Tuesday, March 25, 2014

ஏழைகளுக்கு உணவில்லையெனில் வணிக மையங்களை கொள்ளையடிப்போம்!


"ஏழை மக்களே! உங்களுக்குப் பசிக்கிறதா? உணவு வாங்குவதற்கு கையில் பணம் இல்லையா? வாருங்கள், சூப்பர் மார்க்கட் அங்காடிகளை சூறையாடுவோம். காசு கொடுக்க தேவையில்லை. விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். இது அநீதிக்கு எதிரான ஏழைகளின் எழுச்சி!" 
சேகுவரா மாதிரி தாடி வைத்த, கழுத்தில் பாலஸ்தீன சால்வை அணிந்த ஒருவர் ஒலிபெருக்கியில் கூற, கூடியிருந்த ஜனத்திரள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றது. நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்றாக சென்று, சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து, விரும்பியதை எடுத்து கூடைகளில் நிரப்பிக் கொண்டு வெளியே வருகின்றனர். "கொள்ளையடிக்கப் பட்ட" உணவுப் பொருட்களில் பெரும் பகுதி, ஏழைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கு அன்பளிப்பு செய்யப் படுகின்றது.

இந்த சம்பவம், 2012 ம் ஆண்டு, தெற்கு ஸ்பெயினில் நடந்தது. சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டம், அந்த நாட்டில் பல தடவைகள் நடந்து விட்டன. பொருளாதார நெருக்கடியால், கடுமையாக பாதிக்கபப்ட்ட ஸ்பெயின் நாட்டில், நாற்பது சதவீதமானோருக்கு வேலை இல்லை. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஏழைகள் கிளர்ச்சி செய்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று, சூப்பர் மார்க்கட் சூறையாடும் போராட்டத்தை அறிமுகப் படுத்தியவரின் பெயர்: ஹுவான் மனுவேல் சஞ்செஸ் (Juan Manuel Sanchez). அவர் கடந்த முப்பது வருடங்களாக Marinaleda என்ற சிறிய நகரம் ஒன்றின் மேயராக பதவி வகித்து வருகின்றார்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவர் நிர்வகிக்கும் மரினலேடா நகரத்தில், அனைத்தும் கம்யூனிச பொருளாதார அடிப்படை கொண்டவை. கடந்த சில வருடங்களாக, ஸ்பெயின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால், மரினலேடா பொருளாதாரம் உயர்ந்து வருகின்றது. அங்கே வேலையற்றோர் யாரும் இல்லை. அயல் கிராமங்களில் இருந்து பலர் வேலை தேடி வருகின்றனர். அங்கு வேலை செய்யும் ஒரு விவசாயக் கூலி, ஒரு நாளைக்கு $65 (3,928 இந்திய ரூபாய்கள், 8,496 இலங்கை ரூபாய்கள்) சம்பாதிக்க முடியும். இது ஸ்பெயினில் பிற பகுதிகளில் கிடைக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஸ்பெயினின் பிற பகுதிகளில் வாழும் மக்கள், வீட்டு வாடகை கட்ட முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். வாடகை பாக்கி வைத்த பலர், வசித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, தெருக்களில் வசிக்கிறார்கள். மரினலேடா நகரில் வாழும் எல்லோரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்கள். நகர சபை வீடு கட்ட கடன் வழங்குகின்றது. வீடு கட்டி முடிந்ததும், கடனை அடைப்பதற்காக மாதாந்த தவணைத் தொகை $ 20 மட்டுமே திருப்பிக் கட்ட வேண்டும். பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்குவதால், அது மரினலேடாவில் வாழும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதனால், பல பெற்றோரின் சுமை குறைகின்றது. ஸ்பெயினின் பிற பகுதிகளில், அதற்காகவே சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இரண்டு, மூன்று பிள்ளைகளை வைத்திருப்போரின் பாடு திண்டாட்டம் தான்.

மரினலேடா நகரில் நிர்வாகம் முழுவதும் ஜனநாயக முறைப் படி நடக்கிறது. அனைத்து முடிவுகளும் அங்கு வசிக்கும் மக்களை கலந்தாலோசித்து, அவர்களின் சம்மதத்துடன் எடுக்கப் படுகின்றன. மேயர் ஹுவான் மனுவேல் சஞ்செஸ், மரினலேடா வாழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக உள்ளார். கடந்த முப்பது வருடங்களாக, மேயர் பதவிக்கு வேறு யாரும் வர முடியவில்லை. ஹுவான் மனுவேல் சஞ்செஸ், ஐக்கிய இடது முன்னணி கட்சியின் பிரதிநிதி. அங்கே ஸ்பெயினின் பிற கட்சிகளும் இயங்குகின்றன. ஐக்கிய இடது முன்னணி கட்சி, மாகாண அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால்,அது மரினலேடாவுக்கு பெரும் தொகை ஒதுக்குவதாக, எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹுவான் மனுவேல் சஞ்செஸ், தானுண்டு தன வேலையுண்டு என்று, மேயர் பதவியுடன் திருப்தியடைந்து விடவில்லை. அயலில் உள்ள கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழை மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார். அதனால், ஆட்சியாளர்களின், முதலாளிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். ஏற்கனவே பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர். இப்போதும் பல வழக்குகள் அவர் மேல் போடப் பட்டுள்ளன. 

ஹுவான் மனுவேல் சஞ்செஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும், ஒரு சூப்பர் மார்க்கட்டில் சூறையாடி, பணம் கொடுக்காமல் வெளியே வந்த பொழுது, பொலிஸ் அவரைக் கைது செய்தது. அந்த தகவல், ஸ்பெயின் நாட்டு ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் யாரென்று தெரியாத ஸ்பானிஷ் மக்களுக்கும், அவரைப் பற்றி அறியத் தந்தன. என்ன ஆச்சரியம்! சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த ஹுவான் மனுவேல் சஞ்செஸ், பெரும்பான்மையான ஸ்பானிஷ் மக்களுக்கு ஒரு நாயகனாக தென்பட்டார். பலர் அவரை "நவீன ரொபின் ஹூட்" என்று அழைத்தார்கள். ஸ்பெயின் முழுவதும் "சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த வீர நாயகனின்" புகழ் பரவியது.

சூப்பர் மார்க்கட் சூறையாடுவதால் ஏழைகளின் உணவுத் தேவை தீர்ந்து விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணக்காரர் யாரும் தாமாகவே முன்வந்து, தங்களது செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதனால், ஏழைகளுக்கு முன்னிருக்கும் ஒரே தெரிவு அடித்துப் பறிப்பது தான். இந்தப் பொருளாதார பால பாடத்தை மக்களுக்கு உணர்த்துவதே, சூப்பர் மார்க்கட் சூறையாடலின் நோக்கம். சில நிறுவனங்கள், ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மீது கிரிமினல் வழக்குப் போட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதால், வழக்கு இழுபட்டுக் கொண்டு செல்கின்றது. 

இதே நேரம், யாருமே எதிர்பார்க்காத அதிசயம் ஒன்றும் நடந்துள்ளது. ஹுவான் மனுவேல் சஞ்செஸ் கொள்ளையடித்த சூப்பர் மார்க்கட்டினை நடத்தும் இன்னொரு நிறுவனம், கொள்ளையடிக்கப் பட்ட பொருட்களின் செலவை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு உணவுப் பொருட்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. "உலகில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சில நேரம் அதற்கு கிளர்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்று ஹுவான் மனுவேல் சஞ்செஸ் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:


ஸ்பானிஷ் தொலைக்காட்சியில், ஏழைகள் சூப்பர் மார்க்கட் கொள்ளையடித்த செய்தி:

No comments: