Friday, April 08, 2011

ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 12)

சிக்கலான ஈழத்தமிழர் பிரச்சினையின் அடிப்படை தமிழகத்திலும், வெளியிலும் அரிதாகவே புரிந்து கொள்ளப் படுகின்றது. ஈழப்போராட்டத்தின் கொள்கைகள் அதனை முன்னெடுக்கும் அமைப்புகளால் அடிக்கடி மாறுபட்டு வந்துள்ளன. ஒரு காலத்தில் இந்திய இராணுவத் தலையீட்டைக் கோருபவர்கள் தமிழ் தேசிய உணர்வாளர்களாக கருதப் பட்டார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டனர். இந்திய இராணுவம் யாழ் நகரைக் கைப்பற்றியவுடன், புலிகளின் ஊடகமான "நிதர்சனம்" தொலைக்காட்சி நிலையத்தின் அண்டெனா கோபுரத்தை குண்டு வைத்து தகர்த்தனர். அதற்கு அவர்கள் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே போல, புலிகள் அமைப்பினரால் கைப்பற்றப் பட்டு, ஏறத்தாள உத்தியோகபூர்வ பத்திரிகையான ஈழமுரசும் முடக்கப்பட்டது. அதன் ஆசிரியர் சிறை வைக்கப் பட்டார். போரின் முடிவில் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த யாழ்ப்பாணத்தில் "ஈழநாடு" மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது.

ஈழநாடு, யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சிடப்பட்ட முதலாவது பிராந்தியப் பத்திரிகை. அன்றைய யாழ் குடாட்டில், இந்தியத் தினசரியான தினமணி அடுத்த நாளே கடைகளில் கிடைத்தது. பிரபல இந்திய நாளேடுகளான தினத்தந்தி, தினமணி "யாழ் பதிப்பை" வெளியிடாத குறை மட்டுமே எஞ்சியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஈழநாடும் இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வந்தது. பொதுவாகவே ஆறுமுக நாவலரின் சித்தாந்த வழிவந்த யாழ் மக்கள் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி வந்தனர். ஈழநாடு ஆசிரிய பீடமும் அத்தகைய மாயையில் இருந்து மீள முடியாமல் இருந்தது. இருப்பினும் அந்த எண்ணமே அவர்களுக்கு எமனாகிப் போனது. ஈழநாடு பத்திரிகை அச்சகத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தார்கள். அதற்கு உரிமை கோரும் துண்டுப் பிரசுரங்கள் யாழ் நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன. "இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த, இந்திய நலன் பேணிய..." காரணங்களுக்காக ஈழநாடு காரியாலயம் தாக்கப் பட்டதாக புலிகள் அறிவித்திருந்தனர்.

யாழ் நகரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த வாராந்த செய்தி இதழ்களில் "Saturday Review " குறிப்பிடத் தக்கது. தமிழரின் இனப்பிரச்சினையின் பால் பரிவு கொண்ட சிங்கள இடதுசாரிகள் யாழ் நகரில் இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்துடனான போரை அவர்கள் ஆதரித்தனர். "ஈழம் இந்தியாவின் வியட்நாமாக மாறும்" என்பன போன்ற ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். இதனால் அடிக்கடி இந்திய இராணுவத்தின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்தனர். "திசை" என்ற தமிழ் வாராந்த பத்திரிகை கொழும்பில் இருந்து பிரசுரமானது.

முதன் முதலாக எனது கவிதை ஒன்றை, திசை வெளியிட்டிருந்தது. அந்தக் கவிதையில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழான அவலங்களை பதிவு செய்திருந்தேன். மேற்குறிப்பிட்ட இடதுசாரி ஊடகங்கள், புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பதாக நம்பின. புலிகளும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மக்கள் மனதில் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். போரின் பின்னர் மீள உயிர்த்தெழுந்த சாவகச்சேரி நகர சந்தையில், காந்தித் தாத்தா A .K .47 துப்பாக்கியுடன் காணப்படும் "கட் அவுட்" ஒன்று வைக்கப் பட்டிருந்தது. இந்திய படையினர், அதைக் காணாதது போல நடந்து கொண்டனர். புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில் கட்டப்பட்ட சிலைகளை, போராளிகளின் 'கட் அவுட்' களை உடைப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

யாழ் நகரில் இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், யாழ் பல்கலைக் கழகத்திற்கு அருகில் பிரபாகரன் மறைந்திருந்ததாக இந்திய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. ஒரு நாளிரவு, பாரசூட் படையினர் பலகலைக்கழக வளாகத்தை நோக்கி தரையிறக்கப் பட்டனர். இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகள், பரசூட் இறங்கும் பொழுது சுட்டனர். இறக்கப்பட்ட அத்தனை படையினரும் கொல்லப் பட்டனர். இந்திய இராணுவத் தலைமையின் அவமானகரமான தோல்வியாக அந்தச் சம்பவம் கருதப் படுகின்றது. அங்கிருந்து தப்பிய பிரபாகரன், வன்னிக்கு செல்லும் வழியில் தென்மராட்சிப் பகுதியில் மறைந்திருந்தார். அப்போது ஆதரவாளர்களைக் கூப்பிட்டு எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இந்திய இராணுவத்துடனான போருக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்ற உண்மையை புலிகள் உணர்ந்திருந்தனர். இந்திய இராணுவ ஒடுக்குமுறை ஆட்சி நீடித்தால், மக்கள் புலிகளை ஆதரிப்பார்கள் என்று எடை போட்டனர். எனது உறவினர்கள் சிலரும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்ததால், ஒரு பொறுப்பாளரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. போரின் போக்குக் குறித்து அவரின் கருத்துகளை கேட்ட எமக்கு அதிர்ச்சியாகவிருந்தது. ஈழப்போராட்டம் தொடங்கிய நாள் முதல், இந்தியா இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியிருந்தது. அது மட்டுமல்ல, இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றம் வரையில் பேசக் கூடிய நட்பு நாடாகவே இந்தியாவை கருதி வந்தோம்.

அத்தகைய இந்தியாவை பகைப்பதால், ஈழத்தமிழருக்கு நன்மை ஏற்படுமா? என்பதே பலரின் கேள்வியாகவிருந்தது. "போர் தொடர்ந்தால் இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானுடன் நட்புறவை ஏற்படுத்துவோம். முன்னாள் எதிரியான சிறிலங்கா இராணுவத்துடனும் கூட்டுச் சேருவோம். எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அந்நிய இராணுவத்தை வெளியேற்றுவதில் ஒன்று பட்டு செயற்படுவோம்." என்று அந்தப் பொறுப்பாளர் கூறினார். பல வருடங்களுக்குப் பின்னர், தமிழகத்தில் சந்தித்த இடதுசாரி பதிப்பாசிரியர் ஒருவரும் அத்தகைய கருத்துகளை உதிர்த்தார். நக்சல்பாரி பாரம்பரியத்தில் வந்த அந்தப் பதிப்பாசிரியர், "உதாரணத்திற்கு, இந்தியா மீது அமெரிக்கா படையெடுத்தால், நாம் (இந்து பாசிச)ஆர்.எஸ்.எஸ். உடனும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்போம்." என்றார்.

இந்திய இராணுவத்துடனான போரானது, ஈழப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. அது வரை காலமும் இந்தியாவை தளமாக வைத்திருந்த தேவை அற்றுப் போனது. மேற்கத்திய நாடுகளை தளமாகப் பயன்படுத்தினார்கள். சோவியத்-ஆப்கான் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தானில் ஆயுதங்கள் கறுப்புச் சந்தையில் விற்கப் பட்டன. பாகிஸ்தானில் அமெரிக்க ஆயுதங்களை வாங்கி, கப்பல் மூலம் கடத்தும் திட்டம் அதற்கு முன்னரே ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். இதற்கிடையே இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாசா, இலங்கையின் ஜனாதிபதியானார். இந்திய படைகளை வெளியேற்றுவதை இலட்சியமாக கொண்டிருந்த பிரேமதாசா, புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்தார். வவுனியாவில் சிறிலங்கா இராணுவம் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தாலும், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது.

பிரேமதாசா, அரசியலில் தன்னை ஒரு சிங்கள கடும்போக்கு இனவாதியாக காட்டிக் கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் வியக்க வைத்தார். பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஆலோசகர் ஒரு தமிழர். பிரேமதாச அரசுடன், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். முக்கிய அரசியல் தலைவர்களான யோகி, தினேஷ்(தமிழ்ச்செல்வன்),ஆகியோர் கொழும்பு நகரில் தங்கியிருந்தனர். அரச செலவில் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்ததை, எதிர்க்கட்சி அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத நட்புறவு பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது.

"வட-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் படைகளின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பில் அரசியல் தஞ்சம் கோரலாம்," என்று அரசே அறிவித்தது! அவ்வாறு வரும் அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்காக, "சரஸ்வதி மண்டபம்" அகதி முகாமாக மாற்றியமைக்கப் பட்டது!! கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், புலிகளும், அவர்களது குடும்பத்தினரும் அகதிகளாக பதிந்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது.

யாழ் குடாநாட்டில் பெரியளவு தாக்குதல்கள் நடக்கா விட்டாலும், புலிகள் குறைந்த பட்சம் இயல்பு வாழ்வை சீர்குலைக்க விரும்பினார்கள். இராணுவக் காவலரன்களுக்கு கிரனேட் வீசி விட்டுப் போவது அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. புலிகள் அமைப்பின் தலைவர்கள் வன்னிக் காட்டுக்குள் மறைந்திருந்ததால், இந்திய இராணுவமும் காடுகளுக்குள் போர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதனால் வியட்நாமில் நடந்ததைப் போன்ற கெரில்லா யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது. மரங்களில் வெடி குண்டு பொருத்தி வைப்பது போன்ற, கெரில்லா போர்த் தந்திரங்களால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போயினர்.

இதே நேரம், தமிழகத்தில் புலிகளின் போராட்டத்தை சித்தரிக்கும் பிரச்சார ஒலிப்பேழை ஒன்று தயாரிக்கப் பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா போன்ற பிரபல பின்னணிப் பாடகர்களின் குரலில், மெல்லிசையில் இசையமைக்கப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. யாழ்ப்பாணத்தில் மக்கள் இரகசியமாக கேட்டு மகிழ்ந்தனர். புலிகளை ஆதரிக்காதவர்களையும் அந்தப் பாடல்கள் முணுமுணுக்க வைத்தன. நான் கொழும்பில் நின்ற காலத்தில், வெள்ளவத்தையில் இருந்த தமிழ் தேநீர்க் கடைகள் எங்கும் அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தால் தடை செய்யப்பட்ட ஒலிப்பேழை, கொழும்பில் கடைகளில் பகிரங்கமாக விற்பனையானது.

"புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான தேனிலவு" தென்னிலங்கை பத்திரிகைகள் குறிப்பிட்டு எழுதின. அரச தொலைக்காட்சியும், வானொலியும் புலிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைத்தன. அதிகம் பேசுவானேன்? ஜனாதிபதி கூட அப்படித் தான் அழைத்தார். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரம். அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத மக்கள் தான், ஒருவர் மற்றவரை எதிரியாகப் பார்க்கின்றனர்.

அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் ஒரு பயணி, வவுனியா வரை பல சோதனைச் சாவடிகளை கடந்து வர வேண்டும். இந்திய இராணுவம் சந்தேகப்படும் நபரை தடுத்து வைத்தது. வவுனியாவில் இருந்து, கொழும்பு வரையில் சிங்கள இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. இப்போது கேட்டால் நம்ப முடியாமல் இருக்கும். அடையாள அட்டையில் யாழ்ப்பாணம் என்றிருந்தால், சிங்களப் படையினர் எந்த சோதனையுமின்றி போக விட்டனர். ஜே.வி.பி.யினரின் போராட்டம் நடந்து கொண்டிருந்ததால், சிங்களவர்களை மட்டும் தனியாக பிரித்து சோதனை செய்தார்கள். "அரசு என்ற ஸ்தாபனத்தின் அதிகார நலன்களே இனப்பிரச்சினைக்கும் மூல காரணம்." இது பல தடவை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

6 comments:

Mohamed Faaique said...

இலங்கை அரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இவ்வளவு தொடர்பு, நட்பு இருந்ததா? அடுத்த பதிவுகளையும் எதிர் பார்க்கிறேன்....

செந்திலான் said...

கலை, அந்த தரையிறக்கத்தில் வானோடியாக செயல்பட்ட ஒருவரின் மகன் எனது முன்னாள் மேலாளர். நானோ புலிகளின் ஆதரவாளன் அதை என்னிடம் சொன்னபோது எனக்கு புல்லரித்தது அவர் எப்படியோ பலத்த குண்டுகளுக்கிடையில் தப்பி தரையிறக்கிவிட்டார். அதற்கு அவருக்கு பரம்வீர் சக்ரா விருதும் கிடைத்தது. ஆனால் அவர் இந்திய ராணுவம் நடத்தும் அட்டூழியங்களையும் சொன்னார் அவரிடம் போலி நாட்டுப்பற்று இல்லை

thiyaa said...

அருமையான தொடர் தொடருங்கள்

sivakumar said...

மிகச் சிறப்பான கட்டுரை

J.P Josephine Baba said...

இலங்கை, புலிகள் நட்பு ஏன் ஈழ நாடு என்ற கனவை நனைவாக்க உதவவிலை?

Kalaiyarasan said...

//இலங்கை, புலிகள் நட்பு ஏன் ஈழ நாடு என்ற கனவை நனைவாக்க உதவவிலை? //

அந்தக் காலங்களில் யுத்தம் மட்டும் செய்து கொண்டிருப்பதே இரு வகை அரசியலாக இருந்தது. புலிகளும், இராணுவமும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நின்று போரிடுவதை விரும்பியிருந்தனர். மேலும் அன்றைய நிலையில் பிரேமதாசவும், புலிகளும் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். விரும்பியோ, விரும்பாமலோ இந்திய பிரசன்னம், ஒரு அரசியல் தீர்வை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். அரசியல் தீர்வு வந்தால், தமது இருப்புக்கு பாதிப்பு என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.