Friday, January 06, 2012

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்

"கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள், சீனக் கடற்படையுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன." இது போன்ற செய்தி, சர்வதேச அரங்கில் எந்தளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகமும் அது போன்றது தான். நாங்கள் அமெரிக்காவையோ, சீனாவை ஆதரிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனான பனிப்போர் யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்பதை இன்று எல்லோரும் மறந்து விட்டனர். அன்று "சிவப்பு அபாயம்" குறித்து, மேற்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. இன்று, "மஞ்சள் அபாயம்" பற்றிய அச்சவுணர்வு மக்கள் மனதில் விதைக்கப் படுகின்றது. முன்னரைப் போலவே, இரண்டு அணுவாயுத வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற சில இராஜதந்திர சந்திப்புகள், ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அந்த நேரம், அனைத்து ஊடகங்களும், லிபியா, சிரியா என்று மத்திய கிழக்குப் பக்கமே தமது பார்வையை செலுத்தி இருந்தன. புதிய பனிப்போரின் வரவை கட்டியம் கூறும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, அந்த சந்திப்புகளை விரிவாகப் பார்ப்போம்.

நவம்பர் 2011, பராக் ஒபாமா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தின் விளைவாக சில முடிவுகள் எட்டப் பட்டன. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள டார்வின் நகரில் 250 அமெரிக்க மரைன் படையினர் நிறுத்தப் படுவார்கள். மேலதிகமாக 2500 படையினரை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. இந்தோனேசியாவுக்கு 24 'F - 16' ரக விமானங்கள் விற்கப்படும். அதே காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மியான்மர் நாட்டு விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 54 வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஒரு அமெரிக்க உயர் அதிகாரி அந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஹிலாரி அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சென்ற செய்தியை அறிவிப்பதில் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆயினும், அமெரிக்கர்களின் உள்நோக்கத்தை அந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது. "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." என்று கிளிண்டன் கூறியமை சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு காரணம், சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையிலான கடற்பகுதி, "தென் சீனக் கடல்" என்று தான் இவ்வளவு காலமும் அறியப் பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும், பூகோள வரைபடங்களில் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் புழங்கும் "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்" என்ற பெயரை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அவர்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.

சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை பற்றி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இழுபறி நிலைமை காணப்படுகின்றது. குறிப்பிட்ட கடற்பிரதேசத்தில் சீனப் படகுகள் மீன் பிடிக்கக் கூடாது என்று, பிலிப்பைன்ஸ் தடையுத்தரவு போட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் அந்த வழியாகத் தான் பயணம் செய்கின்றன. இதனால், அந்தக் கடற்பகுதி சீனாவைப் பொறுத்தவரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் மட்டும் கடல் எல்லைக்காக சண்டை பிடிக்கவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுடனும் மீன்பிடி உரிமை, கடல் எல்லை குறித்த சர்ச்சைகள் தீர்க்கப் படவில்லை. அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கு அவை எதுவும் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில், சீனாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், திரைமறைவில் புதிதொரு பனிப்போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்க படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில், சீனா ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டது. இதன் மூலம், ஆசியக் கண்டத்தில் சீனா தன்னிகரற்ற பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. அமெரிக்க உயர் மட்ட விஜயமானது, அவுஸ்திரேலியா என்ற நெருங்கிய உறவினனை, அமெரிக்கா கைவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய துருப்புகள் வகித்த பாத்திரமும் குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலியா என்ற தீவு நாடு (அவர்கள் தங்களை ஒருகண்டம் என்று அழைத்துக் கொள்கின்றனர்.) ஆசியக் கண்டத்தை சேர்ந்தது. தமக்கு அயலில் உள்ள சீனாவுடன் மோதுவதற்கு தயாராக, தூரத்தில் இருக்கும் அமெரிக்கர்களை துணைக்கு அழைக்கின்றனர்.

வேறு பல ஆசிய நாடுகளுடனும், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் 1945 ம் ஆண்டிலிருந்து போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள், புதிப்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே, அரசியல் ரீதியாக ஒற்றுமையைக் கொண்டுள்ள, நாடுகளுடனான அமெரிக்க உறவு குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வியட்னாமும், அமெரிக்காவும் கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் செய்தி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, அமெரிக்கா வியட்னாமின் பகைவனாக திகழ்ந்தது. இரண்டு நாடுகளும் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

யுத்தம் நடந்த காலங்களில், ரஷ்யாவும், சீனாவும் வியட்னாமின் கூட்டாளிகள் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வந்தது. நேற்று வரை, ஜென்மப் பகைவர்களாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்த அமெரிக்க, வியட்நாமியப் படைகள், இன்று கூட்டாளிகளாக இராணுவ ஒத்திகையில் ஈடுபடப் போகின்றனர். உலகம் எவ்வளவு விரைவாக மாறுகின்றது? கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வியட்னாம் அமெரிக்காவுடன் மட்டும் மோதவில்லை. சீனாவுடனும் தீர்க்கப் படாத எல்லைப்போரில் ஈடுபட்டது. வியட்நாம் சோஷலிச நாடாவதற்கு முன்னமே, பல நூறாண்டுகளாக, வியட்நாமியருக்கு சீனா மீதான வெறுப்பு இருந்து வந்துள்ளது. சீனா- வியட்நாம் முரண்பாடுகள் குறித்து அன்று வெளியில் யாரும் அக்கறைப் படவில்லை. இனிமேல் அந்த நிலைமை மாறலாம். இனி வருங்காலங்களில், "சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்றும், வியட்நாமை பாதுகாக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை என்றும்," ஊடகங்கள் புலம்பலாம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர், சீனா மூன்று மில்லியன் பீப்பாய் எண்ணை நாளொன்றுக்கு செலவழித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றது. 2008 ம் ஆண்டு, சீனா நாளொன்றுக்கு எட்டு மில்லியன் பீப்பாய் எண்ணை பயன்படுத்தியது. அடுத்து வரும் இருபது வருடங்களில், இந்த அளவு இரு மடங்காகலாம். சீனாவை சூழவுள்ள நாடுகளுடன், அமெரிக்கா இராணுவ ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. அதனால், சீனாவும் கடற்பலத்தை பெருக்குவதற்கு முனையலாம். சீனாவிடம் அணுவாயுதங்கள், உலகிற் பெரிய இராணுவம் எல்லாம் இருக்கலாம். ஆனால், வலுவான கடற்படை கிடையாது. அந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் பலமாகவே உள்ளது. உண்மையில், ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடு, இராணுவ பிரசன்னம் பற்றிய செய்திகள் அதிகளவு மிகைப் படுத்தப் பட்டவை. ஆசிய நாடுகளுடன் பொருளாதார நலன்களை விருத்தி செய்வதற்கப்பால், சீனாவின் நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ, ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை விட, இராணுவ உறவிலே அதிக நாட்டம் கொண்டுள்ளது.


---------------------------------------------
அமெரிக்க - சீன பனிப்போர் தொடர்பான முன்னைய பதிவு:
திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்

1 comment:

வலையுகம் said...

கவனமற்று ஊடகங்கள் கவனிக்க தவறிய விடயங்களை அழகாக தொகுத்துள்ளீர்கள்

இனி பழைய வரலாறுகளில் புதிய வடிவில் திரும்பும் பார்க்கலாம்