Wednesday, June 27, 2012

தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்

[நாம் கறுப்பர்!

நமது மொழி தமிழ்!

நம் தாயகம் ஆப்பிரிக்கா!] (நான்காம் பாகம்) 

__________________கடவுள் என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
நமக்குள் இருக்கும் இறைவன் என்ற பொருள் படும். சைவ சமய இறையியல் பாடத்தில் கூறப்பட்ட விளக்கத்தையே, இங்கே கொடுத்துள்ளேன். இதை விட வேறு சிறந்த விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை. தமிழர்களின் "கடவுள் கோட்பாடு" எங்கே தோன்றியது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், தமிழர்கள் இந்துக்களாக இருந்தனர் என்ற காரணத்தை வைத்து, வேதங்களில் இதற்கு விடை தேடுவோம். இன்றைய தமிழ் இனவாதிகள் என்றால், ஹரப்பா, மொஹஞ்சதாரோ, குமரி கண்டத்திற்கு அப்பால் செல்ல மாட்டார்கள். ஆனால், தமிழர்களின் இறை நம்பிக்கை மட்டுமல்ல, கடவுள் என்ற தமிழ்ச் சொல் கூட, ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ளன! தமது முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த உண்மையை அறியாத, இன்றைய நாகரீகத் தமிழர்கள், தமது "கடவுளையும் மறந்து விட்டார்கள்."

ஆங்கிலத்தில் கடவுளை God என்று அழைப்பார்கள். ஜெர்மன் மொழியில் Gott. இரண்டுமே இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. ஆகவே, "கடா" என்ற பண்டைய ஈரானிய சொல் அதன் மூலமாக இருக்கலாம். நவீன பார்சி மொழியிலும், உருது மொழியிலும் "ஹுடா" என்று அழைக்கிறார்கள். அதே நேரத்தில், "தெய்வம்" என்ற சமஸ்கிருதச் சொல்லும், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப் படுகிறது. பிரெஞ்சில் Dieu, லத்தீனில் Deus, பழைய ஜெர்மன் மொழியில் Deiwos. இன்றைய மொழிகள் எல்லாமே, கலப்பு மொழிகள் தாம். அதனால் தான், ஒரு பொருளுக்கு பல ஒத்த கருத்துச் சொற்கள் காணப்படுகின்றன. இருந்தாலும், அந்தச் சொற்களின் மூலம் வெவ்வேறானதாக இருக்கலாம். பழைய ஈரானியச் சொல்லான "கடா", அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த வேற்றின மக்களினால் பாவிக்கப் பட்ட சொல்லாக இருக்கலாம். பண்டைய ஈரானில் இருந்த, எலமிய, சுமேரிய ராஜ்யங்களில் பேசப் பட்ட மொழிகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். எலமிய, சுமேரிய மக்கள், திராவிட இனத்தவர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அவர்கள், தமது இறைவனை அழைக்க, "கடா" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர். அந்தச் சொல், தமிழில் கடவுள் என்ற சொல்லுடன் ஒத்திருப்பதை கவனிக்கவும். அது சரி, இரண்டினதும் அர்த்தம் ஒன்றுதானா?

இன்று நாங்கள், ஒரு பொருளுக்கு ஒத்த கருத்துள்ள சொற்களைப் பயன்படுத்துவதைப் போன்று, பண்டைய நாகரீகத்தை சேர்ந்த மக்களும் நடந்து கொண்டுள்ளனர். சுமேரியர்கள், தமது கடவுளை குறிக்க "எங்கை" என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அக்காடியர்கள், அதனை "எயா" என்றும், ஹீபுரூக்கள் "எல்" அல்லது "எலோஹிம்" என்றும் அழைத்தனர். எந்தப் பெயரில் அழைத்தாலும், கடவுளைக் குறிக்கும் அந்தச் சொல்லின் அடிப்படை ஒன்று தான். சுமேரியர்களின் எங்கை என்ற சொல்லின் மூலமும், ஆப்பிரிக்காவாக இருக்க வேண்டும். இன்றைக்கும், கென்யாவில் வாழும் கிகுயூ இன மக்கள், தமது கடவுளை "எங்கை" என்று அழைப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். (பார்க்க : முதலாம் பாகம்: நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!) இன்றைக்கு ஆங்கில எழுத்துக்களை பாவித்து "Ngai" என்று எழுதுகிறார்கள். ஆனால், உச்சரிப்பு "என் கை" என்று வரும். "ஏ" என்றால், சுமேரிய மொழியில் கடவுளின் வீடு என்று அர்த்தம். அங்கே வசிப்பதால், "எயா" அல்லது "என்" அல்லது "ஏகை" என்று கடவுளுக்கு பெயர். தமிழ் மொழியிலும், கடவுளைக் குறிக்க "ஏகன்" என்ற சொல் உண்டு!

தமிழில் அரசனையும், கடவுளையும் குறிக்கும் "கோ(ன்)" என்ற சொல், "க" என்ற சொல்லில் இருந்து தோன்றியது. "க" என்ற சொல், பல பாரம்பரிய ஆப்பிரிக்க மதங்களில், கடவுளைக் குறிக்கும் புனிதச் சொல்லாக கருதப் படுகின்றது. "க" என்பதன் அர்த்தம், பொதுவாக இறைவன் என்பதல்ல. எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள். மனிதனுக்கு உள்ளே மறைந்திருக்கும் சக்தி. மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் தொடர்பூடகமாக உள்ள ஆத்மா.... இவ்வாறு பல அர்த்தங்கள் வரும். "கடா" என்றால், இறைவனின் ஆட்சி என்று பொருள் படும். (கிறிஸ்தவ இறையியலில், எம்மை ஆள்பவரின் காலம் எனப் பொருள்படும், Anno Domini என்ற லத்தீன் சொல்லை பாவிக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் "கிறிஸ்துவுக்குப் பின்" என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கிறோம்.) இன்றைக்கும், எத்தியோப்பியாவில் வாழும், ஒரோமோ இன மக்கள், "இறைவனின் ஆட்சி" எனப் பொருள் படும், "கடா" என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். கடவுள் என்ற தமிழ்ச் சொல்லும், இதனோடு தொடர்பு பட்டுள்ளதை, நான் இங்கே விளக்கத் தேவை இல்லை. 

பண்டைய எகிப்தியர்கள் உட்பட, அனைத்து ஆப்பிரிக்க மதங்களும், பல தெய்வ வழிபாட்டைக் கொண்ட "காட்டுமிராண்டி கால மதங்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்கர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றிய எமது அறிவு மிகவும் குறுகியது. அவர்கள் கல்லையும், மரத்தையும் மட்டுமே வணங்கியதாகவும், எந்த வித இறையியல் தத்துவமும் கொண்டிராதவர்கள், என்று நம்புவது எமது அறியாமையே அன்றி வேறல்ல. "கண்டிப்பாக ஒரே கடவுட் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தும், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் வருகையின் பிறகு தான், பிற மத நம்பிக்கைகளை புறக்கணிக்கும் வழக்கம் ஆரம்பமாகியது. இருபதாம் நூற்றாண்டில் எழுந்த, பாஸிச அரசியல் கொள்கைக்கும், ஓரிறை மதங்களின் அடிப்படைவாதம் காரணம் என்று குற்றம் சாட்டப் படுவதுண்டு.

ஆப்பிரிக்க மதங்கள் எல்லாமே, பல தெய்வங்களை வழிபட்ட காட்டுமிராண்டி கால மத நம்பிக்கைகள் அல்ல. குறிப்பாக, எத்தியோப்பியாவில் வாழும் ஒரோமோ இனத்தவரின் பாரம்பரிய மதம், ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாகும். இன்றைய எத்தியோப்பியாவின், சுமார் ஐம்பது வீத நிலப்பரப்பைக் கொண்ட ஒரோமியா என்ற மாநிலத்தில் வாழும் ஒரோமோ மக்கள், அந் நாட்டின் அடக்கப்படும் சிறுபான்மை இனமாகும். ஒரோமோ மொழி, சோமாலிய மொழி போன்றிருக்கும். ஒரோமியா மாநிலத்திற்கு கிழக்கே உள்ள ஒகடான் மாநிலத்தில், சோமாலிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஒரோமோ மொழியும், சோமாலிய மொழியும், இன்று அழிந்து விட்ட கூஷி மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகளாகும். கூஷி மக்களின், நுபிய ராஜ்ஜியம், எகிப்தின் கீழே, சூடானில் இருந்தது. பண்டைய எகிப்தியருக்கும், கூஷிகளுக்கும் இடையில் நெருங்கிய கலாச்சார, மொழியியல் ஒற்றுமைகள் காணப்பட்டன.

ஆகவே, சோமாலிய, ஒரோமிய மக்களின் மொழி மட்டுமல்ல, அவர்களது கலாச்சாரப் பாரம்பரியங்கள், மத நம்பிக்கைகள் கூட, எகிப்திய-கூஷி நாகரீகத்தை ஒத்திருக்க வேண்டும். சோமாலிய, ஒரோமிய இனங்களுக்கு இடையிலான வித்தியாசம், தமிழும், மலையாளமும் போன்றது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றிய பின்னர், சோமாலியர்கள் தமது பூர்வீகத்தை ஏறக்குறைய மறந்து விட்டனர். ஆனால், ஒரோமிய மக்கள் அப்படி அல்ல. ஒரோமிய மக்கள் முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், பாரம்பரிய மத நம்பிக்கை கொண்டவர்களாகவும், மூன்று பிரிவாக பிரிந்துள்ளனர். இன்றைய தமிழர்களைப் போன்று, வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும், ஒரே மொழியும், கலாச்சாரமும் அவர்களை ஒன்றிணைக்கிறது. இதனால், இன்று, ஒரோமியா என்ற தனி நாட்டின் விடுதலைக்காக போராடும் இயக்கமும், தமிழ் தேசியம் போன்று, ஒரோமிய மொழித் தேசியத்தின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஒரோமிய மக்களின் பாரம்பரிய மதத்திற்கு பெயர், வாக்கேபண்ணா ("Waaqeffannaa"). வாக்கா என்பது கடவுளின் பெயரைக் குறிக்கும். உண்மையில், பண்டைய கூஷி மக்கள் வழிபட்ட, "கா" என்ற கடவுளின் பெயரை தான், ஒரோமியர்கள் வாகா என்கிறார்கள்."கா அடா" என்றால், கடவுள் வகுத்த சட்டங்கள். ஒரோமியர்களின் முக்கிய பண்டிகையான, "கடா (Gadaa)" வின் அர்த்தமும் அது தான். செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் வரும் பண்டிகையானது, தமிழர்களின் பொங்கல் பண்டிகையை ஒத்திருக்கிறது.
("KA" is the first name of God. The name of God that our Cush Fathers have inherited to us before the old period of Christianity and Islam is "KA". Since then, therefore, especially the Oromo, Gurage and the Southern people of Ethiopia have been calling God as "Waka or Waaqa". When we sing EyokaorEyohain New Year, we do praise "KA", the God. "Gadaa" or "KA Aada" is the law or rule of God. "Gadaa" (KA Aada) is the festival by which the laws and orders of God are executed. http://www.gadaa.com/IrreechaaAbout.html) 

பண்டைய எகிப்தியர்கள், "க்னும்" எனும் தெய்வ சக்தி, மனிதர்களின் உயிர்களை, உடல்களை படைப்பதாக நம்பினார்கள். ஆனால், க்னும் என்பது, ஒரு இறையியல் தத்துவம் ஆகும். எகிப்தியர்களின் இறையியலில், "வா", "கா", என்று இரண்டு சொற்கள் முக்கியமானவை. வா (ba) என்பது, மனிதனின் உயிர் அல்லது ஆத்மா (அது சரியான அர்த்தம் அல்ல. அண்ணளவான மொழிபெயர்ப்பு.) கா என்பது, இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு. "கா" வை படைப்பது க்னுன். குயவர்கள் பானை செய்ய பயன்படுத்தும் சக்கரம் போன்ற ஒன்றில், மனிதர்களின் "கா" படைக்கப் படுகின்றது. (மேலதிக தகவல்களுக்கு, பார்க்க: Every Egyptian was thought to have a ba and a ka.  The ba was sort of how they acted or in other words their personality.  The ka was the life force of all living humans..... A ka is the difference between alive and dead.  Unlike the ba, a ka wasn’t unique.  The ka enters the body at birth.  Like the ba, the ka wasn’t a physical part of the body, though the ka surely has a physical connection..... The "god" that made a person’s ka was called Khnum. Egyptians believed that Khnum shaped everyone’s ka on his trusty potter’s wheel. http://library.thinkquest.org/J002037F/ba_and_ka.htm)

எகிப்திய இறையியலில், "கா" என்ற சொல், தேவலோகத்தில் வாழும் ஆண்டவனைக் குறிக்கவில்லை. மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் தெய்வ சக்தியையும், அதற்கும் இறைவனுக்குமான தொடர்பையும் விளக்குகின்றது. தமிழ் மொழியில் பயன்படுத்தும், "கடவுள்" (கா+டா+உள்) என்ற சொல்லுக்கும், ஒரோமிய மொழியில் பயன்படுத்தம் "கடா" என்ற சொல்லுக்கும் இடையிலான ஒற்றுமை இப்பொழுது புரிந்திருக்கும். கடவுள் சொல்லின் நேரடி அர்த்தம் பண்டைய எகிப்தியரின் இறையியலில் மறைந்திருக்கிறது. தமிழரின் கடவுள் நம்பிக்கை, ஒரோமிய மக்களின் வாகா நம்பிக்கை, இரண்டினதும் தோற்றுவாயும் எகிப்து தான் என்பதில் சந்தேகமில்லை.

ஒரே கடவுட் கோட்பாடு கூட, ஆப்பிரிக்கர்களுக்கு புதிதல்ல. வாகாபண்ணா மதத்தை பின்பற்றும் ஒரோமியர்கள், வாகா என்ற ஒரே இறைவனை வழிபடுகின்றனர். பண்டைய எகிப்தியர்களும் ஒரே கடவுட் கோட்பாடை கொண்டிருந்தனர். அக்நாதன் என்ற எகிப்திய பரோ மன்னன் காலத்தில், "ரா" என்ற சூரியக் கடவுளை வழிபடும் மதம் நடைமுறையில் இருந்துள்ளது. ரா என்ற சொல், சூரியனைக் குறிக்கும் "ரவி" என்ற சமஸ்கிருதச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும். சூரியக் கடவுள் வழிபாடு, ஆப்பிரிக்கா முதல் இந்தியா வரையில் பரவி இருந்தது. ஆப்பிரிக்கர்களின், பண்டைய அரேபியரின், சுமேரியரின் மத நம்பிக்கைகளில் சூரியனையும், ஆகாயத்தையும், அல்லது அண்ட வெளியை ஒரே கடவுளாக கருதும் வழக்கம் இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்ட இறையியல் தத்துவம், பிற்காலத்தில், யூத, கிறிஸ்தவ,இஸ்லாமிய மதங்களின் தத்துவங்களுடன் ஒத்துப் போகின்றது.

விவிலிய நூலில், உலகின் முதல் கொலை பற்றிய கதை ஒன்றுண்டு. முதல் மனிதர்களான, ஆதாம், ஏவாளின் பிள்ளைகளான அபெல், கையின் இடையிலான பகைமையின் காரணமாக, கையின் ஆபேலை கொலை செய்து விடுகிறான். ஒரோமியர்களின் மதத்திலும் அதே போன்ற கதை ஒன்றுண்டு. வானத்திற்கும், சூரியனுக்கும் அதிபதியான அசுரா கடவுளின், பிள்ளைகளான ஓரா, செட்டே, அசிஸ் பற்றிய புராணக் கதை முக்கியமானது. விவிலியக் கதை போன்று, பொறாமை காரணமாக, தமையனான செட்டே தம்பியான ஓராவை கொலை செய்து விடுகிறான். தங்கையான அசிஸ், ஓரா இறந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினாள். அன்றிலிருந்து "உலகில் சமாதானம் நிலவுவதாக", என்ற இறைவனின் ஆணைப் பிரகாரம், மழை பெய்து, நினைவுச் சின்னம் இருந்த இடத்தில், ஆல மரம் ஒன்று முளைத்து வளர்ந்தது.

ஒரோமிய மக்களின், ஓரா தெய்வம் பற்றிய புராணக் கதையானது, கிறிஸ்தவர்களின் விவிலியக் கதைகளை நினைவு படுத்துகின்றது. தீய எண்ணம் கொண்ட அண்ணன் செட்டே யினால் கொலை செய்யப்பட்ட நல்லவனான தம்பி ஓரா பற்றிய கதை முக்கியமானது. இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை ஞாபகப் படுத்தும், ஓரா உயிர்த்தெழுந்த கதை, ஒரோமிய மக்களின் பூர்வீகக் கதை ஆகும். சூரியக் கடவுளின் மகனான ஓரா, மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தான். அதனை "ஓரா-ஒமோ" என்று கூறுகின்றனர். அதிலிருந்து தான், "ஒரோமியர்கள்" என்ற சொல் தோன்றியது.
(The Ora, the son of sun's God, who had risen up from death (Ora Omo or Or-omo) for the purpose of celebrating the peace made between the two brothers. http://www.gadaa.com/IrreechaaAbout.html)

பாலஸ்தீனம் முதல், யேமன் வரையிலான அரேபியா என்ற குடாநாடும், ஆப்பிரிக்கக் கண்டத்துடன் சேர்ந்த நிலப்பரப்பு தான். அதனால், அங்கு தோன்றிய மூன்று பெரிய மதங்களான, யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பன, "ஆப்பிரிக்க மதங்கள்" என்ற வகையில் சேர்க்கப் பட வேண்டும். யூதர்களின் தீர்க்கதரிசியான மோசஸ், கிறிஸ்தவர்களின் மீட்பரான இயேசு கிறிஸ்து, முஸ்லிம்களின் இறைதூதரான முகமது, இவர்களின் தோற்றம் எப்படி இருந்திருக்கும்? அவர்கள், உண்மையிலேயே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் என்றால், தோற்றத்தில் கருப்பர்களாகத் தானே இருந்திருப்பார்கள்?

தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவுடனான தொடர்புகளைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருந்தார்கள். சில அரேபிய சித்தர்களும், தமிழகத்தில் இருந்துள்ளனர். நாங்கள் அவற்றைப் பற்றி ஆராய விடாது, எமது குறுகிய இனவாத சிந்தனை தடுக்கின்றது. மெக்காவில் உள்ள புனிதஸ்தலமான காபா பற்றி, அதன் உள்ளே வைக்கப் பட்டுள்ள கல் பற்றி, எந்தளவு தூரம் அறிந்து வைத்துள்ளோம்? வால் வெள்ளி ஒன்று விழுந்திருக்கலாம் என்றும், அல்லது இஸ்லாத்துக்கு முந்திய தெய்வங்களின் உருவச் சிலைகள் என்றும், பல ஊகங்கள் நிலவுகின்றன. ஆனால், அந்தக் கல் முன்னொரு காலத்தில் வெள்ளையாக இருந்து, மனிதர்களின் ஸ்பரிசத்தினால் கருப்பாக மாறி விட்டதாக ஒரு ஐதீகம். இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட கல்லாக இருக்கலாம். அதாவது, பண்டைய அரேபியரின் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்பு.

தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்களும், அதே போன்ற விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏழு பாஷாணங்கள் (நச்சு வேதிப் பொருட்கள்) கொண்டு உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலை, அத்தகைய விஞ்ஞான ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு தான். ஆப்பிரிக்கா, அரேபியாவுடன் பண்டைய தமிழர்களுக்கு இருந்த தொடர்புகளை விளக்கத் தான், இந்த உதாரணத்தை இங்கே குறிப்பிட்டேன். மெக்காவில் உள்ள புனிதஸ்தலமான காபா (Ka'aba) என்ற பெயரில், "கா" மறைந்திருப்பதைக் கவனிக்கவும். அதனை அரபி மொழியில், "Bayt Allah" (இறைவனின் இல்லம்) என்ற இன்னொரு பெயர் கொண்டும் அழைக்கின்றனர். ஆகவே, காபா என்பது, இஸ்லாத்திற்கு முந்திய அரேபியரின் மத வழிபாட்டு ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும்.

(தொடரும்)
மேலதிக தகவல்களுக்கு:
Ancient Egyptian concept of the soul
Ba and Ka
Irreechaa, an Oromo Thanksgiving Holiday
_________________________________________________________________________________

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்


_________________________________________________________________________________

Monday, June 25, 2012

சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்


[நாம் கறுப்பர்!
நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா!]


(மூன்றாம் பாகம்)
________________________________________________________________________
சோமாலியா என்ற பெயரைக் கேட்டவுடன் பலர் முகத்தை சுழிப்பார்கள். கடும்போக்கு தமிழினவாதிகள் கூட, பழந்தமிழன் பெருமையை சோமாலியாவுடன் இணைத்துப் பார்க்க விரும்ப மாட்டார்கள். சோமாலியா என்றால், "தினம் தினம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க மக்களின் நாடு," என்ற வல்லாதிக்க பிரச்சார விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழனின் பெருமை பேசப்படுகின்றது. இதனால் தமிழன், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க தாயகத்தை மறக்க விரும்புகின்றான். அதற்குப் பதிலாக, "குமரி கண்டம்" என்ற கற்பனையான தாயகத்தை, தானே உருவாக்கிக் கொள்கிறான். "தனது சொந்த தாய் ஏழையாக இருப்பதால்", அவளை "அம்மா" என்று அழைக்க விரும்பாத பிள்ளை, இன்னொரு கற்பனைத் தாயை மனதில் வரித்துக் கொள்வது போன்றது இது. தங்களை ஆப்பிரிக்காவுடன் இனங் காண விரும்பாத தன்மை, தமிழின வாதிகளுக்கு மட்டுமே உரிய குறைபாடு அல்ல. தூய ஆரிய பூர்வீகத்தை புனைவதற்காக, சிங்கள இனவாதிகள் விஜயனின் வருகையுடன் தமது வரலாற்றை தொடங்குகின்றனர். ஒரு காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மூதாதையர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களது தாயகம், சஹாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கிருந்து அரேபியா சென்று, ஈரான் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். புராதன ஆப்பிரிக்க-திராவிட இன மக்கள் தங்கி வாழ்ந்த இடங்களில் விட்டுச் சென்ற சாட்சியங்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப் படுகின்றது.

தமிழ் மக்களுக்கும், சோமாலிய மக்களுக்கும் பொதுவான கலாச்சார ஒற்றுமைகள் நிறைய உள்ளன. ஊறுகாயுடன் சோறு உண்பது முதல், சாப்பிட்டு விட்டு வெற்றிலை போடுவது வரையில், ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைப் பிடிக்கின்றனர். சில சொற்களும் இந்தியாவை நினைவு படுத்துகின்றன. உதாரணத்திற்கு, பரிஸ் பிலாவ் (பிலாவு அரிசி), பான் (பீடா) என்பன. இந்த ஒற்றுமையை, 1330 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த மொரோக்கோ நாட்டை சேர்ந்த யாத்திரீகர் இபுன் பதூதா, பயணக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். சோமாலியாவில், மொகாடிஷு அரசரின் விருந்தாளியாக சென்ற இபுன் பதூதா, "ஒரு தட்டில் பாக்கு, வெற்றிலை வைத்துக் கொடுத்து" வரவேற்கப் பட்டார். இந்தியாவில், விருந்தாளிகளை கௌரவிப்பதற்காக பாக்கு, வெற்றிலை கொடுக்கும் பழக்கத்தை இபுன் பதூதா அறிந்து வைத்துள்ளார். அது மட்டுமல்ல, சோமாலியர்களின் உணவுப் பழக்கம் கூட இந்தியர்களை ஒத்திருந்ததை சிலாகித்து பேசுகின்றார். (As soon as he was settled in Mogadishu, the sultan sent him two small welcoming gifts: a plate of betel leaves and areca nuts, and a vial of Damascus rosewater. http://www.saudiaramcoworld.com/issue/200504/the.traveler.ibn.battuta.htm)  தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும் இடையிலான இன்னொரு பொதுவான அம்சம், பாரம்பரிய உடை. ஆண்கள், வேட்டி, சாரம் உடுப்பதும், பெண்கள் சேலை உடுப்பதும், இரண்டு கலாச்சாரங்களுக்கும் பொதுவானது.

இபுன் பதூதா சுற்றுப் பயணம் செய்த காலங்களில், கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரையில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. அதனால் ஏற்பட்ட வர்த்தகத் தொடர்புகளையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், பல உணவுப் பதார்த்தங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி இருக்க வாய்ப்பில்லை. அவை யாவும், ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயிரிடப் பட்டுக் கொண்டிருந்தன. வெற்றிலை போன்றதொரு இலைவகை, அந்தப் பிராந்தியத்தில் போதைவஸ்தாக பயன்படுத்தப் படுகின்றது. "காட்" (Khat, Qat, http://en.wikipedia.org/wiki/Khat) வெற்றிலையை விட சிறிய இலை வகை தாவரம். ஆனால், காரம் அதிகமானது. அதன் சாறு தரும் போதை, ஒருவரை மயக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. காட் இலை சாப்பிடும் பழக்கம், எத்தியோப்பியா, சோமாலியா, யேமன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. அந்தப் பிராந்தியத்தின் சரித்திரக் காலகட்டத்திற்கு முன்பிருந்தே, காட் இலை உமிழும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த திராவிட இன மக்கள், குடியேறிய நாடுகளில் எல்லாம் வெற்றிலை உமிழும் பழக்கமும் தொடர்ந்து சென்றது. இபுன் பதூதா காலத்தில், "ஆதித் திராவிடரின் இடப்பெயர்வு" பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஆராய்ச்சி செய்யவுமில்லை. அதனால், சோமாலியர்களின், யேமனியர்களின் அரிசி உண்ணும் பழக்கும் கூட, இந்தியாவில் இருந்து சென்றதாக கருதினார்.

தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான காலை உணவுகளில் ஒன்று, "அப்பம்". வட இந்தியாவில் கூட அந்த உணவை கேள்விப் பட்டிருக்க முடியாது. ஆனால், ஆயிரம் மைல்களுப்பால், சோமாலியாவிலும், எத்தியோப்பியாவிலும் வாழும் மக்கள் காலை உணவாக அப்பத்தை உட்கொள்கின்றனர் என்பது வியப்பல்லவா? (injera,http://en.wikipedia.org/wiki/Injera)  தமிழர்களுக்கும், எத்தியோப்பிய, சோமாலிய மக்களுக்கும் இடையிலான, இது போன்ற கலாச்சார ஒற்றுமைகளை அடுக்கிச் சென்றால், அதற்கென தனியாக புத்தகம் எழுத வேண்டி இருக்கும். தமிழ் மொழிக்கும், சோமாலி மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை சிறிது பார்ப்போம்.

சோமாலிய மொழி - தமிழ் மொழி
பரஸ் - பரி (குதிரை)
ப(B)ரிஸ் - அரிசி
ஆப்பா - அப்பா
யரான் - சிறுவன்
ஹிந்டிஸ் - சிந்துதல்
அலோல் - அல்குல் (பெண்குறி)
குன் - உண்

சோமாலிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்கு ஆப்பிரிக்க மொழிகளான, செனகல், புலானி மொழிகளுக்கும் இடையில் கூட சில ஒற்றுமைகள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு: கண், வாய், கல், குட்டி.... இது குறித்து மேலும் அறிய விரும்புவோர் இந்த நூலை வாங்கி வாசிக்கவும். (Africans In The Americas Our Journey Throughout The World: The Long African Journey Throughout The World Our History A Short Stop In The Americas, http://www.amazon.com/Africans-Americas-Journey-Throughout-World/dp/0595302475)

கிழக்கே சோமாலியா முதல், மேற்கே செனகல் வரையிலான ஆப்பிரிக்க மொழிகளுக்கும், தமிழ் மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையானது, ஒரு அடிப்படை உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. தமிழர்களின் மூதாதையரான ஆதித் திராவிடர்கள், அந்தப் பிராந்தியத்தில் தான் தோன்றி இருக்க வேண்டும். அதாவது, இன்று சஹாரா பாலைவனம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் செழிப்பான மண் வளம் கொண்ட பூமியாக இருந்துள்ளது. அங்கு பிற ஆப்பிரிக்க பகுதிகளை விட, நாகரீகம் அடைந்த மக்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. பூகோள வெப்பம் அதிகரித்த காரணத்தால், சஹாரா பாலைவனம் விரிவடைந்து கொண்டு சென்ற காலத்தில், அவர்களது வாழ்விடங்களும் மண்ணுக்குள் புதையுண்டு போயின. இதனால் அடிக்கடி இடப்பெயர்வுக்கு ஆளான மக்கள், முதலில் அரேபிய தீபகற்பத்திற்கும், பின்னர் ஆசியாவுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்று இந்தப் பிராந்தியத்தில் பேசப்படும் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை அதற்கு சாட்சியம். ஏற்கனவே வட ஆப்பிரிக்காவின் துவாரக் (பேர்பர்) பழங்குடி இன மக்கள் பேசும் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். (பார்க்க :ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.no/2012/05/blog-post_21.html) இன்றைய சூடானில், ஒரு காலத்தில் அங்கிருந்த கறுப்பின மக்களின் ராஜ்யமான நுபியாவின் அழிவுற்ற நகரங்களை இன்றும் காணலாம். இன்று அவை, மனிதர்கள் வாழ முடியாத பாலைவனமாக காணப்படுகின்றன. நுபிய ராஜ்யத்தில் வாழ்ந்த மக்களை, கூஷி இனத்தவர்கள் என்று அழைப்பர். அவர்கள் பேசிய கூஷி மொழி இன்றைக்கு அழிந்து விட்டது.

பண்டைய எகிப்திய சாம்ராஜ்யமும், பண்டைய நுபியாவும் அயல் நாடுகள். இரண்டுக்கும் இடையில் நிறைய கலாச்சார பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரச நிர்வாகம், மதம், கட்டிடக் கலை என்பன மட்டுமல்ல, மொழி கூட ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டுக் காணப் படுகின்றது. உதாரணத்திற்கு: பண்டைய எகிப்திய "அனி" என்ற சொல்லை எடுத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். கூஷி மொழியிலும் "அனி", சோமாலிய மொழியில் "மான்", தமிழ் மொழியில் "நான்"!
இந்த மொழிகளை ஆராய்ந்து கொண்டே போனால், இது போன்ற நிறைய ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். ஆகவே, தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும், எகிப்து அல்லது நுபியா பொதுவான தாயகமாக இருந்திருக்க வேண்டும். புராணக் கதைகள், மத நம்பிக்கைகள் கொண்டும் இந்தத் தொடர்பை விளக்கலாம். அதற்கு, இன்றைய சோமாலிய இனத்தவர்கள் அதிகம் உதவப் போவதில்லை. ஏனெனில், பிற்காலத்தில் நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக மாறி விட்ட சோமாலிய மக்கள், தங்களது பாரம்பரிய மத நம்பிக்கைகளை மறந்து விட்டனர். இன்றைய சோமாலிய மொழியில் அரைவாசியாவது அரபுச் சொற்களின் கலப்பு காணப்படுகின்றது. அதனால், "தமது மொழியானது, இஸ்லாமிய மதத்தோடு சேர்ந்து இறக்குமதியான அரபி மொழிப் பாதிப்பால் புதிதாக உருவானது" என்று, சோமாலிய மக்களே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரபி, ஹீபுரு, மற்றும் இயேசு கிறிஸ்து பேசிய அரேமிய மொழி என்பன, செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இந்தத் தகவல் உலகம் முழுவதும் தெரிந்தளவுக்கு, ஆப்பிரிக்க செமிட்டிக் மொழிகள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. பிற்காலத்தில், செங்கடலை கறுப்பின ஆப்பிரிக்காவின் எல்லையாக வகுப்பதற்காக, மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய பிழையான படம் ஒன்று காட்டப் பட்டது. இன்றைக்கும் நாங்கள் அந்த பிழையான உலக வரைபடத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், அரபி, ஹீபுரு, அரமிக் மொழிகளை பேசும் மக்கள் "வெள்ளை இனத்தவர்கள்" என்ற இனவாதக் கருத்துகளை பரப்புவதாகும். ஆனால், ஒரு காலத்தில், இவை எல்லாம் கறுப்பின மக்களின் மொழிகளாக இருந்துள்ளன. இந்திய உபகண்டத்திற்குள் வெள்ளை நிற ஆரியர்கள் நுழைந்த அதே காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளையும் ஆக்கிரமித்தார்கள். இந்திய ஆரியர்கள், திராவிடர்களின் பிராமி மொழியை தமதாக்கி, சமஸ்கிருதம் என்ற புதிய மொழியை உருவாக்கினார்கள். அதே போன்று, அரேபிய தீபகற்பத்திற்குள் நுழைந்த வெள்ளைநிற ஆரியர்கள், உள்ளூர் மக்கள் பேசிய, ஹீபுரு, அரபி, அராமி ஆகிய மொழிகளை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். பின்னர், அந்த மொழிகளை செழுமைப் படுத்தி வளர்த்தெடுத்தார்கள்.

எத்தியோப்பியா/எரித்திரியாவில் பேசப்படும் அம்ஹாரி மொழி, சோமாலி மொழி என்பன, செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். ஆனால், அவர்களின் மொழிகள் பிற்காலத்தில், ஹீபுரு, அரபி மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அபிசீனியாவில் (இன்றைய எத்தியோப்பியா) பரவின. சில நூறாண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமிய மதம், எத்தியோப்பியாவிலும், சோமாலியாவிலும் பரவியது. அதனால், அந்தப் பிராந்திய மக்கள் புதிய நாகரீகங்களை பின்பற்றத் தொடங்கினார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் மாற்றமடைந்தன. கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத தாக்கத்தின் காரணமாக, தமது மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான கிளை மொழிகள் என்று நினைத்துக் கொள்கின்றனர். அதாவது, பிற்காலத்தில் உருவான மதங்களின் பாதிப்பு காரணமாக, மக்கள் தமது பூர்வீகத்தையே மறந்து விடுகின்றனர். எந்த மதமும், தான் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் திரளை நூறு சதவீதம் மாற்றுவதில் வெற்றி பெறவில்லை. எங்காவது ஒரு மூலையில், சில ஆயிரம் பேராவது பழைய மத நம்பிக்கைகளை பின்பற்றுவார்கள். அந்த நூலிழையை பிடித்துச் சென்று தான், நாம் அந்த மக்களின் வேர்களைத் தேட முடியும்.

தமிழர்களின், அதாவது ஆதி திராவிடர்களின் தாயகமான, வட-கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்கள், மத நம்பிக்கையிலும் வளர்ச்சியடைந்த தத்துவத்தைக் கொண்டிருந்தனர். யூதர்களின் தீர்க்கதரிசி மோசஸ் யூத மதத்தை தோற்றுவிக்கும் முன்னர், உலகில் எங்குமே ஓரிறை வழிபாடு இருக்கவில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றும், "ஒரே கடவுள்" கொள்கையை பின்பற்றுவதாக மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இந்த மூன்று மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே, ஆப்பிரிக்காவில் ஒரே கடவுளை வழிபடும் மதங்கள் இருந்துள்ளன. இப்பொழுதும் இருக்கிறது. மோசஸ் யார்? எகிப்திய பரோ மன்னனின் அரண்மனையில் வளர்ந்த, ஒரு கறுப்பின தீர்க்கதரிசி அல்லவா? "கடவுள்" என்ற தமிழ்ச் சொல் எங்கே தோன்றியது? அது ஒரு ஆப்பிரிக்க கடவுளின் பெயரா?

(தொடரும்)

Monday, June 18, 2012

பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]

(இரண்டாம் பாகம்)


"உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மாவீரன் அலெக்சாண்டர்" பற்றி நிறையக் கதைகள் கேள்விப் பட்டிருப்போம். மேலைத்தேய வரலாற்று ஆசிரியர்கள், அலெக்சாண்டர் எந்தெந்த நாடுகளை வெற்றி கொண்டான் என்று விபரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். வரலாறு என்பதற்கப்பால், அலெக்சாண்டர் பற்றிய புனைகதைகளும் உலாவுகின்றன. அலெக்சாண்டர், இலங்கையில் உள்ள சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்ததாக ஒரு கதை உண்டு. அந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதே போல, அலெக்சாண்டரின் படைகள் தென்னிந்தியா வரை வந்ததாகவும், குடகு மலையில் வாழும் மக்கள், கிரேக்க வம்சாவளியினர் என்றும், ஒரு கற்பனைக் கதை உலாவுகின்றது. இந்தக் கதை, இந்தியா பற்றி Lonely Planet வெளியிட்ட பயண நூலிலும் எழுதப் பட்டுள்ளது. அலெக்சாண்டர் இலங்கைக்கு விஜயம் செய்த கதை, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயரினால் பரப்பப் பட்டது. மேலைத்தேய நாட்டவர்கள் இது போன்ற கதைகளை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். அதன் நோக்கம், காலனிய காலகட்டத்திற்கு முன்னமே, வெள்ளையர்கள் உலகம் முழுவதும் ஆண்டார்கள் என்ற இனவாத கருத்துகளை பரப்புவது.

ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீகமடைந்திருந்த ஒரே நாடு, கிரேக்கம் மட்டுமே. அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்குப் பின்னர் தான், கிரேக்கர்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பிற ஐரோப்பியர்களும், கிரேக்கர்கள் மூலமாகத் தான் உலகின் பிற நாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் வாழும் மக்களைப் பற்றி அறிந்து கொண்டார்கள். இன்று மத்திய தரைக் கடல் நாடுகளில் பல கிரேக்கப் பெயர்கள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு, எத்தியோப்பியா என்றால், கிரேக்கத்தில் "கருகிய முகத்தை கொண்டவர்கள்" என்று அர்த்தம். கிரேக்க மொழியில், கருப்பர்களை மவ்ரி (μαυροι) என்று அழைப்பார்கள். மவ்ரி என்ற சொல் மருவி, பிற்காலத்தில் "மூர்" என்ற சொல் தோன்றியது. மொரிட்டானியா என்ற நாட்டுப் பெயரின் மூலமும் மவ்ரி தான். அலெக்சாண்டர் காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள், மவ்ரி என்ற சொல்லை கருப்பர்கள் என்ற அர்த்தத்தில் பாவித்தார்களா? அனேகமாக அந்த அர்த்தம் பிற்காலத்தில் வந்திருக்கலாம்.

அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் பொழுது, ஆப்பிரிக்காவில் கிரேக்கர்கள் சந்தித்த இனம் ஒன்றின் பெயராக "மவ்ரி" இருந்திருக்கலாம். அதன் மூலம் எதுவாக இருக்கும்? பாண்டிய மன்னர்கள் காலத்தில், தமிழகத்தில் "மறவர்கள்" என்றொரு இனக்குழு இருந்தது. ஒரு பழங்குடி இனமாக, அல்லது தனியான சாதியாக கருதப்பட்ட மறவர்கள், ஆதி திராவிட இனக் குழுமத்தை சேர்ந்த மக்கள் என்பதில் சந்தேகமில்லை. வட இந்தியாவில், "மௌரியர்களின் சாம்ராஜ்யம்" இருந்தது. மௌரியர்களும் திராவிட இனத்தவர்கள் தான் என்பதை, வரலாற்று அறிஞர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். தென் அரேபிய நாடான யேமனில், "மஹரி அல்லது மேஹ்ரி" என்ற பெயரைக் கொண்ட இனக்குழு ஒன்று வாழ்கின்றது. அவர்கள் அரபி போன்ற, ஆனால் வேறொரு மொழி பேசுகின்றனர். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) கிரேக்க மவ்ரி தான், அரபியில் மஹரி என்று மருவி வந்துள்ளது. பெயர்ச் சொற்கள் இடத்துக்கிடம் மாறுபடுவதுண்டு. கிரேக்க சொல்லான மவ்ரி, இத்தாலியில் மவ்ரோ என்றும், பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொரிஸ் என்றும் மருவி வந்துள்ளது. இன்றைக்கு அவை எல்லாம், தனி நபர்களின் பெயர்களாக மாறி விட்டன. ஒரு பிள்ளைக்கு, தமிழில் மறவன் என்று பெயரிட்டாலும், ஆங்கிலத்தில் மொரிஸ் என்று பெயரிட்டாலும், இரண்டினதும் அர்த்தம் ஒன்று தான். அதாவது, கருப்பன்!

அலெக்சாண்டர் ஆப்பிரிக்கா வரை படையெடுத்து சென்றது, சரித்திரத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் கிரேக்கப் படைகளால் எகிப்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. நுபியா (இன்று:சூடான்) என்ற ராஜ்யத்தை கைப்பற்ற யுத்தம் நடந்ததாகவும், நுபிய நாட்டின் இராணி, படைகளை வழிநடத்தி தீரத்துடன் போரிட்டதாகவும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. அலெக்சாண்டர் நுபியா வரை படையெடுத்து சென்றதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. கறுப்பர்களின் ராஜ்யமான நுபியாவை ஆண்ட இராணியின் மகிமை பண்டைய ஐரோப்பா வரை பரவி இருந்ததை அந்தக் குறிப்புகள் காட்டுகின்றன. பண்டைய எகிப்தியரின் காலத்தில் இருந்து, தேசத்தை நிர்வகித்த பெண்கள் பற்றிய வரலாற்றுக் கதைகள் பல உள்ளன. இன்றைக்கு, வட ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில், கடுமையான ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயம் வேறு. ரோமர்களும், அரேபியர்களும் வட ஆப்பிரிக்கப் படையெடுப்புகளின் பொழுது, பெண்கள் தலைமை தாங்கிய படைகளை எதிர்கொண்டு போரிட்டார்கள்.

இறைதூதர் முகமதுவின் படைகள், அரேபிய தீபகற்பத்தை இஸ்லாமிய மயப் படுத்துவதற்காக நடந்த யுத்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமதுவின் படைகளை எதிர்த்துப் போரிட்ட, அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவி ஹிந்த் அல் ஹுனுத் (Hind al-Hunnud) பற்றிய கதை மிகவும் பிரபலமானது. 
Hind al-Hunnud (also known as Hind al-Hunud) was a “Battle Queen” in the Quraish tribe of the kingdom of Kindah who led a battle against Muhammad. In Arabian culture, women played an important role in battle. The emotional center of traditional Arab tribal warfare, the cult of the battle queen, derived from the earliest roots of Arabic culture, evolved through time, and still exists. The battle queen mounted her camel and led them into battle. Sometimes this woman functioned merely as a ritual figure with little direct military purpose: a combination cheerleader, symbolic commander in chief, goddess, and living pinup.

பண்டைய அரேபிய இனக் குழுவினர், கன்னிப் பெண்களை போர்க் களத்திற்கு அனுப்பும் வழக்கத்தை உடையவர்கள். கூந்தலை விரித்து விட்ட படி, திறந்த மார்புடன், கையில் வாளேந்திய கன்னிப் பெண்கள், ஆண்களை வசீகரிப்பதற்காக போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டனர். உண்மையில், இது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் பாரம்பரியமாக இருக்கலாம். பெண் வழிச் சமுதாயம், அரசு அமைத்த காலத்தில், பெண்கள் இனக்குழுத் தலைவிகளாக, தளபதிகளாக இருந்துள்ளனர். அதுவே பெண் தெய்வ வழிபாட்டின் மூலமாகவும் இருந்திருக்கலாம். தமிழர்களின் கண்ணகி வழிபாடு, இது போன்ற சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆப்பிரிக்காவில், நுபியாவை ஆண்ட இராணிகளை "கண்டகி" என்று அழைப்பார்கள். கண்டகி என்பது அவர்களது பட்டப் பெயர். ஆகவே, நுபிய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப் படுவதற்கு முன்னமே, அந்தப் பெயர் சம்பிரதாயமாகப் பின்பற்றப் பட்டு வந்திருக்கலாம். விவிலிய நூலில், எத்தியோப்பியாவை ஆண்ட கண்டகி (Candace) இராணி பற்றிய குறிப்புகள் வருகின்றன. கண்ணகிக்கும், கண்டகிக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. அதனை உறுதிப் படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நம்மூர் கோவலன்-கண்ணகி கதை போன்ற ஒரு புராணக் கதை எகிப்தியர்களின் மத நம்பிக்கையாக இருந்தது. பரோ மன்னர்கள் ஸ்தாபித்த எகிப்திய ராஜ்யத்திலே, அது கடவுளரின் புராணக் கதை போன்றே சொல்லப் பட்டு வந்துள்ளது. ஆகவே, "கண்ணகி வழிபாடு" அல்லது "கண்ணகி கதை", குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இனி, பண்டைய எகிப்தியரின் கண்ணகி கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்தக் கதையில் வரும் ஒசிரிஸ் மன்னன் நல்லவனாகவும், அவன் சகோதரனான செத், கெட்டவனாகவும் சித்தரிக்கப் படுகின்றனர். நீதியுடனும், நேர்மையுடனும் நாட்டை ஆண்ட ஒசிரிஸ் மன்னனை கொல்வதற்கு செத் ஒரு சதித் திட்டம் தீட்டுகின்றான். ஒரு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான். எந்த வித தயக்கமும், சஞ்சலமும் இன்றி, விருந்தில் கலந்து கொண்ட ஒசிரிசுக்கு, மது ஊற்றிக் கொடுத்து விட்டு, ஒரு விபரீத விளையாட்டுக்கு அழைக்கிறான். ஒரு பெட்டியில் வைத்து மூடி, ஆணி அறைந்து, கண்காணாத இடத்தில் வீசி விடுகிறான். கணவன் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த, ஒசிரிசின் மனைவியான இசிஸ், கணவன் கொலையான சம்பவத்தை கேள்விப் பட்ட பின்னர், அவனது உடலைத் தேடிச் செல்கிறாள். நைல் நதியில் வீசப்பட்ட பெட்டி, கடலில் தவழ்ந்து பில்போஸ் என்ற நாட்டில் போய்ச் சேர்கின்றது. அங்கிருந்து உடலை எடுத்து வந்து, எகிப்தில் அடக்கம் செய்ய விரும்புகிறாள். ஆனால், வன்மம் கொண்ட செத், ஒசிரிசின் உடலை 14 துண்டுகளாக வெட்டி வீசுகின்றான். மீண்டும், கணவனின் உடல் பாகங்களை தேடிச் செல்லும் இசிஸ், அனைத்து பாகங்களையும் தேடி எடுத்து அடக்கம் செய்கின்றாள். அதே நேரம், ஒசிரிஸ், இசிசின் மகன் ஹோருஸ் (கருடன்) பெரியவனாக வளர்ந்து விட்டான். தீய சக்தியான செத் தை பழிவாங்குமாறு, இசிஸ் தனது மகனை ஒரு தர்ம யுத்தத்திற்கு அனுப்புகிறாள். நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் நடக்கிறது. (The Osiris Legend

இந்தக் கதையின் சாராம்சம், கணவனைக் காணாமல் துயருறும் இசிஸ், அவனது உடலை தேடி அலைவது. தீமையின் அவதாரமான செத் மன்னனுக்கு எதிரான தர்மயுத்தம் என்பனவாகும். பண்டைய எகிப்தில் மட்டுமல்ல, நுபிய ராஜ்யத்திலும் பட்டத்து ராணிகளான பெண்களின் பங்கு அளப்பெரியது. சில நேரம், மன்னனை விட சக்தி படைத்தவர்களாக இருந்துள்ளனர். பண்டைய எகிப்தியர்களின் மதத்தில், இசிஸ் என்ற பெண் தெய்வம் சக்தி வாய்ந்ததாக கருதப் படுகின்றது. இந்தியாவில், "பத்தினித் தெய்வம்" என்ற பெயரில் இசிஸ் வழிபடப் பட்டு வந்துள்ளார்.

இசிஸ், பத்தினி, கண்ணகி, இந்த மூன்று தெய்வங்களைப் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. இருப்பினும், இந்த தெய்வங்களை வழிபட்ட மக்களின் காலம், வாழ்விடம், கலாச்சாரம் என்பன கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். பத்தினி தெய்வம் பற்றிய கதைக்கும், கண்ணகி கதைக்கும் இடையில் கூட வேறுபாடு உண்டு. பத்தினியின் கணவன் பெயர் பலாங்கா. இசிஸ் போன்று, பத்தினியும் தனது கணவனின் மரணத்தால் துயருற்று, உடலை தேடிச் செல்கிறாள். இசிஸ் போன்று, தனது மந்திர சக்தியை பாவித்து இறந்த கணவனை உயிர்ப்பிக்கிறாள். கண்ணகியும், தனது கற்பின் வல்லமையினால் கணவனான கோவலனை உயிர்த்தெழ வைக்கிறாள். உயிர்த்தெழுந்த கோவலனை கடவுளர் வாழும் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, பூமியில் உள்ள தீயவர்களை பழிவாங்க கிளம்புகிறாள். எகிப்திய புராணத்தில், இசிஸ் தனது கணவனான இசிரிசை உயிர்த்தெழ வைத்து, பாதாள லோகத்திற்கு அதிபதி ஆக்குகிறாள். (தெய்வங்களுக்கு மரணம் இல்லை என்பது ஒரு மத நம்பிக்கை.) ஹோருஸ் தலைமையில் நடக்கும் போரில் தீயவர்கள் அழிக்கப் பட்ட பின்னர், இசிரிஸ் மீண்டும் பூலோகத்திற்கு திரும்பி அரசாளலாம்.

உண்மையில், பத்தினி தெய்வ வழிபாடு கோவலன், கண்ணகி கதை நடந்த காலத்திற்கு முன்பிருந்தே நிலவி வந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள், தமிழர்கள் மத்தியில் இருந்த புராணக் கதை ஒன்றுடன், கோவலன் - கண்ணகி கதையையும் இணைத்து, காலத்தால் அழியாத காவியம் ஒன்றைப் படைத்துள்ளார். இருப்பினும், தென்னிந்தியாவில் பரவிய இந்து-பார்ப்பனிய சித்தாந்தம் காரணமாக, கண்ணகி கற்புக்கரசியாக மாற்றப் பட்டார். இன்றைக்கும், சில தமிழ் வித்தகர்கள், "கற்பிற் சிறந்தவள், கண்ணகியா, மாதவியா," என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இசிஸ் அல்லது பத்தினி ஆகிய தெய்வங்கள், "கற்பு" என்ற நல் ஒழுக்கத்திற்காக போற்றப் படவில்லை. ஒரு மனைவி கணவன் மீது கொண்ட அளவு கடந்த காதலுக்காக, மக்களால் போற்றப் பட்டார்கள். "காதல் என்ற உணர்ச்சியின் சக்திக்கும், கற்பு என்ற நெறியின் மகிமைக்கும்" இடையிலான வித்தியாசத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனேகமாக, பிற்காலத்தில் வந்த பார்ப்பனீய கருத்தியல், கண்ணகியின் பெருமை, அவளின் கற்பு எனும் ஒழுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாக திரித்திருக்கலாம். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்த அறிஞர்கள், இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கலாம்.


கோவலன்-கண்ணகி கதை நடந்த காலத்திலும், சிலப்பதிகாரம் எழுதப் பட்ட காலத்திலும், தமிழகத்தில் சமண மதம் கோலோச்சியது. இதனால், சிலப்பதிகாரத்தை ஒரு சமண மதக் காவியம் என்றும் கூறுவார்கள். புராதன இந்தியர்களின் பத்தினி வழிபாட்டை, சமண மதம் ஏற்றுக் கொண்டிருந்தது. காலப்போக்கில், பத்தினி என்ற பெயர் மருவி, அந்த தெய்வத்திற்கு கண்ணகி அம்மன் என்ற பெயர் நிலைத்து விட்டது.எகிப்திய இசிஸ் வழிபாடும், பத்தினி தெய்வ வழிபாடும் ஒன்று தான் என்பது, ரோமர் கால ஆவணத்தில் இருந்து தெரிய வருகின்றது. "Oxyrhynchus Papyrus" என்ற ஆவணத்தில் உள்ள தகவல், அது எழுதப் பட்ட காலத்தை விட பழையதாக இருக்கலாம். ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை முழுவதும், பத்தினி தெய்வ வழிபாடு நிலவியது. பத்தினி தெய்வம், கண்ணகி அம்மன் என்ற இரண்டு பெயர்களும் அந்த பெண் தெய்வத்தைக் குறிப்பிட பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன. இலங்கையில், சிங்களவர்களும், தமிழர்களும் பத்தினி தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர்.

இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே "கண்ணகி அம்மன்" கோயில்கள் எஞ்சியுள்ளன. அதற்கு காரணம், இந்து மதத்தின் மேலாதிக்கம். உலகம் முழுவதும், மதங்களின் மேலாதிக்கம் கலாச்சார அழிவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்து மதமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழர்களின் பாரம்பரிய மரபை கட்டிக் காப்பாற்றி வந்த கண்ணகி தெய்வம், ராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களால் சம்ஸ்கிருத மயப் படுத்தப் பட்டது. 19 ம் நூற்றாண்டு வரையில், யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்தது. "சைவ - வெள்ளாள" சாதியத்தை, வாழ்க்கை நெறியாக நிறுவிய கோட்பாட்டுவாதியான ஆறுமுகநாவலர், கண்ணகி வழிபாட்டை கடுமையாக எதிர்த்து வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், "கண்ணகி வழிபாடு சமண மதத்திற்குரியது." தமிழகத்தில், நாயன்மார்களின் பக்தி இயக்கம் காரணமாக, 12 ம் நூற்றாண்டிலேயே, பத்தினித் தெய்வ வழிபாடு மறைந்து விட்டது. தமிழர்களின் மூவாயிரம் ஆண்டு கால தொன்மையை அழித்தவர்கள், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமல்ல. தமிழர்கள் இந்து மதத்தை பின்பற்றிய நாளில் இருந்தே, அவர்களது பண்பாட்டு அழிவு ஆரம்பமாகி விட்டது.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள் :
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!


மேலதிக தகவல்களுக்கு:
Nubia
Candace of Meroë
Osiris myth
The Cult of the Goddess Pattini


Monday, June 11, 2012

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. 

இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப் பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. "உலகிலேயே முன் தோன்றிய மூத்தகுடி" என்று இனப்பெருமை பேசுவதற்காக, பண்டைய இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அமெரிக்காவின் மாயன்களின் வரலாறு முதல், அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் வரை சகோதர உறவு முறை கொண்டாடுகின்றோம். அதே நேரம், ஆங்கிலம், கிரேக்கம், இத்தாலி மொழிகளுக்குள் எத்தனை தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்கிறோம். அதாவது, நாகரீகத்தால் உயர்ந்த ஐரோப்பியர்களின் மூதாதையரும் தமிழர்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த ஆய்வாளர்கள் எல்லோரும், ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை மறந்து விட்டு, அல்லது மறைத்துக் கொண்டு பேசுகின்றனர்.

உலகிலேயே முதலாவது மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான். உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவை தான். தம்மை தனித்துவமாக இனங்களாக கருதிக் கொண்டிருந்த ஐரோப்பியரும், சீனர்களும் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகளும், மரபணு ஆராய்ச்சிகளும் அந்த முடிவுக்கே வருகின்றன. மனித இனத்தின் மூலத்தை ஆராயும் விஞ்ஞானம், ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டிருக்கையில், தமிழர்கள் கடலில் அமிழ்ந்த குமரி கண்டத்தினுள் தமது மூலத்தை தேடிக் கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது.

ஐரோப்பியரின் பூர்வீகம் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமான) கொகேசியன் மலைகளில் இருந்து தொடங்கியதாக, காலம் காலமாக கற்பிக்கப் பட்டு வந்துள்ளது. அதனால் இன்றைக்கும் வெள்ளை இனம் என்பதை கொக்கேசியன் என்று குறிப்பிடுகின்றனர். சீனர்கள், தமது பூர்வீகத்தை வட சீனாவில் இருந்து ஆரம்பிக்கின்றனர். அதே போன்று, தமிழர்களும் தமது பூர்வீகத்தை குமரி கண்டத்தில் இருந்து தொடங்குகின்றனர். மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளின் ஒரே நோக்கம், தமது இனத்தின் தனித்துவத்தை வலியுறுத்துவது. துரதிர்ஷ்டவசமாக, அது அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்குடைய இனவாதிகளுக்கு உதவி வருகின்றது.
    
உலகில் எது முதலில் தோன்றியது? இனமா, அல்லது மொழியா? உதாரணத்திற்கு ஆங்கிலேயர்களை எடுப்போம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்து குடியேறிய ஜெர்மன் இன மக்களும், பிரித்தானியாவில் வாழ்ந்த கெல்டிக் இன மக்களும் கலந்த இனம் தான் ஆங்கிலேய இனம். அவர்கள் இன்று ஜெர்மன் மொழியும் பேசவில்லை, ஐரிஷ் போன்ற கெல்டிக் மொழியும் பேசவில்லை. ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜியன் மொழிகள் கலந்து ஆங்கிலம் என்ற புது மொழி உருவாகியது. தமிழர்களும் அதே போன்றதொரு அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர்.

இன்று தமிழ் பேசும் மக்கள், பல இனக்கலப்புகளால் உருவானவர்கள். தமிழை ஒத்த திராவிட மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத கலப்பினால் புதிய மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதை மறுக்க முடியாது. இதனால், மொழியியல் வல்லுனர்கள், திராவிட மொழிகளின் வேர்களை அறிவதற்காக தமிழ் மொழியை ஆழ்ந்து கற்கின்றனர். நாம் பேசும் நவீன தமிழ், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டது. பழந் தமிழில் இருந்து வேறுபட்டுள்ளது. ஆனாலும், பிற திராவிட மொழிகளைப் போலல்லாது, சம்ஸ்கிருத கலப்பை கூடுமான அளவு தவிர்த்து வந்துள்ளது. தமிழர்களை ஒரு தனி இனமாக வரையறை செய்வதற்கு, அது மட்டும் போதாது. இடப்பெயர்வுகளுக்காளாகும் மக்கள், தாம் தங்கி விடும் இடத்தில் பேசப்படும் மொழியை, சொந்தமாக்கிக் கொள்வது வழக்கம். ஆகவே, தமிழர்கள் என்பதை, ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் என்ற இனம் எங்கே இருக்கிறது? அது பெரும்பாலும் சாதி என்ற பெயரில் மறைந்திருக்கிறது. அகமண உறவுகளின் மூலம், இரத்த சம்பந்தம் பாதுகாக்கப் படுவதால், அந்த சாதி அல்லது இனம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று, நிறமூர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடிகின்றது. அவ்வாறு தான், அண்மையில் தமிழக மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தின் மரபணு, இந்திய உபகண்டத்திலேயே பழமையானது என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கேள்விப்பட்ட உடனேயே, பழங்குடி இனங்களை ஒதுக்கி வைத்திருக்கும், நகர்ப்புறத்தை சேர்ந்த "நாகரீகமடைந்த" தமிழர்கள், தமது தமிழினவாத பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் இருளர்கள் போன்ற பழங்குடி இனங்கள், இன்றைக்கு முற்றாக அழிந்து போகும் நிலையில் உள்ளன. அவர்களும் தமிழ் பேசினாலும், ஆப்பிரிக்க கருப்பர்கள் போன்ற தோற்றத்தினால், "இருளர்கள்" என்று அழைக்கப் பட்டனர். எமது மூதாதையரின் வம்சத்தை பத்தாயிரம் வருடங்களாக பாதுகாத்து வரும் பழங்குடி இனங்களின் நல்வாழ்வுக்காக, இதுவரை ஒரு சிறு துரும்பைக் கூட நாம் எடுத்துப் போடவில்லை. ஆனால், நாம் முன்னெடுக்கும் இனவாத அரசியலுக்கு அவர்களை அழகு பொம்மைகளாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

அண்மைய கண்டுபிடிப்புகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக, பரணில் போட்டு வைத்திருந்த குமரிகண்டம் கோட்பாட்டையும் தூசு தட்டி எடுக்கிறோம். "ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவும், இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் நிலத்தால் இணைக்கப் பட்டிருந்தன. அதுவே குமரி கண்டம். அங்கே வாழ்ந்த தமிழன், இந்தியா ஊடாக உலகம் முழுவதும் சென்றான். அதுவே உலகில் முன் தோன்றிய மூத்த குடியின் வரலாறு," என்று முடிக்கின்றனர்.

குமரி கண்டம் பற்றிய கதையாடல்கள், தமிழர்கள் மத்தியில் பிரபலமான அளவுக்கு பிற இனங்களினால் பேசப் படுவதில்லை. அந்நிய அகழ்வாராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களும் அதனை பல்வேறு தொலைந்த நாகரீகங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர். காவிரிப்பூம் பட்டினம் போன்று, கடல்கோளினால் அழிக்கப் பட்ட பண்டைய நாகரீகங்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் குமரி கண்டம் என்ற பிரமாண்டமான கண்டத்தின் இருப்பை உறுதி செய்யப் போதுமானவை அல்ல. குமரி கண்டம் பற்றிய கருதுகோள், ஆதாரம் குறைவான ஊகமாகவே இன்றும் நீடிக்கின்றது.

தமிழரின் முன்னோர்கள், "கடல்கோளால் அழிக்கப் பட்ட, கற்பனையான குமரி கண்டத்தில் இருந்து வந்தனர்" என்று, எதற்காக ஒன்றை கஷ்டப் பட்டு நிறுவ வேண்டும்? இன்று பல அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, "ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் தோன்றிய வரலாற்றில்" இருந்து தொடங்கலாமே? அதற்கான மொழியியல் ஆய்வுகளையும் செய்யலாமே? ஏற்கனவே, பேராசிரியர் அறவாணன் போன்ற சில அறிஞர்கள், "தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறினர்" என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வந்துள்ளனர்.

இருந்தாலும், இன்றைய தமிழ் இனவாதிகள், "ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய வரலாற்றை" மறைக்கும் காரணம் என்ன? தமிழ் இனவாத கோட்பாடு, ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு ஆகும். "மறுக்கவியலாது, ஐரோப்பியர்களே உலகிற் சிறந்த உன்னதமான நாகரீகத்தை கொண்ட மக்கட் கூட்டம். அவர்களுக்கு அடுத்த நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர். ஆப்பிரிக்கர்கள், நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியுள்ள காட்டுமிராண்டிகள். " என்ற இனவாத சிந்தனை அவ்வாறான முன் முடிவுகளை எடுக்க வைக்கின்றது.

தமிழர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றால், ஆபிரிக்காவில் இன்றைக்கும் வாழும் சில இனங்களுடன் மொழி, கலாச்சார, மத ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அவற்றை ஆராய்வதும், தொடர்புகளை விளக்குவதுமே இந்த தொடரின் நோக்கம். ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் எழுதிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நான் மேலும் சில தகவல்களை சேர்த்துள்ளேன். மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர், சில ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்த பின்னர் தான், எனக்கும் அந்த உண்மை தெரிய வந்தது. எமது மொழி, கலாச்சாரங்களைப் பற்றிய தகவல்களை பறிமாறிக் கொண்டோம். தமிழர்களினதும், ஆப்பிரிக்கர்களினதும் பண்பாட்டுக் கூறுகள் பல, அதிசயப் படத் தக்க ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இதனை நாம் ஐரோப்பியரிடம் எதிர்பார்க்க முடியாது.

தமிழர்களைப் போன்ற தோற்றம் கொண்ட ஆப்பிரிக்கர்கள் இருக்கின்றனர். அவர்கள் வாயைத் திறந்து பேசினால் ஒழிய, அவர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை கண்டு பிடிப்பது கடினம். குறிப்பாக, சோமாலியர்கள், எத்தியோப்பியர்கள், எரித்திரியர்கள் போன்ற இனங்களில், தமிழர்களின் முகச் சாயலைக் கொண்ட பலரைக் காணலாம். சோமாலியர்கள், மற்றும் அரேபியாவை சேர்ந்த யேமனியர்கள், இன்றைக்கும் தமிழர்கள் போன்று சாரம் (லுங்கி, கைலி) உடுத்துகின்றனர். உணவை சமைக்கும் முறைகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகவே, தமிழர்களின் சகோதர இனங்களின் தாயகமான கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே எமது தேடலைத் தொடங்க வேண்டும்.

சோமாலியாவில் மட்டுமல்லாது, ஜிபூத்தி, எத்தியோப்பியாவின் கிழக்கு மாகாணம், கென்யாவின் வட-கிழக்கு மாகாணங்கள், போன்ற இடங்களிலும் சோமாலிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரேயொரு தேசிய இனம் சோமாலிய இனம் மட்டுமே. இன்றைக்கும், சோமாலியர்கள் தம்மை ஆப்பிரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வித்தியாசப் படுத்திப் பார்க்கின்றனர்.

சோமாலிய, மற்றும் எத்தியோப்பிய/எரித்தியரின் அம்ஹாரி மொழிகள் அரபு போன்ற செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. யூத, அல்லது இஸ்லாமிய மதங்களின் பரம்பல் காரணமாக, ஹீபுரு, அரபு மொழிகளில் இருந்தே சோமாலிய, அம்ஹாரி மொழிகள் தோன்றின என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரேபியரும், ஹீபுரூக்களும் ஆப்பிரிக்காவில் இருந்து சென்றிருக்கவும் வாய்ப்புண்டு. நாம் உலக வரலாற்றை எதிர்த் திசையில் திருப்பிப் போட்டால், எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
  
வட-கிழக்கு ஆப்பிரிக்காவில், கூஷி சாம்ராஜ்யம் ஆப்ரிக்கர்களின் பண்டைய நாகரீகத்திற்கு சான்றாக திகழ்கின்றது. (Kingdom of Kush http://en.wikipedia.org/wiki/Kingdom_of_Kush) இன்றைய தென் எகிப்து, வட சூடான் பகுதிகளை உள்ளடக்கியது. பண்டைய எகிப்தில் இருப்பதைப் போல், பிரமிட்கள் ஏராளமாக கட்டப்பட்டன. ஒரே மாதிரியான தெய்வங்கள் கூட வழிபடப் பட்டு வந்தன. ஆகவே பண்டைய எகிப்திய மொழிக்கும், கூஷி மொழிக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். இன்று வழக்கத்தில் உள்ள சோமாலிய மொழி, மற்றும் ஒரோமோ (எத்தியோப்பியாவில் ஒரு சிறுபான்மை இனம்) மொழி என்பன, கூஷி மொழியின் கிளை மொழிகளாகும். ஆகவே எகிப்திய, கூஷி, சோமாலிய மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்க வேண்டும். மொழியியல் அறிஞர்கள் இது குறித்து ஏற்கனவே ஆராய்ந்துள்ளனர்.

மொழியியல் ஆய்வைப் பொறுத்த வரையில், தனியே தமிழ் மொழியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ், தெலுங்கு, சிங்களம் இவற்றிற்கு பொதுவான மொழி ஒன்று ஆதி காலத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழில் பயன்படுத்தப் படாத பல சொற்கள், பிற திராவிட மொழிகளில் பாவனையில் இருக்கலாம். ஆகவே, அவற்றையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உதாரணத்திற்கு, சிங்கள மொழியில் "மால்" என்றால் மீன் என்று அர்த்தம்.

தமிழில், தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடப் பயன்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு: "மால்" முருகன், திரு "மால்". தமிழிலும் மால் என்பதை மீன் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துகின்றோம். விஷ்ணுவின் (திருமால்) முதலாவது அவதாரம் மச்சாவதாரம் ஆகும். தமிழகத்தின் முதலாவது தமிழ் ராஜ்யத்தை உருவாக்கிய பாண்டியர்களின் சின்னம் மீன். ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை ஸ்தாபிக்கப் பட்ட, ஆதி கால திராவிட அரசுகள் மீன் இலச்சினையை பயன்படுத்தி உள்ளன. கிறிஸ்தவம் தோன்றிய இடங்களில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட மீன் சின்னம், பிற்காலத்தில் சிலுவைக் குறியாக மாறியிருக்கலாம்.

"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்" என்று, முருகனை தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடும் போக்கு காணப் படுகின்றது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், போன்ற பிற திராவிட இன மக்களும் முருகனை வழிபடுகின்றனர். ஆகவே, "முருகன் ஒரு திராவிடக் கடவுள்" என்று அழைக்கலாமா? ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு (Murungu) கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது!

தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்! ஆப்பிரிக்க கண்டத்தில், இரண்டாவது உயரமான "கென்யா மலை" (Mount Kenya) கிகுயூ மக்களுக்கு புனிதமானது. (Mount Kenya http://en.wikipedia.org/wiki/Mount_kenya) அந்த மக்கள் "கிரி எங்கை" (Kĩrĩ Nyaga, எங்கை கடவுளின் மலை) என்று அழைக்கின்றனர். தமிழிலும், கிரி என்ற சொல்லுக்கு மலை என்று அர்த்தம்!

உலகின் முதல் மனிதன், கென்யா மலையில் இருந்து இறங்கி வந்ததாக, கிகுயூ மக்கள் நம்புகின்றனர். கிட்டத்தட்ட இதே போன்ற கதை, கதிர்காமத்தை அண்டி வாழும் வேடுவ பழங்குடி இன மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டும் வழக்கம் உள்ளது. கிகுயூ இன மக்கள், வட கிழக்கில் அமைந்துள்ள கென்யா மலையை நோக்கியவாறு, கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவது வழக்கம். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றுவதற்கு முன்னமே, ஓரிறைக் கொள்கை, ஒரே இறைதூதர் கோட்பாடுகள் கிகுயூ மக்களின் மத நம்பிக்கைகளாக இருந்துள்ளன. ஆதாம்- ஏவாள் கதையை ஒத்த முதல் மனிதனின் கதையும் (Mumbi http://en.wikipedia.org/wiki/Mumbi) அவர்களின் பூர்வீகத்தை பற்றி அறியத் தருகின்றது. (Kikuyu People - Myths of Origin http://emmanuelkariuki.hubpages.com/hub/Kikuyu-Other-myths-of-Origin)

பண்டைய சூடானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் திராவிட இனத்தவர்கள், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். தமிழகத்தின் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்ட முதுமக்கள் தாழிகள் அதற்கு சாட்சியம் பகர்கின்றன. அதே போல, செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் பழக்கமும், அங்கிருந்து இந்தியா வரை தொடர்ந்து வந்துள்ளது. சுமேரியா (இன்று: ஈராக்) மக்களின் ஒப்பாரி வைக்கும் வழக்கம் பற்றி விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. ஆகவே, அங்கேயும் திராவிட மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. திராவிட மக்கள் என்பது, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி புலம்பெயர்ந்த மக்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும்.

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.

அடுத்து வரும் பகுதிகளில், எமது மூதாதையரான கறுப்பின ஆப்பிரிக்கத் தமிழரின் வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.
  • "தமிழ்" என்ற சொல் எங்கே, எப்படித் தோன்றியது?
  • தமிழர்கள் பற்றி விவிலிய நூலில், திருக் குர் ஆனில் எழுதப் பட்டுள்ளதா?
  • தமிழ் மொழிக்கும், சோமாலிய மொழிக்கும் பொதுவான சொற்கள் என்ன?
  • பண்டைய கூஷி, எகிப்திய நாகரீகங்களுக்கும், தமிழருக்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ன?
  • ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த கறுப்பினத் தமிழர்கள், எந்தெந்த இடங்களில் தமது நாகரீகங்களை நிலை நாட்டினார்கள்?

(தொடரும்)

Cameroonians Speak Tamil

Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.

Saturday, June 02, 2012

பௌத்த சங்கம் பாதுகாக்கும் சிங்கள வேளாள சாதியம்

[ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்] 
(பகுதி - இரண்டு)
கண்டிய ராஜ்யத்தை ராஜசிங்க பரம்பரையினர் ஆண்ட காலம் முழுவதும், மன்னரை கொலை செய்வதற்காக, ஏராளமான சூழ்ச்சிகள், சதியாலோசனைகள் நடந்துள்ளன. முடி தரித்த தலைக்கு நிம்மதி இல்லை என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றவாறு, எல்லையில் அன்னியப் படைகளையும், அரச மாளிகைக்குள் சதிகாரர்களையும் சமாளிப்பதற்கே, கண்டி அரசனுக்கு நேரம் போதாமல் இருந்திருக்கும். கண்டி அரசவையில் நடந்த சூழ்ச்சிகளை வைத்து, ஒரு விறுவிறுப்பான சரித்திர மர்ம நாவல் எழுதலாம். ராஜசிங்க வம்சத்தின் ஒவ்வொரு அரசனையும், கொல்வதற்கு சூழ்ச்சி செய்ததும், கொலை முயற்சியில் இருந்து பாதுகாத்ததும், மன்னனுக்கு நெருக்கமான அதிகார்களும், புத்த மதகுருக்களும் தான். மன்னன் கீர்த்திஸ்ரீ, மல்வத்த விகாரை சதி முயற்சியில் இருந்து உயிர் தப்பினான். ஆனால், அந்தச் சம்பவமானது நிலப்பிரபுக்களின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது, என எடுத்துக் காட்டியது. சுமார் 200 அல்லது 300 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை ஆண்ட கடைசி மன்னன் ஆங்கிலேயரால் சிறைப் பிடிக்கப் பட்டாலும், நிலப்பிரபுக்களின் வர்க்கம் ஆங்கிலேயருடன் சில உடன்படிக்கைகளை செய்து கொண்டது.

இலங்கையை ஒல்லாந்தர்கள் (டச்சுக் காரர்கள்) ஆண்ட காலத்திலும், கண்டி ராஜ்யத்தை கைப்பற்ற முடியவில்லை. கண்டி நாட்டு படையினரின், கெரில்லா போர் முறையும், நவீன ஆயுதம் ஒன்றின் பாவனையும், டச்சு காலனிய படைகளை நெருங்க விடாமல் தடுத்தன. அன்றைய காலத்தில், டச்சுக் காரராலேயே நவீன ஆயுதமாக கருதப்பட்ட ஒரு வகை துப்பாக்கி, இன்றைக்கும் நெதர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. கண்டிய படைகள், காலி, மாத்தறை ஆகிய இடங்களை கைப்பற்றியதுடன், கொழும்பு நகரையும் முற்றுகையிட்டிருந்தன. இந்தியாவில் இருந்து உதவிக்கு மேலதிக துருப்புகள் வந்திரா விட்டால், இலங்கையில் ஐரோப்பிய காலனியாதிக்கம் 18 ம் நூற்றாண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும். (Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck http://databases.tanap.net/ead/html/1.10.106/pdf/1.10.106.pdf) இத்தனை பலம் பொருந்திய கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு காரணம், ஆளும் வர்க்கத்தினுள் நிலவிய ஒற்றுமையின்மை, போட்டி, பொறாமைகள், எதேச்சாதிகாரம் என்பன ஆகும்.

குறிப்பாக, கடைசி கண்டிய மன்னனான விக்கிரம ராஜசிங்கன் காலத்தில், "துரோகிகளை களை எடுக்கும் நடவடிக்கை" அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருந்தது. அரசவையில் இருந்த மந்திரி பிரதானிகள் (அதிகார்கள்), மன்னனின் உத்தரவின் பேரில் கொல்லப் பட்டனர். சில அதிகார்கள் ஒன்று சேர்ந்து, அரசனை கொலை செய்ய திட்டமிட்டமை அம்பலமானதும், அதிலே சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்யும் படலம் தொடங்கியது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். எஹலப்பொல என்ற அதிகார், ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்து எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தான். ஆங்கிலேயர்கள், அவ்வாறு தான் கண்டி ராஜ்யத்தை கைப்பற்றினார்கள். 1815 ம் ஆண்டு, எஹலப்பொலவும், எஞ்சியிருந்த அதிகார்களும் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி, சில வருடங்களின் பின்னர் கண்டி ராஜ்யத்தை ஒரு சுதந்திர நாடாக, அதிகார்கள் கையில் திருப்பி ஒப்படைப்பதாக எழுதப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறிய ஆங்கிலேயர்கள், இலங்கை முழுவதையும் ஒரே நாடாக ஆண்டார்கள்.

கண்டி ராஜ்யத்தின் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்ற ஆங்கிலேயர்கள், அங்கு நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை மறு சீரமைத்தனர். புத்த மடாலயங்கள், நிலங்களின் மீதான அதிகாரத்தைக் கொண்டிருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், ஒரு ஆணைக்குழுவை அமைத்தார்கள். நிலங்களை அளவை செய்வதும், கணக்கிடுவதும், அந்த ஆணைக்குழுவின் பொறுப்பாக இருந்தது. சொத்துக் கணக்கெடுப்பு என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆங்கிலேயர்கள் பறித்துக் கொண்டனர். அப்படி இருந்தும், புத்த மடாலயங்கள் பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப் பட்டது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, சொத்துக்களின் எண்ணிக்கை, வரவு, செலவுக் கணக்குகளை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தம், இன்றும் கூட பெருமளவு மாற்றத்திற்கு உட்படவில்லை. நிலப்பிரபுக்களான மடாதிபதிகள், தமக்கு சொந்தமான நிலங்களை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார்கள். பல பெரிய மடாலயங்களின் தலைமை மதகுருக்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், பல இலட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்தன. இதிலே வேடிக்கை என்னவென்றால், பெருந்தோட்ட உரிமையாளர்களான சில மடாதிபதிகள், இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளரை வைத்து வேலை வாங்கி இருக்கிறார்கள். பிற்காலத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்திய உழைப்பாளிகளின் தேவை முடிந்ததும், இனவாதம் பேசி திருப்பி அனுப்பினார்கள். 

சிங்கள-பௌத்த பொருளாதார கட்டமைப்பில், சாதி அமைப்பின் படி நிலை வளர்ச்சி பிறிதாக நோக்கப் பட வேண்டும். கண்டி ராஜ்யத்தில் ஆதிக்க சாதியாகவிருந்த ராதலர்கள், ஆங்கிலேய நிர்வாகிகளுடன் ஒத்துழைத்தனர். இருப்பினும், இலங்கை முழுவதும் புதிதாக உருவாகிக் கொண்டிருந்த "வெள்ளாளர்கள்" என்ற புதிய சாதியினருக்கு இடம் கொடுத்து ஒதுங்க நேர்ந்தது. இன்று ராதலர்கள், தம்மை வெள்ளாளரின் உட்பிரிவாக அழைத்துக் கொள்கின்றனர். ஆரம்பத்தில், வெள்ளாளர்கள் என்பது ஒரு சாதியாக இருக்கவில்லை. நிலவுடமையாளர்களின் நிலங்களை மேற்பார்வை செய்யும் வேலை பார்த்து வந்தனர். ஒரு விகாராதிபதி (நிலப்பிரபுவான புத்த மதகுரு), பல்லாயிரம் ஏக்கர் காணிகளை, "பங்கு" என்ற பெயரில் சிறு சிறு துண்டுகளாக பிரித்திருப்பார்.

அந்த பங்குகளை நிர்வகிப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் சிலர் இருந்தனர். அவர்கள் இரண்டு வகையாக அந்த நிலங்களை பராமரித்தனர். ஒன்று, அவர்கள் தாமே அந்த வயல்களுக்கு சொந்தக்காரர்கள் போல் உழுது பயிரிட்டு, அறுவடையில் ஒரு பகுதியை நிலப்பிரபுவுக்கு கொடுப்பார்கள். இரண்டு, வயல்களை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு மேற்பார்வை பார்ப்பார்கள். பிற்காலத்தில், நிலப்பிரபுக்களின் அதிகாரம் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் பிடுங்கப் பட்டதும், நிலங்களை மேற்பார்வை செய்தவர்கள் "வேளாளர்கள்" (சிங்களத்தில் : கொவிகம) என்ற சாதியாக மாறி விட்டனர். 

நிலப்பிரபுவான மடாதிபதியின் நிலங்களை மேற்பார்வை செய்யும் சாதிகளை சேர்ந்தோர், அந்த ஊர் விகாரைகளில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு பணிவிடை செய்யும் அந்தக் கடமையை "நில காரிய" என்று அழைப்பார்கள். நில காரியம் செய்வோர் பெரும்பாலும், உயர்சாதியினர் அல்லது இடைநிலைச் சாதியினர் ஆவர். அதைத் தவிர, வயல்களில் வேலை செய்யும் கூலி உழைப்பாளிகளும், குடிமைத் தொழில் செய்யும் பிற பணியாட்களும் தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும் முதலாளித்துவ பொருளாதார முறை பரவியதால், கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்வது அதிகரித்தது. அதனால், அடிமை முறையும் தகர்ந்தது. 

மத்திய கால நிலப்பிரபுத்துவ அமைப்பு, இன்றைக்கு ஏறத்தாள அழிந்து விட்டது. ஆயினும், இன்றைக்கும் இந்தியாவில் சில எச்ச சொச்சங்களை காண முடிவதைப் போல, அண்மையில் இலங்கையிலும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மகியங்கன எனும் இடத்தில் உள்ள ஊர் ஒன்றில், இன்னமும் மத்திய கால அடிமை உழைப்பு முறை நிலவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கிருக்கும் பௌத்த மடாலயத்திற்கு சொந்தமான விகாராதிபதி, இன்றைக்கும் நிலப்பிரபு போன்றே நடந்து கொள்கிறார். அந்த ஊர் மக்கள், விகாராதிபதிக்கு சொந்தமான வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர்.

கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் காட்டுக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். காட்டை அழித்து, அதனை கிராமமாக்கி, தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தாமே பயிரிட்டுக் கொண்டு வாழ்ந்தனர். அந்த தன்னிறைவு கண்ட சமுதாயத்தில், பௌத்த மடாதிபதிகள் நுழைந்த பின்னர் தான் பிரச்சினை ஆரம்பமாகியது. அந்த நிலம் முழுவதும் தமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடிய மடாதிபதிகள், மக்களை கொத்தடிமைகளாக்கி உழைப்பை சுரண்டி வந்தனர். அங்கே, அரச இயந்திரத்தின் அங்கமாக செயற்படும் பொலிஸ் நிலையம் ஒன்றுள்ளது. பொலிஸ் அதிகாரிகளும், மடாதிபதிகளுக்கு சார்பாகவே நடந்து கொள்கின்றனர். கடந்த கால ஜேவிபி கிளர்ச்சியை காரணமாக வைத்து, பலரை கொன்று அரச பயங்கரவாத்தினால் அடக்கி வைத்தனர். மகியங்கனையில் அல்லலுறும் அடிமைகள் பற்றிய ஆவணப் படத்தை இங்குள்ள இணைப்பில் பார்க்கலாம். (21st century slaves)

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பெரும் செல்வாக்கு மிக்க, மல்வத்த, அஸ்கிரிய பௌத்த சங்கங்கள், அரசியலில் இருந்து தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தன. ஆனால், நடைமுறை வேறாக இருந்தது. பல மடாதிபதிகள், நேரடியாக அரசியலில் ஈடுபடா விட்டாலும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, விகாரைக்கு சொந்தமான நிலங்களின் மீதான உரிமை, அவற்றால் கிடைக்கும் வருமானம், இவற்றை நிச்சயப் படுத்திக் கொள்வது. இரண்டாவதாக, நிலப்பிரபுக்களாகவும், முதலாளிகளாகவும் இருந்த மடாதிபதிகளின் ஆதரவு, அரசியல்வாதிகளுக்கு தேவைப் பட்டது. மூன்றாவதாக, இலங்கையில் இன்றைக்கும் மாற்ற முடியாத, வெள்ளாள ஆதிக்க சாதி அரசியல். இலங்கையில் உள்ள பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருவாக வருபவர், வெள்ளாளர் சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகும். கரவா, சலாகம போன்ற இடைநிலைச் சாதியினர், தமக்கென தனியான பௌத்த சங்கங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில், அதிக வருமானம் ஈட்டும் பௌத்த மடாலயங்களில், ஸ்ரீபாத (சிவனொளிபாத மலை), தலதா மாளிகை ஆகியன பிரபலமானவை. இந்த இடங்களுக்கு வந்து குவியும், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளால் அதிக வருவாய் கிடைக்கின்றது என்று ஒரு காரணத்தைக் கூறலாம். ஆனால், மகியங்கன, திஸ்ஸ மகரகம, தம்புள்ள போன்ற இடங்களில் அமைந்துள்ள ரஜ மஹா விகாரைகளும் பெருமளவு பணத்தை கணக்கில் காட்டுகின்றன. பௌத்த சமயத்துடன் தொடர்புடைய இடங்களை விளம்பரப் படுத்தி, அதிகளவு யாத்ரீகர்களை வரவழைக்கும் வியாபார நோக்கம், சில நேரம் இன முரண்பாடுகளையும் உருவாக்கி விடுகின்றது. உதாரணத்திற்கு, இந்தியாவில் இருந்து சங்கமித்தை வந்திறங்கிய புனிதஸ்தலம் என்று கூறி, மாதகலில் (யாழ்ப்பாணம்) புதிதாக பௌத்த விகாரை ஒன்று கட்டப் பட்டது. இன்று, பெருமளவு தென்னிலங்கை யாத்ரீகர்கள் வருகை தருவதால், மாதகல் மடாலயமும் தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றது. இந்த இலக்கை அடைவதற்காக, ஒரு பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ், அரசுடனும், இராணுவத்துடனும் ஒத்துழைத்திருப்பார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்ததைப் போல், மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்கும் தைரியம், இலங்கையை ஆண்ட தலைவர்களுக்கு இருக்கவில்லை. பௌத்த மத பாசிச சக்திகளின் பலத்தை, பண்டாரநாயக்க கொலைக்குப் பிறகு தான் எல்லோரும் புரிந்து கொண்டார்கள். சிங்கள-பௌத்த சமூகக் கட்டமைப்பின் வேர்கள், எங்கெங்கெல்லாம் பரவி இருக்கின்றன என்பதை, இன்று வரைக்கும் யாரும் ஆராயவில்லை.

(முற்றும்)

இந்தத் தொடரின் முதலாவது பதிவை வாசிப்பதற்கு:
ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள், இணையத் தளங்கள்:
1.Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck
2.The Kandyan Kingdom
3.21st century slaves
4.The Expedient Utopian: Bandaranaike and Ceylon
5.நோத் முதல் கோபல்லவா வரை 6."Monastic Landlordism" in Ceylon, Journal of Asian Studies, Volume 28, Issue 4(August 1969)
------------------------------------

இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுக் கட்டுரைகள்:
1.இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்
2.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள் 3.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்