Monday, May 16, 2011

சுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர், சுவிஸ் வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர், முதலில் அயல்நாடுகளில் தஞ்சம் கோரி விட்டு வந்திருந்தார்கள். இன்றைக்கும் அந்த நிலை மாறவில்லை. தமிழர்களின் முதல் தெரிவு சுவிட்சர்லாந்தாக இருந்து வருகின்றது. சுவிட்சர்லாந்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது?
சுவிட்சர்லாந்து மத்திய ஐரோப்பாவை சேர்ந்த சிறிய நாடு. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஓஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. முதலில் அந்த நாடுகளில் தஞ்சம் கோரி, சிறிது காலம் தங்கி விட்டு எல்லை தாண்டி சுவிட்சர்லாந்து வந்திருந்தார்கள். என்னோடு முகாமில் தங்கியிருந்தவர்களில் நேராக சுவிட்சர்லாந்து வந்தவர்கள் மிகக் குறைவு என்பதை தெரிந்து கொண்டேன். ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள், தம்மை கிழக்கு ஜெர்மன் பகுதிகளில் தங்க வைத்ததால், தப்பி வந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தாலியில் இருந்து வந்தவர்கள், அந்த நாட்டில் தமக்கு அகதி தஞ்சம் கிடைக்கவில்லை என்றனர். வேறு சிலர், தஞ்ச மனு நிராகரிக்கப் பட்டதால், வேறு வழியின்றி வந்ததாக கூறினார்கள். ஆனால், "மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் ஊதியம் அதிகம் கொடுக்கிறார்கள்." என்ற காரணத்தை எல்லோரும் ஒப்புவித்தார்கள். மனித உழைப்பும் ஒரு சந்தையில் விற்கப்படும் பண்டம். யார் அதிக விலை கொடுக்கிறார்களோ, அவர்களிடம் தமது உழைப்பை விற்க வந்திருக்கும் உண்மையை அவர்கள் மறைக்கவில்லை.

சுவிஸ் முகாம்கள் தமிழர்களால் நிரம்பி வழிந்தன. அந்தக் காலம் பதவியில் இருந்த அகதிகளுக்கான அரசு அதிகாரி பீட்டர் அர்பென்ஸ்: "சிறிய நாடான சுவிட்சர்லாந்து தமிழர்களின் மிகப் பெரிய குடியேற்ற நாடாக மாறிவிட்டது." என்று தெரிவித்தார். ஆமாம், அரசு மட்டத்தில் அது குறித்த கவலை இருந்தது. ஆனால் தமிழர்களின் வருகையை தடுக்க முனையவில்லை. அதற்கு காரணம், அகதிகளாக வந்த தமிழர்கள் அனைவரும் உழைப்பதற்கு தயாரான, உடலில் வலு கொண்ட இளம் வயதினர். தஞ்சம் கோரியவர்களில் 99 வீதமானோர் ஆண்களாக இருந்தனர். அதிலும் 16 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகம். தலைநகரமான பெர்ன் அருகில் நான் தங்கியிருந்த முகாமும் அப்படிப்பட்டதே. முகாம்வாசிகளான அகதிகளை தமிழர்கள் என்றழைப்பதை விட இலங்கையர்கள் என்றழைப்பதே பொருத்தம். ஒரு சில முஸ்லிம், சிங்கள அகதிகளும் வசித்தனர். சிங்கள இளைஞர்கள் வந்த புதிதில் சுவிஸ் காதலிகளை தேடிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். சில நேரம், வேலை அகதிகளை தேடி வந்தது. முகாம் அதிகாரிகளே எங்காவது வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சில நாட்களே செய்யக் கூடிய கூலி வேலையாக இருக்கலாம்.

நான் தங்கியிருந்த, பேர்ன் மாநிலத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருந்த முகாமில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் அதிகம் காணப்பட்டனர். இருப்பினும் தமிழ் அகதிகளுக்கு மட்டுமே வேலை தேடி வந்தது. "தமிழர்கள் என்றால் எப்படியும் வேலை கிடைத்து விடும்" என்று முகாமில் இருந்த ஆப்பிரிக்க அகதிகள் எம்மை பொறாமைக் கண்களால் பார்த்தார்கள். எனக்கும் ஒரு வேலை கிடைக்கும் வரையில் அந்தப் புதிருக்கு விடை கிடைக்கவில்லை. ஆறு மாதத்தில் ஓரளவு மொழியறிவு பெற்று, குறைந்த பட்சம் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களை வாசிக்கக் கூடிய நிலையில் இருந்தேன். இரண்டாயிரம் அடி மலை உச்சியில் இருந்த உணவு விடுதிகளிலும், சமையலறை துப்பரவாளராக வேலை செய்வதற்கு தமிழர்களை விரும்பிக் கேட்டிருந்தார்கள். சில விளம்பரங்களில் தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தனர். அப்போது, சுவிட்சர்லாந்துக்கு முதல் தொகுதி தமிழர்கள் வந்து, அதிக பட்சம் ஐந்து வருடங்கள் ஆகியிருக்காது. சுவிஸ் முதலாளிகளுக்கு தமிழ்த் தொழிலாளர்கள் மேல் தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. தமிழர்களைக் கேட்டால், "நாம் தான் உலகிலேயே கடின உழைப்பாளிகள். அதனால் எம்மை மதிக்கிறார்கள்." என்றனர். எனக்குக் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.

சுவிட்சர்லாந்தில் வாழும் அந்நிய தொழிலாளிகளைப் பற்றிய சிறு குறிப்புகளுக்குப் பிறகு தமிழர்களைக் கவனிப்போம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தை நவீனமயப் படுத்தும் கட்டுமானப் பணிகளுக்கு துருக்கிய தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக வந்தவர்கள், குடும்ப சமேதராக சுவிட்சர்லாந்திலேயே தங்கி விட்டனர். முதல் தலைமுறை உழைப்பாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் வயதாகி விட்டது. தந்தையர் செய்த தொழில்களை செய்வதற்கு, இரண்டாவது தலைமுறை துருக்கியர்கள் தயாராக இல்லை. குறைந்த பட்சம் தொழிற்கல்வி ஒன்றையாவது முடித்து விட்டு, வேறு வேலை தேடிச் செல்கிறார்கள். அடுத்ததாக ஸ்பெயின், போர்த்துக்கல் தொழிலாளிகளை தருவித்தார்கள். சுவிட்சர்லாந்தில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, சிறிது காலத்தில் தமது நாடுகளுக்கு திரும்பி விடுவார்கள். அதே போல, முன்னாள் (சோஷலிச) யூகோஸ்லேவியாவில் இருந்தும் தொழிலாளிகள் வந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒன்பது மாத விசா வழங்குவதன் மூலம், நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பை முன்கூட்டியே தடுத்தார்கள்.

வெள்ளைத் தோல் கொண்ட ஐரோப்பியர்களை, உணவு பரிமாறும் பணியாளர்கள் போன்ற வேலைகளுக்கு ஈடுபடுத்த முடிந்தது. அவர்கள் வந்து சில மாதங்களிலேயே மொழியை சரளமாக பேசக் கற்றுக் கொண்டனர். இதனால் சற்று அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, உடல் உழைப்பை குறைவாக செலவிடும் வேலைகளையும் தேர்ந்தெடுத்தனர். இன்னொரு பக்கத்தில் மிகக் கடினமான பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் தேவைப்பட்டனர். உணவுவிடுதிகளில் பாத்திரங்களை கழுவுவது, துப்பரவாக்குவது, போன்ற வேலைகளுக்கு தொழிலாளர் தட்டுப்பாடு நிலவியது. என்பதுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவின் அரசியல் சூழல் விரைவாக மாறிக் கொண்டிருந்தது. துருக்கியில் ஆட்சிக்கு வந்த இராணுவ சர்வாதிகாரம், தொழிலாளிகளை விட அகதிகளையே அதிகமாக அனுப்பிக் கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் துருக்கியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் தீவிர இடதுசாரி இளைஞர்கள். (சுவிஸ்காரர்களுக்கு கம்யூனிசம் என்றால் கொஞ்சம் அலர்ஜி) யூகோஸ்லேவியாவில் சோஷலிசம் மறைந்து, தேசியவாத சக்திகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டிருந்தன. போர்த்துகலும், ஸ்பெயினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்கள் என்பதால், அந்த நாடுகளின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருந்தது. அத்தகைய இக்கட்டான தருணத்தில் தான், தமிழ் அகதிகள் சுவிட்சர்லாந்தினுள் நுழைந்தார்கள்.

அகதிகளாக வந்த தமிழர்களை விசாரணை செய்யும் பொழுதே சுவிஸ் அதிகாரிகள் அவர்களை எடை போட்டிருப்பார்கள். இவர்கள் வெள்ளயர்களல்ல, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டவர்களல்ல. அதனால் உள்ளூர் சுவிஸ் சமூகத்துடன் இலகுவாக ஒன்று கலக்க மாட்டார்கள். அதனால், சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்களை அவர்களாகவே அறிந்து கொள்ள சில காலம் எடுக்கும். துருக்கி அகதிகளைப் போல இவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல. அதனால் தொழிலாளர்களின் உரிமை கேட்டு போராட மாட்டார்கள். அப்படியானவர்களை நாட்டினுள் அனுமதிக்க ஏன் தயங்க வேண்டும்? தமிழ் அகதிகள் வேலை செய்யத் தொடங்கிய சில வருடங்களில், சுவிஸ் அரசு இன்னொரு மாயவலை விரித்தது. தொழில் வாய்ப்பு உள்ள வரை சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கான "B " அனுமதிப் பத்திரம் வழங்க முன்வந்தது. ஆனால் ஒரு நிபந்தனை. "நான் அகதி அல்ல" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும். பல வேற்றின அகதிகள் அத்தகைய நிபந்தனைகளுக்கு தயங்கிய போது, பல தமிழர்கள் B அனுமதிப் பத்திரம் வாங்கிக் கொண்டனர். இதனால் சுவிஸ் அரசுக்கு இரண்டு நன்மைகள். ஒன்று: எமது நாட்டில் அகதிகள் எண்ணிக்கை குறைவு என கணக்குக் காட்டலாம். இரண்டு: வேலை பறிபோகும் காலத்தில், இலகுவாக தாயகத்திற்கு திருப்பி அனுப்பலாம். சுருங்கக் கூறின், சுவிஸ் அரசு அகதியாக வந்தவர்களை தொழிலாளிகளாக மாற்றுவதிலேயே அதிக அக்கறை காட்டியது. இதனால் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதை காலவரையறை இன்றி தள்ளிப் போட்டது.

சுவிட்சர்லாந்து சிறந்த ஜனநாயகத்தைக் கொண்ட நாடு எனப் பாராட்டப் படுகின்றது. அதே நேரம், ஒரே வேலைக்கு வெவ்வேறு ஊதியம் கொடுப்பதை அனுமதிக்குமளவு பாரபட்சம் காட்டும் நாடும் அது தான். தஞ்சம் கோரிய ஒருவரின் விண்ணப்பத்தை பரிசீலித்து அகதியாக முடிவெடுக்கும் வரையில் அவருக்கு நிச்சயமற்ற வாழ்க்கை தான். அத்தகையவர்கள் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டப் படி வரையறை செய்யப்படுகின்றது. அந்த வேலைகளுக்கு கூட குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகின்றது. வதிவிட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதே வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கலாம். அகதிகளை அங்கீகரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் குறைந்த கூலிக்கு உழைக்கும் காலமும் அதிகரிக்கும். அத்தனை வருடங்களும் அகதிகளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் மில்லியன் பிராங்குகள் சம்பாதித்து விடுவார்கள். மேலும் வேலை செய்யும் அகதிகளின் சம்பளத்தில் ஒரு தொகை கழிக்கப் பட்டு, முகாமில் வதியும் அகதிகளின் செலவினத்தை ஈடு செய்கிறார்கள். அரசு, முதலாளிகள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் என்று பல சுவிஸ் அமைப்புகள் அகதிகளின் உழைப்பை சுரண்டி இலாபமடைகின்றனர்.

2 comments:

சஞ்சயன் said...

நன்று. இதைப் போன்றொரு கட்டுரையை நோர்வேக்கும் எழுதுங்களேன்.

Kannan said...

சமீப காலமாக உங்களுடைய பல கட்டுரைகள், இரண்டு முறை அடுத்து அடுத்து வருகின்றன. முடிந்தால் சரி செய்யவும்.