Friday, July 12, 2013

கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது

இளவரசனின் மரணத்தின் பின்னர், அந்தக் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக, பலரும் அருமையான யோசனைகளை முன்வைக்கின்றனர். "கலப்புத் திருமணம் செய்யும் காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால், பிரச்சினையை இலகுவாக தீர்த்து விடலாம்," என்பது அவற்றில் ஒன்று. கலப்புத் திருமணம் இல்லையென்றால், கலவரத்தை தூண்டி விடுவதற்கு சாதி வெறியர்களுக்கு வேறு காரணம் கிடைக்காதா? மரக்காணம் கலவரம் நடப்பதற்கு காரணம் கலப்புத் திருமணமா? தருமபுரியில் தலித் மக்களின் குடியிருப்புகளை கொளுத்திய அதே பாட்டாளி மக்கள் கட்சி தான், மரக்காணத்தில் "கோடி வன்னியர்கள் கூடும் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா" வில், கலவரத்தை நடத்தியது.

பா.ம.க. ஒரு வன்னிய சாதிவெறி கட்சி என்பதற்கான சான்றுகள் அளவுக்கதிகமாகவே உள்ளன. "பா.ம.க. வை தடை செய்ய வேண்டும், சாதிவெறிக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்பன போன்ற கோரிக்கைகளை எழுப்பாததை கூட மன்னித்து விடலாம். ஆனால், பா.ம.க. வின் சாதிவெறியை முழுமையாக புறக்கணித்து விட்டு, "கலப்புத் திருமண ஜோடிகளுக்கு பாதுகாப்பு கோருவது", குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தந்திரமாகும். "சிங்கள அரச போர்க்குற்றவாளிகளை புறக்கணித்து விட்டு, முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டுமென பேசுவதும்" இதுவும் ஒன்று தான். பக்கத்தில் இருக்கும் வன்னிய சாதிவெறியர்களை எதிர்க்கத் தைரியமற்றவர்கள், எட்டத்தில் இருக்கும் சிங்கள இனவெறியர்களை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள். நாங்களும் நம்பித் தொலைக்கிறோம்.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில், நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. வெவ்வேறு சாதிய பின்னணிகளை கொண்டோர், வேற்றுமைகளை மறந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதனை ஒரு சமத்துவ சமுதாயத்தின் உருவாக்கமாக கருத முடியாது. கலப்புத் திருமணம் செய்து கொண்டோரில் 90% மானோர் முன்னாள் புலி உறுப்பினர்கள். ஐந்து வருட இராணுவ சேவையின் பின்னர், போராளிகளாக இருந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். அப்போது பலர் சாதி பார்க்காமல், சக இயக்க உறுப்பினர்களை திருமணம் செய்திருந்தனர்.

போராளிகளாக முகாம்களில் இருந்த காலத்தில், பலர் தமது முந்திய சாதிய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களது குடும்பங்கள், உறவினர்களிடம் இருந்து விலகி இருந்ததும் ஒரு முக்கிய காரணம். புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட குடும்பங்கள், பொருளாதாரத் தேவைகளுக்காக புலிகள் அமைப்பில் தங்கி இருந்தன. புலிகளே வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தனர். தேவைப் பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்தனர்.

மாவீரர் குடும்பங்களும், போராளிக் குடும்பகளும் முன்னுரிமை பெற்றிருந்த சமுதாயத்தில், சாதியம் பின்னுக்குத் தள்ளப் பட்டதில் அதிசயமில்லை. அது ஒரு குறிப்பிடத் தக்க மாற்றம் தான். ஆனால், அந்த மாற்றம் புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே இருந்தது. அதனால் தான், புலிகள் அழிந்த பின்னர் அந்த கலப்புத் திருமணங்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னாள் போராளிகள் பெற்றோருடன் தொடர்புகளை புதுப்பித்துக் கொண்ட பின்னர் பிரச்சினைகள் ஆரம்பமாகின. 

குறிப்பாக ஆதிக்க சாதியை சேர்ந்த மணமக்கள், பெற்றோரின் தூண்டுதலினால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த துணைகளை விவாகரத்து செய்தனர். பின்னர், பெற்றோரின் ஆலோசனைப் படி, ஒரே சாதியை சேர்ந்தவர்களை மறுமணம் செய்து கொண்டனர். புலிகளின் நிர்வாகத்தின் கீழ் பதியப் பட்ட திருமண எழுத்துக்கள், இலங்கை அரசினால் ஏற்றுக் கொள்ளப் படாத காரணத்தை காட்டியும், ஆதிக்க சாதியினர் கலப்பு மணத் தம்பதிகளை பிரித்து வைத்தனர்.

உலகமயமாக்கலின் காரணமாக, யாழ்ப்பாணத்திலும் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. ஒரே சாதியில் திருமணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்துள்ளனர். ஆனால், அது குறித்து நாங்கள் இங்கே பேசவில்லை. வன்னியில் ,  சாதிக் கலப்பு திருமணம் செய்து கொண்ட, எத்தனை பேர் விவாகரத்து செய்தனர் என்பது தான் கேள்வி. எனக்குத் தெரிந்த, கலப்புத் திருமணம் செய்த பலர் இன்றைக்கும் வன்னியில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களது வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது. பெற்றோர், உறவினர்களால் ஒதுக்கப் பட்ட நிலையில் வாழ்கின்றனர். அவர்களது தொழில் வாய்ப்புகள், அல்லது பொருளாதார நிலைமை நல்ல நிலையில்  இருப்பதால், அதைப் பற்றி கவலைப் படாமல் வாழ முடிகின்றது. 

ஆனால்,  முன்னாள் போராளிகளான, வயது முதிர்ச்சி அடையாத இளைஞர்கள், போருக்குப் பின்னர் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. பெற்றோரில், அல்லது நெருங்கிய உறவினர்களிடம்  தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அவர்களின்  சொற் கேட்டு விவாகரத்து செய்கின்றனர். ஆதிக்க சாதியினரின் பொருளாதார அடிப்படைக் கட்டுமானம் பலமானதாக இருக்கும் வரையில், இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. புலிகளின் தோற்றத்திற்கு முன்னரும், அழிவுக்கு பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆழமாகப் பார்த்தால், இது அதிகார மையத்துடனான சமூக உறவுகளில் நேர்ந்த மாற்றம். ஆங்கிலேய காலனிய காலத்தில், ஈழத்து சாதிய கட்டமைப்பு பெருமளவு மாற்றத்திற்குள்ளானது. புலிகளின் ஆட்சி நூறாண்டுகள் தொடர்ந்திருந்தால், சாதிய, வர்க்க கட்டமைப்பில் குறிப்பிட்டளவு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அது சமத்துவமில்லாது, ஏற்றத் தாழ்வுகளை கொண்ட சமுதாயமாக இருக்கும். பொருளாதார உற்பத்தியுடன், உழைக்கும் வர்க்கத்தின் உறவு மாறாத வரைக்கும் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:
காதலுக்கு மரியாதையில்லை! சாதியம் இன்னும் சாகவில்லை!

2 comments:

ஊரான் said...


"கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது"

இந்தியாவிலும் நிலைமை இதுதான். கலப்பு மணம் புரிந்த கொள்வோர் இடஒதுக்கீட்டு சலுகைக்காகவோ அல்லது உயர்சாதி கௌரவத்திற்காகவோ பெற்றோர்கள் தங்களின் ஏதாவதொரு சாதியை தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு செய்து கொள்கிறார்கள். கலப்பு மண தம்பதியரின் வாரிசுகள் சாதியற்றவர்களாக மாறுவதில்லை.

சமூக விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள் மட்டுமே சாதியற்றவர்களாக தங்களது வாரிசுகளை மாற்றுகிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் மிகக் குறைவு என்றாலும் சாதியத்தை தகர்ப்பதற்கான சரியான பாதை இதுவே.

Unknown said...

சாதியை தகர்பதற்கு என்று கலப்பு மணங்கள் செய்தால் முடிவில் அது நீர்த்துப் போகும்