Sunday, July 13, 2014

முதலாளித்துவத்தை மாற்றுவதற்கு மக்களுக்கு பொருளியல் அறிவு அவசியம்

"பொருளாதாரம் என்பது ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. முதலாளித்துவத்தில் உள்ள குறைகளை களைய வேண்டுமானால், முதலில் மக்கள் அனைவருக்கும் பொருளாதாரம் பற்றிய அறிவு கிடைக்கச் செய்வது அவசியம். பொதுவாக எல்லா விஷயங்களிலும் பலருக்கு ஆர்வமும், தெரிவிப்பதற்கு ஏதாவதொரு கருத்தும் இருக்கும். ஆனால், பொருளாதாரம் சம்பந்தமாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. புரிந்து கொள்ள கஷ்டமானது என்று சாமானியர்கள் நினைக்கிறார்கள். அது அப்படி ஒன்றும் கடினமான சமாச்சாரம் அல்ல. உண்மையில் பொருளியல் அறிஞர்கள் தான் வேண்டுமென்றே அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்."

பிரிட்டனில் வாழும் தென் கொரிய பொருளியல் அறிஞர் ஹ ஜூன் சங் (Ha-Joon Chang) இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரத்தை அனைவருக்கும் எளிதாக புரிய வைக்கும் நோக்கில் Economics: The User's Guide என்ற நூலை எழுதி இருக்கிறார். 

நெதர்லாந்து பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில், ஹ ஜூன் சங் தெரிவித்த கருத்துக்கள் சில:

  • பொருளாதாரம் என்றால் நாங்கள் எதைப் புரிந்து கொள்கிறோம்?


முக்கியமான விடயம் என்னவெனில், பொருளியலில் ஒரு கேள்விக்கு ஒரு பதில் தான் இருக்கின்றது என்பதில்லை. அது ஒரு விஞ்ஞானம் அல்ல. பொருளியல் நிபுணர்கள் கூறும் "உண்மைகளை" சந்தேகித்து கேள்வி எழுப்பலாம். வேறொரு கொள்கை வகுக்க வேண்டுமென கேட்கலாம். 

பொருளாதாரம் என்பது ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஒவ்வொரு பொருளியல் உண்மைக்கும் பின்னால் ஒரு அரசியல் மறைந்திருக்கிறது. அனேகமாக, அந்த "உண்மைகள்" அவற்றை அறிவிப்பவரின் நலன்களில் தங்கி உள்ளது.

பொருளியல் அறிஞர்கள், நாங்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, சமத்துவமின்மை ஒரு தவிர்க்கவியலாத தோற்றப்பாடு அல்ல. இயற்கையாக நடக்கும் மோசமான காலநிலை போன்றதல்ல அது. சமத்துவமின்மையை நாங்கள் எதிர்த்து போராடலாம்.

  • இன்றைய முதலாளித்துவ அமைப்பில் என்ன குறைபாடு?


எல்லாமே தவறாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ஐம்பதுகளுக்கும் எழுபதுகளுக்கும் இடைப் பட்ட காலத்தில், முதலாளித்துவம் எங்களுக்கு நிறைய வழங்கல்களை செய்துள்ளது. உலகப் பொருளாதாரம் ஒவ்வோர் ஆண்டும் 2 அல்லது 3 சதவீதத்தால் வளர்ந்து கொண்டிருந்தது. வங்கி நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. அன்றைக்கும் சமத்துவமின்மை இருந்தது. ஆனால், இன்றுள்ள அளவிற்கு பெரியதொரு இடைவெளி காணப் படவில்லை.

இன்றைய பொருளாதாரம் மிகவும் அரிதாகத் தான் வளர்கின்றது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது வரையில் எத்தனை பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன என்பதை எண்ணுவதையே விட்டு விட்டோம். எப்படி அது நடந்தது?

ஏனென்றால், நாங்கள் நிதித் துறை மீதான கட்டுப்பாடுகளை, அளவுக்கு அதிகமாகவே தளர்த்தி விட்டோம். சந்தை மிகவும் பலமானதாக மாறி விட்டது. முதலாளித்துவம் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் தான் பலனளிக்கும். ஐம்பதுகள், எழுபதுகளில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்ததற்கு காரணம், அன்று நிறைய கண்டிப்பான விதிகள் இருந்தன.

  • எப்படிப் பட்ட பொருளாதார மாதிரி நமக்கு வேண்டும்?


உற்பத்தியை பெருக்குவதற்காக நிறைய முதலிடப் பட வேண்டும். இன்றுள்ள நிறுவனங்கள் ஆராய்ச்சிகளிலும், தொழிற்கல்வி அளிப்பதிலும் மிகவும் அரிதாகவே முதலிடுகின்றன. ஏனென்றால், விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பும் பங்குதாரர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். நிறுவனங்கள், வளர்ச்சியில் முதலிடுவதை விட, தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன் மூலம் அவர்களுக்கு உடனடியாகவே பணம் கிடைக்கும். 

பங்குகளின் மீது ஒரு விசேட வரி அறவிடுவதன் மூலம் அதைத் தடுக்கலாம். பங்குதாரர்கள் ஒரு குறிப்பிட்ட காலம், தமது பங்குகளின் இலாபத்தை எடுக்காமல் வைத்திருந்தால், குறைவான வரி செலுத்த முடியும் என சலுகை கொடுக்கலாம். அடுத்த படியாக, நிதித் துறை கண்டிப்பான சட்டங்களின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். சமத்துவமின்மை பிரச்சினை குறைக்கப் பட வேண்டும். அரசாங்கம் இதில் முக்கிய பாத்திரம் ஆற்ற முடியும். அது தான் ஆட்ட விதிகளை தீர்மானிக்க வேண்டும். வழி காட்ட வேண்டும்.

  • இது எதுவும் நடக்காது விட்டால்?


மீண்டும் ஒரு பொருளாதார அல்லது நிதி நெருக்கடி ஏற்படும். இப்போதே பல நீர்க் குமிழிகள் தோன்றுகின்றன. புதிய நெருக்கடியை தீர்ப்பதற்கு எம்மிடம் பணம் இருக்காது. அப்போது அது மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வரும்.
மூலப் பிரதி

(நன்றி: NRC Weekend, 12 &13 juli 2014)


பொருளியல் அறிஞர் ஹ ஜூன் சங் பற்றிய முன்னைய பதிவு: முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்

No comments: