழப்போரின் இறுதியில், மேற்கத்திய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இளைத்திருந்தன. ஆயினும், அமெரிக்க விசுவாசிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்களின் கோபாவேசம் மேற்குலகிற்கு எதிராக திரும்பி விடா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.

குர்து மக்களைப் பொறுத்தவரையில், மேற்கத்திய நாடுகளைப் பற்றிய பிரமை எதுவும் அவர்களிடம் இல்லை. ஜெனீவாவில் குர்திஸ்தான் கிடைக்கும் என்று யாரும் நம்பவில்லை. அதற்குக் காரணம், குர்து விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானின் கைதுக்குப் பின்னர், தேசியவாதக் கருத்தியலில் வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டது.

தொண்ணூறுகள் வரையில், PKK மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது. ஆயினும், தேசியவாதத்தின் பிற்போக்குக் கூறுகள், இயக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊறி இருந்தன. தற்போது சிறையில் இருந்து கொண்டு சுய விமர்சனம் செய்து வரும் ஒச்சலான், அதை தனது கடிதப் பரிமாற்றங்களில் குறிப்பிட்டுள்ளார்.

சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் தோன்றிய சர்வதேச நெருக்கடி PKK இலும் உணரப் பட்டது. மறைமுகமான சோவியத் உதவி நின்ற பின்னர், அது தன்னை வெறும் தேசியவாத இயக்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. ஆயினும், இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த இயக்கம் என்பதால், அதனுள்ளே சித்தாந்தம் தொடர்பாக பல விவாதங்கள் நடைபெற்றன.

இடையில் பல வருடங்களாக நடந்த சித்தாந்தப் போரின் விளைவாக, லிபர்ட்டேரியன் அனார்க்கிச கொள்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த விடயம், உலகின் பிற நாடுகளில் வாழும் பெரும்பாலான அனார்க்கிஸ்டுகளுக்கு தெரியாது. பல வருடங்களாக, PKK இந்த விடயத்தை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

துருக்கி, ஏகாதிபத்திய நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக, நேட்டோவில் மிகப் பெரிய இராணுவத்தை கொண்டுள்ள நாடு துருக்கி ஆகும். அதனால், குர்து மக்களின் போராட்டம், ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு நேரடியாகவே முகம் கொடுக்கும் நிலையில் உள்ளது.

தங்களை மார்சிஸ்டுகளாக, அல்லது அனார்க்கிஸ்டுகளாக காட்டிக் கொண்டால், தம்மை அழிக்க முற்படுவார்கள் என்று PKK நினைத்திருக்கலாம். அதனால், PKK இனர் தொடர்ந்தும் தேசியவாதிகள் போன்றே நடித்து வந்தனர். குர்து மக்கள் மத்தியிலும் தேசியவாதப் போக்குகளை ஊக்குவித்து வந்தனர். உண்மையில், PKK தேசியவாதத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி, திரை மறைவில் சோஷலிச பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தது.

சிரியாவில் PKK கட்டுப்பாட்டில் வைத்திருந்த குர்து மக்களின் பிரதேசம், ஜனநாயக பரிசோதனைச் சாலையாக இருந்தது. மக்கள் நேரடியாக பங்கேற்கும் உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப் பட்டன.(https://www.academia.edu/3983109/Democratic_Confederalism_as_a_Kurdish_Spring_the_PKK_and_the_quest_for_radical_democracy) ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும், சுய சார்புப் பொருளாதாரம் கொண்ட தனித் தனி நாடுகளாக வடிவமைப்பது அவர்களது நோக்கம். (PKK தனிநாட்டுப் பிரிவினைக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதற்குப் பதிலாக குர்திஸ்தான் சமஷ்டி அதிகாரத்திற்காக போரிடுகின்றது.)

அமெரிக்க அனார்க்கிஸ்டும், சூழலியல்வாதியுமான புக்சின் (Murray Bookchin) அவர்களது தத்துவ ஆசிரியராக இருந்தார். உண்மையில் அது, கடிதத் தொடர்புகள், மின்னஞ்சல்கள் மூலமான வழிகாட்டுதலாக இருந்தது. (புக்சின் 2006 ம் ஆண்டு காலமானார்.) அவரது தத்துவமான Libertarian municipalism, "குர்திஸ்தான் சமூகங்களின் அமைப்பு" என்று, மண்ணுக்கேற்றவாறு மாற்றப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நடந்த அனார்க்கிஸ்ட் ஒன்றுகூடல்களில், குர்திய ஆர்வலர்களும் பங்குபற்றியுள்ளனர்.

"PKK உண்மையிலேயே ஜனநாயக - சோஷலிசத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது என்றால், அது முதலில் ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும்..." என்று ஈராக்கிய குர்திஷ் அனார்க்கிஸ்ட் ஆர்வலர் ஒருவர் கூறினார். இருப்பினும், முன்பிருந்ததை விட, தற்போது PKK பெருமளவு மாறி விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், PKK குர்திஷ் பிரதேசங்களில் மாற்று இயக்கங்களை இயங்க அனுமதிக்கவில்லை. ஆயினும், சில வருடங்களின் பின்னர், துருக்கி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு காரணமாக, குர்திஷ் கம்யூனிஸ்டுகளை இயங்க அனுமதித்தார்கள்.

சிரியாவில், YPG என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு, சிரிய குர்து மக்களின் விடுதலை இயக்கம் போன்று இயங்கியது. வெளியுலகம் அவ்வாறு நினைக்க வைக்கப் பட்டது. உண்மையில் YPG என்பதன் அர்த்தம் "மக்கள் பாதுகாப்புப் பிரிவு". அதே மாதிரி YPJ என்ற "மகளிர் பாதுகாப்புப் பிரிவு" சமாந்தரமாக இயங்கத் தொடங்கியது. சிரியாவில், மதச்சார்பற்ற, பெண்களுக்கும் சம உரிமை வழங்கிய சமூகக் கட்டமைப்பானது, ISIS போன்ற மதவாதிகளின் கண்களை துருத்திக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.

உண்மையில், சிரியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சோஷலிச அடிப்படையிலான ஜனநாயக சமூகம், மேற்கத்திய முதலாளிய நாடுகளுக்கும் எரிச்சலூட்டி இருக்கலாம். அதனால், ISIS படையினர் குர்திஸ்தான் சுயாட்சிப் பிரதேசத்தை கைப்பற்றுவதை தடுக்கவில்லை. சிரியா குர்திஸ்தானில் ஒரு இனப்படுகொலை நடக்குமாக இருந்தால், அதற்கு மேற்குலகமும் பொறுப்பேற்க வேண்டும். மேற்குலகம் குர்து மக்களுக்கு துரோகம் இழைப்பது, இனிமேலும் நடக்கலாம்.

No comments: