Sunday, September 25, 2011

அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஏழு )

அரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, இலங்கையில் 1953 ம் ஆண்டு ஏற்பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையில் நடந்த முதலாவது வர்க்கப் போராட்டம், இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. கொழும்பு, காலி முகத் திடலில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. சுமார் இரண்டு லட்சம் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில், இடதுசாரிக் கட்சிகள் தலைமை தாங்கின. அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, எதிர்கட்சிகள் பல்லின மக்களை திரட்டி இருந்தனர்.

அதே நேரத்தில் தான், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில், பண்டாரநாயக்கவும் அவரது விசுவாசிகளும் பிரிந்து சென்று, தனிக்கட்சி கண்டிருந்தனர். பண்டாரநாயக்க ஸ்தாபித்த சுதந்திரக் கட்சியும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது. புதிய கட்சியினர், ஆரம்பத்தில் தம்மை, ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளைப் போலக் காட்டிக் கொண்டனர். விரைவிலேயே அமெரிக்க "ஜனநாயக கட்சி" போன்று கொள்கைகள் மாறி விட்டிருந்தன. ஆனால், "சிங்கள தேசியவாதம்" கட்சியின் அடிநாதமாக விளங்கியது. 1953 ம் ஆண்டு, காலி முகத் திடல் பொதுக் கூட்டத்திலும், பண்டாரநாயக்க "சிங்கள தேசியத்தின் எழுச்சி" பற்றி மட்டுமே பேசினார். பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு, அரசியல்வாதிகளுக்கு தேசியவாதம் உதவுகின்றது.

கடந்த அறுபதாண்டுகளாக, சிங்கள-தமிழ் அரசியல்வாதிகள், மக்களுக்கு தேசியவாத வெறி ஊட்டுவதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தை பிளவு படுத்தியுள்ளனர். அன்று பண்டாரநாயக்க காட்டிய பாதையில், இன்று சீமான் வரையிலான தலைவர்கள் பலர் வெற்றிநடை போடுகின்றனர். காலிமுகத்திடல் பொதுக்கூட்டத்தில், "மக்களுக்கு வயிற்றுப்பாடு முக்கியமல்ல, மொழி மீதான பற்றும், இன மான உணர்வுமே முக்கியமானது." என்று பண்டாரநாயக்க ஆற்றிய உரை, இன்று தமிழ் தேசியவாதிகள் வாயிலும் எதிரொலிக்கின்றது. அன்று, உழைக்கும் மக்களின் எழுச்சியை, "சிங்கள இன எழுச்சியாக" காட்ட விரும்பிய பண்டாரநாயக்கவின் எண்ணம் ஈடேறவில்லை. ஆனால், சிங்கள தேசியவாதிகளுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிட்டியது. "கம்யூனிச அபாயம்" கண்டு அஞ்சிய இலங்கை அரசு, பொலிஸ் அடியாட்களை ஏவி விட்டு, தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கியது. முதலாளித்துவ நலன் பேணும் அரசு, சிங்கள பெருந்தேசியவாதிகளினதும், தமிழ் குறுந் தேசியவாதிகளினதும் ஒத்துழைப்புடன், இலங்கையின் முதலாவது வர்க்கப் போராடத்திற்கு முடிவு கட்டியது.

இடதுசாரிக் கட்சிகளின் அழைப்பை ஏற்று, நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் ஒற்றுமையாக வேலை நிறுத்தத்தில் குதித்ததால், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. 12 ஓகஸ்ட், ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட தினங்களில் அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களும் பூட்டப்பட்டிருந்தன. அரசு கவிழும் அபாயம் தோன்றினாலும், அது மிகைப் படுத்தப் பட்ட எதிர்பார்ப்பாகவே தோன்றியது. உண்மையில், கண்மூடித்தனமான வன்முறை பிரயோகித்து, சொந்த மக்களை கொலை செய்த அரசின் செயல் அதிர்வலைகளை தோற்றுவித்தது.

கொழும்பு முதல் காலி வரையிலான நகர்ப்புற பிரதேசங்கள் எங்கும், அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன. அரச பேரூந்து வண்டிகள் தாக்கப்பட்டன, ரயில் தண்டவாளங்கள் சேதமாக்கப் பட்டன. கலவரத்தை அடக்க கண்ணீர் குண்டுப் பிரயோகம் செய்தும் கட்டுப் படுத்த முடியாத பொலிஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரண்டு நாட்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமுற்றனர். 380 பேர் கைது செய்யப் பட்டனர். அரசாங்க திணைக்களத்தின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி ஒருவர் கூட பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனமுடைந்து போன பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஜோன் கொத்தலாவல, "இலங்கையில் இருந்து கம்யூனிசத்தை வேரோடு அழிப்பதே எனது இலட்சியம்." என்று பிரகடனம் செய்தார். இலங்கை அரசு அஞ்சிய, கம்யூனிச பூதம் உருவாவதற்கு காரணமாக அமைந்த, உழைக்கும் மக்களின் எழுச்சிக்கான பின்னணி என்ன?

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து, இலங்கைக்கு "சுதந்திரம்" கிடைப்பதற்கு முன்பிருந்தே, ஆளும் வர்க்கம் கம்யூனிச அபாயம் கண்டு அஞ்சியது. ரஷ்யாவில் வென்ற போல்ஷெவிக் புரட்சி சோவியத் யூனியன் ஸ்தாபித்த நாளில் இருந்தே, இலங்கையிலும் அதன் எதிரொலிகள் கேட்டன. முதலாவது பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் அபார வெற்றி, அரசின் அச்சத்தை அதிகரித்தது. இதனால், பிரிட்டனின் சம்மதத்துடன், இலங்கை அரசு சமூக நலன் பேணும் திட்டங்களில் முதலிட்டது. குறிப்பாக, அனைத்துப் பிரஜைகளுக்குமான இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்றனவற்றுடன்; அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியமும் வழங்கப் பட்டன. கடந்த அறுபதாண்டுகளாக இலங்கை மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் இவை. இத்தகைய சமூக நலன் பேணும் திட்டங்கள் இன்றைக்கும் சிறப்பாக செயற்படுகின்றன.

தேயிலை, ரப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களால் கிடைத்த அதிக லாபம் காரணமாக, இலங்கை அரசின் பொருளாதாரத் திட்டத்தில் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இலங்கை அரசு, ஒரு பக்கம் இலவச கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்து உழைக்கும் மக்களை திருத்திப் படுத்தியது. மறு பக்கம், குறைந்த அளவு வருமான வரி அறவிட்டு நடுத்தர வர்க்கத்தை திருப்திப் படுத்தியது. கார்ப்பரேட் வரியும் குறைவாக இருந்ததால், பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் லாபமடைந்தனர். சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களையும் திருப்திப் படுத்த, இலங்கை அரசினால் எவ்வாறு சாத்தியமானது? தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக விலை கிடைத்தது. 1952 ம் ஆண்டு, சந்தையில் விலை சரிந்தது. குறிப்பாக, செயற்கை இறப்பர் கண்டுபிடிக்கப் பட்டமை, இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முற்று முழுதாக பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் தங்கியிருந்த இலங்கைப் பொருளாதாரத்திற்கு இது மிகப் பெரிய அடியாகும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக, அரசுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று: கார்பரேட் வரி, வருமான வரி ஆகியனவற்றை அதிகரிப்பது. இரண்டு: அத்தியாவசிய பொருட்கள் மீதான மானியங்களை குறைப்பது. பெருந்தோட்ட உரிமையாளர்களான ஐரோப்பிய முதலாளிகள், வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினரதும் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாத அரசு, முதலாவது யோசனையை கைவிட்டது. என்ன இருந்தாலும், அரச நிர்வாகத்தில் இருப்பவர்களும் பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதிகள் அல்லவா? இலங்கை மக்களின் அத்தியாவசிய உணவான அரிசியின் மீது வெட்டு விழுந்தது. வருடாந்தம் 150 மில்லியன் ரூபாக்கள் அரிசிக்கான மானியமாக ஒதுக்கப் பட்டது. அது விலக்கிக் கொள்ளப்பட்டதும், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கலவரம் ஏற்படுவதும், அதனால் சாம்ராஜ்யங்கள் கவிழ்ந்துள்ளதையும் உலக வரலாறு நெடுக காணலாம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரிசி கேட்டு அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இலங்கை மக்களை, இன ரீதியாக பிரித்து, நீண்டதொரு இனப்போருக்குள் தள்ளி விட்ட சூழ்ச்சி மட்டுமே புதிது.

தொழிலாளர் இன, மத பேதங்களை கடந்து ஒன்று சேர்ந்து போராடிய நேரம், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்ட அரசு, சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டது. 1955 ம் ஆண்டு, நாட்டில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டுமென்று, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பொதுக் கூட்டம் குழப்பப் பட்டது. கூட்டத்தை குழப்பிய இனவாதப் பிக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை தாக்கியது மட்டுமல்ல, நகரில் இருந்த தமிழ், முஸ்லிம் கடைகள் மீதும் கல் வீசினார்கள். இலங்கையின் முதலாவது சிங்கள இனவெறி வன்முறையை, பொலிஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. என்ன இருந்தாலும், நாட்டை ஆள்வது ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் அல்லவா? இனவெறியர்கள் கம்யூனிஸ்டுகளை தாக்குவதை அவர் ஏன் தடுக்கப் போகிறார்?

இலங்கையின் மூன்றாவது பிரதமராக பதவி வகுத்த சேர். ஜோன் கொத்தலாவல, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளோடு ஒப்பிடத் தக்கவர். அத்தகைய ஆட்சியாளர் பற்றி, இலங்கை வரலாறு பற்றி கூறும் நூல்கள் அதிகம் பேசுவதில்லை. "சேர்.ஜோன் கொத்தலாவல இத்தனை வருடங்கள் பிரதமராக பதவி வகித்தார்." என்று ஒற்றை வரியில் அந்த தகவல் முடிந்து விடுகின்றது. தமிழ் தேசிய எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகளில் கூட அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை. அதற்குக் காரணம், வர்க்கப் பாசம். ஒரு உலகம் அறிந்த கம்யூனிச எதிர்ப்பாளரின் ஆட்சிக் காலத்தில் தான், "சிங்களம் மட்டும்" இயக்கம் வீறு கொண்டெழுந்தது. சிங்கள மக்களின் இனவுணர்வை தட்டி எழுப்பும் வகையில், உணர்ச்சிமயமாக பேசும் இனவாத அரசியலின் காலகட்டம் ஆரம்பமாகியது. தொன்னூறுகளில் சோஷலிச கட்டுமானம் உடைக்கப் பட்ட பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இனத்-தேசியவாத சக்திகள் முளைத்துக் கிளம்பின. இலங்கையைப் பொறுத்த வரையில் ஐம்பதுகளிலேயே அத்தகைய மாற்றங்கள் ஏற்படலாயின.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

6.ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5.ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4.மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Monday, September 19, 2011

ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஆறு)

இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்," என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, இலங்கைக்கு தன்னாட்சி வழங்கும் திட்டம் மெல்ல மெல்ல நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளது. கோல்புறூக், டொனமூர், சோல்பரி என ஆங்கிலேய பிரபுக்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழுக்கள், இலங்கைத் தீவுக்கென விசேடமான யாப்புகளை எழுதின. இந்த அரசியல் யாப்புகளின் பிரகாரம், "சிங்கள-தமிழ் மேட்டுக்குடிக்கு" ஆட்சியில் பங்கு பெறும் சந்தர்ப்பம் வாய்த்தது. 1948 ல் "சுதந்திரம்" கிடைப்பதற்கு முன்னரே, உள் நாட்டில் சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் அரசு செயற்படத் தொடங்கியிருந்தது. வெளிநாட்டு விவகாரம், இராணுவம், பெருந்தோட்டப் பொருளாதாரம் போன்ற துறைகளை மட்டும் பிரிட்டிஷ்காரர்கள் நிர்வகித்து வந்தனர். 1948 க்கு பின்னரும், நிலைமை பெருமளவு மாறவில்லை. புதிதாக பதவியேற்ற "சிங்கள அரசு", பிரிட்டிஷ் ஆளுநருடன் ஒத்துழைத்தது. ஆளுநர் மட்டுமல்ல, அரசியல் யாப்பு வரைந்த சோல்பரி பிரபு கூட அடிக்கடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருந்தார். மன்னராட்சி நிலவும் ஐரோப்பிய நாடுகளில், அமைச்சரவையும், அரச குடும்பமும் கூட்டுச் சேர்ந்து முடிவுகளை எடுப்பது போலத்தான் அன்றைய நிலைமை இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்தின் ஆரம்பமான, இரண்டாம் உலகப் போர் இலங்கை நிலவரத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. போர் ஆரம்பிக்க முன்னரே, "ஆசியாவில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்...." என்று, சிங்கள அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கத் தொடங்கி விட்டனர். பல காலமாக, சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும், '"யார் சிறந்த ஆங்கிலேய விசுவாசி?" என்பதைக் காட்டுவதில் போட்டி போட்டனர். அப்படி இருந்தும், ஆங்கிலேயர்கள் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். "பிரிட்டனின் எதிரி நாடான ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலை பெறும் எண்ணம் உள்ளதா?" என்ற சந்தேகம் அன்றைய சூழ்நிலையில் சாத்தியமானதே. இந்தியாவில், நேதாஜி ஜப்பானியரின் உதவியுடன் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு வந்தார். 1942 ம் ஆண்டு, பிரிட்டிஷ் காலனிகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகள் ஜப்பானியரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். இலங்கைத் தீவையும் ஜப்பானியர்கள் கைப்பற்றக் கூடிய அபாயம் தோன்றியது. கொழும்பிலும், திருகோணமலையிலும் குண்டுகள் வீசப் பட்டன. இருந்த போதிலும், இலங்கையின் ஆளும் வர்க்கம், பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரை, "ஏகாதிபத்தியப் போர்" என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். மலையகத்தில், இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று விளங்கின. போர் தொடங்கியவுடன், உலகச் சந்தையில் இரப்பரின் விலை அதிகரித்ததால், ரப்பர் ஏற்றுமதி காரணமாக, இலங்கைப் பொருளாதாரம் வளர்ந்தது. அதேநேரம், இடதுசாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. 1940 ல், மலையகத்தில் பொலிசாருடனான முறுகல்நிலை, தொழிலாளர் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இரப்பர் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் இடம்பெறலாம் என ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அதனால், உலகப்போரை காரணமாகக் காட்டி, பல இடதுசாரிகள் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். குறிப்பாக, சமசமாஜக் கட்சிப் பிரமுகர்கள், "போர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காக" சிறைப் பிடிக்கப் பட்டனர். சமசமாஜக் கட்சி தோழர்கள், சிறைச்சாலைக்கு சென்ற பின்னரும் சும்மா இருக்கவில்லை. கூட இருந்த கைதிகளுக்கும், காவலர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு ஊட்டினார்கள். ஒரு தடவை, சிறைக்காவலாளியின் ஒத்துழைப்புடன், சிறை உடைத்து தப்பித்து விட்டனர். தப்பியவர்கள் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. சிறை உடைப்பினால் ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் காலனிய அரசு, கண்ணில் பட்ட இடதுசாரிகளை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் தறுவாயில், உலக இடதுசாரி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரச்சினை, இலங்கையிலும் எதிரொலித்தது. சமசமாஜக் கட்சி ட்ராஸ்கியை பின்பற்றி நான்காம் அகிலத்தில் இணைந்து கொண்டது. இதனால் அதிருப்தியுற்ற ஸ்டாலினிசவாதிகள், "இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி" யை ஸ்தாபித்தனர். இவ்விரு கட்சிகளும், இன்றைக்கும் அதே கொள்கையுடன் தொடர்கின்றன. யாழ்ப்பாணத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல வரவேற்பிருந்தது. தமிழ் உழைக்கும் மக்கள், அதனை தமது கட்சியாக கருதினார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்திய வெகுஜன அமைப்பான, "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" யிலும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் ஊடுருவி இருந்தனர்.

சர்வதேச மட்டத்தில், ஸ்டாலினின் சோவியத் யூனியன், நேச நாடுகளின் அணியில் பிரிட்டனுடன் கூட்டுச் சேர்ந்தது. சோவியத் சார்பு நிலையெடுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, "பாசிசத்திற்கு எதிரான போர் நீதியானது" என்று கூறி வந்தது. இதனால், பல நூற்றுக் கணக்கான தமிழ் தலித் இளைஞர்கள், இலங்கை காலனிய இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றனர். உற்சாகமாக கட்சிக்கு பாடுபட்ட இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்ததால், கட்சியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தில், உயர்சாதி தமிழர்கள் மிகவும் அரிதாகவே சேர்ந்திருந்தனர். வேளாள நிலவுடமைச் சமூகத்தில், இராணுவத்தில் பணியாற்றுவது கீழ்த்தரமாகக் கருதப் பட்டது. பிற்காலத்தில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த பொழுது, "உயர்சாதி மனப்பான்மையினால் ஏற்பட்ட பின்னடைவு" பெரிதும் உணரப் பட்டது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பொறுத்த வரையில், இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும். ஆசியாக் கண்டத்தில் ஆங்கிலேயரின் மிகப்பெரும் குடியேற்ற நாடான, அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் கப்பல்கள் யாவும், இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று செல்வது வழக்கம். இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், பிரிட்டனால் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஓரிரு ஆண்டுகளில், சிங்கப்பூரும், மலேசியாவும், ஜப்பானால் கைப்பற்றப் பட்டன. அந்த அவமானகரமான தோல்வியின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. ஜப்பான் சரணாகதி அடையும் வரையில், தூர கிழக்காசியாவுக்கான இராணுவ கட்டளைப் பணியகமாக இலங்கை திகழ்ந்தது. போர்க்களத்திற்கு அனுப்பப்படும் படையினரை பராமரிக்கும் மையமாகவும் இலங்கையை தேர்ந்தெடுத்தார்கள். இதனால், நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அன்று இரண்டாம் உலகப்போருகாக்காக கட்டப்பட்ட மருத்துவமனைகள் இன்றைக்கும் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது, இலங்கையில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள், நீண்ட காலமாக இரகசியமாக வைக்கப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகருக்கு அருகாமையில் உள்ள, இரத்மலானை விமான நிலையம், ஜப்பானிய விமானக் குண்டுவீச்சினால் சேதமடைந்தது. விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கட்டிடங்கள் நாசமடைந்த செய்தி மட்டுமே வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில், அன்றைய தாக்குதலில் (5 ஏப்ரல் 1942) முப்பதுக்கும் அதிகமான பிரிட்டிஷ் போர் விமானங்கள் நாசமாக்கப் பட்டன! நான்கு நாட்கள் கழித்து, திருகோணமலை துறைமுகம் தாக்கப்பட்டது. கேமிஸ், வம்பயர் என்ற இரண்டு யுத்தக் கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டன. சீனன்குடா எண்ணெய்க் குதம் தீப்பற்றி எரிந்தது. உண்மையில், பிரிட்டிஷ் இலங்கையின் விமானப் படை, கடற்படை என்பன பெருமளவு அழிக்கப்பட்டன. இலங்கையில் பிரிட்டிஷ் படைகள் பலவீனப் பட்டிருக்கும் தகவல்கள் வெளியே கசிந்தால், எதிரிக்கு சாதகமாக அமைந்து விடும். நிலைமையை பயன்படுத்தி, இலங்கை அரசியல் தலைவர்கள் யாராவது ஜப்பானியருக்கு அழைப்பு விடுப்பார்கள், என்று பிரிட்டிஷ் காலனிய அரசு அஞ்சியது. இதைத் தடுப்பதற்காக, மந்திரி சபையில் இருந்த இலங்கையருக்கு அதிக அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. இலங்கை ஆட்சியாளர்களும், பிரிட்டனுக்கு விசுவாசமான சமர்த்துப் பிள்ளைகள் என்பதை நிரூபித்தார்கள். உண்மையில், இலங்கைக்கு வழங்கப்பட்ட "சுதந்திரம்", மேற்கத்திய விசுவாசிகளான மேட்டுக்குடியினருக்கு கொடுக்கப்பட்ட பரிசாகும்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

Friday, September 16, 2011

ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஐந்து)
இன்று பெரும்பாலான மக்கள், மொழி சார்ந்த அடையாளத்தை, "இனம்" என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால், இலங்கைத் தீவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், மொழி அடையாளம் பிரதானமாக உணரப்படவில்லை. அதற்கு காரணம், காலனிய ஆட்சியாளர்களின் ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. பாராளுமன்றம், அரச அலுவலகங்கள், நீதிமன்றங்கள், எங்கும் ஆங்கிலமே கோலோச்சியது. ஆரம்ப பாடசாலை முதல், பல்கலைக்கழகம் வரையில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்ட வரையில் இது தான் நிலைமை. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களம், அல்லது தமிழ் பேசினார்கள். ஆனால், சுதேசி மொழிகளுக்கு அரச அந்தஸ்து வழங்கப்படாமல், உழைக்கும் மக்களின் மொழியாக இழிவுபடுத்தப் பட்டது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றிய மேட்டுக்குடியினரும் அவ்வாறு தான் கருதி வந்தனர். இது போன்ற மேட்டுக்குடி மனப்பான்மையில் சிங்களவர், தமிழர் பேதம் இருக்கவில்லை.

இலங்கை இடதுசாரிகளால், நாடு தழுவிய பாட்டாளி மக்களின் எழுச்சியை உருவாக்க முதலாவது தடையாக இருந்தது, மொழி தான். இங்கிலாந்தில் கல்வி கற்ற, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூட, உழைக்கும் மக்களுக்கு புரியாத ஆங்கிலத்திலேயே அரசியல் பேசினார்கள். பழமைவாதத்தில் ஊறிய உள்நாட்டு மக்கள், மார்க்சியத்தை மேலைத்தேய இறக்குமதியாக பார்த்தார்கள். இதனால், சிங்கள பேரினவாதத் தலைவர்கள், இலகுவாக இடதுசாரிகளைத் தாக்க முடிந்தது. "இடதுசாரிகள் நாஸ்திகர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், கோயில்களை, விகாரைகளை இடித்து தள்ளி விடுவார்கள்." இவ்வாறான பிரச்சாரம் மத நம்பிக்கை கொண்ட மக்களை வெகுவாக பாதித்தது. ஆனால், இடதுசாரிகளை தாக்கிய சிங்களத் தலைவர்கள் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தனர். "கடவுள் நம்பிக்கையற்ற இடதுசாரிகளை" கண்டு பயந்த பெரும்பான்மை மக்கள், சிங்கள இனவாதம் பேசிய உதிரி அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தார்கள். 1947 பொதுத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் பலர், சிங்கள-பௌத்த இனவாதிகள். அவர்களின் நோக்கம்: "சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவது. பௌத்த மதத்தின் கடந்த கால மேன்மையை மீட்டெடுப்பது." சுருக்கமாக, சிங்கள-பௌத்த தேசியவாத கருத்தியல் மூலம், சாமானியர்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். கிட்டத்தட்ட இதே போன்ற அரசியல், தமிழ் பேசும் வடபகுதியில் நடந்து கொண்டிருந்தது. "ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு?" என்பன போன்ற கோஷங்கள், சிங்கள இனவாதிகளை நகல் எடுத்தது போன்று அமைந்திருந்தன.

தேசத்தில், "சிங்களத்தை, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமா?" என்ற விவாதம் கூட ஆங்கில மொழியில் தான் நடந்து கொண்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆங்கிலத்தில் தமது உரையை நிகழ்த்த வேண்டியிருந்தது. விவாதங்களை மொழிபெயர்க்கும் வசதி இல்லை என்ற குறைபாடு காரணமாக கூறப்பட்டது. பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்பது, சாமானிய மக்களுக்கு புரியவில்லை. இனவாத அரசியல்வாதிகள், மக்களுக்கு கொழும்பு அரசியலை திரித்துக் கூறிக் கொண்டிருந்தனர். இதனால், ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் மத்தியில், இனவாதக் கருத்துக்கள், சாதாரண அரசியல் கருத்துகளைப் போன்று பதிந்து விட்டன. இலங்கைப் பாராளுமன்றம் மட்டும், காலனியவாதிகளின் எச்சமாக விளங்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும், பல அரச அலுவலகங்களில் பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டிருந்தது. சாமானிய மக்களைப் பொறுத்த வரையில், சுதந்திரத்தால் ஏற்பட்ட மாற்றம் எதையும் கண்கூடாக காணவிலை. இலங்கை இன்னமும் பிரிட்டிஷ்காரர்கள் ஆள்கின்றார்களா, என்ற ஐயம் உண்டாகும் வகையில், எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. ஆளும் வர்க்கத்தினர், கறுப்பு - ஆங்கிலேயர்கள் போன்று நடந்து கொண்டனர். பௌத்த-இந்து பண்பாட்டுக்கு மாறாக, மது பான விருந்துகளும், குதிரைப் பந்தயங்களும், அரசியல் தலைவர்களின் விருப்பமான பொழுதுபோக்குகளாக இருந்தன.

இனம் என்ற சொல்லாடலின் போதாமைகள் :

இலங்கையின் அரசியல் யாப்பு தயாரித்த, டொனமூர் குழுவும், சோல்பரி குழுவும், "இனம்" என்பதை, மொழி அடிப்படையில் வரையறுக்கவில்லை. இந்திய மரபுவழி சார்ந்த சொல்லான "ஜாதி", இனம் என்று மொழிபெயர்க்கப் பட்டது. குறிப்பாக, பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ஜாதி என்றொரு பிரிவு உண்டு. இந்தியாவில், அந்த இடத்தில் சாதிப் பெயரை எழுதுவார்கள். ஆனால், இலங்கை நிர்வாகத்தில், சாதிக்கு பதிலாக, "சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், பறங்கியர், ஐரோப்பியர்...." இவ்வாறான பெயர்களை குறித்துக் கொள்வார்கள். இலங்கையர் சமூகத்தை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ளடக்கும் செயல்முறை, டொனமூர் யாப்பு காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் தான் அமைத்திருந்தனர். அன்று ஆங்கிலேயர்கள், இலங்கை மக்களை எவ்வாறு பிரித்து வைத்தார்களோ, இன்றைக்கும் அதே பிரிவினை தொடர்வதைப் பார்க்கலாம். இன்று முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் தம்மை தனியான தேசிய இனமாக கருதிக் கொள்கிறார்கள் என்றால், அதற்கான எண்ணக்கரு ஆங்கிலேயர் காலத்திலேயே விதைக்கப் பட்டு விட்டது.

இந்திய வம்சாவழித் தமிழருக்கும், இலங்கைத் தமிழருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கவில்லை. இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப் படுத்திய யாழ் - வேளாள மையவாதிகள், மலையகத் தமிழர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதி ஒதுக்கினார்கள். தமிழர்களுக்கு மத்தியில் நிலவிய சாதிப் பிரிவினையை, சிங்களப் பேரினவாதம் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. இலங்கையின் மொத்த சனத்தொகையில், இன்றுள்ள மலையகத் தமிழரின் விகிதாசாரத்தை விட, அன்றிருந்த விகிதாசாரம் அதிகமாக இருந்தது. இந்திய தோட்டத் தொழிலாளரை நாடற்றவராக்கிய, பிரஜாவுரிமை சட்டம் காரணமாக, மலையகத் தமிழரின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்தது. பிரஜாவுரிமை இழந்த தமிழர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர். இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டது. வரப்போகும் ஆபத்தை உணர முடியாதவாறு, இலங்கைத் தமிழ்த் தலைவர்களின் கண்களை சாதி வெறி மறைத்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தேசியத் தலைவர்கள், இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு துணை போன சாதி அபிமானிகள், எதிர்காலத்தில் ஈழத்தமிழர் மீதான இனவெறி அடக்குமுறைக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தனர்.

1943 ம் ஆண்டு, வட இலங்கையில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களின் அமைப்பொன்று உருவாகி இருந்தது. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" என்ற அமைப்பானது, தாழ்த்தப்பட்ட தமிழர்களை தனி இனமாக அங்கீகரிக்குமாறு கோரி வந்தது. அரசியல் யாப்பு எழுதுவதற்கு முன்னர், சோல்பரி குழுவினர் இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் சென்றனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபை பிரதிநிதிகள், சோல்பரி குழுவினரை யாழ்ப்பாணத்தில் தலித் மக்களின் நிலைமையை பார்வையிட வருமாறு அழைத்தனர். உயர்சாதி வெறியர்களின் எதிர்ப்பை மீறி, தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை நேரில் கூட்டிச் சென்று காட்டினார்கள். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் யாப்பில் எழுதப் படுவதை, கொழும்பு ஆளும்வர்க்கத்தில் செல்வாக்கு மிக்க, ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தடுக்க முடிந்தது. பொன்னம்பலம் போன்ற சாதிமான்கள் பிரேரித்த, பழமைவாத தேசவழமை சட்டம் சோல்பரி யாப்புக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த அறுபதாண்டுகளாக, மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் கூட தேச வழமை சட்டத்தில் கை வைக்கவில்லை. இன்றைய தலைமுறைக்கு, "தாலிபான் சட்டம்" என்றால் இலகுவில் புரியக் கூடிய தேச வழமை சட்டம், உயர்சாதி நிலவுடமையாளர்களை பாதுகாக்கின்றது. பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது. இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த விசேட சட்டம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆங்கிலேயரின் இறுதிக் காலத்தில், தெற்கில் பௌத்த மத மறுமலர்ச்சியும், வடக்கில் சைவ மத மறுமலர்ச்சியும் தோன்றியது. பௌத்த மத மறுமலர்ச்சிக்கு, ஒல்கொட் போன்ற ஆங்கிலேயர்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தை, சிங்களத்தில் மொழிபெயர்த்தது மட்டுமல்ல, பண்டைய சரித்திரத்தில் "சிங்களவர்-தமிழர் பிரச்சினையை" இடைச்செருகல் செய்தனர். சிங்கள-பௌத்த கருத்தியலை உருவாக்கிய அநகாரிக தர்மபால, பிற்காலத்தில் சிங்கள மகாசபை போன்ற அரசியல் கட்சிகளுக்கு குருவாக திகழ்ந்தார். அதே போல, சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர், தமிழ் பழமைவாதிகளின் குருவானார். தெற்கில் "பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி" சிங்கள இனவாதத்தின் அத்திவாரமாக விளங்கியது. அதனைப் பின்பற்றி, வடக்கில் "சைவத்-தமிழ் மறுமலர்ச்சி" தமிழ் இனவாதத்திற்கு அடிக்கல் நாட்டியது.

பௌத்த மதம், சிங்களவர்களை நிறுவனமயப் படுத்த சிறந்ததாக விளங்கியது. இந்து மதம், (அல்லது சைவ மதம்) இன்று வரை சாதியமைப்பை நிராகரித்த மதமல்ல. அதற்கு மாறாக, பிராமணீயத்தை எதிர்த்து உருவான பௌத்த மதம், மேலெழுந்தவாரியாக சாதி அமைப்புக்கு எதிரானது. இருப்பினும், சிங்கள- பௌத்த மடாலயங்கள், சாதிவாரியாக பிரிந்துள்ளன. இந்த வேறுபாடு வெளித்தெரியா வண்ணம், பௌத்த மதம், சாதி கடந்து மக்களை ஒன்றிணைத்தது. இதே நேரம், வடக்கில் தமிழர்கள், தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி தோன்றும் வரையில் காத்திருக்க நேர்ந்தது. ஐம்பதுகளில், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தின் எதிர்வினையாக, தமிழ்த் தேசியக் கருத்தியல் வலுப்பெற்றது. அது வரையில், தமிழர்கள் தம்மை தனியான இனமாக அடையாள படுத்துவதை விட, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக அடையாள படுத்திக் கொள்ளவே விரும்பினார்கள். தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தமிழகத்து திராவிட அரசியலை முன் மாதிரியாகக் கொண்டு தான் உருவாக்கப் பட்டது. தமிழீழ ஆயுதக் குழுக்கள் தோன்றும் வரையில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் உரைகள் ஈழத் தமிழ் மக்களை கவர்ந்திழுத்தன.

இஸ்லாமிய மதராசாக்களில், அரபி மொழியும், திருக் குர் ஆனும், கற்பிக்கப் படுவதைப் போன்று, பௌத்த சங்கங்கள் நடத்திய கிராமிய பாடசாலைகளில், சிங்களமும், பௌத்த மதக் கல்வியும், போதிக்கப் பட்டன. ஆங்கிலேய அரசு, கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பாடசாலைகளில், முழுக்க முழுக்க ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. சுதேசி மொழிகளான சிங்களமும், தமிழும் புறக்கணிக்கப் பட்டன. சில பணக்கார பௌத்த சங்கங்கள், ஆனந்தா கல்லூரி போன்ற தனியார் பாடசாலைகளை உருவாக்கின. இதே போன்ற தோற்றப்பாட்டை, தமிழர் பகுதிகளிலும் காண முடியும். குறிப்பாக, யாழ். இந்துக்கல்லூரி, "சைவத்தையும், தமிழையும்" வளர்ப்பதற்காக கட்டப்பட்டது. உயர்சாதி வேளாளர்களின் அமைப்பு அந்த பள்ளிக்கூடத்தை நிர்வகித்ததால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்கவில்லை. பிற்காலத்தில், பாடசாலைகள் எல்லாம் அரசுடமையாக்கப் பட்டன. அதற்குப் பிறகு தான், இந்துக் கல்லூரியில் அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். இன்றைக்கும் கூட, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிங்கள தேசியத்தின் கோட்டையாக விளங்குவது போல, யாழ் இந்துக் கல்லூரி தமிழ் தேசியத்தின் கோட்டையாக உள்ளது.

பௌத்த சங்கங்கள் நடத்திய, கிராமியப் பாடசாலைகளில் சிங்களம் கற்பித்த ஆசிரியர்கள், காலனிய அடிவருடிகளின் ஆட்சி மாற வேண்டும் என விரும்பினார்கள். இவர்களோடு, ஆயுர்வேத மருத்துவர்களும் சிங்கள தேசியவாத கருத்தியலோடு உடன்பட்டார்கள். உண்மையில், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியை, மகாவம்ச பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக காட்டுவது மோசடியாகும். சிங்கள பேரினவாதிகள் நிறுவத் துடிக்கும் தவறான கருத்தை, தமிழ் தேசியவாதிகளும் பரப்பி வருவது விசனத்திற்குரியது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களை, சிங்கள ஆசிரியர்களும், ஆங்கில மருத்துவர்களை, ஆயுர்வேத மருத்துவர்களும் போட்டியாக கருதியமை, ஒரு பொருளாதாரப் பிரச்சனை. காலனிய ஆட்சியின் பலனாக உள்நாட்டு உற்பத்திகள் நலிவடைந்தன. சிங்கள மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் போன்ற பிரிவினர், தமது வர்க்க நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக சோஷலிசப் பொருளாதாரத்தை முன் மொழிந்த மார்க்சியர்களை யாருக்கும் பிடிக்கவில்லை. "கடவுள் மறுப்பாளர்கள்" என்று பௌத்த பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். "போல்ஷெவிக் படுகொலையாளர்கள்" என்று ஆங்கிலேயர்கள் வெறுத்தார்கள். அத்தகைய பின்னணியில், பண்டாரநாயக்க போன்றோர் நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பண்டாரநாயக்கவுக்கு பதிலாக, இலங்கை கம்யூனிசக் கட்சி ஆட்சி அமைத்திருந்தால், பிரிட்டன் இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்திருக்கும். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஏற்பட்ட இரத்தக்களரி இலங்கையில் ஏற்பட்டிருக்கும். பிரிட்டனைப் பொறுத்த வரையில், சிங்களவர்களும் தமிழர்களும் இன்னும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும் பரவாயில்லை. ஆனால், அடுத்த நூறாண்டுகளுக்காவது மார்க்சியவாதிகள் அதிகாரத்திற்கு வர விடக்கூடாது. இன்றைக்கும், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள், சிங்கள பேரினவாதிகள், தமிழ் தேசியவாதிகள், "கம்யூனிச எதிர்ப்பாளர்கள்" என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைவதைக் காணலாம்.

(தொடரும்)

Thursday, September 15, 2011

மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி


[சிங்களப் பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்] (பகுதி : நான்கு)

"மார்க்சியர்கள் வன்முறை பிரயோகிக்க கிளம்பினால், எமது ஐக்கிய தேசியக் கட்சி, ஒரு உதைக்கு இரண்டு உதை, ஒரு அறைக்கு இரண்டு அறை என்ற ரீதியில் பதிலடி கொடுக்கும்." - ஜே.ஆர். ஜெயவர்த்தன. (1948, நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிய கட்சிகளின் வெற்றி குறித்து தெரிவித்த கருத்துக்கள்.)
இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், தீவிர வலதுசாரி இளைஞராக காட்டிக் கொண்ட ஜெயவர்த்தன, வயது முதிர்ந்து ஜனாதிபதியான பின்னரும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அன்று அவர் பெரிதும் எதிர்பார்த்த "மார்க்சியவாதிகளின் வன்முறைக்கு" பதிலாக, முப்பது வருடங்களுக்கு பிறகு "தமிழர்களின் வன்முறையை" எதிர்நோக்கி காத்திருந்தார். "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்." என்று தமிழரை நோக்கி கர்ஜித்த வாசகம் இன்றும் பலரால் நினைவுகூரப் படுகின்றது. இருப்பினும், ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களப் பேரினவாதிகளின் கைகளில் ஆட்சி மாறிய காலத்தில், தமிழ் தேசியவாத இயக்கம் முளை விடவில்லை. அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் மனங்களில், அவ்வாறான சிந்தனை இருந்திருக்குமா என்பதே சந்தேகம். அன்றிருந்த நிலையில், சிங்கள பேரினவாதத்தின் முதன்மையான எதிரி மார்க்சியமாக இருந்தது.

நாடு எதிர்நோக்கியிருக்கும் மார்க்சிய அபாயத்தை தடுப்பதற்காக, சேர். ஜோன் கொத்தலாவல தலைமையில் ஒரு பாஸிச துணைப்படை அமைக்கப்பட்டது. இந்தியாவில் இந்துவெறி ஆர்எஸ்எஸ் உருவாக்கிய தொண்டரணி போன்று, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணி மாற்றப்பட்டது. கட்சியின் வர்ணமான பச்சை நிற சீருடை அணிந்த வாலிபர்கள், தேசத்திற்கும், கட்சிக்கும் விசுவாசமாக இருப்பத்தாக உறுதிமொழி எடுத்தனர். இராணுவ நெறிமுறைகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட இளைஞர் அணியின் நோக்கம், "கம்யூனிச புரட்சியாளர்களை எதிர்த்து போராடுவது" என்ற உண்மையை ஐதேக தலைவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். சிங்கள மேட்டுக்குடியில் பிறந்த சேர் ஜோன் கொத்தலாவல, கம்யூனிச எதிர்ப்பாளரும், மேலைத்தேய விசுவாசியுமாவார். இந்தோனேசியாவில் நடந்த பாண்டுங் மகாநாட்டில், "காலனியத்தை எதிர்க்கும் மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகளின் படுகொலைகளை எதிர்ப்பதில்லை." என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் கைமாற்றிய ஆட்சியுரிமையை பெற்றுக் கொண்ட இலங்கையருக்கு பொதுவான அம்சம் ஒன்றிருந்தது. தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூறுவது போல, ஆங்கிலேயர்கள், "தமிழரை புறக்கணித்து விட்டு சிங்களவர்களிடம்" ஆட்சியை ஒப்படைக்கவில்லை. சொத்துடைய, ஆங்கிலேய கல்வி கற்ற, உயர்குடிப் பிறப்பாளர்களிடம், இலங்கையின் "சுதந்திரம்" கையளிக்கப் பட்டது. இதற்கு ஆதாரம் தேடி வெகு தூரம் அலையத் தேவையில்லை. இலங்கைக்கான யாப்பு எழுதிய டொனமூர் குழுவினர், அத்தகைய பிரிவினரை தான் ஆளுவதற்காக தெரிந்தெடுத்தார்கள். சுதேசி ஆளும் வர்க்கத்தில், சிங்களவர்களோடு, தமிழர்களும் இருந்தனர். இவர்கள் அனைவருமே சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய, படித்த, நிலவுடமை சமூகத்தில் இருந்து வந்தவர்கள். ஆளும் வர்க்கத்தின் உள்ளே தோன்றிய "சிங்கள-தமிழ் பாகுபாடு" மொழி அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. மாறாக அது இனப் பாரம்பரியம் சார்ந்தது. ஆயினும், நாட்டுப்புற மக்கள் சிங்களம், அல்லது தமிழ் மட்டுமே பேசினார்கள். தேர்தல் ஜனநாயகத்தில், மொழி அடிப்படையில் வெகுஜன அரசியல் செய்வது தவிர்க்க முடியாமல் போனது.

இலங்கை ஆட்சியாளர்களின் "மார்க்சிய வெறுப்புக்கு" காரணம், 1947 ல் நடந்த, இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் ஆகும். சோல்பரி யாப்பு, இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் சர்வசன வாக்குரிமை அளித்தது. பெருந்தோட்ட பயிர்ச் செய்கை காரணமாக கொண்டு வரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளருக்கும், வதிவிட உரிமையைக் காட்டி பிரஜாவுரிமை கிடைத்தது. அவர்கள் மத்தியில் மார்க்சியக் கட்சிகள் வேலை செய்திருந்த படியால், பெருமளவு தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டன. 1947 ல் நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் பொழுது, ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அரச ஊழியர் கொல்லப்பட்டார். இதன் பிறகு, வட மாகாணத்திலும் ஆதாரவாளர்கள் பெருகினர். இவற்றை விட, ஆட்சியாளர்களை அதிகம் கிலி கொள்ள வைத்த விடயம், சனத்தொகைப் பெருக்கம் அதிகமுள்ள மாகாணங்களில் வாழும் வாக்காளர்களின் தெரிவு. நாட்டிலேயே அதிக சனத்தொகை கொண்ட, கொழும்பை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், மார்க்சிய கட்சிகளுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. பல்லின மக்கள் வாழும், தொழிற்துறை வளர்ச்சியடைந்த கொழும்பு நகர தொழிலாளர் வர்க்கம் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் இலகுவில் ஈடுபட்டன. மேலும், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் வந்த காலப்பகுதியில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. அத்தகைய சூழ்நிலையில், மார்க்சிய வர்க்கப் போராட்டத்தின் அவசியம் உணரப்பட்டது.

1948 ம் ஆண்டு, இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது . ஆனால், 1947 லிலேயே, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 95 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தது 80 ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்த்தார்கள். ஆயினும், தேர்தல் முடிவுகள் ஆளும் வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது. ஐதேக வுக்கு 42 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. மார்க்சியக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சிக்கு 10, கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, போல்ஷெவிக் லெனினிஸ்ட் கட்சிக்கு 5, என்ற அடிப்படையில் ஆசனங்கள் கிடைத்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத, டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அரசு, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேரம் பேசியது. குறிப்பாக வட மாகாணத்தில் 7 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டது. அதன் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு தொழிற்துறை, மீன்வள அமைச்சு வழங்கப் பட்டது. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், சிங்கள பேரினவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் கூட்டுச் சேர்ந்து அரசமைக்கும் அளவிற்கு, இரண்டு சக்திகளுக்கும் மார்க்ஸியம் பொது எதிரியாக இருந்துள்ளது.

சிங்களப் பேரினவாதிகள் மட்டுமல்ல, தமிழ் குறுந் தேசியவாதிகளும் மார்க்சியத்தை வெறுப்பதற்கு வலுவான சமூகக் காரணம் உண்டு. அன்றைய தமிழ்த் தலைவர்கள், "தமிழ் இனவுணர்வின்" அடிப்படையில் கட்சி கட்டவில்லை. மாறாக, தமிழ் காங்கிரஸ் காரர்கள் மத்தியில் சாதிய உணர்வே மேலோங்கியிருந்தது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தருகிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான குமாரசாமியை, ஒரு தடவை மாட்டுச் சவாரி போட்டிக்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். போட்டியில் வென்றது, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன். சம்பிரதாயப் படி, வென்றவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய குமாரசாமி, மாட்டுக்கு மாலை அணிவித்தார். அன்றைய தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், தமிழ் பேசும் தலித் மக்களை, மாடுகளை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். தீண்டாமை நிலவிய சமூகத்தில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தோர் "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" என்ற அமைப்பை ஸ்தாபித்தார்கள். அந்த அமைப்பை சேர்ந்த பலர் "இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி" உறுப்பினர்களாக இருந்தனர். தமிழ்க் காங்கிரசில் இருந்து, செல்வநாயகம் தலைமையில் பிரிந்த குழுவினர் உருவாக்கிய "தமிழரசுக் கட்சி" யில் தான், நடுத்தர வர்க்க தலித் பிரதிநிதிகள் உள்வாங்கப் பட்டனர். தந்தை செல்வா "அரசியல் தீர்க்கதரிசனத்துடன்" எடுத்த முன் முயற்சியால், தமிழ் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டப் பாதை, தமிழ் தேசியத்தை நோக்கி திசை மாற்றப் பட்டது.

"இலங்கை சர்வதேச கம்யூனிச பூதத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது." இந்த செய்தியை, அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க, இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார். முன்னாள் காலனிய ஆட்சியாளர்களும், "இன முரண்பாடுகளை விட, கம்யூனிச பூதம் ஆபத்தானது" என்று நம்புகிறவர்கள் அல்லவா? அதனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் அதிகாரப் பரவலாக்கலுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டது. அன்றைக்கு ஏற்பட்ட இலங்கை தொடர்பான நிலைப்பாடு, இன்றைக்கு மேற்கத்திய நாடுகளின் வெளிவிவகார கொள்கையாக நீட்சி பெற்றுள்ளது. 1953 ம் ஆண்டு, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களின் நாடளாவிய ஹர்த்தால் வெற்றிகரமாக நடந்தது. தொழிலாளர் போராட்டத்தை, புரட்சியை நோக்கி வழிநடாத்த தவறியிருந்தாலும், மார்க்சியக் கட்சிகளின் வலிமையை அரசு உணர்ந்து கொண்டது. அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கிய மானியம் நிறுத்தப் பட்டதால், மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அடுத்து வந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மண் கவ்வியது. மார்க்சியக் கட்சிகள் ஹர்த்தாலின் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள தவறியிருந்தன. சிங்கள தேசியவாதத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி, அந்த வெற்றிடத்தை நிரப்பியது.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:


3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Monday, September 12, 2011

உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சிமாற்றம்]
(பகுதி : மூன்று)


1930 ல், அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, இலங்கையை எந்தளவு பாதித்துள்ளது? உலக பொருளாதார பிரச்சினைக்கும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் இடையில் தொடர்புண்டா? எப்போதும், இனம், தேசியம், என்று ஆழமாக அலசும் அறிஞர்கள், பொருளாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் காரணம் என்ன? இலங்கை இனப்பிரச்சினைக்கான நதிமூலம் குறித்து, சிங்கள-தமிழ் தேசியவாதிகள் என்ன கருதுகிறார்கள். அவர்களிடமே அந்தக் கேள்வியை கேட்போம்.


இலங்கை இனப்பிரச்சினையின் மூல காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு, ஒரு தமிழ் தேசியவாதியின் பதிலின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருக்கும்.

"சிங்களவர்கள் பிறப்பிலேயே இனவெறியர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான தமிழ் விரோத கலவரங்களே அதற்கு சாட்சியம். மகாவம்சம், துட்டகைமுனு காலத்தில் இருந்து தமிழர் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்."

இதே கேள்விக்கு, ஒரு சிங்கள தேசியவாதியின் பதில் எவ்வாறு அமைந்திருக்கும்?

"தமிழ் பிரதேசத்தில் சிங்களவர் எவரும் வாழமுடியாத அளவிற்கு, தமிழர்கள் இனவெறியர்கள். இந்துக்களான தமிழர்கள், இந்திய வல்லரசின் துணையோடு, சிங்கள-பௌத்த சிறுபான்மை இனத்தை அடக்க நினைக்கின்றனர்."

இரண்டு மொழித் தேசியவாதிகளும்,"ஏகாதிபத்தியம்" என்ற சொல்லை திரிபு படுத்தி பாவித்து வந்துள்ளனர். தமிழர்களைப் பொறுத்த வரையில், "சிங்கள ஏகாதிபத்தியமே உலகில் மிகவும் கொடுமையானது" என்கின்றனர். சிங்களவர்களைப் பொறுத்த வரையில், "இந்திய ஏகாதிபத்தியம் சிங்களவர்களின் விடுதலையை நசுக்கி வருகின்றது." இந்த தேசியவாத சொல்லாடலுக்கு நிகரான மார்க்சிய அர்த்தம் தேட முடியாது. இலங்கை வரலாற்றில், முதன் முறையாக பண்டாரநாயக்க "இந்திய ஏகாதிபத்தியம்" குறித்த கொள்கையை வகுத்திருந்தார். ஆக்ஸ்பெர்ட்டில் கல்வி கற்ற மேட்டுக்குடி புத்திஜீவி அல்லவா? அவரது காலகட்டத்தில் தான், ஐரோப்பாவில் "அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தைக் காக்கும்" பாஸிச-தேசியவாத கொள்கைகள் பிரபலமாகியிருந்தன. அவற்றை இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தால், அரசியல் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டிருப்பார். அப்போது இங்கிலாந்தில் கல்வி கற்ற எதிர்கால மார்க்சிய தலைவர்கள், மிகத் தாமதமாகவே இலங்கைக்கு மார்க்சியத்தை கொண்டு வந்தார்கள். பண்டாரநாயக்க அந்த இடைவெளிக்குள் நுழைந்து, "வெகுஜன அரசியலை" (Populism) அறிமுகம் செய்தார்.

இந்தியாவுடனான "தொப்புள்கொடி உறவு", சிங்கள பேரினவாதத்தின் இருப்பையும் நியாயப் படுத்தி வந்துள்ளது. "தமிழ்நாட்டுக்கு வரும் சிங்களவர்களை அடிப்பது நியாயம்." என்று அரை வேக்காட்டு அரசியல் பேசும் பேர்வழிகள், இனக்குரோத நெருப்புக்கு எண்ணை வார்க்கின்றனர். ஏனெனில், இனப்பிரச்சினையின் கரு, பரஸ்பர புரிந்துணர்வின்மையால் தான் உருவானது. தமிழகத் தமிழர்கள் பலர் சிங்களவர்களை நேரில் பார்த்ததில்லை. அதே போல, தமது வாழ்க்கையில் ஒரு தடவை கூட தமிழர்களை கண்ணால் கண்டிராத சிங்களவர்கள் ஏராளம். விவரம் அறியாத மக்களிடம் சென்று, மற்ற இனத்தை பற்றி எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை கூறினாலும் நம்புவார்கள். ஈழத் தமிழர்கள், மொழி காரணமாக தமிழ்நாட்டுடன் குறைந்தளவேனும் உறவுகளைப் பேணி வந்துள்ளனர். ஆனால், சிங்களவர்களுக்கு அத்தகைய கலாச்சார பிணைப்பு ஏதுமில்லை. அசோக சக்கரவர்த்தியின் காலத்திற்குப் பின்னர், இந்தியாவிடம் இருந்து தொடர்புகளை துண்டித்துக் கொண்ட பௌத்த மதம், தனிமைப் படுத்தப்பட்ட தீவான இலங்கையில் நிலை கொண்டிருந்தது. அதனால், சமய ரீதியான பிணைப்பும் இருக்கவில்லை.

வசதி படைத்த சிங்கள மேட்டுக்குடியினர் கூட, அருகில் இருக்கும் இந்தியாவுக்கு சென்று வருவதில்லை. அவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை, இங்கிலாந்து சென்று வந்திருப்பார்கள். ஒரு வேளை, கப்பலோ, விமானமோ, இங்கிலாந்து போகும் வழியில், இந்தியாவில் தரித்துச் சென்றிருக்கும். அப்போது மட்டும் எட்டிப் பார்ப்பதோடு சரி. இதனால், இங்கிலாந்து பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்த அளவிற்கு, இந்தியா பற்றி அறியும் ஆவல் துளி கூட இருக்கவில்லை. அன்று நடந்த பொதுக்கூட்டங்களில், பண்டாரநாயக்க "இந்திய அச்சுறுத்தல்" குறித்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார். உண்மையிலேயே அவரும் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கொண்டிருக்கலாம். இந்திய அச்சுறுத்தல் பற்றிய பயம், இன்று மேலைத்தேய நாடுகளில் நிலவும் வெளிநாட்டவர் மீதான வெறுப்பை ஒத்தது.

அன்றைய இலங்கையின் பொருளாதார பின்னணியை, இவ்விடத்தில் ஆராய்வது அவசியம். ஒரு காலத்தில், இலங்கையின் பொருளாதாரம், சிங்கப்பூர், மலேசியாவை விட மேன் நிலையில் இருந்தது. அன்று, தொழிலுக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையரைக் காண்பதரிது. (காலனிய சேவையில் ஈடுபட்ட நடுத்தர வர்க்கத்தினர் விதிவிலக்கு.) ஆனால், பிற ஆசிய நாட்டவர்கள், இலங்கைக்கு வேலை தேடி வந்தார்கள். பிரிட்டிஷ் காலனியான சிலோனின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது. உலக சந்தையில் அதிக இலாபம் தரும் பெருந்தோட்டச் செய்கை காரணமாக, இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகள் தருவிக்கப்பட்டனர். விளைபொருட்களின் ஏற்றுமதியினால் கொழும்பு துறைமுகமும் அபிவிருத்தி அடைந்தது. துறைமுகத்தில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. கொழும்பு துறைமுகத்தில் வேலை, அதிக சம்பளம் என்ற செய்தி, இந்திய தொழிலாளர்களை காந்தமாக கவர்ந்திழுத்தது. இந்தியாவில் இருந்து தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். ஒரு வழிப் பயணச்சீட்டுடன் கப்பலேறி வந்ததினால், இலங்கையர்கள் அவர்களை "கள்ளத் தோணிகள்" எள்ளி நகையாடுவது வழக்கம். துறைமுகத்தை சுற்றி, இந்திய உழைக்கும் மக்களின் குடியிருப்புகள் பெருகின.இன்றைக்கும் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை வட்டாரங்களில் இந்திய வம்சாவழித் தமிழரின் எண்ணிக்கை அதிகம்.

ஆரம்பத்தில் இந்தியத் தொழிலாளர்களின் வருகைக்கு, சிங்கள மக்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பொருளாதாரமும் நல்ல நிலையில் இருந்து, உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்ததால் யாரும் குறைப்படவில்லை. சிங்கள தொழிலாளர் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஏ.ஈ.குணசிங்க போன்ற தலைவர்களின், தொழிற்சங்க நிறுவனமயப் படுத்தலால், சிங்கள தொழிலாளர்கள் உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, 1927 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், சுமார் 5000 துறைமுகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். அனேகமாக, இது போன்ற "ஆபத்துகளை தவிர்ப்பதற்காக" துறைமுக முதலாளிகள், இந்திய தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டி இருப்பார்கள். ஆனால், அது மறு பக்கத்தில் தீய விளைவுகளையும் ஏற்படுத்தியது.

சிங்கள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைசிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.இ. குணசிங்க இனவாத அரசியலில் குதித்தது துரதிர்ஷ்டகரமானது. சிங்கள தொழிலார்களின் நலன்களுக்காக, இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென போராடினார். அது சம்பந்தமான கோரிக்கைகள், பல தடவை இனவாத அடிப்படையைக் கொண்டிருந்தன. இதே நேரம், சிங்கள தொழிலாளர் சார்பாக துறைமுக முதலாளிகளுடன் பேரம் பேசி மூக்குடைபட்ட பண்டாரநாயக்கவும் இனவாத அரசியலை கையில் எடுத்தார். ஏ.இ. குனசிங்கவுக்கு மேலாக இந்திய எதிர்ப்பு இனவாதம் பேசி, மாநகர சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். பொருளாதார பிரச்சினையை, இனப் பிரச்சினையாக திசை திருப்புவதற்கு ஏற்ற காலம் கனிந்து வந்தது. பண்டாரநாயக்கவின் அதிர்ஷ்டம், நியூ யார்க் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பாவிலும் எதிரொலித்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும், வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து, பாஸிச சக்திகள் வளர்ச்சி அடைந்தன. இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும், ஏற்றுமதிப் பொருளாதாரமும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தது. இதனால், அங்கு ஏற்பட்ட நெருக்கடி இலங்கையிலும் எதிரொலித்தது. பெருந்தொகையான சிங்கள தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். பொருளாதார பிரச்சினை அதிகரித்தது. அந்த சந்தர்ப்பத்தில், அரசியல் வாழ்வில் ஈடுபட்ட பண்டாரநாயக்க, இனவாதப் பேச்சுகள் மூலம் வேலையிழந்த மக்களைக் கவர்ந்தார். "சிங்கள மக்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், இந்தியத் தொழிலாளர்கள். மண்ணின் மைந்தர்களான சிங்களவர்களின் தொழில் வாய்ப்புகளை, அந்நியர்களான இந்தியர்கள் பறிக்கின்றனர். இந்தியர்களை வெளியேற்றுவதன் மூலம், சிங்கள மக்களுக்கு தொழில்களை உருவாக்கலாம்." பண்டாரநாயக்கவின் இது போன்ற பேச்சுகள் பிரபலமடையத் தொடங்கின. மேடைப் பேச்சுடன் மட்டும் நிற்காது, துறைமுகத்தில் வேலை செய்யும் இந்தியர்களை வெளியேற்றுமாறு, முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இன்றைக்கும், நகை வியாபாரத்தில் ஈடுபடும் செட்டியார்களும், இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நாடார்களும், இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிட்டளவு பங்களித்து வருகின்றனர். ஒரு பக்கம் இலங்கை, இந்திய அரசுகளுடன் நெருக்கமான உறவைப் பேணிக் கொண்டே, இன்னொரு பக்கம் தமிழ் தேசிய ஊடகங்களையும் வளர்த்து வந்துள்ளனர். இவர்களில் பலர், இரண்டு நாடுகளினதும் பிரஜாவுரிமையை வைத்திருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய சிறு முதலாளிகளும், வட்டிக் கடைக்காரரும், சிங்கள நாட்டுப்புறமெங்கும் பரவியிருந்தனர். காலனிய அரசின் சலுகைகளை பயன்படுத்தி, பெருமளவு இந்திய சிறு முதலாளிகள் இலங்கையில் முதலிட்டிருந்தனர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். இந்திய முதலாளிகள் சிங்கள மக்களை சுரண்டிக் கொழுத்தது ஒரு புறமிருக்க, அவர்களை அகற்றினால் தமது வர்த்தகத்தை பெருக்கலாம் என்று, சிங்கள முதலாளிகள் கனவு கண்டனர். அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த போதிலும், அவர்கள் பண்டாரநாயக்கவின் இனவாதப் பேச்சுகளை கண்டிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், பண்டாரநாயக்க அறிமுகம் செய்த சிங்களப் பேரினவாதத்தை மனதிற்குள் வரவேற்றிருப்பார்கள்.



(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:


1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்
2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்

Saturday, September 10, 2011

பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : இரண்டு)


உலகில் மிகவும் தீவிரமாக இனத் தேசியவாதம் பேசும் தலைவர்கள் பலரின், "இனத் தூய்மை" திருப்திகரமாக இருப்பதில்லை. சிங்கள தேசியத்தை உருவாக்கிய பண்டாரநாயக்கவின் முன்னோர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள். தொண்டமான் போன்று பண்டாரநாயக்கவும், உயர்குடியினரின் குடும்பப் பெயர் என்பதால், அவர்களின் பூர்வீகத்தை அறிவது கடினமல்ல. அன்றைய நாட்களில், பண்டாரநாயக்கவின் அரசியல் எதிரிகள், அதனை சுட்டிக் காட்டி பேசத் தயங்கவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தினர், காலனிய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்ததால், அவர்களின் மதத்தை பின்பற்றியவர்கள். போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்கர்கள், ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்தினர், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலிக்கர்கள். இலங்கை சுதந்திரமடையும் தறுவாயில், பௌத்தர்களாக மாறினார்கள். சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க, தனது கிறிஸ்தவ பின்னணியை மறைப்பதற்காக, S. W. R. D. Bandaranaike என்று எழுதி வந்தார். தமிழ் தேசியத் தலைவர்களும் அவ்வாறு பெயர் வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு: S.J.V. (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை) செல்வநாயகம்.


சிங்கள, தமிழ் தேசியவாதத்தை உருவாக்கிய தலைவர்கள் எல்லோரும் அநேகமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். தமது தாய்மொழியை விட ஆங்கில மொழியில் சரளமாக உரையாடக் கூடியவர்கள். கிறிஸ்தவ மதத்துடன், ஐரோப்பிய கலாச்சாரத்தையும் பின்பற்றியவர்கள். இது போன்ற பண்புகளைக் கொண்ட மேட்டுக்குடியினர், "சுதந்திர இலங்கையில் அதிகாரமற்ற சிறுபான்மையாக ஒதுக்கப் பட்டு விடுவோம்" என அஞ்சியிருக்கலாம். அதற்கு காரணம், பெரும்பான்மை மக்கள் இன்னமும் தமது மரபுகளை கைவிடாதவர்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒன்றில் சிங்களம், அல்லது தமிழ் மொழியை மட்டுமே பேசினார்கள். மதத்தைப் பொறுத்த வரையில், பௌத்தர்களாக அல்லது இந்துக்களாக வாழ்ந்தனர். அந்நிய ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், சிங்கள பண்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் மரபுகளைப் பேணி வந்தனர். ஆகவே, சிங்கள-தமிழ் பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடியினர், ஐரோப்பாவில் தாம் கற்ற தேசியவாத கொள்கையை இலங்கைக்கு இறக்குமதி செய்தனர். மொழி அடிப்படையில் அமைந்த தேசியவாதத்தினுள், தமது நலன்கள் பாதுகாக்கப்படும் என நம்பினார்கள்.

பண்டாரநாயக்க சிங்கள தேசியவாதியாக மாறியதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று காரணமாக கருதப்படுகின்றது. பிரித்தானியாவில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு கல்வி பயில சென்ற வேளை, வெள்ளையின மாணவர்களின் நிறவெறி கண்டு மனமுடைந்து போனார். அதுவரையில், ஆங்கிலேயருக்கு நிகரான உயர்குடிப் பிறப்பாளராக நம்பி வந்த பண்டாரநாயக்கவின் தற்பெருமை தகர்ந்தது. இலங்கை திரும்பிய பின்னர், உள்ளூர் மக்களைப் போன்று உடை உடுக்க தொடங்கினார். ஆனால், அது கூட அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது காலப்போக்கில் தெளிவானது. அரசியல் கூட்டங்களில் வேஷ்டி, சட்டையுடன் காணப்படும் பண்டாரநாயக்க, மாலை நேர விருந்துகளில் மேற்கத்திய பாணி உடை உடுத்துவார். பண்டாரநாயக்கவின் அரசியல் வாழ்வு முழுவதும், இவ்வாறு இரட்டைத்தன்மை வாய்ந்ததாக காணப்பட்டது. அரசியல் மேடைகளில் சிங்கள-பௌத்த இன மேன்மை பற்றி உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வந்தார். ஆங்கிலேயர்களின் இலங்கை அரச பேரவையில் (நாடாளுமன்றத்தில்), சிங்கள இனத்தின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவுக்கும், பொன்னம்பலத்திற்கும் இடையிலான காரசாரமான விவாதங்கள், அடித்தட்டு மக்களை கிளர்ச்சி அடைய வைத்தன. இன்றும் கூட, சிங்களவர்கள், பொன்னம்பலத்திற்கு பண்டாரநாயக்க கொடுத்த பதிலடிகளை சிலாகித்து பேசுகின்றனர். தமிழர்கள், பண்டாரநாயக்கவை வாயடைக்க வைத்த பொன்னம்பலத்தின் பேச்சுகளை வியந்துரைக்கின்றனர். இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்னோடியான, டொனமூர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மேலவை, பண்டாரநாயக்கவினதும், பொன்னம்பலத்தினதும் அனல் பறக்கும் வாதங்களால் அதிர்ந்தது.

"ஒருவர் சிங்கள தேசிய நாயகனாகவும், மற்றவர் தமிழ் தேசிய நாயகனாகவும்" பொதுஜனத்தின் பார்வையில் தெரிந்தனர். "சிங்கள இனக் காவலரான" பண்டாரநாயக்கவும், "தமிழ் இனக் காவலரான" பொன்னம்பலமும், பொது அரங்கில் தான் எதிரிகளாக காட்டிக் கொண்டனர். அந்தரங்க வாழ்வில், இருவரும் இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்தனர். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் மேட்டுக்குடி பின்னணி, உயர்சாதிப் பிறப்பு, என்பன இரண்டு நண்பர்களின் குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. "சிங்கள பேரினவாதத்தை தோற்றுவித்த பண்டாரநாயக்கவும், அதற்குப் போட்டியாக தமிழ் குறுந் தேசியத்தை உயர்த்திப் பிடித்த பொன்னம்பலமும் உண்மையிலேயே அரசியல் எதிரிகள் தானா?," என்ற ஐயம், அன்று பலர் மனதில் குடி கொண்டிருந்தது.

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆளுநர் Caldecott, இவ்விரண்டு நண்பர்களது நோக்கங்கள் குறித்த ஐயப்பாடுகளை வெளிக்காட்டி உள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான சேவையாளர்களை நன்கு அறிந்து வைத்திருந்த ஆளுநர், அத்தகைய சந்தேகத்தை தெரிவித்ததில் வியப்பில்லை. அதாவது "பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும் தாம் சார்ந்த அரசியல் கொள்கைக்கு விசுவாசமானவர்களா?" என்பதே ஆளுநரின் கேள்வியாக இருந்தது. அந்த சந்தேகத்திற்கு ஆதாரம் இல்லாமலில்லை. பண்டாரநாயக்க தோற்றுவித்த "சிங்கள மகாசபை கட்சி" கண்டி மாகாணத்தில் 1943 ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதில் முக்கிய வேட்பாளராக நின்றவர் பண்டாரநாயக்கவின் மாமன். அந்த வேட்பாளருக்கு ஆதரவாக பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார். கண்டி மாகாணத்தில் பெருமளவு இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். தனது அருமை நண்பனுக்கு தமிழ் ஓட்டுக்களை பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு தமிழனான பொன்னம்பலம் பாடுபட்டார். இதே பொன்னம்பலம் தான், அடுத்த வருடம் (1944 ) தமிழ் தேசியக் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்தார். சுதந்திரத்திற்கு பின்னர், இந்திய தோட்டத் தொழிலாளரின் குடியுரிமையை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இலங்கையரை சேர்த்துக் கொள்ள முன்வந்தனர். அன்று கல்வி கற்ற இலங்கையருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கி இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு முன்னோடியான மேலவை, மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது. சிங்கள, தமிழ் படித்த நடுத்தரவர்க்க பிரதிநிதிகள் அன்றைய இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார்கள். அவர்களுக்கு இடையிலான, தொகுதிப் பங்கீடு, இட ஒதுக்கீடு குறித்த தகராறுகள் தான், "இனப்பிரச்சினை என்ற நோயின் முதலாவது அறிகுறி". சட்டவாக்க அவையில் பங்குபற்றிய இலங்கையர்கள் "சிலோன் தேசியக் காங்கிரஸ்" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். ஆயினும் அந்த அமைப்பின் போதாமை காரணமாக, அல்லது தேசிய அரசியலுக்கு இடமில்லாததால், பலர் அதிலிருந்து விலகினார்கள். Edmund Walter Perera என்ற தேசியவாதத் தலைவர், "அனைத்திலங்கை லிபரல் லீக்" என்ற அரசியல் அமைப்பை ஸ்தாபித்திருந்தார். அன்று தீவிர அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களாக கருதப்பட்ட பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும், லிபரல் லீக்கின் முக்கிய அங்கத்துவர்கள் ஆவார்கள்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னரான அத்தகைய அமைப்புகளின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. லிபரல் லீக் தலைவர் பெரேரா ஒரு சிங்கள கிறிஸ்தவர். 1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசுடன் பேசிய முக்கிய பிரமுகர்கள் இருவர். ஒருவர் இராமநாதன், மற்றவர் பெரேரா. "மண்ணின் மைந்தர்களான சிங்கள-பௌத்தர்களுக்கு" பக்க பலமாக நிற்பதாக காட்டுவதே, இவர்களின் உள்நோக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தமது "தமிழர்", "கிறிஸ்தவர்" போன்ற அடையாளங்களை கைவிட்டவர்களல்ல. ஆயினும், பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இன்றைய தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூட இராமநாதன் போன்றோரின் "படித்த தமிழ் மேட்டுக்குடியின் துரோகம்" குறித்து மௌனம் சாதிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்று, "சிங்கள-பௌத்த பேரினவாத வெறித்தனத்தின் வரலாற்றை" நினைவு படுத்தியிருந்தது. "சிங்கள பேரினவாதத்தின் முதலாவது இனவெறித் தாக்குதல் முஸ்லிம்கள் மீதானது", என்ற வரலாற்று உண்மையை எடுத்துக் கூறியது. உண்மை தான். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து, சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டிருந்தனர். தமிழ் தேசியவாதிகளின் நாயகனான இராமநாதன், இங்கிலாந்து சென்று வழக்காடி, சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுவித்தார். அன்று, தமிழ் தேசியத் தலைவர்கள், ஆங்கிலேயரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்திருந்தால், இன்று சிங்கள பேரினவாதம் நூதனசாலையில் மட்டுமே வைக்கப் பட்டிருக்கும்.


(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Thursday, September 08, 2011

சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளோ, நூல்களோ பண்டாரநாயக்கவின் அரசியற் செயற்பாடுகளை அதிகமாகவே விமர்சிப்பதுண்டு. ஒரு வகையில், சிங்களவர்கள், தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்கியதில் பண்டாரநாயக்கவின் பங்களிப்பு பெருமளவு இருந்துள்ளது. இன முரண்பாடு என்ற வித்து, ஆலமரமாக வளர்ந்து இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட போரில் முடியும் என்று, அன்றைய நாட்களில் அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானதும் கொண்டு வரப்பட்ட, "சிங்களம் மட்டும்" சட்டம் தான், இனப்பிரச்சினையின் மூலகாரணம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக மொழியை அடிப்படையாக கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இது ஒருதலைப் பட்சமான பார்வை மட்டுமே. இலங்கையில் (தமிழ்) மொழி மீதான அடக்குமுறை தான் பிரச்சினைக்கு காரணம் என்று நிறுவுவதற்கு, அந்த வரலாற்றுத் தகவல் பயன்படுகின்றது.

இருப்பினும், முதலில் கொண்டு வரப்பட்ட "சிங்களம் மட்டும்" சட்டம், பின்னர் தமிழ்க் கட்சிகளின் அழுத்தம் காரணமாக "சிங்களமும், தமிழும்" சட்டமாக மாற்றப்பட்டது. இந்த உண்மை இலங்கைக்கு வெளியே பரவலாக அறியப் படவில்லை. அதாவது பண்டாரநாயக்க ஆட்சிக்கு வரும் வரையில், இலங்கையில் ஆங்கிலம் மட்டுமே கல்வி, நிர்வாக மொழியாக இருந்தது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, சிங்களத்தை தேசிய மொழியாக்கும் சட்டமூலம், தமிழர் அபிலாஷைகளை மதிக்காமல் கொண்டு வரப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்கள், ஆங்கிலத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினார்கள். சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு இணங்காததால், "சிங்களத்தோடு, தமிழையும்" அரச கரும மொழியாக்கினார்கள். அதாவது இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் தமிழும், நாட்டின் பிற பாகங்களில் சிங்களமும் நிர்வாக மொழியாகியது. இலங்கை முழுவதும் ஆங்கிலத்தில் கல்வி கற்ற காலம் மாறி, தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலும், சிங்களப் பிள்ளைகள் சிங்களத்திலும் கல்வி கற்றனர். இவ்வாறு தாய் மொழியில் கல்வி கற்ற குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களானதும் நீண்டதொரு இனக்குரோதப் போரில் ஈடுபட்டார்கள்.

பொதுவாக அரசியல்வாதிகள் தமது குறுகிய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிவார்கள். இத்தாலியின் அரசியல் சாணக்கியனாக போற்றப்படும் மாக்கியவல்லி, "அரசன் எத்தகைய பாதகச் செயலையும் தனது இருப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்." என்று தத்துவங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். நிறவெறி, இனவெறி, மதவெறி எல்லாமே உலக நாடுகளின் அரசுகளின் ஸ்திரத் தன்மைக்கு பயன்பட்டுள்ளன. ஒரு அரசு தான் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சிறுபான்மை இனத்தை பகைத்துக் கொள்கின்றது. இதன் மூலம், நாகரிக சமூகம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வரும் சமமற்ற பொருளாதார பங்கீட்டை மறைக்க முடிகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையை, இத்தகைய பின்னணியுடன் புரிந்து கொள்ளா விட்டால், இனவாத சகதிக்குள் மாட்டிக் கொள்ள நேரிடும். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகள் கூட இன முரண்பாடுகளை பிரதிபலிப்பதை வெளிநாட்டவரும் அவதானித்துள்ளனர். குறிப்பாக பண்டாரநாயக்க பற்றிய பார்வை, அறிவுஜீவி சமூகத்தை கூறு போட்டுள்ளது. சிங்கள அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை முற்போக்காளராக கருதுகின்றனர். அதே நேரம், தமிழ் அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை பேரினவாதியாக கருதுகின்றனர். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடு
"A 9 Highway" என்ற சிங்கள-தமிழ் திரைப்படத்தில் தத்ரூபமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில், பொதுவாக தமிழ் அறிவுஜீவிகளின் எழுத்துக்களையே படிப்பது வழக்கம். அவர்கள் தமிழில், அல்லது ஆங்கிலத்தில் எழுதினாலும், இனப்பிரச்சினை சுதந்திரத்திற்குப் பின்னர் ஆரம்பமானதாகவே குறிப்பிடுவார்கள். தீவிர தமிழ் தேசியவாதிகள் என்றால், மகாவம்சம், எல்லாளன் காலத்திற்கு சென்று, இனப்பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிப்பார்கள். ஆனால், இடைப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை பற்றி மட்டும் பெரிதாக எதுவும் கூற மாட்டார்கள். இலங்கையின் மத்திய பகுதியான கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட காலத்தில் (1815) இருந்து, நாட்டில் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் வழக்கம் தோன்றியுள்ளது. கடைசி கண்டி மன்னன், தென்னிந்திய நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழன். சிங்கள மக்களை மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழ வைப்பதற்காக, "கண்டி தமிழ் மன்னனின் கொடுங்கோன்மை" பற்றி பிரச்சாரம் செய்தனர். இந்திய மரபின் படி, இலங்கை ஆளும் மன்னன், பிராமணனாக அல்லது உயர்சாதியை சேர்ந்தவனாக இருப்பதையே பௌத்த பிக்குகளும் விரும்பியிருந்தனர். மதம் அல்லது சாதி ஆதிக்கம் செலுத்திய பண்டைய இலங்கைச் சமூகத்தினுள், ஆங்கிலேயர்கள் மொழித் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரையோரச் சிங்களவர்களுக்கும், கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவியது. ஒரே மொழியை பேசிய இரண்டு சமூகங்களும், வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டிருந்தனர். நீண்ட கால காலனிய ஆட்சி காரணமாக, கரையோர சிங்களவர்கள் கிறிஸ்தவர்களாகவும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவோராகவும் மாறியிருந்தனர். அதற்கு மாறாக, கண்டிச் சிங்களவர்கள் பௌத்தர்களாகவும், பாரம்பரிய கலாச்சாரத்தை பேணுவோராக காணப்பட்டனர். இதை விட, அன்று யாரும் தம்மை சிங்களவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. சிங்களவர் ஒரு இனம் என்பதே கற்பிதமாகும். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழ்ப் பிராமணர்கள் என்ற கதை ஒன்றுண்டு. பண்டாரநாயக்கவின் உறவினர்கள் பலர், தமிழர்களுடன் கலப்பு மணம் புரிந்துள்ளனர். இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒருவர், சிங்கள தேசியவாதத்தை உருவாக்கியதும், சிங்கள பேரினவாதத்தின் தந்தையாக மாறியதும் வரலாற்று முரண்நகையாகும்.

பண்டாரநாயக்க, சிங்கள தேசியத்தின் உருவாக்கத்தை, அன்றைய காலவோட்டத்திற்கு ஏற்றவாறு ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்ட முனைந்தார். அதே நேரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் தனிப்பட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்பை பேணி வந்தார். காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவை தலைமை தாங்கும் சக்தி உள்ளதெனக் காட்டுவதற்காக, இந்திய (ஹிந்தி) தேசியத்தை உருவாக்க அரும்பாடுபட்டது. இலங்கையில் அதே போன்றதொரு முயற்சியில் பண்டாரநாயக்க ஈடுபட்டார். இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவும் தன்னை அரசமைக்கும் தகமை பெற்ற தலைவராக காட்டிக் கொள்ள விரும்பினார். ஆனால், அவரது காலம் முழுவதும் இலங்கை போல்ஷேவிக்குகளை (மார்க்சியர்கள்) எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே செலவிட்டார். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தை ஒன்று சேர்த்த கட்சி ஒன்றை ஸ்தாபித்தார். "ஐக்கிய தேசியக் கட்சி" என்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான கட்சி ஒன்றை ஸ்தாபித்து விட்டு, சுதந்திரத்திற்கு தயாராக காத்திருப்பதாக ஆங்கிலேயருக்கு அறிவித்தார்.

இவ்விடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. ஆங்கிலேயர்கள் தமக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஏற்ற நபர்களை தேடிக் கொண்டிருந்தார்கள். உள்நாட்டு பிரதிநிதிகள், ஏதோ ஒரு வகையில், பெரும்பான்மை இலங்கையரைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். டி.எஸ். சேனநாயக்க ஒரு விதமாகவும், பண்டாரநாயக்க வேறொரு விதமாகவும் தமது "ஆளும் தகமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இரண்டு வேறு பட்ட சமூகங்களான கரையோரச் சிங்களவர்களையும், கண்டிச் சிங்களவர்களையும், பண்டாரநாயக்க சிங்களவர்கள் என்ற பெயரில் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயருக்கும் அஃது உவப்பான சங்கதி தான். "காலனியாதிக்க எதிர்ப்பாளர்களான கண்டிச் சிங்களவர்களை, காலனிய விசுவாசிகளான கரையோரச் சிங்களவர்கள் ஆளப்போகின்றனர். இதனால் காலனிய எதிர்ப்புணர்வு மழுங்கடிக்கப்படும்." பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இதை விட நல்ல செய்தி வேறென்ன கிடைக்க முடியும்?


(தொடரும்)

Monday, September 05, 2011

சமூக விஞ்ஞான கல்வி வட்டத்தின் கேள்விகள்

(முகநூலில், சமூக விஞ்ஞான கல்வி வட்ட அங்கத்தவர்கள் கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு கலையரசன் பதில்கள் தருகிறார்.)
**************************************************

கேள்வி: ஈழத்தின் சாதியப் போராட்டம் பற்றியும் அதன் இன்றைய நிலை பற்றியும்?

பதில்: வட இலங்கையில் நடந்த முதலாவது சமூகப் புரட்சி அது தான். போராட்டத்தில் உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டார்கள். அத்தோடு சிங்கள முற்போக்காளர்களின் அனுதாபமும் கிட்டியது. அதுவே சாதியப் போராட்டத்தின் வெற்றிக்கு மூல காரணம். போராட்டத்தின் மூலமே தீண்டாமையை ஒழிக்க முடிந்தது, சம வாய்ப்புகளை பெற முடிந்தது. இறுதியில் ஆதிக்க சாதியினரின் அரசியல் தலைமையும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மதமாற்றம் போன்ற ஆபத்துகளை எண்ணிப் பயந்திருக்கலாம்.

மேலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியிலும், ஒரு நடுத்தர வர்க்கம் தோன்றியிருந்தது. அவர்கள் மோதலை தவிர்த்து, சமரசப் பாதையை தேர்ந்தெடுத்தனர். இன்று சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, அகமண முறை மூலம் சாதிகளை பாதுகாப்பதில் அனைவரும் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு சாதியிலும் உள்ள முன்னேறிய பிரிவுக்கு இன்றைய நிலைமை திருப்திகரமாக உள்ளது.

ஆயினும் நிலம் சார்ந்த பொருளாதார பிரச்சினைகள் தொடருவதால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த சமூகங்களில் ஏழைகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினரின் இயல்பான (நடுத்தர) வர்க்க குணாம்சம், தற்கால சாதிய பிரச்சனைகளை பார்க்க விடாமல் தடுக்கின்றது.

கேள்வி:தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன? (விமல்)

பதில்: 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியுடன் தேசியம் என்ற புதிய சிந்தனை உருவானது. அதற்கு முன்னர், மன்னராட்சிக்கு உட்பட்ட நாடுகள் இருந்தன. குடிமக்கள் கடவுளுக்கும், கடவுளின் பூலோக பிரதிநிதியான மன்னருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். தேசியம் பற்றிய கற்பிதம், தேசம் மீதான விசுவாசத்தைக் கோரியது. அதற்காக பொதுவான மொழியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேசத்திற்குள் வாழ்ந்த அனைத்து குடிமக்கள் மீதும் அந்த மொழி திணிக்கப் பட்டது. அதற்கு முன்னர், எழுத்தறிவற்ற காலத்தில் பல்வேறு பேச்சு மொழிகள் வழக்கில் இருந்தன.

மன்னராட்சிக் காலத்தில், மக்கள் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரஜையும் மதத்தின் மீது பக்தி கொண்டவராக இருக்க வேண்டும். மதகுருக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். தேசியவாதம் மதத்தின் அதிகாரத்தை எதிர்த்தே எழுந்தது. தேசியவாதிகள், மக்களிடம் மத நம்பிக்கைக்கு பதிலாக, தேசபக்தியை எதிர்பார்த்தார்கள். மண்ணுக்குரிய மக்கள் என்பது, தேசபக்தியை மத நம்பிக்கையில் இருந்து வேறு படுத்தியது. தேசியம் தோன்றிய சில நாடுகளில், தேசபக்தி பேரினவாதமாக உருவெடுத்தது. ஒரே தேசியத்திற்குள் அடங்க மறுத்த சிறுபான்மையினங்களை, துரோகம் செய்பவர்களாக கருதினார்கள்.


கேள்வி: தரகு முதலாளித்துவம் என்றால் என்ன?

பதில்: இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியை, ஒரு வருட வருமானமாக ஈட்டும் நிறுவனங்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா? உலகிலேயே மிகப் பெரிய மூலதனத்துடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ளன. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்று அழைக்கப் படும் இவை, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. அதனால் தான் அவற்றை முதலாளித்துவ நாடுகள் என்று அழைக்கிறோம். அதாவது "முதல்" (மூலதனம்) அங்கே தான் போய்க் குவிந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து அனுப்பும் பொருட்கள் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன. நாம் காலையில் எழுந்தவுடன் பல்துலக்க பாவிக்கும் பற்பசை முதல், போக்குவரத்திற்கான வாகனம் வரை எல்லாமே அவர்களின் தயாரிப்புகள் தான். மற்றைய நாடுகளில் உள்ள முதலாளிகள், உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்கும் தரகர்கள். சில நேரம், உள்நாட்டில் கூட்டுத் தயாரிப்பாகவும் உற்பத்தி செய்வார்கள். ஆகவே அவர்களை தரகு முதலாளிகள் என்று அழைக்கின்றோம். நமது நாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தரகு முதலாளிகள் தாம்.


கேள்வி: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமாக வத்திக்கான் திருச்சபை மாறியது எப்போது? தவிர அது எப்போது தோற்றுவிக்கப்பட்டது? ( விமல்)

பதில்: ஆரம்பத்தில் இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் பொதுவுடமைச் சமுதாயமாக வாழ்ந்தார்கள். அதாவது தமக்குத் தேவையான உணவை, கூட்டுறவு பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து பகிர்ந்துண்டார்கள். ஆதி கால கிறிஸ்தவர்கள், அரசதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அபிலாஷைகளை கொண்டிருக்கவில்லை. கொன்ஸ்ட்டான்டின் என்ற கிரேக்க-ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர், கிறிஸ்தவம் அரச மதமானது. அந்தக் காலத்தில் விவிலிய நூல் முழுமையான வடிவம் பெற்றது.

பிற்காலத்தில் ரோம சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தது. இத்தாலியில் ரோமை தலைநகராகக் கொண்ட மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தில், அதற்கென தனித்துவமான கத்தோலிக்க மதம் தோன்றியது. கிழக்கத்திய கிரேக்க கிறிஸ்தவத்திற்கும், மேற்கத்திய ரோம கிறிஸ்தவத்திற்கும் இடையில் வழிபாட்டு முறைகளில் வித்தியாசம் உண்டு. இருப்பினும், தலைமையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தான், இந்தப் பிளவுக்கு காரணம். ரோமில் அரச அதிகாரத்தை கைப்பற்றிய முதலாவது பாப்பரசர் புனித பீட்டர் வத்திகானை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். அதுவே, உலக கத்தோலிக்க மத நிறுவனத்தின் தலைமையகமாக மாறியது. கிறிஸ்துவுக்குப் பின் முதல் நூறாண்டுகளில் நடைபெற்ற மாற்றங்கள் இவை.

கேள்வி: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வி என்ன சொல்கிறது?

பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட திரிபுவாதக் கட்சிகள். அவை தேர்தல் சாக்கடையில் மூழ்கி பல வருடங்களாகின்றன. கட்சித் தலைவர்கள், தம்மை மேற்கத்திய சோஷலிசக் கட்சிகளுடன் (உதாரணத்திற்கு: பிரிட்டிஷ் லேபர் கட்சி) ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். கட்சியின் தொண்டர்களுக்கே கம்யூனிசக் கொள்கைகள் பற்றிய விடய ஞானம் மிகக் குறைவு. பத்தோடு பதினொன்றாவதாக, "சிவப்புக் கொடி பிடிக்கும்" கட்சிகளாக சீரழிந்து விட்டன. அவர்கள் தேர்தல் பாதைக்கு வந்த பின்னர் சாதித்தவை மிக அரிது. கட்சியோடு செல்வாக்கு கொண்டவர்களைத் தவிர, பெரும்பான்மை மக்களுக்கு கிடைத்த நன்மைகள் மிகக் குறைவு. அவர்கள் ஆட்சியிலேயே பல முதலாளித்துவ சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஊழல், அதிகார மமதை என்பன, மக்களை வேறு கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டின. இதனால் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வியாக பார்ப்பதை விட, முதலாளித்துவ நலன் சார்ந்த கட்சிகளின் தோல்வியாக பார்ப்பதே சிறந்தது.

கேள்வி: மாவோயிஸ்ட்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்?

பதில்: மாவோயிஸ்ட்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்? என்று கேட்பது, பாராளுமன்ற ஜனநாயக வழி வந்த சிந்தனையாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் போட்டியிடும் கட்சிகள் தான், மக்களுக்கு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். மாவோயிஸ்டுகள் அதற்கு மாறாக, அடித்தட்டு மக்களின் போராட்ட இயக்கமாகும். அதாவது அரசியல் அதிகாரமற்ற மக்கள், தாமே அந்த அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கான அமைப்பு வடிவம். போராட்டக் காலத்திலேயே, கெரில்லாப் பிரதேசம், விடுவிக்கப் பட்ட பிரதேசம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அங்கெல்லாம் இதுவரை காலமும் அரசியல் அதிகாரத்தை கைகளில் வைத்திருந்த, நிலப்பிரபுக்கள், முதலாளிகள், மற்றும் அரசு அதிகாரிகளின் செல்வாக்கு பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது. முதலாளிகள் சொந்தம் கொண்டாடி வந்த இலாபத்தில் ஒரு பகுதி தொழிலாளருக்கு போய்ச் சேருமாறு மறு சீரமைக்கப் படுகின்றது. வங்கிகளில் அடவு வைத்த ஏழை விவசாயிகளின் கடன் பத்திரங்கள் எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் அரசு தலையிடா வண்ணம், அரசு அதிகாரிகள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களுக்கு, அதிக விலை கிடைக்குமாறு கவனிக்கப்பட்டது. இவையெல்லாம் மாவோயிஸ்டுகளின் ஆயுத பலத்தினால் சாதிக்கப்பட்டன. மாவோயிஸ்டுகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட, ஆண்டாண்டு காலமாக ஏழைகளின் குறைகளைத் தீர்க்காத அரசின் கையாலாகத் தனத்தை விமர்சித்துள்ளனர்.


கேள்வி: தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோல்வி என்ன சொல்ல வருகிறது?

பதில்: எதையுமே சொல்லவில்லை. காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு பெருமளவு குறைந்து விட்டது. காங்கிரஸ் எந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடாது. திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு வைத்துக் கொள்வது வழமை. கூட்டணியில் இருக்கும் கட்சி தோற்றால், காங்கிரசும் தோல்வியடையும். காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள், மக்கள் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்தார்கள், என்று விளக்கம் கூறலாம். ஆனால், அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஓட்டுப் போட்ட எண்ணிக்கை மிகக் குறைவு.

கேள்வி: மக்கள் அரசியல் என்றால் என்ன?

பதில்: உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அங்கே உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள். உழைக்கும் மக்கள் தங்கள் உடல், மூளை உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்கிறார்கள். மூலதனத்தை முதலீடு செய்யும் முதலாளிகள் இலாபம் என்ற பெயரில் உழைப்பின் பலன்களை அறுவடை செய்கின்றனர். இவர்கள் எங்கேயும் சிறுபான்மையினர் தான். ஆனால் பண பலம் இருப்பதால் யாரையும் இலகுவாக வாங்க முடிகின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களை தம் பக்கம் வைத்திருப்பதால், பெரும்பான்மை உழைக்கும் மக்களை கட்டுப்படுத்த முடிகின்றது. ஆகவே பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களை சார்ந்து, அவர்களது நலன்களுக்காக நடத்தப் படும் அரசியலே மக்கள் அரசியல் ஆகும். மக்கள் அரசியல் எந்தவொரு சித்தாந்தம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் ஆட்சி அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் எடுப்பதற்கு சில தத்துவார்த்த நடைமுறைகள் அவசியம்.


கேள்வி : வர்க்க முரண்பாட்டின் தோற்றம் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றது?

பதில்: பதில்: சமுதாயத்தில் பெரும்பான்மை மக்கள் உழைப்பை விற்பதும், முதலாளிகள் மூலதனத்தை முதலீடு செய்வதும் வழமையான பொருளாதார செயற்பாடுகளாக உள்ளன.
மூலதனம் உட்பட அனைத்துப் பொருட்களும் உழைப்பினால் உருவாகியுள்ளன. ஆனால் முதலிடும் ஒரே காரணத்திற்காக, இலாபம் என்ற பெயரில் கிடைக்கும் உபரி உழைப்பை மீண்டும் மூலதனமாக்குவதன் மூலம், முதலாளிகள் தமது பலத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.
உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு அளவுக்கு அதிகமாக சுரண்டப்படும் பொழுது, அதனை வறுமை என்றழைக்கிறோம். பூமியின் செல்வம் எங்கே போய்க் குவிகின்றது? யாருக்கு பயன்படுகின்றது? இது போன்ற கேள்விகள் வர்க்க முரண்பாட்டில் இருந்தே எழுகின்றன.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கிடைத்ததை பகிர்ந்துண்டு வாழ்ந்தார்கள். இப்போதும் சில பழங்குடியின சமுதாயங்கள் இவ்வாறான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் வளங்கள் அரிதாக கிடைக்கவே, பேராசை கொண்ட சிலர் அதனை தான் மட்டும் அனுபவிக்க விரும்பினார்கள். ஒரு மனிதனின் உழைப்பில் இன்னொரு மனிதன் வசதியாக வாழும் பொருளாதாரம் தோன்றிய போதே, வர்க்க முரண்பாடுகளும் தோன்றி விட்டன.


கேள்வி: இடதுசாரியத்தால் மட்டுமா முழுமையான ஜனநாயகத்தை கொண்டுவரமுடியும்?

பதில்: பொதுவாக இடதுசாரியம் என்று கூறி விட முடியாது. மேற்கு ஐரோப்பாவில் சமூக- ஜனநாயக கொள்கை பல வருடங்களாக நீடித்தது. அது கூட இடதுசாரியம் தான். அவர்களால் பெரும் முதலாளிகளுடன் சமரசம் செய்து மக்கள் நலன் பேணும் திட்டங்களை கொண்டு வர முடிந்தது. அதுவும் ஜனநாயகம் தான். இருப்பினும் மேற்கு ஐரோப்பிய ஜனநாயகத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சாத்தியமல்ல. ஏனெனில் பெரும் முதலாளிகள் உலகம் முழுவதும் அத்தகைய சமரசங்களுக்கு உடன்பட மாட்டார்கள். மேற்கு ஐரோப்பாவிலும் நிலைமை மாறிக் கொண்டு வருகின்றது. இடதுசாரிகள் எல்லாம் வலதுசாரிகளாகி விட்டனர். பல கட்சிகள் பங்கு பற்றும் தேர்தல் முறை, ஒரு வகை ஜனநாயகம் மட்டுமே. அது தான் ஜனநாயகம் என்ற மாயையை களைய வேண்டும். ஆட்சியதிகாரத்தில் மக்கள் நேரடிப் பொறுப்பேற்பதும், பொருளாதார உற்பத்தியை மக்கள் நலனுக்காக திட்டமிடுவதும் அவசியமானவை. மக்களுக்கு அரசியல், பொருளாதார அறிவு புகட்டுவதும் சமூகத்தை ஜனநாயகமயப் படுத்த உதவும். சோஷலிச நாடுகளில் நடந்த ஜனநாயகத்திற்கான செயற்திட்டங்கள் குறித்து வெளியில் பலர் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் அது கூட முழுமையான ஜனநாயகம் என்று சொல்வதற்கில்லை. புராதன காலத்தில், ஆப்பிரிக்க சமுதாயங்களிலும், கிரேக்கத்திலும் ஜனநாயக நடைமுறைகள் இருந்துள்ளன. அது போன்ற, அல்லது அதை விடச் சிறந்த ஜனநாயக சமுதாயம் குறித்து பல தத்துவஞானிகள் சிந்தித்துள்ளனர். அந்த இலக்கை அடைவதற்கான பரிசோதனை முயற்சிகளை நடைமுறைப் படுத்தியவர்களே நமது காலத்து இடதுசாரிகள். இருப்பினும் காலப்போக்கில் எழுந்த தத்துவார்த்த முரண்பாடுகள், இடதுசாரியத்தில் பல பிரிவுகளை தோற்றுவித்தது.

கேள்வி:( Vijayakumar Sugumaran )
இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித உழைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாகவும் உற்பத்தி உறவில் மனித உழைப்பின் தாக்கம் குறைவடைந்திருப்பதால் உழைப்பு மூலதனத்தை அடிப்படையாக கொண்ட வர்க்க போராட்ட அரசியல் என்பது பொருத்தமற்றது/ சாத்தியமற்றது என்ற வாதங்கள் தொடர்பில்.....?


பதில்: நிச்சயமாக, நூறு வருடங்களுக்கு இருந்த உலகம் இன்றில்லை. தொழிற்புரட்சி காரணமாக இயந்திரங்களும், ஆலைகளும் நொடிக்கு பல்லாயிரம் பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன. அவற்றின் வேகத்துக்கும், திறனுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் குடிசைக் கைத்தொழில்கள் மறைந்து போயின. அப்போதும் இதே போன்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தொழிற்புரட்சி மனித உழைப்பை மறு வார்ப்புச் செய்தது. நாட்டுப்புறங்களில் விவசாயக் கூலிகளாக வாழ்ந்த மக்களை, ஆலைத் தொழிலாளர்களாக்கியது. இத்தகைய மாற்றங்கள் உலகம் முழுவதும் ஒரே சீராக நடைபெறவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மேற்படி மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலத்தில், பிற நாடுகள் விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தன.

இன்று தொழிற்துறை வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளன. அது தான் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்பப் புரட்சி. இந்த மாற்றத்தின் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. ஆலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அதற்கு மாறாக சேவைத் துறை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இவை எல்லாம் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே. பிற உலக நாடுகளில் இது மிக சொற்ப அளவிலேயே நடைபெற்றுள்ளது. குறிப்பாக விஞ்ஞான, தொழில்நுட்பத்தில் தங்கியிருக்கும் மேற்குலக நாடுகளையும், அனைத்துலக மத்தியதர வர்க்கத்தையும் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டால்; மேற்படி வாதத்தில் நியாயம் இருப்பதைப் போல தோன்றும். பெரும்பான்மை உலக மக்கள் அத்தகைய மாற்றங்களை அறியாதவராக, அல்லது அதன் பலன்களைப் பெறாதவர்களாக இருக்கின்றனர்.

இன்று எத்தனையோ மேற்குலக நாடுகளில் விவசாயம் புறக்கணிக்கப் படுகின்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வறிய நாடுகள் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன. சேவைத்துறைக்கு மாறிய மேற்குலகில், ஆலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டன. அவர்களுக்கு தேவையான உடைகளையும், பாவனைப் பொருட்களையும் சீனர்கள் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மூலதனம் தனது நாட்டின் எல்லை கடந்து, உலகமயமாக்கல் என்ற பெயரில், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. தொழிலாளர் வர்க்கமும் பன்னாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ளது. சில வளர்ச்சியடைந்த நாடுகளில், தொழிலாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய தேசத்தவர்களாக காணப்படுகின்றனர்.

ஆகவே இன்று மனித உழைப்போ, அதன் தாக்கமோ சிறிதேனும் குறையவில்லை. மாறாக அது சர்வதேசமயப் பட்டுள்ளது. அது எமது கண்ணுக்கு புலனாவதில்லை. இன்று வர்க்கப் போராட்டம் சாத்தியமற்றது என்ற மயக்கம் ஏற்படலாம். பல்லின கலாச்சாரங்களை கொண்ட தொழிலாளர்களை ஒற்றுமைப் படுத்துவது சிரமம். அதே நேரம் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் உழைக்கும் வர்க்கம், தன்னிலை மறந்து போராட்டத்தை புறந்தள்ளும். இந்த நிலைமை வளர்ந்த நாடுகளில் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில், "பாரம்பரிய முதலாளி-தொழிலாளி பாகுபாடு" அதிகம் மாறவில்லை. ஆனால் இன,மத, சாதிப் பூசல்கள், உழைக்கும் வர்க்க மக்களை பிரித்து வைக்க பயன்படுகின்றன.


கேள்வி: சீனாவிலும் ரஷ்யாவிலும் பொதுவுடமைக் கொள்கை தோற்றதாக இருப்பது பற்றி?

பதில்: பொதுவுடமைக் கொள்கை எங்கேயும் தோற்கவில்லை. உலகில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொதுவுடமைச் சமுதாயங்கள் இருந்துள்ளன. நவீன உலக வரலாற்றில், பொதுவுடமைத் தேசம் இன்னும் எங்கேயும் தோன்றவில்லை.

ரஷ்யாவும், சீனாவும் சோஷலிச (சமதர்ம) நாடுகளாக இருந்தன. ஒரு கம்யூனிசக் கட்சி மட்டுமே சோஷலிச பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஸ்வீடன் போன்ற சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில், முதலாளித்துவம், பல கட்சி தேர்தல் போன்றவற்றுடன் சோஷலிச பொருளாதாரமும் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள "ஜனநாயக சோஷலிசம்" உலகின் பிற நாடுகளில் சாத்தியமல்ல. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை பிறகு பார்ப்போம்.

ரஷ்யாவிலும், சீனாவிலும் ஒரு வர்க்கப் போருக்குப் பிறகு தான் சோஷலிசத்தை கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்த தலைமுறையினர், பூமியிலே ஒரு சொர்க்கத்தை படைக்கப் போவதாக நம்பினார்கள். பலர் அந்த நம்பிக்கைக்காக உயிர்த் தியாகம் செய்தனர்.

போராட்டத்தினால் கிடைத்த பலன்களை அனுபவித்த இரண்டாவது தலைமுறை "சோஷலிச சொர்க்கத்தில்" வாழும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களுக்கு போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அருமை தெரியவில்லை.

கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்த பெற்றோரையும், சேர்த்த பணத்தை செலவழிக்கும் பிள்ளைகளையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

தொழிற்துறை மயமாக்கல், அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி, நிச்சயிக்கப்பட்ட வேலை வாய்ப்பு, வருமானம், ஓய்வு, அரச செலவில் விடுமுறை, இவை யாவும் சோஷலிசத்தின் சாதனைகள்.

இவற்றை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த மக்கள் தான் சோஷலிச பொருளாதாரத்தை வீழ்த்த துணை நின்றார்கள். அதற்கு முக்கிய காரணம், மேற்குலகமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும் இடையறாது நடத்திய பிரச்சாரம்.

மேற்கத்திய பாணி ஜனநாயகம் ஏற்பட்டால், இப்போது அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளுடன், கூடுதல் சுதந்திரம் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தார்கள். "கூடுதல் சுதந்திரம்" என்பது, அளவுக்கதிகமாக பணம் சேர்ப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது என்று சாமானியர்கள் புரிந்து கொண்டார்கள்.

ஹாலிவூட் திரைப்படங்களை பார்க்கும் எமது மக்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கட்சி ஆட்சி முறை, முதலாளித்துவம் வந்தால், அமெரிக்கத் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல வாழலாம் என்று நம்பினார்கள்.

அது மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே சிலர் சுயநலத்துடன் செயற்பட்டு வந்தனர். கட்சி பிரமுகர்கள் சிலரின் ஊழலை தட்டிக் கேட்க முடியாதிருந்தது. அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை, சொத்துகளை பதுக்கி வைத்தனர். அவற்றை எல்லாம் அனுபவிப்பதற்கு சோஷலிச பொருளாதார அமைப்பு தடையாக இருந்தது. மாளிகைக்குள் நடக்கும் சதிப்புரட்சி போல, கட்சிப் பிரமுகர்களே சோஷலிசத்தை வீழ்த்தினார்கள்.

ஸ்டாலின், மாவோ பதவியில் இருந்த காலத்தில் அத்தகைய சுயநலமிகளின் தலை உருண்டது. ஸ்டாலின், மாவோ காலத்தில் தண்டிக்கப் பட்டவர்கள், அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.

உண்மையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் அப்போதே மெல்ல மெல்ல அறிமுகப் படுத்தப் பட்டன. ரஷ்யாவில் குருஷேவ், சீனாவில் டென்க்சியோபிங் ஆகியோர் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.


கேள்வி: தொடர்ச்சியாக அரபு நாடுகளில் தோன்றி வரும் மக்கள் புரட்சி பற்றி?

பதில்: உண்மையில் இது அரபு நாடுகளில் மட்டுமே தோன்றவில்லை. உலகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் எழுச்சி. வயிற்றுக்கு உணவில்லா விட்டால், மக்கள் கலகம் செய்வார்கள். உலகில் மோசமான சர்வாதிகாரி கூட, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியம் அளிப்பது வழக்கம். இன்றைய உலகில், ஐ.எம்.எப்., உலகவங்கியிடம் கடன் வாங்காத நாடுகள் மிகக் குறைவு. கடன் வழங்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும், அல்லது குறைக்க வேண்டும் என உத்தரவிடுகின்றன. ஆட்சியாளர்கள் அதற்கு கீழ்ப் படிந்தனர். உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. விளைவு, விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கலகம் செய்தனர். அரபு நாடுகளில் மட்டுமல்ல, மொசாம்பிக், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ போன்ற நாடுகளிலும் உணவுக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.

துனிசியாவில் நடந்த புரட்சி எவரும் எதிர்பாராதவொன்று. அது மக்கள் சக்தியை நிரூபித்த ஜனநாயகப் புரட்சி மட்டுமே. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வு இருக்கவில்லை. அதனால் புதிய ஆட்சியாளர்களின் காலத்தில், முன்னைய பிரச்சினைகள் தொடரவே செய்யும். எகிப்தில் நடந்த புரட்சியின் முடிவு, மேற்கத்திய நாடுகளை திருப்திப் படுத்தியது. அதே நேரம் பாஹ்ரைன் புரட்சி வன்முறை கொண்டு ஒடுக்கப்பட்டது. லிபியாவில் எண்ணையை தேசியமயமாக்கியதாலும், நீண்ட காலமாக மேற்குலகிற்கு சவாலாக விளங்கிய கடாபியை அகற்றவும், ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தூபமிட்டனர். ஆகவே எல்லாவித எழுச்சியும் மக்கள் நலன் சார்ந்து எழவில்லை.

மேலும் அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியை தூண்டி விடுவதில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய பங்காற்றியது. அதன் தலைமையகம் அமைந்துள்ள கட்டார், இன்னமும் அமைதியாக காட்சியளிப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் நீண்ட காலமாக ஆட்சி நடத்தும் மன்னர்கள், சர்வாதிகாரிகள் மக்களின் மதிப்பை இழந்து விட்டனர். இதனால் அவர்களால் ஆதரிப்பதால் ஏற்படப் போகும் ஆபத்தை மேற்குலகம் நன்கு உணர்ந்துள்ளது. ஆளுபவரை மாற்றுவதன் மூலம் மக்கள் மனக்குமுறலுக்கு வடிகால் தேடிக் கொடுக்கிறார்கள்.

இலங்கையிலும், இந்தியாவிலும் தேர்தல் ஜனநாயகம் இதற்காகவே கொண்டு வரப் பட்டது. மக்களுக்கு ஒரு கட்சியைப் பிடிக்கவில்லையா? அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியை வெல்ல வைப்பார்கள். ஆண்டாண்டு காலமாக இரண்டில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் சந்தர்ப்பம் உள்ளதால், அங்கெல்லாம் புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை.


சமூக விஞ்ஞான கல்வி வட்டம்