Saturday, August 09, 2014

சாரு நிவேதிதாவும் கம்யூனிசத்தை வெறுக்கும் சாரைப் பாம்புகளும்

இலங்கையில், இந்தியாவில் இருந்து புதிதாக மேற்கு ஐரோப்பிய நாடொன்றுக்கு வந்து தங்கி விடும் குடியேறிகள், தாயகத்தில் இருக்கும் தமது உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. சில நேரம், தவிர்க்க முடியாமல், அவர்களது உரையாடல்கள் எனது காதுகளை எட்டுவதுண்டு. 

பெரும்பாலானவர்கள் மறுமுனையில் இருப்பவருக்கு எரிச்சல், பொறாமையை கிளப்பும் நோக்குடன், வேண்டுமென்றே பலதையும் மிகைப் படுத்திக் கூறுவார்கள். தாங்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கிறோம் என்று, இலங்கை/இந்திய ரூபாய் கணக்கில் சொல்வார்கள். தாயகத்தில் அதனை கேட்டுக் கொண்டிருக்கும் சொந்தங்கள், நண்பர்களுக்கு, கனவில் மிதப்பது போன்றிருக்கும்.

 “அதிர்ஷ்டம் உள்ளவன்… கொடுத்து வைச்சவன்…” என்று நினைத்துக் கொண்டே, தாங்களும் எப்போது அந்த “சொர்க்க லோகத்திற்கு” போகப் போகிறோம் என்று கனவு காண்பார்கள். ஆனால், அவர்கள் மறு பக்க உண்மையை உணர்வதில்லை. எரிச்சலை கிளப்பி விடும் நண்பரும், ஒரு நாளும் கூற மாட்டார். அதாவது, ஐரோப்பாவில் சம்பாதிப்பதில் அரைவாசி வீட்டு வாடகைக்கு போகின்றது. தாயகத்துடன் ஒப்பிடும் பொழுது பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகம் என்பன போன்ற உண்மைகளை அவர்கள் என்றைக்கும் கூறப் போவதில்லை.

இந்த நண்பர்கள், தாம் “அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, ஒரு குறிப்பிட்ட அரசியலை பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். தமிழகத்தின் பிரபல பின் நவீனத்துவ எழுத்தாளர் சாருநிவேதிதா, அந்த அரசியல் என்னவென்று வெளிப்படையாக ஒரு பதிவில் எழுதியுள்ளார். 

சாருநிவேதிதாவின் பதிவு, சில புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கடுமையாக கண்டிக்கப் பட்டாலும், யாரும் சாருநிவேதிதாவின் அரசியலை ஆராயும் அளவிற்கு ஆழமாக செல்லவில்லை என்று நினைக்கிறேன். 

முதலில் சாருநிவேதிதா தனது இணையத் தளத்தில் எழுதி இருக்கும், அந்த சர்ச்சைக்கு உரிய பந்தியை பார்ப்போம்:

//ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம். ”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.//
- சாருநிவேதிதா (http://charuonline.com/blog/?p=1437)

சாருநிவேதிதா பல தடவைகள் மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று வந்துள்ளார். அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து இருக்கிறார். அதை விட, ஸ்பானிஷ் மொழி கற்றிருக்கிறார். லத்தீன் அமெரிக்க முற்போக்கு இலக்கியங்களில் பரிச்சயம் கொண்டவர். ஆனால், எந்தளவு நேரடி அனுபவமும், இலக்கிய அறிவும் இருந்த போதிலும், கம்யூனிச எதிர்ப்புவாதம் எனும் சகதிக்குள் மூழ்கியவர்களின் எண்ணங்கள் மாறப் போவதில்லை.

கம்யூனிச எதிர்ப்பு சகதிக்குள் மூழ்கிய ஒருவர், சேறடிப்பதைத் தவிர வேறெதுவும் அறிந்திருக்க மாட்டார். அதற்கு சாருநிவேதிதா ஓர் உதாரணம் மட்டுமே. இந்த எதிர்வினை சாருநிவேதிதாவுக்கு மட்டுமானதல்ல. அவரைப் போன்று, சதா சர்வ காலமும் கம்யூனிச எதிர்ப்பு நச்சுக் கருத்துக்களை கக்கிக் கொண்டிருக்கும் சாரைப் பாம்புகளுக்கும் சேர்த்து தான்.

//ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள்.//

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள “நலன்புரி அரசு” (Welfare state) எனும் அரசின் கொள்கையை தான் அவ்வாறு கூறுகின்றார். (சாருநிவேதிதா "மக்கள் நல அரசு" என்று குறிப்பிடுகிறார். ஆனால், ஐரோப்பிய அரசுக்களின் கொள்கைகளில் "மக்கள் நலன்" என்ற சொற்பதம் பயன்பாட்டில் இல்லை.) அது ஏன் உருவானது என்ற வரலாற்றை யாரும் படிப்பதில்லை.

2 ம் உலகப் போர் வரையில், “கம்யூனிசம் இல்லாமல் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்தும்” எண்ணம், எந்தவொரு ஐரோப்பிய நாட்டு அரசிடமும் இருக்கவில்லை. 1ம் உலகப் போருக்கும், 2 ம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த மக்கள், ஒன்றில் பாசிசக் கட்சிக்கு, அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளித்தனர். அதற்குக் காரணம், அன்றைய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வு, இன்றைக்கு இந்தியாவில் இருப்பதை விட மிகவும் மோசமாக இருந்தது. வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் உழைப்புச் சுரண்டல், சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது.

ஏற்கனவே, முதலாம் உலகப் போரின் முடிவில், ரஷ்யாவில் சோவியத் யூனியன் எனும் உலகின் முதலாவது சோஷலிச நாடு உருவாகி இருந்தது. அதனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் உழைப்பாளர் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப் பட்டது. ஜெர்மனியில் மூன்று நகரங்களில் கம்யூனிசப் புரட்சி வெடித்தது. 

குறைந்தது ஒரு மாத காலமாவது, பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய மாநகரங்களில், சோவியத் அமைப்பு நடைமுறையில் இருந்தது. அதே நேரம், ஹங்கேரியிலும் கம்யூனிஸ்டுகள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஸ்பெயினில், குடியரசு அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கியிருந்ததால், அங்கே ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு ஐரோப்பா இருந்த சூழ்நிலையில், எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் புரட்சிகள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக, முதலாளிய வர்க்கம் உண்மையிலேயே பயந்திருந்தது. அதனால் தான், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப் பற்றுவதை தடுக்கும் நோக்கில், இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிஸ்டுகளை ஆதரித்தார்கள். பிற ஐரோப்பிய நாடுகளிலும் அது தான் நிலைமை.

2 ம் உலகப்போரின் முடிவில், நாஸிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, முதலாளிய வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்தது. அது மட்டுமல்ல, “ஐரோப்பாவில் கம்யூனிசப் புரட்சி ஏற்படும் அபாயம்” முன்னரை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. போரினால் ஏற்பட்ட பேரழிவுகள் ஐரோப்பிய மக்களை தலை நிமிர முடியாமல் செய்திருந்தது. பசி, பஞ்சம், பிணி எங்கும் தலைவிரித்தாடியது. அது மட்டுமல்லாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், போருக்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்தது பத்து சதவீத வாக்குகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்தன.

வெகு விரைவில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிச நாடுகளாகி விடும் என்ற அச்சம் காரணமாக, முதலாளிய வர்க்கம் பல விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது தான், நலன் புரி அரசுக்களின் தோற்றம்.

//அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது. //

முப்பது வருடங்களுக்கு முன்னர், இதைச் சொல்லி இருந்தால், ஓரளவு நம்பக் கூடியதாக இருந்திருக்கும். அப்போது, ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் இருந்தது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை. பணக்காரர்கள் என்றைக்குமே அதிகளவு சொத்துக்களை வைத்திருந்தனர். ஆயினும், அவர்கள் தமது ஆடம்பரங்களை வெளியே காட்டிக் கொள்ள வெட்கப் பட்டார்கள்.

அதிகம் சம்பாதிப்பவர்களிடம், அரசு அதிக வரி அறவிட்டது. அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு நலன்புரி அரசுக்கான செலவினத்தை ஈடுகட்டி வந்தது. இன்று அவை எல்லாம் பழைய கதைகள். கடந்த இருபது வருடங்களில், பெருமளவு அரசு மானியங்கள், சலுகைகள் குறைக்கப் பட்டு விட்டன. அதனால் அடித்தட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்து ஏழைகள் அதிகரித்து வருகின்றனர். மறு பக்கத்தில் பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்கின்றது. தொழில்நுட்பப் புரட்சி, கணணிமயமாக்கலும் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கு பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. 

 //ஜெர்மனியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை 8.5 யூரோக்களாக நிர்ணயித்து உள்ளது. வரும் ஜனவரி முதல் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும். எட்டு மணி நேர வேலைக்கு ரூ.5,600. மாத ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய்.//

ஜெர்மனியில், என்றைக்குமே குறைந்த பட்ச ஊதிய சட்டம் இருக்கவில்லை. ஆனால், அதைச் சுற்றியுள்ள பல ஐரோப்பிய நாடுகளில், ஏற்கனவே பல தசாப்த காலமாக பின்பற்றப் படுகின்றது. உழைக்கும் மக்கள் எல்லோரும் அதன் பலன்களை அனுபவிக்க முடியும் என்று தோன்றவில்லை. இன்னமும், நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப் படவில்லை. 

கடந்த பத்தாண்டுகளில் (குறிப்பாக, யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர்) விலைவாசி இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரித்து வந்த போதிலும், அதற்கு சமமமாக சம்பளம் உயரவில்லை. உண்மையில், ஜெர்மன் அரசு நிர்ணயிக்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியம், இன்னும் அதிகமாகும். குறைந்தது பத்து யூரோ இருந்தால் தான், செலவுகளை சமாளிக்க முடியும்.

முன்னாள் சோஷலிச நாடுகளில், "ஒரு வேலையை பத்து பேருக்கு பங்கிட்டுக் கொடுப்பார்கள்..." என்று முதலாளிய ஆதரவாளர்கள் கிண்டலடிப்பார்கள்.  அந்த சமுதாயத்தில், ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தை விட, ஊரில் இருக்கும் எல்லோருக்கும் வேலை போட்டுக் கொடுப்பது முக்கியமாகக் கருதப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் என்ன நடக்கிறது? அவர்களுக்கு வேலை செய்யும் மக்களை விட, நிறுவனத்தின் இலாபம் பெரிதாகத் தெரிகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலாபத்தை அதிகரிக்க விரும்புகின்றது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கணணிமயமாக்கல் காரணமாக, பல தொழில்கள் காணாமல் போய் விட்டன. அந்த நிலைமை இன்றைக்கும் தொடர்கின்றது. ஏற்கனவே வேலையிழந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், வேலை கிடைக்காமல் கஷ்டப் படுகிறார்கள். புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கோ, அல்லது வேலையிழந்த தொழிலாளர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவதற்கோ, அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது. முதலாளிகளிடம் கேட்டால், அது தங்களது பொறுப்பு அல்ல என்று தட்டிக் கழிக்கிறார்கள். 

இந்த இலட்சணத்தில், ஐரோப்பாவில் கம்யூனிசம் இல்லாமலே கம்யூனிசம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று சாருநிவேதிதா உளறுவது அருவருக்கத்தக்கது. சாருநிவேதிதா பாரிசுக்கு சென்றிருந்த போது, உயிரற்ற சிற்பங்களை பார்த்து இரசித்திருக்கலாம். ஆனால், நடைப்பிணங்களாக வாழும் வேலையற்ற தொழிலாளர்கள் யாரும் அவர் கண்களுக்கு தட்டுப் படவில்லைப் போலும்.

//கம்யூனிச சர்வாதிகாரம் இல்லாமலேயே மக்கள் நல அரசுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், கார்ல் மார்க்ஸோ எங்கெல்ஸோ அல்ல. அங்கே இருந்த தத்துவப் பாரம்பரியம்தான் அதற்குக் காரணம்.//

ஐரோப்பிய வரலாறு பற்றி எதுவும் தெரியாத, மேட்டுக்குடியினரின் வழமையான உளறல் இது. இன்று ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், ஏதாவதொரு சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கும். (பிரிட்டனில் உள்ள தொழிற்கட்சி போன்றன) மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக - ஜனநாயகக் கட்சிகள், இன்று முதலாளித்துவ கட்சிகளாக மாறிவிட்டாலும், அவை தொடங்கப் பட்ட ஆரம்ப காலங்களில் மார்க்சியக் கட்சிகளாகத் தான் இருந்துள்ளன. 

சமூக ஜனநாயகக் கட்சிகள், மார்க்ஸையும், ஏங்கல்சையும் பின்பற்றி வந்தன. தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டன. முன்னொரு காலத்தில், லெனினின் ரஷ்ய சோஷலிச கட்சியுடன், இரண்டாம் அகிலத்தில் அங்கம் வகித்தன. கொள்கை முரண்பாடு காரணமாக, சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின. அவை பின்னர் மூன்றாம் அகிலம் என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பாட்டாளிவர்க்கப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ அரசுக்களை தூக்கி எறிவதில் ஆர்வம் காட்டின. அதற்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராக இருந்தன. அதற்கு மாறாக, பாராளுமன்ற தேர்தல்கள் மூலம் சோஷலிசத்தை கொண்டு வரலாம் என்று நம்பிய சமூக - ஜனநாயகக் கட்சிகள், இறுதியில் முதலாளியக் கட்சிகளாக சீரழிந்து போயின. 

சமூக ஜனநாயகவாதிகள், ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ், முதலாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டார்கள். முதலாளிகளும் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்றார்கள். ஏனெனில், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு பின்னால், கணிசமான அளவு தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். உண்மையில், சமூக ஜனநாயகக் கட்சிகள் தமது கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டன. தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்தன. துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் துரோகிகள் தான் நாயகர்களாக போற்றப் படுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு பின்னால் அணிதிரண்ட மக்கள், தமக்கு சோஷலிசம் வேண்டும் என்று மனதார விரும்பினார்கள். கட்சி உறுப்பினர்கள் மார்க்ஸையும், எங்கல்ஸ்ஸையும் படித்தார்கள். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக தொழிற்சங்க போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்களின் விளைவு தான், பிற்காலத்தில் நலன்புரி அரசு என்ற பெயரில் கொண்டு வரப் பட்ட திட்டங்கள் ஆகும். 

சுருக்கமாக, சாருநிவேதிதா போற்றும் "மக்கள் நல அரசு"க்களின் ஆதாரமே மார்க்சிய தத்துவப் பாரம்பரியம் தான். அதை இன்றைக்குப் பலர் மறந்து விட்டார்கள். தம்மை பெற்றெடுத்து, கஷ்டப் பட்டு வளர்த்து ஆளாக்கிய, பெற்றோரை மறந்து விட்ட பிள்ளைகள் போன்று நடந்து கொள்கின்றனர். சாருநிவேதிதா முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.

//”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்பதுதான் ஐரோப்பியச் சிந்தனை மரபின் அடிப்படை. ஆனால் ”நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் உயிரைப் பறிக்கும் உரிமை எனக்கு உண்டு” என்று சொல்வது கம்யூனிசம்.//

சாருநிவேதிதாவின் உச்சகட்ட உளறல் இது தான். கருத்துரிமை பேசும் ஐரோப்பிய சிந்தனை மரபுக்குள் கம்யூனிச சித்தாந்தம் அடங்காதா? அது என்ன அண்டார்ட்டிக்கா சிந்தனை மரபா? கம்யூனிச சித்தாந்தத்தின் கரு உருவான, “உத்தொப்பியா” என்ற, பூவுலகில் சொர்க்கம் அமைப்பது பற்றிய நாவலை எழுதியவரும் ஓர் ஐரோப்பியர் தான். மார்க்ஸ், எங்கெல்ஸ் , லெனின் எல்லோரும் ஐரோப்பியர்கள் தான். ஐரோப்பிய தத்துவஞானிகளின், குறிப்பாக ஹெகலின் சிந்தனை மரபினை அடிப்படையாகக் கொண்டு தான், கார்ல் மார்க்ஸ் தனது நூல்களை எழுதினார்.

”நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்; ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் தருவேன்” என்று இன்றைய முதலாளித்துவ - ஜனநாயக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அந்தக் கருத்துரிமை நூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய மக்களுக்கு மறுக்கப் பட்டு வந்தது.

கார்ல் மார்க்ஸ் மட்டுமல்லாது, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பிற சோஷலிசவாதிகளும், தம்மை கருத்துரிமைப் போராளிகளாக அறிவித்துக் கொண்டார்கள். அந்தளவுக்கு, அன்றைய ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், இடதுசாரிகள் தான், ஐரோப்பிய வரலாற்றில் முதன் முதலாக கருத்துரிமைக்காக போராடினார்கள். அந்த வரலாறு இன்று இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

3 comments:

சீனிவாசன் said...

சாட் விவகாரம், நித்தியானந்தா ஆதரவு தொடங்கி மோடி ஆதரவு வரை இவரின் சுயரூபம் பலமுறை அம்பலமானதுதான். எதைப்பற்றிய முழுமையான அறிவுமின்றி, அரைவேக்காட்டுத்தனமாக கருத்து சொல்லி விளம்பரம் தேடும் காரியக்கார கிறுக்கு இவர். சரியான முறையில் இவரின் உளறல்களை உடைத்துள்ளீர்கள்...

ஊரான் said...

சாருநிவேதிதாவின் அரைவேக்காட்டுத்தனத்திற்கு எதிரான அருமையான பதில்.

kanagu said...

கருத்துரிமை பற்றி வாய் கிழியப் பேசும் சாரு நிவேதிதா என்ற அற்பரின் இணையதளத்தில் பின்னூட்டமிடவே வசதியில்லை..