Wednesday, August 22, 2012

முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்

புரட்சிகர பெண் விடுதலை எல்லாம் ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியமாகும். ஆசிய கண்டத்தை சேர்ந்த, அதிலும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெண்கள் எழுச்சியுற மாட்டார்கள். அவர்கள் பழமைவாதத்தில் ஊறியவர்கள் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகவிருந்த உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண் உரிமைப்போர் பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? இதுவரை உலகில் எந்தப் பகுதியிலும், பெருந்தொகையான பெண்கள் தமது உயிரைக் கொடுத்து போராடிய வரலாறு, உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. 1927 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மட்டும், சுமார் இரண்டாயிரம் பெண்கள், இந்த உரிமைப் போரில் கொல்லப் பட்டார்கள்! 

இரத்தம் சிந்திய பெண் விடுதலைப் போரில், முதல் களப்பலியான நூர்ஜான், அவரது சகோதரர்களால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப் பட்டார்! "பெண்களே! உங்களைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்கை உடைத்தெறியுங்கள்." என்று புதுமைப் பெண்ணைப் பற்றி கவிதை பாடிய உஸ்பெகிய கவிஞர் ஹம்சா, நமது பாரதியாரை நினைவுபடுத்துகின்றார். கல்வி மறுக்கப்பட்ட மகளிரை கவிதை பாடி தட்டி எழுப்பிய புரட்சிக் கவிஞன், மதவெறியர்களால் அடித்துக் கொல்லப் பட்டான். (Hamza Hakimzade Niyazi,  http://en.wikipedia.org/wiki/Hamza_Hakimzade_Niyazi) சோஷலிச உஸ்பெகிஸ்தானில், ஹம்சாவுக்கும், நூர்ஜானுக்கும் சிலைகள் கட்டப் பட்டன. இத்தனைக்கும், அந்த இரண்டு தியாகிகளும் கம்யூனிஸ்டுகள் அல்ல! 

உஸ்பெகிஸ்தான் பெண்களின் உரிமைப் போர் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், அன்றைய மத்திய ஆசியாவின் சமூக அமைப்பு எப்படி இருந்தது என்று பார்ப்போம். இன்றைக்கு இருக்கும் தேசிய எல்லைகள் எல்லாம் பிற்காலத்தில் உருவானவை. அன்றைய மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தானுடன் இணைந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் துருக்கெஸ்தான் என்று அழைக்கப் பட்ட பகுதிக்கு பொறுப்பாக ஒரு எமிர் இருந்தார். உண்மையில் அது ஒரு பிராந்திய கவர்னர் பதவி போன்றது என்றாலும், எமிர் ஒரு அரசனைப் போல ஆண்டு வந்தார்.  எமிரும், மத குருமாரான முல்லாக்களும், "பெண்கள் ஆண் துணையின்றி, தனியாக வெளியே செல்வதையும், கல்வி கற்பதையும்," தடை செய்து வைத்திருந்தனர். பெண்கள் வெளியே செல்வதென்றால், தாலிபான் கால ஆப்கானிஸ்தானில் இருந்ததைப் போன்று, முகத்தையும், உடலையும் முழுவதுமாக மூடும் திரை போட்டுக் கொண்டு தான் செல்ல வேண்டும். முகத்திரை அணியாமல் செல்லும் பெண்கள், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று அர்த்தம். அவர்களை யாரும் எதுவும் செய்யலாம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவை நோக்கி விரிந்து கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம், துருக்கெஸ்தான் பகுதியையும் போரில் வென்று ஆக்கிரமித்தது. தெற்கே இன்னொரு உலக வல்லரசான பிரித்தானியா, என்ன விலை கொடுத்தென்றாலும், ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுக்க விரும்பியது. அதனால், ஆப்கானிஸ்தானை இரண்டு வல்லரசுகளுக்கு இடைப்பட்ட நடுநிலைப் பிரதேசமாக, மோதல் தவிர்ப்பு  ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். இல்லாவிட்டால், இன்று இந்தியாவும் ரஷ்யாவின் ஒரு மாநிலமாக இருந்திருக்கும்! 

ரஷ்யப் பேரரசன் சார் மன்னன், துருக்கெஸ்தான் பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டாலும், எமிரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டான். பிரிட்டிஷ் காலனியான இந்தியாவில், மகாராஜாக்கள் ஆட்சி செய்தது போல, எமிரின் உள்நாட்டு ஆட்சியதிகாரத்தில் ரஷ்யர்கள் தலையிடவில்லை. வெளிநாட்டுத் தொடர்பு, தேசிய இராணுவம்போன்ற முக்கிய விடயங்களை ரஷ்யர்கள் பார்த்துக் கொண்டனர். துருக்கெஸ்தான் பகுதிகளில் ரஷ்ய இராணுவ முகாம்கள் இருந்தன. நிர்வாகக் கட்டமைப்புக்காகவும் பெருமளவு ரஷ்யர்கள் குடியேற்றப் பட்டனர். இருந்தாலும், ரஷ்ய சட்டம் அவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம் மக்கள், ஷரியா சட்டத்தினால் ஆளப்பட்டனர். இதனால், சார்  மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்குள் வாழ்ந்தாலும், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை கிடைக்கவில்லை. அதே போன்று, துருக்கெஸ்தான் முஸ்லிம்களுக்கு ரஷ்ய பிரஜாவுரிமையும் வழங்கப் படவில்லை. அவர்கள் வழக்கம் போல, எமிரின் குடிமக்களாக நடத்தப் பட்டனர். 

துருக்கெஸ்தான் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், துருக்கி மொழிகளைப் பேசுகின்றனர். (காசக், உஸ்பெக், கிரிகிஸ் போன்ற மொழிகள் ஒன்றுக்கொன்று சிறிதளவு மாறு படும் ஒரே மாதிரியான மொழிகள்.) தாஜிக் மக்கள் மட்டும், ஈரானிய பார்சி மொழியை ஒத்த வேற்று மொழி பேசுகின்றனர். டாடார்ஸ்தான் என்ற இன்னொரு துருக்கி மொழி பேசும் மக்களின் நாடு, பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. இதனால், டாட்டார் மக்கள், ரஷ்ய நிர்வாகிகளாக வேலை வாய்ப்புப் பெற்று வந்தனர். டாட்டார் மக்களுக்கும், துருக்கெஸ்தான் மக்களுக்கும் இடையில், ஒரே மொழி காரணமாக நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. உண்மையில், ரஷ்ய அரசின் நோக்கமும் அதுவாக இருந்தது.

19 ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் தாம் பிடித்த காலனிகளில் எவ்வாறு நடந்து கொண்டனரோ, அவ்வாறு தான் ரஷ்யர்களும் நடந்து கொண்டனர். காலனிய மக்களை நாகரீகப் படுத்துவது தமது கடமை என்று ஆங்கிலேயர்கள் நினைத்ததைப் போன்று, "பின்தங்கிய மத்திய ஆசிய மக்களை நாகரீகமயமாக்கும் பொறுப்பை" ரஷ்யர்கள் ஏற்றுக் கொண்டனர்.   காலனிப் படுத்திய பகுதிகளில், ரஷ்ய வழிக் கல்வி அளித்து, புதிய மத்தியதர வர்க்கம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். ஆங்கில மொழி பேசத் தெரிந்த இந்தியர்களைப் போல, ரஷ்ய மொழி பேசத் தெரிந்த துருக்கியர்களும் ரஷ்யர்களைப் போல சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது தான் மேலைத்தேய தத்துவங்களும், துருக்கெஸ்தான் பிராந்தியத்தில் பரவத் தொடங்கின. 

அமைதிப் பூங்காவாக காட்சியளித்த துருக்கெஸ்தானில், 1916 ம் ஆண்டு பெரும் கலவரம் உண்டானது. அப்போது முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியுற்றுக் கொண்டிருந்த ரஷ்யப் படைகளுக்கு மேலதிக துருப்புகளை சேர்ப்பதற்காக, கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தப் பட்டது. பதினாறுக்கும் நாற்பது வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், கட்டாயமாக ரஷ்ய  இராணுவத்தில் சேர வேண்டும் என உத்தரவிடப் பட்டது. கட்டாய ஆட்சேர்ப்பை எதிர்த்து, துருக்கெஸ்தான் பகுதி நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், கலகத்தில் பெண்கள் அதிகளவில் பங்குபற்றினார்கள்! துருக்கெஸ்தான் வரலாற்றில், பெண்கள் பொது இடத்தில் ஒன்று கூடுவதும், அரசியல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதும் அதுவே முதல் தடவை. 

பெண்கள், ரஷ்ய அரச அலுவலகக் கட்டிடங்களை தாக்கி உடைத்தார்கள். இந்தக் கலவரம் சில வாரங்கள் நீடித்தது. இன்றைய நவீன காலத்தில், கைத் தொலைபேசி, இணையத்தை பாவித்து போராட்டத்திற்கு ஆட்களை சேர்க்கிறார்கள். அந்தக் காலத்தில், அப்போது தான் அறிமுகமான, தந்தி, தட்டச்சு இயந்திரங்கள் போராட்டத்தை ஒழுங்கு படுத்த உதவின. மேலும் மசூதிகளில் முல்லாக்களும் போராட்டத்திற்கு செல்லுமாறு அறைகூவல் விடுத்தனர். அந்நியர்களான ரஷ்யர்களுக்கு எதிராக பெண்களை போராட அழைத்த முல்லாக்கள், ஒரு பெரிய வரலாற்றுத் தவறிழைத்தார்கள். பத்து வருடங்களுக்குப் பின்னர், இதே பெண்கள், முல்லாக்களின் அதிகாரத்தை எதிர்த்தும் போராடப் போகிறார்கள் என்று, அன்றைக்கு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் கட்சியினரின் சோஷலிசப் புரட்சி வென்றது. துருக்கெஸ்தானில் வாழ்ந்த ரஷ்யர்களுடன், துருக்கியருக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டு, புதிய சோவியத் ஒன்றியத்தின் பிரஜைகள் ஆக்கப் பட்டனர். பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி, பெண்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கினார்கள். அந்த கால கட்டத்தில், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்த பெண்கள், வாக்குரிமை பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  அன்றைய ஐரோப்பாவில், குறைந்தது ஐந்து வீதப் பெண்கள் தான் வெளியே வேலைக்கு சென்று வந்தனர்.  ஆனால், சோவியத் யூனியனில், உழைக்க முடிந்த பெண்கள் அனைவருக்கும் வேலை கிடைத்தது. வேலை செய்வது தனி மனித உரிமையாக அங்கீகரிக்கப் பட்டதால், துருக்கெஸ்தான் பெண்களையும் வேலைக்கு அனுப்பினார்கள். ஆனால், அப்பொழுது ஒரு பிரச்சினை எழுந்தது. 

முஸ்லிம் பெண்கள், வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்து பழக்கப் பட்டிருக்கவில்லை. அவர்கள் விரும்பினாலும், முல்லாக்கள் தடுத்து வந்தனர். ஆண்களும் தம் வீட்டுப் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை. வீட்டிலேயே சமைப்பதும், குழந்தைகளை பராமரிப்பதுமே பெண்களின் கடமையாக கருதப்பட்டது. அதனால், ஒரு கலாச்சாரப் புரட்சி அவசியமாக இருந்தது. ஸ்டாலின் காலத்தில், "ஹுஜும்"(தாக்கு) என்ற பெயரில் பெண் உரிமைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது. முதன் முதலாக உஸ்பெகிஸ்தானில், சர்வதேச மகளிர் தினத்தன்று, தாஷ்கென்ட் நகரில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்த துருக்கி முஸ்லிம் உறுப்பினர்கள், தமது மனைவி மாரை அனுப்பி வைத்தனர். 

ஆயிரக்கணக்கான துருக்கி-முஸ்லிம் மகளிர், போல்ஷெவிக்குகளின் அறைகூவலுக்கு செவி கொடுத்தனர். பல பெண்கள், நகர மத்தியில் உள்ள சதுக்கத்தில் ஒன்று கூடி, தமது முகத்திரைகளை கழற்றிப் போட்டு எரித்தனர். அந்தக் காலத்தில் அப்படிச் செய்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஏனென்றால், தமது செய்கையானது உயிராபத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தே செய்தனர்.  நூர்ஜான் என்ற இருபது வயது நிரம்பிய இளம்பெண், முகத்திரை அகற்றி விட்டு வீதியில் நடந்து சென்றதற்காக, அவரது சொந்த சகோதரர்களால் கழுத்து வெட்டி கொல்லப் பட்டார். அவரின் செயலால், "முழுக் குடும்பத்திற்கும் அவமானம் நேர்ந்து விட்டது" என்பது கொலைகாரர்களின் வாதம். 

முன்பெல்லாம், முல்லாக்களின் ஆட்சியில், அவ்வாறான கௌரவக் கொலைகளை புரிவோர் வீரர்களாக போற்றப் பட்டனர். ஆனால், காலம் மாறி விட்டது. கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில், பழைமைவாத பிற்போக்காளர்களின் கொலை வெறிக்கு பலியான நூர்ஜான், ஒரு வீராங்கனையாக போற்றப் பட்டார். சரித்திரத்தில் முன்னொருபோதும் அது போன்ற சம்பவம் நடக்கவில்லை. நூர்ஜானுக்கு நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப் பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரையில், அந்த இடத்திற்கு பாடசாலைப் பிள்ளைகளை சுற்றுலாவாக கூட்டிச் செல்வது வழக்கமாக இருந்தது. தொன்னூறுகளில் சோஷலிசம் மறைந்த பின்னர், மீண்டும் தலைதூக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நூர்ஜான் சிலையை உடைத்தனர். இன்று அந்த இடம் கவனிப்பாரற்று சேதமுற்று காணப்படுகின்றது. 

கௌரவக் கொலைக்கு பலியான ஒரு நூர்ஜானின் கதை அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அன்றைய போராட்டத்தில் மரணத்தை தழுவிய பிற பெண்களின் கதைகளை உலகம் மறந்து விட்டது. துணிச்சலுடன் முகத்திரையை எடுத்து விட்டு வீதியில் சென்ற, ஆயிரக் கணக்கான பெண்கள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு இடங்களில் நடந்தன. குடும்ப கௌரவத்திற்கு இழுக்குத் தேடித் தந்த காரணத்தைக் கூறி, பல பெண்கள், அவர்களின் பெற்றோர், சகோதரர்களால் கொல்லப் பட்டனர். ஆனாலும், குடும்ப உறுப்பினரல்லாத வெளியாரும் கொலைகளில் ஈடுபட்டனர். 

முகத்திரை அணியாமல் செல்லும் பெண்ணைக் கண்டால், தெருவில் நிற்கும் ஆண்கள் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். சில நேரம், கும்பல் கும்பலாக பலாத்காரத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்கள் எல்லாம் பின்னர் கொல்லப் பட்டனர். ஏதோ ஒரு வகையில், குடும்பத்திற்கு அவமானத்தை தேடித் தந்தவர்கள் என்பதால், அந்தப் பெண்களை பாதுகாக்க குடும்ப உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அன்றைய காலத்தில், முகத்திரை அணியாமல் சென்ற பெண்கள் எல்லோரும் ஒரு போர்க்களத்தை சந்தித்திருந்தனர். மகாத்மா காந்தி நடத்திய  போராட்டத்தை விட கடினமான அஹிம்சைப் போராட்டம் அது. அகப்பட்டால் அடித்துக் கொல்லப் படுவோம் என்று தெரிந்து கொண்டு தான், உஸ்பெகிஸ்தான் பெண்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். 

அன்று சோவியத் பொலிசும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு விரைவான நீதி கிடைக்குமாறு வழி செய்தன. உஸ்பெகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வந்த முக்கால்வாசி வழக்குகள், பெண்கள் மீதான வன்முறை தொடர்பானதாக இருந்தன. முன்னரைப் போல எமிரின் சட்டம் செல்லுபடியாகாது என்பதால், முல்லாக்களும், மத அடிப்படைவாதிகளும் ஆப்கானிஸ்தானுக்கு தப்பியோடி விட்டனர். அந்தக் காலத்தில், மதவாத ஆயுதக் குழுக்களுடன் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்ததும், அவர்களின் வெளியேற்றத்திற்கு ஒரு காரணம். இதனால், பெண் அடக்குமுறையாளர்களின் எண்ணிக்கையும், அதிகாரமும் வெகுவாகக் குறைந்தது. 

மேலும், பெண்களும் வேலைக்கு போவது கட்டாயமாக்கப் பட்டதால், குடும்ப உறுப்பினர்களால் முகத்திரை போடுவதை கட்டாயப் படுத்த முடியவில்லை. காலப்போக்கில், தமது சொந்த நலன்களுக்காக, ஏராளமான துருக்கி முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்கள். அவர்கள் வெளியில் முகத்திரை அணிவதை எதிர்த்து பேசினார்கள். ஆனால், வீட்டிற்குள் தமது பெண்களை முகத்திரைக்குள் அடக்கி வைத்திருந்தார்கள். முகத்திரை தடைச் சட்டத்திற்கு ஆலோசிக்கப் பட்டாலும், அது பின்னர் கைவிடப் பட்டது. அதற்குக் காரணம், இஸ்லாமிய மதவாதிகள், புதிய சோஷலிச அரசுடன் ஒத்துழைக்க ஆரம்பித்திருந்தனர். ஏனெனில், மதரசா போன்ற சமயப் பள்ளிகள் இயங்குவதற்கு சோவியத் அரசிடம் அனுமதி பெற்றிருந்தனர். முல்லாக்களும் மசூதிகள், மதராசக்களை நடத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கவில்லை. 


மேலதிக தகவல்களுக்கு:
1.Veiled Empire: Gender & Power in Stalinist Central Asia, by Douglas Taylor Northrop
2.The New Woman in Uzbekistan: Islam, Modernity, and Unveiling Under Communism, by Marianne Kamp
3. In Centraal Azië, Een reis langs tradies en godsdiensten, by Linda Otter
4. Hujum, http://en.wikipedia.org/wiki/Hujum
5. Hamza Hakimzade Niyazi,  http://en.wikipedia.org/wiki/Hamza_Hakimzade_Niyazi

3 comments:

சிவக்குமார் said...

புதிய வரலாற்றுத் தகவல்.

Anonymous said...

அறிந்திராத தகவல். பதிவுக்கு மிக்க நன்றிகள் !!! மதம் என்பது அதிகார மையம் --- அதுவும் ஆண்களுக்கு அதிகாரம் நல்கும் மையம் என்பதைத் தான் இந்த நிகழ்வும் சொல்லுகின்றது ...

அதிகார மையங்களை உடைத்தால் மட்டுமே சம உரிமைக்கு வித்திடலாம்.. ஹம்ஸா, நூர்ஜகானின் தியாகம் அளப்பரியது ... !!!

Dakanist said...

அறிந்திராத தகவல். பதிவுக்கு மிக்க நன்றிகள் !!! மதம் என்பது அதிகார மையம் --- அதுவும் ஆண்களுக்கு அதிகாரம் நல்கும் மையம் என்பதைத் தான் இந்த நிகழ்வும் சொல்லுகின்றது ...

அதிகார மையங்களை உடைத்தால் மட்டுமே சம உரிமைக்கு வித்திடலாம்.. ஹம்ஸா, நூர்ஜகானின் தியாகம் அளப்பரியது ... !!!
நந்தன்