Friday, February 25, 2011

எகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...

எகிப்தை இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முபாரக் பதவி விலகிய உடனேயே, தொலைக்காட்சி கமெராக்கள் எகிப்தை விட்டு அகன்று விட்டன. அவர்களைப் பொறுத்த வரையில், எகிப்தின் பிரச்சினைகள் எல்லாம் முபாரக்குடன் ஓடிப்போய் விட்டன. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இராணுவத் தலைமை, கெய்ரோ நகர தாகிர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்க்காரர்களை அப்புறப்படுத்தியது. ஆனால் இன்றைக்கும் நாடளாவிய தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கெய்ரோ நகரில் கல்வி அமைச்சு அருகில் சென்றால், அங்கே ஆசிரியர்கள் போராடுவதைப் பார்க்கலாம். இன்னும் சிறிது தூரம் கடந்து சென்றால், நைல் பருத்தி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். இந்தப் போராட்டங்கள் யாவும் நாடு முழுவதும் முன் வைக்கும் அடிப்படை கோரிக்கை ஒன்றாகவுள்ளது. "அனைத்து தொழிலாளருக்கும் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு என்று தீர்மானிக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்." முகாமைத்துவம், அரசு சார்பு தொழிற்சங்கம், அமைச்சகம் போன்றவற்றில் நிலவும் ஊழலை ஒழிப்பதும் இன்னொரு முக்கியமான கோரிக்கை.

எகிப்திய தொழிலாளரின் போராட்டம், புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் பிளவுபடுத்தியுள்ளது. மார்க்சிய, அல்லது பிற இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட இளைஞர்கள் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அதே நேரம், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள், "புதிய அரசுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்." என்று கூறி வருகின்றனர். நிச்சயமாக, புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு இத்தகைய போராட்டங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. "தொழிலாளரின் போராட்டம், புரட்சியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றது." என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னாள் சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட, சக்தி வாய்ந்த தொழிற்சங்கமான "எகிப்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம்" கூட போராட்டத்தை நிராகரிக்கின்றது. "இந்தப் போராட்டங்கள் தேவையற்றவை. அதிக ஊதியம் கோருவது, நிர்வாகியை மாற்றக் கோருவது, இவை எல்லாம் அதி தீவிரமானவை." இவ்வாறு சம்மேளனத்தின் தலைவர் இப்ராஹீம் அல் அஸாரி தெரிவித்தார்.

ஆயினும் எகிப்திய தொழிலாளர்கள், யாருடைய "அறிவுரைகளையும்" கேட்பதாயில்லை. போராடினால் தான் தமது உரிமைகளை வெல்ல முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சில இடங்களில் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எகிப்தின் மாபெரும் ஆடை தயாரிப்பு நிறுவனமான Ghazl El-Mahalla வில் நடந்த போராட்டம். மூன்று நாட்கள் மட்டுமே தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டம், நிர்வாகத்தை அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பிற உழைப்பாளர்களும், ஆர்வலர்களும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். வெற்றிக் களிப்பில் மிதந்த தொழிலாளர்கள், புதிதாக சுயாதீனமான தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Ghazl El-Mahalla போராட்ட வெற்றி குறித்து கேள்விப்பட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் தமக்கென தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தபால் துறை, மற்றும் பொதுப் போக்குவரத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

எகிப்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கம் வகிக்கவில்லை. குறிப்பாக, தனியார் துறைகளில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் முதலாளிகளினால் முடக்கப்பட்டன. அரசுத் துறைகளை, அரசு சார்பான "தொழிற்சங்கங்களின் சம்மேளனம்" ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அதற்கான தேர்தல்களில் முறைகேடுகள் பல நடந்துள்ளன. அதற்கெதிரான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம், கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்கும் நடவடிக்கையிலும், அரசு சார்பு தொழிற்சங்கம் இறங்கியது. குறிப்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட இடங்களில் புகுந்து வன்முறை பிரயோகித்துள்ளனர். புரட்சிக்குப் பின்னான எகிப்தில், தொழிலாளர்கள் கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த விரும்புகின்றனர். சர்வதேச தொழிலாளர் சட்டத்தில் எகிப்தும் கையெழுத்திட்டுள்ளது. அதனால், சுயாதீனமான தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் எகிப்திய தொழிலாளருக்கு உரிமை உண்டு. எகிப்தில் 1952 ல் முதலாவது தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. எகிப்திய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீண்டதொரு வரலாறுண்டு. மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் இத்தகைய உண்மைகளை வெளியுலகிற்கு மறைத்து வருகின்றன. "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற மத அடிப்படைவாத கட்சியை சுட்டிக்காட்டி, "இஸ்லாமியப் பூச்சாண்டி" காட்டிக் கொண்டிருக்கின்றன. "மதம் சோறு போடாது," என்ற உண்மையை எகிப்திய உழைக்கும் வர்க்கம் எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டது.
*************************


No comments: