Thursday, July 03, 2014

"பாபிலோனின் புதல்வன்" : ஈழத்தின் துயரத்தை நினைவுபடுத்தும் ஈராக் திரைப்படம்


ஹாலிவூட்டில் செட் போட்டு, ஈராக் பற்றி செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப் படும் அமெரிக்கத் திரைப் படங்களுக்கு மத்தியில், ஓர் உண்மையான ஈராக் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நெதர்லாந்தில் வாழும் ஈராக்கிய இயக்குனர் Mohamed Al Daradji தயாரித்து, 2009 ம் ஆண்டு வெளியான "பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon) திரைப்படம், பல சர்வதேச பரிசுகளை வென்றுள்ளது. 

"பாபிலோனின் புதல்வன்", ஈராக்கில் நடந்த சம்பவங்களை வைத்து பின்னப் பட்ட கதை என்றாலும், ஈழப் போரில் நடந்த சம்பவங்களுடனும் அது பொருந்துகின்றது.

நாம் வாழும் நாடுகளும், பேசும் மொழிகளும் மட்டுமே வேறு வேறு. உலகம் முழுவதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளும், அனுபவங்களும் ஒன்று தான். 

தமிழகத்தில், ஏராளமான ஹாலிவூட் குப்பைகளை டப் பண்ணி வெளியிடும் நேரத்தில், இது போன்ற நல்ல படங்களை தமிழில் டப் பண்ணி வெளியிட்டால், தமிழ் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். ஒரு சினிமாவினால் சமூக விழிப்புணர்வை உண்டாக்கிய திருப்தியும் கிடைத்திருக்கும். கோடம்பாக்கம் சினிமாத் துறையினருக்கு இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

Son of Babylon படத்தின் கதை இது தான்:

2003 ம் ஆண்டு, ஈராக்கில் சதாமின் ஆட்சி கவிழ்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கிய சில வாரங்களில் இந்தக் கதை நடக்கிறது. அஹ்மத் என்ற 12 வயது சிறுவன், தனது பாட்டியுடன் காணாமல் போன தந்தையை தேடிப் பயணத்தை தொடங்குகிறான். பயணத்தின் நடுவில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகின்றனர்.

ஈராக்கின் வடக்கே உள்ள குர்திஸ்தானில் இருந்து, தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஸ்ரியாவை நோக்கி, அவர்களதுஆரம்பமாகின்றது.  அஹ்மத்தின் தாய் இறந்து விட்டாள். பாட்டியின் மகன் தான், அவனது தந்தை. மகனைத் தேடும் தாயினதும், தந்தையைத் தேடும் மகனினதும் உணர்வுகளுடன் நாங்களும் ஒன்று கலக்க முடிகின்றது.

1991 ம் ஆண்டு, குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்திய சதாமின் ஈராக் இராணுவம், அஹ்மத்தின் தந்தையை கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அதற்குப் பிறகு அவர் காணாமல்போயுள்ளார். வட இலங்கையில் நடந்ததைப் போன்று, வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் நடத்திய காலகட்டம் அது. அன்றைய ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் இராணுவம், அரபு மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த படையினரைக் கொண்டிருந்தது. 

ஈராக் இராணுவத்தின் அடக்குமுறை காரணமாக, பெண்களும், குழந்தைகளுமாக பல ஆயிரம் குர்திஷ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதைவிட பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப் பட்டு, தெற்கு ஈராக்கிய சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் காணாமல்போயினர். அதாவது, இரகசியப் புதைகுழிகளுக்குள் கொன்று புதைக்கப் பட்டனர்.

ஈழப் போரிலும், அதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. வட இலங்கையில் கைது செய்யப் பட்டு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள், தென்னிலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டனர். சிறி லங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல்போய், பின்னர் புதைகுழிகளுக்குள் கண்டெடுக்கப் பட்ட இளைஞர்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் படத்திற்கு வருவோம். அஹ்மத்தின் பாட்டி, நஸ்ரியாவில் உள்ள சிறையில் தனது மகன் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக கேள்விப் பட்டு, பேரனையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறாள். அவர்கள் வடக்கே குர்திஸ்தானில் வாழும், குர்திய சிறுபான்மை இனத்தவர்கள். பாட்டிக்கு குர்து மொழி மட்டுமே தெரியும். பெரும்பான்மை அரபி மொழி பேசும் பிரதேசத்தில் மொழி தெரியாது தவிக்கிறாள். அந்த நேரத்தில், அரபி பேசத் தெரிந்த சிறுவன் அஹ்மட் உதவுகிறான். 

அந்தக் காட்சிகள், வட இலங்கையில் வாழும் தமிழர்கள், தென்னிலங்கைக்கு சிறைப் பிடித்து கொண்டு செல்லப்பட்ட உறவுகளை தேடிச் செல்வதை நினைவு படுத்துகின்றன. அவர்களும் சிங்களம் மட்டும் பேசும் பிரதேசங்களில் மொழி தெரியாமல் தவிப்பதுண்டு. ஈராக்கில் அரேபியருக்கு குர்து மொழி தெரியாத மாதிரி, இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு திரைப்படக் காட்சிகள் முழுவதும், ஈழத் தமிழரின் இன்னல்களையும் நமது மனக் கண் முன்னால் கொண்டு வருகின்றது.

அஹ்மத்தும் பாட்டியும் பாக்தாத் செல்லும் வழியில், அமெரிக்கப் படையினரின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வழி நெடுகிலும் புகை மண்டலமும், இடிந்த கட்டிடங்களும் போர் இன்னும் ஓயவில்லை என்பதைக் காட்டுகின்றது. பாக்தாத் நகரில், ஒரு தனியார் பஸ் வண்டியை பிடித்து, நஸ்ரியா நோக்கிச் செல்கின்றனர். 

நீண்ட பயணத்திற்குப் பின்னர், நஸ்ரியா நகரை வந்தடையும் அஹ்மட்டும், பாட்டியும், அங்கேயிருந்த சிறைச்சாலை வெறுமையாக இருப்பதைக் காண்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் மட்டும் காணாமல்போனவர்களின் பட்டியலுடன் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் அவர்களைப் போன்று, இன்னும் பல பெண்கள் தமது காணாமல்போன உறவுகளைத் தேடி வந்திருப்பதைக் காண்கின்றனர்.

காணாமல்போனவர்களை தேடி வரும் உறவினர்களுக்கு, அதிகாரிகள் தமது பட்டியலில் இல்லாத பெயர்கள், மனிதப் புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டிருக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். சதாம் ஆட்சிக் காலத்தில் கொன்று புதைக்கப் பட்டவர்களின் புதைகுழிகள் தற்போது தோண்டப் பட்டு வருகின்றன. 

அஹ்மத்தும், பாட்டியும், வழியில் கண்ட மற்றவர்களுடன், மனிதப் புதைகுழிகளை தேடிச் செல்கின்றனர். தமது கணவன் மாரை இழந்த பெண்கள், மகன் மாரை  இழந்த பெண்கள், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு துயரக் கதை ஒளிந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிலர் தமது உறவுகளின் சடலங்களை கண்டெடுக்கிறார்கள். மற்றவர்கள் அடுத்த புதைகுழியை தேடிச் செல்கிறார்கள்.

இதற்கிடையே பயணத்தின் போது சந்திக்கும் ஓர் அந்நிய வாலிபன், வழியில் அஹ்மட்டுடன் நட்பு கொள்கிறான். அவனது தந்தையை கண்டுபிடிப்பதற்கு, புதைகுழிகள் இருக்குமிடத்தை கூட்டிக் கொண்டு சென்று காட்டுவதற்கு, தானாகவே உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பருக்கு கொஞ்சம் குர்து மொழி பேசத் தெரிந்திருக்கிறது. அவனுக்கு எப்படி குர்து தெரியும் என்று பாட்டி கேட்கிறாள்.

அதற்கு அவன், குர்திஸ்தானில் நடந்த போரில், சதாமின் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை சொல்கிறான். உடனே துணுக்குற்ற பாட்டி, அவன் குர்திஷ் மக்களை கொன்று குவித்த முன்னாள் போர்வீரன் என்பதை அறிந்து கொண்டு வெறுக்கிறாள். அஹ்மத்தையும் அவனோடு பேச வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால், அரசியலை விட அந்த அந்நிய ஆடவனின் தன்னலம் கருதாத உதவி, 12 வயது சிறுவனான அஹ்மத்தை பெரிதும் கவர்ந்து விடுகின்றது.

கடந்த கால இனக் குரோத போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அடக்குமுறைக் கருவியாக செயற்பட்ட ஒருவரும், சந்திக்க நேரும் சந்தர்ப்பம், ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் நடக்கலாம். ஒரு காலத்தில், தன்னால் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனையை, தற்போது சாதாரண மனிதனாக மாறியிருக்கும் முன்னாள் போர்வீரன் உணர்ந்து கொள்கிறான். "உண்மையில் குர்து மக்களை கொல்வதற்கு தான் மேலிடத்தால் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், போரில் நடந்த குற்றங்களுக்காக வருந்துவதாகவும்," அந்த முன்னாள் போர்வீரன் நடந்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருகிறான். ஆரம்பத்தில், அவனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள அஹ்மத்தின் பாட்டி மறுக்கிறாள். 

ஆயினும், எதிர்பாராமல் சந்தித்த அரபி நண்பனின் உதவியால் தான், அவர்களால் புதைகுழிகள் இருக்குமிடத்திற்கு செல்ல முடிகின்றது. படத்தின் முடிவில் அவன் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பாட்டி, போர் நடந்த காலத்தில் கட்டாயப் படுத்தப் பட்டதன் காரணமாக தவறிழைத்த முன்னாள் போர்வீரனை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாக கூறுகின்றாள். அந்த முன்னாள் அரபுப் படைவீரனின் இடத்தில், ஒரு சிங்கள படையினனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த குர்து மூதாட்டியின் இடத்தில், ஒரு ஈழத் தமிழ் மூதாட்டியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே குர்திஸ்தான், இங்கே ஈழம். நாடுகள் தான் வேறு, கதை ஒன்று தான்.

காணாமல்போன உறவு தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட அஹ்மத்தும், பாட்டியும் ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். அத்துடன் படம் முடிகின்றது. ஈராக்கில் கடந்த நாற்பது வருடங்களில் ஒரு மில்லியன் பேரளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. நாடு முழுவதும் சுமார் 250 மனிதப் புதைகுழிகள் உள்ளன. பலரது சடலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இன்னமும் பலர் காணாமல் போனவர்களாக உள்ளனர்.

"பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon)படத்தின் வீடியோ:

1 comment:

வலிப்போக்கன் said...

கோடம்பாக்கம் சினிமாத் துறையினர். உங்கள் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள் என்பது தின்னம்.