Sunday, October 09, 2011

இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பத்து)


பண்டாரநாயக்காவின் தேர்தல் கால வாக்குறுதியான, "24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டம்," அமுல்படுத்துவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 24 மணிநேரமும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த இலங்கை வானொலியில் சிங்களத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப் பட்டது. ஆனால், தமிழ் புறக்கணிக்கப் பட்டது. இவை போன்ற செயல்கள், தமிழர் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தின. இருப்பினும், நிர்வாகச் சிக்கல் காரணமாக, சிங்களத்துடன், தமிழும், ஆங்கிலமும் பாவனையில் இருக்கும் என்று சட்டம் இயற்ற வேண்டியிருந்தது. இது கட்சிக்குள்ளேயிருந்த மொழித் தீவிரவாதிகளை உசுப்பி விட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தில், தமிழுக்கும் உரிமை வழங்கும் பகுதியை நீக்க வேண்டுமென கோரினார்கள். இறுதியில் கடும்போக்காளர்களுக்கு விட்டுக் கொடுத்து, 5 ஜூன் 1956 ல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

மறுபக்கத்தில், தமிழ் சமஷ்டிக் கட்சியினர், சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளன்று, தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலம் முழுவதும், சமநிலை பேணுவது இயலாத காரியமாக இருந்தது. ஒரு பக்கம் சிங்கள மொழித் தீவிரவாதிகளை திருப்திப் படுத்தினால், மறுபக்கம் தமிழ் மொழித் தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்தார்கள். அவர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால், சிங்கள பேரினவாதிகள் கடுமையான எதிர்ப்புக் காட்டினார்கள். பண்டாரநாயக்கவை பொறுத்த வரையில், பிரதமருக்கான முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கத் தயங்கினார். பதவிக் காலம் முழுவதும், கடும்போக்காளர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து போனார். அந்தக் கோரிக்கைகள், சில சமயம் பிரதமரையும், அவரது கட்சியையும் அவமதிப்பதாக அமைந்திருந்ததன.

தமிழ் மக்களின் தலைவர்கள், சாத்வீக வழியில் போராடிய போதிலும், சிங்கள பேரினவாதிகள் அதைக் கூட பூதாகரமான விடயமாக்கினார்கள். தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவற்றையும், "சிங்களவர்களை இனவழிப்பு செய்ய தமிழர் தயாராகி வருவதாக" பயமுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள். சிங்களம் மட்டும் சட்ட மசோதாவை எதிர்த்து, காலிமுகத் திடலில் தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது. அதற்கு எதிர்வினையாக, கொழும்பில் இருந்த தமிழரின் கடைகள் கல் வீசித் தாக்கப் பட்டன. ஒரு சில நாட்களில், கலவரம் கிழக்கு மாகாணத்திற்கு பரவியது. சமஷ்டிக் கட்சியினர் ஒழுங்கு படுத்திய ஊர்வலத்தில் போலீசார் சுட்டதில், இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர். சுதந்திர இலங்கையில், முதன் முறையாக பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதமும் அப்போது தான் நிகழ்ந்தது.

கிழக்கு மாகாணத்தில், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திற்கு நடுவில் "கல் ஓயா குடியேற்றக் கிராமம்" அமைந்திருந்தது. டி.எஸ்.சேனநாயக்க காலத்தில், மின்னேரியா அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற முதலாவது சிங்களக் குடியேற்றம் அதுவாகும். அந்தக் காலத்தில், நிலமற்ற சிங்கள விவசாயிகளுக்கு தமிழர்களின் நிலங்களை பறித்தெடுத்துக் கொடுத்தார்கள். இதன் மூலம், சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களை எதிரெதிரே நிறுத்தி விடுவதும் அரசின் நோக்கமாக இருந்தது. உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அடிதடியில் இறங்கி விடும் உதிரிப் பாட்டாளி வர்க்க சிங்களவர்களையே குடியேற்றக் கிராமங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

"சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் நோக்கோடு தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்..." என்பன போன்ற வதந்திகளை கேள்விப்பட்ட கல்லோயா குடியேற்றவாசிகள், அயல் கிராமங்களில் இருந்த தமிழர்களை தாக்கினார்கள். குறைந்தது நூறு தமிழர்களாவது, இனவெறித் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கல்லோயா கிராமத்தின் அமைவிடம் காரணமாக, செய்தியின் வீரியம் பிற பகுதிகளில் அறியப் படவில்லை. கொழும்பு ஊடகங்களும், அரசும், அதனை தற்செயலாக நடந்த அசம்பாவிதமாக பார்த்தன. அந்த எண்ணம் எவ்வளவு தூரம் தவறானது என்பதை, அடுத்து வரும் ஆண்டுகள் நிரூபித்தன.

சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையில், முதலாவது தமிழினப் படுகொலைகள், கிழக்கு மாகாணத்தில் தான் அடுத்தடுத்து இடம்பெற்று வந்தன. அவை பெரும்பான்மை தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பதால், தமிழர்களின் பதில் வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஏற்படுத்தப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள், அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. தரகு முதலாளித்துவ சார்புக் கட்சியான, முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசு, கம்யூனிச அபாயத்தை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அது. தேசிய வளங்களை அபிவிருத்தி செய்வது பெயரில், தரிசான பூமியில் விவசாயக் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் இனத்தின் பெயரில் அறிமுகப் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை திசைதிருப்பல், மின்னேரியா குளம் புனரமைப்பு போன்ற பெயரில் நடந்த குடியேற்றங்களுக்கு தமிழர்கள் யாரும் செல்லவில்லை. அரசும் அதனை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது.

இதே நேரம், வட மாகாணத்தில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. வவுனியாவுக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான வன்னிப் பகுதி பெருமளவு காடுகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று குடியேறிய விவசாயக் குடும்பங்கள், காட்டை அழித்து பயிர் செய்யவாரம்பித்தன. வன்னிக் குடியேற்றங்களும், அரசினால் ஊக்குவிக்கப் பட்ட திட்டங்கள் தான். (தமிழ்க் காங்கிரசின் தலையீடு காரணமாக ஆதிக்க சாதி வேளாளர் தான் பெருமளவில் குடியேறி இருந்தனர்.)

வன்னி தமிழ்க் குடியேற்றங்களுக்கும், கிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருந்தது. வன்னியில் காடுகளே அதிகமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே குடியிருந்தவர்களும் தமிழர்கள் தான். ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறு. தமிழர்கள் நெருக்கமாக வாழ்ந்த பிரதேசத்தின் நடுவில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் அமைக்கப் பட்டன. தமிழரின் நிலங்களும் ஆடாவடித்தனமாக பறிக்கப் பட்டன. பாலஸ்தீனப் பிரதேசத்தில் நடந்த யூதக் குடியேற்றங்களின் பாணியில், இலங்கையில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டனர். உண்மையில், ஐரோப்பிய காலனியக் கொள்கையின் பிராந்திய வெளிப்பாடு அது. பலவீனமான மக்களின் நிலங்களை பறித்தெடுத்து, தன்னின மக்களை வாழ வைக்கும் "இனவாத-பொருளாதாரக் கொள்கை" தான் அமெரிக்காவையும் உருவாக்கியது.

பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்து நிறுத்தப் பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த குடியேற்றங்களை அகற்றாமல் விட்டது பாரிய தவறு என்பதை அப்போது உணரவில்லை. உண்மையில் பண்டாரநாயக்க, தனது கட்சிக்கு ஆதரவளித்த பிக்குகளின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முன்வரவில்லை. "மேலைத்தேய சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிரான, சிங்களக் கலாச்சாரக் காவலர்களாக" காட்டிக் கொள்வதே பிக்குகளின் முதன்மையான அரசியல் செயற்பாடாகவிருந்தது. (தமிழ் கலாச்சாரக் காவலர்களான, தமிழ் உணர்வாளர்களின் அரசியலும் ஒன்று தான்.)

பௌத்த பிக்குகள் முன்மொழிந்த, கலாச்சார விழுமியங்கள் எதையும் பண்டாரநாயக்க அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பிக்குகள் கோரிய மதுபான தடைச் சட்டம் பற்றி பாராளுமன்றம் விவாதிக்கவே இல்லை. அதே போன்று, பௌத்த மத உயர்கல்வி நிறுவனமான பிரிவேனாக்களை, பல்கலைக்கழகத்திற்கு நிகராக தரமுயற்றும் கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. பிக்குகளின் அபிலாஷைகளுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட நில உச்சரவம்புச் சட்டம், பௌத்த மடாலயங்களின் பொருளாதாரத்தை பாதித்தது. இதை விட, வேறு சில முற்போக்கான மாற்றங்களும் பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டன. 1957 ல் நிறைவேற்றப் பட்ட, "சமூகக் குறைபாடுகள் ஒழிப்பு சட்டம்", முதன் முதலாக சாதிய தீண்டாமையை சட்டவிரோதமாக்கியது. இவற்றை விட, அரசின் வெளிவிவகாரக் கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சோஷலிச நாடுகளுடன் உறவு ஏற்படுத்தப் பட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படை முகாம்கள் மூடப் பட்டன. பொருளாதார ரீதியாக, தேசியமயமாக்கல் கொள்கைக்கு உள்நாட்டில் ஆதரவு பெருகியது.

பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில், பிலிப் குணவர்த்தன என்றொரு மார்க்சிய அறிவுஜீவி இருந்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கொவிகம சாதியில் பிறந்தவர் என்ற போதிலும் வர்க்க சிந்தனை கொண்டவராக இருந்தார். 1935 ல், இங்கிலாந்து கல்லூரிகளில் பயிலும் காலத்தில் மார்க்ஸியம் குறித்து அறிந்து கொண்டு நாடு திரும்பிய இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். இருப்பினும் பிற்காலத்தில் இடதுசாரித் தேசியவாதியாக மாறி விட்டார். அவரது தந்தையும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசியவாத எழுச்சியில் பங்குபற்றியமைக்காக சிறை சென்றவர். அந்தக் காலத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மார்க்சியர்கள் மத்தியில், பிலிப் குணவர்த்தன வித்தியாசமானவராக திகழ்ந்தார்.

1956 ல் கூட, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சிங்களம் படிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதே நேரத்தில், பிலிப் குணவர்த்தனவின் வீட்டில் சிங்களம் பேசப்பட்டது குறிப்பிடத் தக்கது. இன்று "தமிழ் தேசியத்துடன் ஒத்துழைப்பது, தமிழ் இடதுசாரிகளின் தார்மீகக் கடமை" என்று நம்பப் படுவது போன்று, அன்று சில சிங்கள இடதுசாரிகள் நம்பினார்கள். உண்மையில், பண்டாரநாயக்க போன்ற தூய சிங்கள தேசியவாதிக்களுக்கும், குணவர்த்தன போன்ற மார்க்சிய மேதைகளின் ஆலோசனைகள் தேவைப்பட்டன. சிங்கள மக்களை, வர்க்க ரீதியாக பிளவு படுத்துவது குணவர்த்தன கொண்டுவந்த பொருளாதார திட்டங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், பண்டாரநாயக்க அந்த நோக்கம் நிறைவேற அனுமதிக்காதது மட்டுமல்ல, இறுதியில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். இவையெல்லாம் பண்டாரநாயக்கவின் கொள்கை மாற்றத்தில் ஏற்பட்ட பாரிய தவறு மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளின் தவறும் இதில் அடங்கியுள்ளது. அதற்கு காரணம், தமிழ் தேசியவாத தலைவர்கள் முதலில் பூர்ஷுவா வர்க்கத்தினர், அதற்குப் பிறகு தான் அவர்கள் தமிழர்கள்.

நில உச்சவரம்புச் சட்டம், நெல் பயிரப்படும் வயல் நிலங்களை மட்டுமே இலக்கு வைத்தது. அதனால், தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட முதலாளிகளை பாதிக்கவில்லை. புதிய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் வயல் நிலங்களை அரசு பறித்தெடுத்து, உழுபவருக்கு சொந்தமாக்க விரும்பியது. இலங்கை காலனிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், நிலப்பிரபுத்துவ சமுதாய முறை தொடர்ந்தது. நாட்டின் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரரான நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டிருந்தனர். பயிரப்படும் நெல்லில் பெரும்பகுதி நிலப்பிரபுக்கு சொந்தமாகையால், குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலின் பலன்கள் கிடைப்பதில்லை.

நிலப்பிரபுக்கள் எப்போதும் உயர்சாதியினராக இருந்தனர். குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் பிற்படுத்தப் பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விவசாயம் செய்யும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது. அரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்டமும், அதன் விளைவுகளும், சாதிய சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெருமளவு தாழ்த்தப் பட்ட சாதியினர் விவசாயக் கூலிகளானது மட்டுமல்ல, சிறிதளவு நிலங்களையும் பெற்றுக் கொண்டனர். உண்மையில், அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க நினைத்த, நிலப்பிரபுக்களின் செயல்பாடுகள் தோற்றுவித்த எதிர்பாராத சமுதாய மாற்றம் அது.

உண்மையில் குணவர்த்தன இயற்றிய நில உச்சவரம்புச் சட்டம், உள்ள படியே நடைமுறைக்கு வந்திருந்தால், அது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். நிலவுடமையாளர்களின் நிலங்களும், அறுவடையில் பெரும் பகுதியும், அவற்றை பயிர் செய்த குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாகி இருக்கும். நிலப்பிரபுக்களுக்கு சிறிதளவு தொகையை நஷ்டஈடாக அரசு வழங்கும். உழவர்களின் கமிட்டிகள் உருவாக்கப் பட்டு, விவசாயக் கூலிகளின் ஊதியமும் அதிகரிக்கப் பட்டிருக்கும். முன்னாள் குத்தகை விவசாயிகளைக் கொண்ட உழவர் குழுக்கள், நிலமற்ற விவசாயக் கூலிகளையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் இதனால் இலாபமிருந்தது. முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்த விவசாய உற்பத்தி அரசமயமாகும். இருப்பினும், அரசாங்கத்திற்குள்ளேயே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிராளிகள் இருந்ததால், சட்டத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே அமுல்படுத்த முனைந்தார்கள். அதற்குக் காரணம், பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர், நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் ஏராளமான நிலங்களை, சிங்களப் பகுதிகளிலும் சொந்தமாக வைத்திருந்தனர். பண்டாரநாயக்கவின் குடும்பத்தின் உள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது வேடிக்கையானது. அவரது துணைவியார் சிறிமாவோவின் குடும்பத்தினர், கண்டி மாகாணத்தின் பெரிய நிலவுடமையாளர்கள். நில உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய்யுமாறு, சிறிமா ஊடாக பண்டாரநாயக்கவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதியாக சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அது நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அசைக்கவில்லை. ஆயினும், சட்டம் அமுலாக முன்னரே, குத்தகை விவசாயிகளுக்கு பதிலாக, பெருமளவு விவசாயக் கூலிகள் வயல்களில் வேலை செய்ய வைக்கப் பட்டனர். குத்தகை விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்தை சொந்தமாக்குவதாக சட்டம் கூறியதால், விவசாயக்கூலிகளை பணிக்கு அமர்த்தியதன் மூலம், மறைமுகமாக நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.

நிச்சயமாக, நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கண்டியில் நடந்த எதிர்ப்பியக்கத்திற்கு, சிறிமாவின் சகோதரர் பார்னஸ் ரத்வத்த தலைமை தாங்கினார். என்ன பாடுபட்டாவது சட்டத்தை நடைமுறைக்கு வர விடாமல் தடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டனர். புத்த பிக்குகளும் நிலவுடமையாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர். நிலப்பிரபுத்துவத்திற்கும், மதத்திற்கும் இடையிலான பொருளாதார உறவு உலகம் முழுவதும் உள்ளது தான். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பௌத்த மடாலயங்களுக்கு சொந்தமாகவும் பல ஏக்கர் நெல் வயல்கள் இருந்தன. மடாலயங்களில் வசித்த பிக்குகளின் முக்கிய வருமானமும் அது தான். நிலவுச்சவரம்பு சட்டம் தமது அடிமடியிலேயே கை வைப்பதை உணர்ந்த புத்த பிக்குகள், பண்டாரநாயக்க அரசுக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால், இந்த விடயத்தில் அரசை விமர்சித்தால், சிங்கள உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பொருளாதாரப் பிரச்சினையை, இனப்பிரச்சினையாக திசை திருப்பி விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இது போன்ற அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட விரும்பாத எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இனவாத அரசியலுக்குள் நுழைந்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்கள், 1957, 1958 ஆகிய வருடங்களில் இடம்பெற்றன. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. இயல்பாகவே வர்க்க சிந்தனை கொண்ட உழைக்கும் மக்களின் மனதில் இனவாதக் கருத்துகளை பரப்ப வேண்டும். அதுவே மேட்டுக்குடி வர்க்க நலன்களை காப்பாற்ற உதவும். சிங்கள பேரினவாதிகள், இனவாத பௌத்த பிக்குகள், தமிழ் குறுந் தேசியவாதிகள், இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளியும் அது தான். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தினரின் நலன்களுக்காக, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களை நீண்டதொரு இனக்குரோத போருக்குள் தள்ளி விட்டனர்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

3 comments:

சார்வாகன் said...

இந்த உண்மைகளை எவரும் எடுத்துக் கூறியது இல்லை.ஒருவேளை கூறி இருந்தல் போராட்டம்,அதன் ஆதரவு வேறு வழியில் இருந்து பிரச்சினை முதலிலேயே தீர்ர்க்கப்பட்டு இருக்கும்.
உண்மைகள் சுடுகிறது!!!!!!!!!!!.
நன்றி சகோ!

PS பின்னூட்டம் இடும் இணைப்பு மறைந்து உள்ளது ஆவண செய்யவும்!

Mohamed Faaique said...

இப்பொழுதுதான் புரிகிறது, பண்டாரனாயக்க மீது சிங்களவர்களுக்கு ஏன் அவ்வளவு பற்று என்று...

aotspr said...

எல்லாம் அரசியல்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com