Friday, February 26, 2010

கலையக வாசகர்களின் கேள்வி நேரம்

கலையகத்தின் வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,

எனது வலைப்பூவில் புதிதாக கேள்வி-பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். பின்னூட்டங்களில் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டுமே எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம், "கேள்வி பதில்" பகுதிக்கு இருக்காது. கலையகத்தின் பார்வைப் புலத்திற்கு உட்பட்ட துறை சார்ந்த கேள்விகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை கேள்விகளையும் கேட்கலாம். இந்தப் பதிவிற்கான பின்னூட்டம் வழியாகவோ, அல்லது மின்னஞ்சல் (kalaiy26@gmail.com) மூலமாகவோ கேள்விகளை அனுப்பி வைக்கவும். மறக்காமல் தங்கள் பெயரைக் குறிப்பிடவும்.

பொதுவாக சர்வதேச அரசியல் சம்பந்தமாக எந்த விதமான கேள்விகளையும் எழுப்பலாம். அதே நேரம் மதம், மொழி, கலாச்சாரம், சமூகம், வரலாறு, உலக நாடுகள் தொடர்பான கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. வானத்தின் கீழே இருக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் விவாதிக்கலாம். ஆனால் நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்கான பதில், ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளவும்.
கலையக வாசகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட தராதரத்தைக் கொண்டிருப்பதால், சம்பந்தப்படாத, அர்த்தமற்ற, தேவையற்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன். உங்கள் கேள்விகள் பிற வாசகர்களுக்கும் பயன்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பிற்குறிப்பு: தனிப்பட்ட காரணங்களால், அடுத்து வரும் சில நாட்களுக்கு, அல்லது வாரக்கணக்காக புதிய பதிவிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகவே இந்த "அமைதியான" காலத்தை பயன்படுத்தி தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Wednesday, February 24, 2010

கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது

மேலைத்தேய அரசியல் அகராதியில், "பால்கன் (Balkan ) நாடுகள்" என்பது ஏறக்குறைய கெட்ட வார்த்தை. தென்-கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, முன்னாள் யூகோஸ்லேவியா, அல்பேனியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு இடையில் பொதுவான குணாம்சம் உள்ளது. லஞ்சம், ஊழல், தரம் குறைந்த நிர்வாகம், கிரிமினல் குழுக்கள், மாமூல் வாங்கும் போலிஸ்... சுருக்கமாக ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கான அத்தனை அம்சங்களும் கொண்டது. கிரீஸ் மட்டும் இதிலே விதிவிலக்கு என்று, எல்லோரும் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். பனிப்போர் காலத்தில், சுற்றியிருந்த சோஷலிச நாடுகளுக்கு மத்தியில் கிரீஸ் மட்டுமே முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்டிருந்தது. இதனால் முன்னேறிய, அபிவிருத்தியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக கிரீஸ் கருதப்பட்டது. இப்போது அந்த மாயத்திரை விலகி வருகின்றது.

கிரீஸ்: ஆரம்ப கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர். முதன் முதலில் 'ஐரோ' நாணயத்தை புழக்கத்தில் விட்ட நாடுகளில் ஒன்று. பணக்கார மேற்கு ஐரோப்பிய சமூகத்தை சேர்ந்த கிரீஸ் பொருளாதாரம் இன்று பாதாளத்தை நோக்கி சரிந்து செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதி கூடிய அந்நிய நாட்டு கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றது. வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர் தான், கடனில் மூழ்கிய கதைகளை சொல்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் இரு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க மக்களை பாதிக்கத் தொடங்கி விட்டன.

கிரீசில் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வது சர்வசாதாரணம். மொத்த தேசிய உற்பத்தியில் 10 % பணம் இவ்வாறு பதுக்கப்படுகின்றது. அரச அலுவல்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது வாடிக்கை. 18 % பொது மக்கள் தாம் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால் பணம் கட்டவில்லை. நிர்வாகம் போலியான கணக்குகளை காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி, குறைந்த வட்டி விகிதம், ஐரோப்பாவின் தாராளமான நிதி ஒதுக்கீடு என்பன இந்த குறைகளை வெளியே தெரிய விடாமல் தடுத்தன. ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, பதினைந்து வருடங்களாக கணக்காளர்கள் பொய்களை புனைந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படி ஏமாற்றலாம்?


பதினைந்து வருடங்களாக புழுத்துப் போன பொருளாதாரத்தை மக்களுக்கு எப்படி மறைத்தார்கள்? எதற்காக பொதுத் தேர்தல் என்ற ஒன்று நடைபெறுகின்றது? வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி, இடதுசாரி சோஷலிசக் கட்சி, என்று இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தன. மக்கள் எப்போதும் இரண்டில் ஒன்றுக்கு தானே வாக்குப் போடுவார்கள்? ஜனநாயகக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, சோஷலிசக் கட்சி சில பொருளாதார சீர்திருத்தங்களை செய்யும். அடுத்த முறை அவர்களின் ஊழலை சுட்டிக் காட்டி ஜனநாயக் கட்சி ஆட்சியை பிடிக்கும். நிரந்தர ஏமாளிகளான மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை வீணாக்கி விட்டு முழிப்பார்கள். கவனிக்கவும், கிரீசில் ஒருவர் கட்டாயமாக வாக்குப் போட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

20 ம் நூற்றாண்டுடன் மாபெரும் மக்கள் எழுச்சிகளும் விடைபெற்று விட்டன என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஏதென்ஸ் நகரில் பற்றிய புரட்சித் தீ அதனைப் பொய்யாக்கியது. டிசம்பர் 2008 ல், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானதை காரணமாக வைத்து, இளைஞர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு சில நாட்கள் ஏதென்ஸ் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமளவிற்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ், எழுச்சி தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. தன் எழுச்சியாக தோன்றிய இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஆளும் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியை தேர்தலில் தோற்கடித்தது.

கடந்த வருட பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிசக் கட்சியின் போதாத காலம். உள்ளுக்குள்ளே உக்கிப் போன கிரீஸ் பொருளாதாரத்தை பற்றிய உண்மைகள் யாவும் இப்போது தான் அம்பலமாகின்றன. கிரீஸ் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பதால், பிற பலவீனமான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் சரியலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. கிரீசை அடுத்து போர்த்துக்கல் தலைக்கு மேல் ஏறிவிட்ட அந்நிய நாட்டு கடன்களை கண்டு அஞ்சுகின்றது. இதனால் இன்னும் அதிக நிதியை கிரீஸ் பொருளாதாரத்திற்குள் பாய்ச்சுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பணக்கார நாடான ஜெர்மனி கிரீசுக்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான வட்டி எவ்வளவு? நிபந்தனைகள் என்ன? எதுவுமே வெளி வரவில்லை.


நிபந்தனைகளை பற்றி கிரீஸ் அரசு வெளியே சொல்லா விட்டாலும் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். வயதானவர்களின் ஓய்வூதியப் பணம், ஊழியர்களின் சம்பளம், இவற்றைக் குறைத்து தானே கடனை அடைக்க வேண்டும்? இத்தகைய "பொருளாதார சீர்திருத்தங்கள்" நாடாளாவிய வேலை நிறுத்தங்களை தூண்டி விட்டன. பெப்ரவரி மாதம் சுங்க திணைக்கள ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். அவர்களது வேலை நிறுத்தம் வாரக்கணக்காக நீடிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் இழுத்து மூடி விட்டார்கள். எங்காவது பெட்ரோல் கிடைக்கிறது என்று தெரிந்தால், அங்கெல்லாம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேன்களில் நிரப்பிச் செல்கின்றனர்.

கிரீசில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்த "குற்றத்திற்காக", சின்னச்சிறு சைப்பிரசிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. "பெட்ரோல் நிலையங்களின் யூனியன்" தலைவரான Kiousis 85 % வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'காய்ந்து' போய் விட்டதாக தெரிவிக்கிறார். நிதி அமைச்சின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட நிதி அமைச்சர் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதே நேரம் கிரீஸ் மீண்டும் இடதுசாரி தீவிரவாத இளைஞர்களின் விளையாட்டுத் திடலாக மாறி விட்டது. ஏதென்ஸ் நகரில் வழக்கமான வீதித் தடைச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் இருவரின் துப்பாக்கிகளை காரில் வந்தவர்கள் பறித்துச் சென்றார்கள். ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள விரோனாஸ் நகரில் உள்ள வங்கியொன்று கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்த போலீசாருக்கும், கொள்ளையருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. வழிப்போக்கரான 18 மாத குழந்தையின் தந்தை ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரிழந்தார். இது மேலும் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை கிளறி விட்டது. அன்றிரவு தொலைக்காட்சியில் தோன்றிய ஏதென்ஸ் போலிஸ் மாஅதிபர் Leuteris Oikonomou : "வெற்றிகரமான நடவடிக்கை" என்று தெரிவித்தார். ஏதென்ஸ் பொது மக்கள் போலீசாரை "ஆயுதமேந்திய மனநோயாளிகள்" என்று திட்டுவதை காணக் கூடியதாக இருந்தது. போலிஸ் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

கிரேக்க அரசுக்கு பொருளாதார சீர்திருத்தத்தை சொல்லிக் கொடுக்கும் JP Morgan வங்கி தலைமை அலுவலகம் குண்டுவெடிப்பினால் சேதமானது. (Tuesday, February 16, 2010 ) குண்டு வைத்தவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த படியால் எவரும் காயமடையவில்லை. இதற்கிடையே லாரிசா நகரில் ஊர்வலம் சென்ற பாசிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், இடதுசாரி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அண்மையில் கிரீஸ் அரசு, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கு பிரஜாவுரிமை கொடுக்க முன்வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாசிஸ்ட் கட்சி ஊர்வலம் ஒழுங்கு செய்திருந்தது. தெருச் சண்டையில் ஈடுபட்டதற்காக நான்கு இடதுசாரி இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு கோரி, ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலிஸ் அனுமதி வழங்காததால், ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர். வங்கி கட்டிடங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்கு சொந்தமான புத்தகக் கடை உடைக்கப்பட்டது. வழியால் போவோர் வருவோருக்கு எல்லாம் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

(குறிப்பு: ஊடக நிறுவனங்களின் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் வணிக ஊடகங்களில் செய்திகள் வருவதில்லை. கிரீசில் இருந்து ஆர்வலர்கள் அனுப்பும் இணையத் தகவல்களை தொகுத்து தந்துள்ளேன்.)

மேலதிக தகவல்களுக்கு:
Second Strike Paralyzes Greece
Bomb Explodes at Athens Offices of JPMorgan Chase

Sunday, February 21, 2010

ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

["அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" தொடரின் இறுதிப் பகுதி.]
29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும், பிரிட்டிஷ் இரசாயனக் கப்பல் ஒன்றும், சோமாலியக் கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ரஷ்ய RAI Novosti செய்திச் சேவையும், பிரிட்டிஷ் பத்திரிகையான The Times சும் அறிவித்திருந்தன.
2009 ம் ஆண்டு, சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடற்பரப்பில் 174 கடற்கொள்ளை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 42 தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்களை இலக்கு வைத்து நடந்துள்ளன. 35 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டன. சர்வதேச நாடுகளின் கடற்படைகளின் ரோந்துக்கு நடுவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையை தடுப்பதற்காக, ஏடன் வளைகுடாவில் சீனா நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க விரும்பியது. சீன கடற்படைத் தளபதி யின் சூ இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். (பார்க்க:China To Establish A Naval Base Around Somalia) நிச்சயமாக, இந்த யோசனையை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், சீன, இந்திய கடற்படைக் கப்பல்கள், கடற்கொள்ளைக்காரர்களை கடலில் வைத்து விரட்டி அடித்துள்ளன. இந்த சம்பவங்கள் யாவும், அந் நாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இடம்பெற்றுள்ளன.

1995 ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர், கடற்படையினரின் கப்பல்களை வெடிமருந்து நிரப்பிய படகால் மோதி நாசப்படுத்தினர். இலங்கையின் வட-கிழக்கு கரையோரம், குறிப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் சில யுத்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு, யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற USS Cole யுத்தக் கப்பலை, அல்கைதாவின் தற்கொலைப் படகு தாக்கி சேதப்படுத்தியது. 2002 ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில், புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வனின் கூற்று ஒன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது. ("எமது தற்கொலைத் தாக்குதல் செய்முறைகளை அல்கைதா பின்பற்றியது..." ஏடன் USS Cole தாக்குதலை சுட்டிக் காட்டி தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்.) (Thamilchelvan, The “Smiling” Face of LTTE) ஈழத்தில் இடி முழங்கினால், யேமனில் மழை பெய்தது!

உலகில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேறு வேறு நாடுகளில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவங்களை சர்வதேச அரசியல் முடிச்சுப் போட்டது. ஏடனிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவிலும், சீனாவிலும் எதிரொலித்தது. இரு நாடுகளினதும் கொள்கை வகுப்பாளர்கள், "சர்வதேச கடற் போக்குவரத்து எதிர்நோக்கும் அபாயம்" குறித்து அறிக்கைகளை தயாரித்தார்கள். மிக முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விட, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவும், இந்தியாவும் நுகரும் எண்ணெயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. வளைகுடா நாடுகளில் இருந்து தென் சீனக் கடல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தவிர்க்கவியலாது இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும். இலங்கை, அம்பாந்தோட்டையில் சீனா கட்டி வரும் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சீனக் கடற்படை அங்கே தளமமைக்கவும் சாத்தியமுண்டு. (China's Sri Lanka port raises concern)

சீனா, "முத்து மாலை" திட்டத்தின் கீழ், பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு தளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து விட்டது. ஆனால் இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அரபி நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை. ஈரான், சூடான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நட்பு நாடுகள். இருப்பினும் அரபிக்கடல் நாடுகள் யாவும் அமெரிக்க சார்பானவையாக இருப்பது சிக்கலை உருவாக்கி விட்டுள்ளது. வளைகுடா நாடுகள் விற்கும் எண்ணெய் குறுகலான ஹொர்முஸ் (Hormuz) ஜலசந்தியைக் கடந்து வர வேண்டும். ஒமானுக்கு சொந்தமான ஹொர்முஸ் முனை அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது. மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் இருந்து வாங்கும் எண்ணெயும், சீனாவின் அரபுத் தோழன் சூடான் வழங்கும் எண்ணெயும், செங்கடல் வழியாக கொண்டு வரப்பட முடியும். ஆனால் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் யாவும் பாப் எல் மன்டப் (Bab el Mandab) என்ற குறுகலான ஜலசந்தியை தாண்டி வர வேண்டும். யேமனுக்கும், ஜிபூத்திக்கும் நடுவில் உள்ள, 18 மைல் நீளமான கடல் பாதை 'பாப் எல் மன்டப்'. இதன் அருகில் தான் சோமாலியா அமைந்துள்ளது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையரால் தாக்கப்படும் ஆபத்து அதிகம். குட்டி நாடான ஜிபூத்தியின் குடிமக்களும் சோமாலியர் தான். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான ஜிபூத்தியில், நிரந்தரமான பிரெஞ்சு இராணுவ தளம் உண்டு. அங்குள்ள பிரெஞ்சுப் படையினரின் வேலை, பாப் அல் மன்டப் பாதையால் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணிப்பது.

யேமனில் அல்கைதாவின் பிரசன்னத்தை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அந்த நாட்டில் நிரந்தர இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. நிதி நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அமெரிக்க இராணுவம் இன்றும் உலகில் பலம் வாய்ந்ததாகவே விளங்குகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மன்டப் ஜலசந்தியை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் பல பொருளாதார நன்மைகள் உள்ளன. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்டவும் இது உதவும். யேமனில் அமெரிக்க தலையீட்டினால், எதிர்காலத்தில் உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

"முத்து மாலை" திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தளங்களை அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கம் தடைப்படும். உலகில் அதிக எரிபொருள் நுகரும் நாடான சீனா, அமெரிக்க தயவில் தங்கியிருக்க வேண்டும். சூடானும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவை புறக்கணித்து விட்டு சீனாவுக்கு எண்ணெய் விற்க முடியாது. பாப் எல் மன்டப் ஜலசந்தியை மூடி விட்டால், எந்தவொரு கப்பலும் அரபிக்கடலை அடைய முடியாது. மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

உலகின் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் குவைத், அபுதாபி, ஈராக் எல்லாம் பாரசீக வளைகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள், ஹொர்முஸ் முனையை கடந்து, பாப் எல் மன்டப் ஊடாக சுயஸ் கால்வாயை அடைய வேண்டும். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தை சுயஸ் கால்வாய் ஊடாக தொடர வேண்டும். ஒரு வேளை, "யேமன் அல்கைதா பிரச்சினை" காரணமாக பாப் எல் மன்டப் பாதை மூடப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின், அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் 6000 மைல் பயணம் செய்து, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே செல்ல வேண்டும்.

யேமனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணமல்ல. முன்னொரு காலத்தில் கம்யூனிச நாடாக இருந்த தென் யேமனின் ஏடன் நகரில் சோவியத் படைத் தளம் ஒன்று இருந்தது. இன்றைய ரஷ்யாவின் "புட்டின்/மெட்வெடேவ் நிர்வாகம்" பழைய வெளிநாட்டு தளங்களை புதுப்பிக்க விரும்புகின்றது. சிரியாவில் மீண்டும் ரஷ்ய இராணுவ தளம் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏடனில் தளம் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா யேமன் அரசை கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கிடையே அமெரிக்கா முந்திக் கொள்ள நினைத்திருக்கலாம்.

மேலும் யேமனில் தற்போது பாவனையில் உள்ளதை விட, இன்னும் அதிகளவு எண்ணைப் படுகைகள் அகழப்படாமல் உள்ளன. Total போன்ற பன்னாட்டு எண்ணெய்க் கம்பனிகள் மசினா, ஷப்வா ஆகிய இடங்களில் எண்ணை காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. எண்ணைக் கம்பனிகளுக்கு பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் யேமனில் நிலை கொள்ளலாம். வருங்காலத்தில் யேமன் மண்ணின் மைந்தர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடலாம். ஆனால் அதையெல்லாம் "அல்கைதா பயங்கரவாதம்" என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட, சர்வதேச ஊடகங்கள் காத்திருக்கின்றன.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

மேலதிக தகவல்களுக்கு:

Yemen and The Militarization of Strategic Waterways

Friday, February 19, 2010

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!

["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]
யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து கவலைப்படுவது தவறாகத் தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகள் தெற்கில் இருந்தன. எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வருமானம் நேரே வடக்கே சானாவில் இருக்கும் அரச கஜானாவிற்கு சென்றது. தலைநகர் சானாவின் நிர்வாகம், சாலே என்ற சர்வாதிகாரியின் கைக்குள் இருக்கிறது. ஊழல் குறித்து பிறிதாக பாடம் எடுக்கத் தேவையில்லை.

பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன தென்னக மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கெதிரான தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் பெருகின. சில ஊர்வலங்கள், பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் கலைக்கப்பட்டன. அரச அடக்குமுறைக்கு சிலர் பலியானதாகவும் தகவல். இருப்பினும் இந்த தகவல் எதுவும் சர்வதேச ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. செய்தி அவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் எப்படி அதை வெளியிடுவது? "ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?"

தென் யேமெனின் முக்கிய நகரான எடெனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் அல் பத்லி (Al Fadhli) போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டமை, அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிரபல ஜிகாத் போராளியான அல் பத்லி முன்னர் அரச ஆதரவு கூலிப்படை ஒன்றை தலைமை தாங்கியவர். ஜனாதிபதி சாலேக்கு மிக நெருக்கமானவர். முன்னர் தென் பிராந்திய கிளர்ச்சியை அடக்குவதில் முன் நின்றவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது அரசை விட்டு விலகி, எதிரணியான தென்னக இயக்கத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
தனக்கு நாடளாவிய ஜிகாத் போராளிகளுடன் தொடர்பு இருந்த போதிலும், அல்கைதாவுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அல் பத்லி: "தென்னகப் பகுதிகள் வடக்கத்தயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கு யேமேனின் சுதந்திரமே உயிர்மூச்சு." என்றெல்லாம் பிரதேசவாதிகளின் மொழியில் பேசியுள்ளார். என்ன அதிசயம். இந்த உரைக்கு அடுத்த சில தினங்களில், அல் கைதா தென்னக மக்களின் உரிமைப் போருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

1990 ம் ஆண்டு வரை, உலகத்தில் இரண்டு 'யேமன்' கள் இருந்தன. வடக்கே இஸ்லாமிய - முதலாளித்துவ "யேமன் அரபுக் குடியரசு". தெற்கே மதச்சார்பற்ற - கம்யூனிச "யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு". இரண்டுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். அரபு தேசியவாதம், இஸ்லாமிய பழமைவாதம், அரை-நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பன, யேமன் அரபுக் குடியரசின் கொள்கைகளாக இருந்தன. அங்கே சனத்தொகை பெருக்கம் அதிகம். அதே போல கல்வியறிவற்றவர்களின் தொகையும் அதிகம்.

இதற்கு மாறாக தென் யேமன் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பால் பெரிதானாலும், சனத்தொகை மிகக் குறைவு. காலனித்துவ கல்வி, உலகளாவிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருந்தது. அதுவே பின்னர் மார்க்சிய சித்தாந்தம் பரவ காரணமாயிற்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் யேமெனில் தான் வீறு கொண்டு எழுந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியனின் உதவியுடன் மார்க்சிச-லெனினிச அரசை நிறுவியது. கம்யூனிஸ்ட்கள் என்பதால் மக்கள் மசூதிக்கு செல்வதை தடை செய்யவில்லை. ஆனால் மசூதிகளை கட்டுவதை விட, பாடசாலைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகரித்தது. 1990 ம் ஆண்டு, சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், அந்நிய நாட்டு கடன்கள் வருவது நின்றது. சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டது. தவிர்க்கவியலாது, ஒன்றிணைந்த யேமன் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

1990 ல் ஒன்றிணைந்த யேமன் குடியரசு ஜனாதிபதியாக, வட யேமன் அரபுக் குடியரசின் சர்வாதிகாரி சாலே தெரிவானார். தென் யேமன் கம்யூனிசக் கட்சி, சோஷலிசக் கட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ''சானா"வை தலைநகரமாகக் கொண்ட பாராளுமன்றத்தில் அமர்ந்தது. ஒன்றிணைந்த யேமன் குறித்த எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு சில மாதங்களிலேயே தவிடுபொடியாயின. 1978 ம் ஆண்டில் இருந்து வட- யேமனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் சாலே என்ற சர்வாதிகாரியின் அதிகாரம், தற்போது தெற்கு வரை வியாபித்தது. சாலேயின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள், சலுகைகள், மேலும் அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. தென்னகத்தை சேர்ந்த முன்னாள் அதிகார வர்க்கம் (கம்யூனிசக் கட்சியை சேர்ந்தவர்கள்), வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்பட்டது.

யேமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தெற்கே ஏடன் நகரில் அமைந்திருந்தது. அதை விட, எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் ஏடன் வளைகுடாப் பகுதிகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு துறைகளும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். யேமன் பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆனால் ஒன்றிணைப்பின் பின்னர், அனைத்து வருமானமும் வடக்கே உள்ள தலைநகர் சானாவை நோக்கி திசை திருப்பப்பட்டன. ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, தென்னக பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடப்படவில்லை. வடக்கு - தெற்கு பிரச்சினை முற்றி, வன்முறையில் முடிந்தது. தெற்கு யேமன் மீண்டும் சுதந்திரப் பிரகடனம் செய்தது. வடக்கத்திய இராணுவம் தெற்கிற்கு படையெடுத்து சென்றது. கடுமையான யுத்தத்தின் பின்னர், தென்னக கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வட யேமன் இராணுவத்திற்கு சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. முன்னாள் ஆப்கான் ஜிகாத் வீரர்களும் கூலிப்படையாக செயற்பட்டனர்.

அரசியலில் எதுவும் நிலையானதல்ல. நேற்றைய பகைவர்கள் இன்று நண்பர்கள். நேற்றைய நண்பர்கள் இன்று எதிரிகள். அன்று ஜிகாத் வீரர்கள், யேமன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தென்னக பிரிவினைவாதிகளை எதிர்த்து போரிட்டார்கள். (பிராந்தியத்தின் பொருளாதார நலன் குறித்து பேசுவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தி விடுமாம்.) இன்று அல் பத்லி தலைமையிலான ஜிகாத் வீரர்கள், தென்னக பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இஸ்லாமியவாதிகள் இடதுசாரிகளாகி விட்டதால் இந்த கொள்கை மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும் சாலே, தனது பகைவர்களை தானே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். வடக்கே ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் போர். தெற்கே சுயநிர்ணைய உரிமை கோரும் சோஷலிஸ்ட்களின் நெருக்கடி. இவர்களுக்கு நடுவில் அல்கைதா என்ற பெயரைக் காட்டியே பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள். சாலேயின் அரசு, மும்முனைப் போரை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஓடோடி வந்து முண்டு கொடுத்திராவிட்டால், சாலேயும் எப்போதோ சதாமின் வழியில் சமாதியாகி இருப்பார்.

இதற்கிடையே யேமனின் அயல்நாடான சோமாலியாவும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சோமாலியப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் (Supreme Islamic Council of Somalia ), யேமன் சகோதரர்களுக்கு உதவப் போவதாக தெரிவித்தது. ஏற்கனவே சோமாலியா அகதிகளுக்கு யேமன் புகலிடம் அளித்துள்ளது. தற்போது இந்த அகதிகளில் எத்தனை பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தெரியாமல், அமெரிக்காவும், யேமனும் முழிக்கின்றன. ஜனவரி மாதம், சோமாலியாவின் ஜனாதிபதி ஷேக் ஷெரிப், யேமன் ஜனாதிபதி சாலேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது நாட்டில் அல்கைதாவின் (அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளின்) நடமாட்டம் குறித்து உளவறிந்து அறிவிப்பதாக உறுதியளித்தார். சோமாலியா ஜனாதிபதியின் அதிகாரம், "மொகாடிஷு விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இப்படியானவர்கள் தான் சாலேக்கு நண்பர்களாக வாய்த்திருக்கிறார்கள்.

யேமனுக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடற்கொள்ளையர்கள், உலகில் மிகவும் வறுமையான, அரச நிர்வாகமற்ற சோமாலியாவை சேர்ந்தவர்கள். சிறு குழுக்களாக இயங்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள், பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை கடத்திச் சென்றிருக்கிறார்கள். உலகமே இந்த செய்திகளை 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக, "நைஜீரிய அல்கைதா தீவிரவாதி" அமெரிக்க விமானத்தில் குண்டு வைக்க முயற்சித்த, அதே டிசம்பர் மாதம் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு சிறு ஆயுதமேந்திய குழுவால், பென்னம்பெரிய கப்பல்களை எப்படிக் கடத்த முடிகின்றது? கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந்தன? சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு? யேமன், சோமாலியா ஆகிய ஏழை நாடுகள் மீது, சர்வதேச சமூகத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை?

(தொடரும்)

இந்தத் தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:

_____________________________________________________________________
மேலதிக தகவல்களுக்கு:

Fault line that allows al-Qa'ida to flourish in Yemen

Free Aden,Towards The Liberation of South Arabia
When Terrorists and Pirates Merge

Wednesday, February 17, 2010

பலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்

2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பபுவா அகதிகள், ஒரு சர்வதேச நெருக்கடிக்கு காரணமாகினர். இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாக பலவந்தமாக இணைக்கப்பட்ட (மேற்கு) பபுவா மக்கள் தனி நாடு கோரிப் போராடி வருகின்றனர். இனத்தால், மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால், இந்தோனேசியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் பபுவா பழங்குடியினர். இந்தோனேசிய ஆக்கிரமிப்பு இராணுவம் நவீன ஆயுதங்கள் சகிதம் அடக்கிய போதிலும், மக்களின் விடுதலை வேட்கையை தடுக்க முடியவில்லை. சுதந்திர பபுவா நாட்டின் விடிவெள்ளிக் கொடி ஏற்றுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக காடுகளில் உறையும், "பபுவா விடுதலைப் படை". புராதன ஆயுதங்களால், பலம் வாய்ந்த இந்தோனேசிய இராணுவத்தை எதிர்க்க முடியாத இயலாமை. தனது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்துள்ளது. அவர்களது ஒரேயொரு நம்பிக்கை, "சர்வதேச சமூகத்தின் தலையீடு". பபுவா பிரதேசத்தினுள் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஒரு ஆவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் முயற்சியால், இரகசியமாக கடத்தப் பட்ட வீடியோ கமெராக்கள் மூலம் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.
Free West Papua

Tuesday, February 16, 2010

Slavoj Zižek : "முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சி"

சுலோவேனியா நாட்டின் பேராசிரியரும், கம்யூனிஸ்டுமான பேராசிரியர் Slavoj Zižek சமீபத்திய பொருளாதார நெருக்கடி பற்றிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார். அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, அது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு, கடந்த கால சோஷலிச அரசுகளின் தவறுகள், கம்யூனிச பொருளாதாரம், போன்ற பல விடயங்களை அலசுகின்றார். நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்றில் ( Ned 2, Tegenlicht, 11 Jan. 2010) ஒளிபரப்பானது. (ஆங்கில மொழியில்)



Monday, February 15, 2010

அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்

[பகுதி: ஒன்று]
2009 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு நைஜீரிய இளைஞன், சர்வதேச அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவான் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த இளைஞன் உள்ளங்கியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடிக்கத் தவறியதால், விமானம் ஒரு பாரிய தாக்குதலில் இருந்து தப்பியது. குண்டுதாரியை விசாரித்த அமெரிக்க போலீசார், அந்த நைஜீரிய இளைஞன் "முன்னர் ஒரு காலத்தில் யேமனில் வாழ்ந்ததாகவும், அல்கைதாவுடன் தொடர்பு கொண்டவன்" என்றும் அறிவித்தார்கள். என்னது? திடீரென்று "ஒரு ஆப்பிரிக்க இளைஞன்", "யேமன் அல்கைதா" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்? அப்படி எவராவது சந்தேகப்பட்டால்? அது தான் நிறைவேறாத தாக்குதலுக்கு "யேமன் அல்கைதா" உரிமை கோரினார்களே, பார்க்கவில்லையா? அப்பவும் நம்பவில்லையா? இதோ, பின்லாடனின் உரிமை கோரல் ஒலிநாடா. அல்ஜசீராவில் ஒளிபரப்பானது. அப்புறம் என்ன தயக்கம்? யேமனில் பதுங்கியிருக்கும் அல்கைதாவை அழிக்க கிளம்ப வேண்டியது தானே? அல்கைதா பயங்கரவாதத்தை ஒடுக்க யேமன் அரசுக்கு உதவுவது எப்படி என்று ஆராய லண்டனில் மகாநாடு கூட்டினார்கள்.

அதற்கு முன்னர் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளை இறுக்குவது தொடர்பாக உடனடி உத்தரவுகள் பறந்தன. நவீன தொழில்நுட்பம் கொண்ட "ஸ்கேன் மெஷின்களை" ஏன் பாவிக்கவில்லை? என்று கண்டனங்கள் குவிந்தன. புதிய ஸ்கேன் மெஷின்கள், விமானப் பயணிகளின் ஆடை மறைத்திருக்கும் உடல் அங்கங்களையும் படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் என்ன? அமெரிக்கா செல்பவர்கள் எத்தகைய அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா? மானம் முக்கியமா? பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு முக்கியமா? கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து, விமான நிலையங்களில் கறுப்புத் தோலைக் கொண்டவர்கள் பாகுபடுத்தி சோதனையிடப்பட்டனர். டாலர் தேவையென்றால், இனப்பாகுபாட்டையும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரும், யேமனில் மாதக்கணக்காக போர் நடந்து கொண்டிருந்தது. யேமன் பாதுகாப்புப் படைகளுக்கும், வட மாகாணங்களை சேர்ந்த (ஷியா முஸ்லிம்களான) ஹூதி இயக்க போராளிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்து. (பார்க்க: சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்) ஆயிரக்கணக்கான பொது மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே நடந்த மனிதப் பேரவலத்தை எந்தவொரு சர்வதேச ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நேரம், முக்கியமற்ற செய்தியாக கடமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலகில் அதிகமானோரை சென்றடையாத அரபு ஊடகங்கள் மட்டும், அக்கறையோடு அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்றைக்கு, அமெரிக்க விமான தாக்குதல் முயற்சியையும், அல்கைதாவையும் தொடர்பு படுத்தி செய்தி வந்ததோ? அன்றிலிருந்தே யேமனை இன்னொரு ஆப்கானிஸ்தான் போல காட்டத் தொடங்கி விட்டார்கள்.


எவராவது யேமன் சென்றால், அங்கே அல்கைதா இருக்கிறதா என்று தேடக் கிளம்பி விடாதீர்கள். நகரங்களில் வதியும், சர்வதேச அரசியல் தெரிந்த படித்தவர்களுக்கு மட்டுமே அல்கைதா என்ற சொல் பரிச்சயம். நாட்டுப்புறங்களில் வாழும் சாதாரண யேமனியர்களுக்கு ஆட்டுக்குட்டி மட்டுமே தெரியும், அல்கைதா தெரியாது. ஆனால் அந்த நாட்டில், இஸ்லாமிய அரசியலில் பற்றுக் கொண்ட ஆயுதமேந்திய போராளிகள் இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபிகள்", அல்லது "வஹாபிகள்" என்று அழைப்பார்கள். சலாபி, வஹாபி ஆகியோர் கடும்போக்கு இஸ்லாமை போதித்த மதத்தலைவர்கள். ஆனால் இதையெல்லாம் உள்ளபடியே சொன்னால், பிற நாட்டு மக்களுக்கு ஆர்வம் ஏற்படாது. "அல்கைதா" என்ற லேபிளை ஒட்டி செய்தி வெளியிட்டால், டீக்கடையில் தினசரி வாசிக்கும் கந்தசாமியும் "உச்"சுக் கொட்டுவார்.

அது சரி, யேமனில் அல்கைதா எப்படி வந்தது? எண்பதுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய ஜிகாதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். "எங்கிருந்தோ வந்த ரஷ்யாக்காரன், இஸ்லாமிய உறவுகளை இனவழிப்பு செய்கிறான்" என்று கேள்விபட்டு, ரஷ்யர்களை எதிர்த்து போரிட, பல அரபு தொண்டர்கள் ஆப்கானிஸ்தான் சென்றனர். யேமனில் இருந்தும் பெருந்தொகை இளைஞர்கள் அணிதிரட்டப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் வாங்கியதும், அவர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர். தசாப்த காலமாக யேமனை ஆண்ட சர்வாதிகாரி சாலேயின் இஸ்லாமியமயமாக்கல் கொள்கைக்கு ஒத்துழைத்தனர். முன்னாள் ஆப்கான் போராளிகளை கூலிப்படையாக கொண்டு தான், தென் பிராந்திய பிரிவினைவாத இயக்கம் அடக்கப்பட்டது. (இது குறித்து பின்னர் விரிவாக.)

2001 , செப்டம்பர் 11 க்குப் பின்னர் தான், முன்னை நாள் ஆப்கான் போராளிகளுக்கு அல்கைதா என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது. "சோவியத் யூனியனை மண் கவ்வ வைத்த இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவுக்கும் எதிரானது" என்று தாமதமாகவே அறிவித்தார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் யேமன் அரசுக்கும் எதிரி என்று, வாஷிங்டன் சொன்ன பிறகு தான் தெரிந்ததாம். அதற்கு முன்னரே, சர்வாதிகாரி சலேக்கும், ஆப்கான் போராளிகளுக்கும் இடையில் விரிசல் தோன்றி விட்டது. எண்ணெய் விற்று வந்த பணத்தில் தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. உலக சந்தையில் எண்ணெய் விலை இறங்கியதால் சாலேயின் கையைக் கடிக்கவே, கூலிப்படைக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நிறுத்தப்பட்டது. ஆயுதந்தரித்த கைகள் மண்வெட்டி பிடிக்குமா? அரசாங்க நிதியை இழந்த இஸ்லாமிய கூலிக் குழுக்கள் அரசுக்கு எதிராக திரும்பின. அவர்களைத் தான் அன்றிலிருந்து இன்று வரை, அல்கைதா என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே ஒரு முறை "போலி அல்கைதா" பற்றிய செய்தி வெளி வந்தது.(Israel-Linked Terrorist Cell Dismantled: Yemen) 2008 ம் ஆண்டு தலைநகர் சானாவில் அமெரிக்க தூதுவராலயத்தை இலக்கு வைத்த குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. தாக்குதல் நடத்தியவர்களை தேடி துப்புத்துலக்கிய யேமன் போலிஸ், சில பயங்கரவாதிகளை கைது செய்தது. பிடிபட்ட "அல்கைதா சந்தேகநபர்கள்" இஸ்ரேலிய உளவுப்பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்தது. இஸ்ரேலில் கணிசமான அளவு யேமன் யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலரை மொசாட் உளவாளிகளாக திரும்பவும் யேமன் அனுப்புவது இலகு என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் உருவாக்கிய போலி அல்கைதா பற்றி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்த ஜனாதிபதி சாலே, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு அப்புறம் ஏதாவது நீதி மன்ற வழக்கு நடந்ததாக செய்தி வரவில்லை. பிடிபட்ட பயங்கரவாதிகள் இப்போதும் சிறையில் உள்ளனரா? யாம் அறியோம் பராபரமே.

கடந்த ஆண்டிலிருந்து யேமன் அல்கைதா நிறுவனம் துடிப்புடன் இயங்கி வருவதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தன. சுவாரஸ்யமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் இணையத்திலேயே காணக் கிடைக்கின்றன. "அல்கைதா இணையத்தளத்தில்" காணப்படும் அறிவிப்புகள் அதிர்ச்சியுற வைக்கின்றது. நாசிர் அல் வஹைஷி என்ற புதிய அல் கைதா தலைவர், "யேமெனில் ஜிகாத் தொடக்கி பாலஸ்தீனத்தில் முடிக்கப் போவதாக" சூளுரைத்துள்ளார். (நல்லது, அவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உண்டு.) செயலிழந்துள்ள சவூதி அல்கைதா உறுப்பினர்களை இணைத்து, "அரேபிய தீபகற்பத்திற்கு பொதுவான அல்கைதா" அமைப்பு இயங்குவதாக தெரிவிக்கிறார். அடுத்து வரும் தகவல் சுவாரஸ்யமானது. அமைப்பின் உப தலைவராக, சவூதி பிரஜை அபு சயாப் அல் ஷிஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அபு சயாப் அல் ஷிஹ்ரி? அமெரிக்கர்களால் விடுதலை செய்யப்பட்ட குவாந்தனமோ சிறைக் கைதி. குவாந்தனமோ என்ற தனிமைச் சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்தும், நிஜ அல்கைதா உறுப்பினர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது சி.ஐ.ஏ. உளவாளியாக வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டாரா? குவான்தாமோ சிறையில் இருந்து விடுதலையான பலர் சி.ஐ.ஏ, உளவாளிகளாக செயற்படுவதால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

(தொடரும்)

யேமன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்

Sunday, February 14, 2010

வத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்

இத்தாலியின் தலைநகரம் ரோம் முன்னொருபோதும் காணாத எதிர்ப்பு ஊர்வலத்தை கண்டது. கத்தோலிக்க மத தலைமை நிறுவனமான "வத்திக்கான் எமக்கு வேண்டாம்" என்ற பதாகைகளை ஏந்திய படி பல நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இத்தாலி அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியன் டாலர் மக்களின் வரிப்பணத்தை வத்திக்கானுக்கு வழங்கி வருகின்றது. அண்மைக்காலமாக வத்திக்கான் அரசாங்க அலுவல்களில் தலையிடுவதால் மக்களில் பலர் வெறுத்துப் போய் உள்ளனர். இத்தாலியில் சர்ச்சையை தோற்றுவித்த கருணைப் படுகொலை ஒன்றிற்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தாலி பாடசாலைகளில் சாமிப் படங்கள், மத சின்னங்கள் வைப்பதை நீதி மன்றம் தடை செய்தது. மதச்சார்பற்ற கல்வியை வலியுறுத்திய நீதி மன்ற தீர்ப்பை, வத்திக்கான் கண்டித்திருந்தது.
Anti-Vatican protest hits London
Come and protest at the Vatican’s interference in politics

9/11 மர்மம்: WTC குண்டு வைத்து தகர்க்கப்பட்டதா ?

நியூ யார்க் இரட்டைக் கோபுரங்களை விமானங்கள் மோதி நொறுக்கவில்லை. அவை உள்ளிருந்து வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டிருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட 2000 க்குமதிகமான புகைப்படங்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. வானில் இருந்து போலிஸ் ஹெலிகப்டர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. முன்னர் ஒரு போதும் வெளிவராத புகைப்படங்களை இந்த சுட்டியில் பார்வையிடலாம்.
Never-Before-Seen 9/11 Attack Photos Released


Never before seen Video of WTC 9/11 attack

Saturday, February 13, 2010

ஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து !

"முன்னொரு காலத்திலேயே, ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் கண்டஹார் என்ற ஊரில் பின் லாடன் என்ற உலக மகாப் பயங்கரவாதி இருந்தானாம். அவன் தனது சாட்டலைட் தொலைபேசியின் உதவியுடன் அமெரிக்க மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆணையிடுவானாம். 11 செப்டம்பர் 2001 அன்று, பின் லாடன் அனுப்பிய பயங்கரவாதிகளின் குழு விமானங்களைக் கடத்தி நியூ யோர்க்கில் உள்ள இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்களாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்த அமெரிக்கா தாக்கப்பட்டதால், மக்கள் வெகுண்டு எழுந்தனர். குடிமக்களின் கோபத்தை தணிப்பதற்காக ஜனாதிபதியானவர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க உத்தரவிட்டார். நவீன ஆயுதங்கள் சகிதம் இறங்கிய அமெரிக்க படைகள், உலக மகாப் பயங்கரவாதி பின் லாடனையும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபான் கும்பலையும் அடித்து விரட்டினார்கள். ஜனநாயகம் மீட்கப்பட்டது. உலகை ஆட்டிப்படைத்த பயங்கரவாதிகள் ஒழிந்தார்கள் என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். சுபம்."

21 ம் நூற்றாண்டின் மீட்பராக அவதரித்த ஜோர்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க கூறிய காரணம் தான் மேலே உள்ளது. அன்று அந்தக் காரணத்தை உண்மை என்றே எல்லோரும் நம்பினார்கள். சர்வதேச ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து மக்களை மாயைக்குள் வைத்திருந்தன. அமெரிக்கா முதல் ஆவுஸ்திரேலியா வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, அமெரிக்க அரசு சொன்ன பொய்களை ஏற்றுக் கொண்டார்கள். அமெரிக்கா அறிவித்த பயங்கரவாத எதிர்ப்பு போரை ஆதரித்தார்கள். நவீன உலக வரலாற்றில் கூறப்பட்ட "மிகப் பெரிய பொய்", உலகம் முழுவதும் விலை போனது.

இன்று ஒன்பது வருடங்கள் கடந்த பின்னர், "சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற" ஒபாமாவும் பழைய பல்லவியை பாடுகின்றார். ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகளை அனுப்புவதற்கு நாள் குறிக்கிறார். "ஆயிரம் அமெரிக்கர்களின் இரத்தக்கறை படிந்த தலிபானுடன் பேசமாட்டோம்." பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்சின் பேச்சாளர் கர்ஜிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை, ஆப்கான் படையெடுப்புக்கு நியாயமான காரணம் என்று ஒன்றை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். சர்வதேச பயங்கரவாதி பின்லாடனை ஒப்படைக்க தாலிபான் மறுத்து விட்டது. இந்தக் குற்றச்சாட்டு உணமையல்ல. ஆதாரம்? அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆவணங்கள்!!

அண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சு ஆவணங்கள், தாலிபானுக்கும், பின்லாடனுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் 1998 ம் ஆண்டில் இருந்தே, தாலிபான் அரசினால் பின்லாடன் ஏறக்குறைய வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சர்வதேச ஜிகாத்தில் எல்லாம் தாலிபானுக்கு ஆர்வம் இருக்கவில்லை. அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணவே தாலிபான் அரசு விரும்பியது. பின் லாடனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அல் கைதா உறுப்பினர் ஒருவரும், அந்தக் கூற்றுகளை ஒப்புக் கொள்கிறார்.

எகிப்தை சேர்ந்த ஜிகாத் போராளி அபு அல் வாலித் அல் மஸ்ரி, தாலிபான் தலைவர் முல்லா ஒமாருடனும், அல் கைதா தலைவர் பின் லாடனுடனும் நெருங்கிய உறவைப் பேணியுள்ளார். 1998 ல் இருந்து, 2001 ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்துள்ளார். இவரது வாக்குமூலங்கள் ஜனவரி மாத "CTC Sentinal " இதழில் வெளியிடப்பட்டுள்ளன. CTC Sentinal அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினால் ( Combating Terrorism Center) வெளியிடப்படுகின்றது. அல் மஸ்ரியின் வாக்குமூலத்தின் படி: "பின் லாடன் அமெரிக்க இலக்குகளை தாக்குவதில்லை என்றும், ஊடகங்களுடன் தொடர்பு வைப்பதில்லை என்றும் வாக்குக் கொடுத்தாதேலேயே ஆப்கானிஸ்தானில் தங்க அனுமதிக்கப்பட்டார். முன்னர் ஒரு தடவை தாலிபான் அரசின் வெளிவிவகார அமைச்சர் முத்தாவாகில்: "கண்காணிப்பதற்கு வசதியாக பின் லாடன் கண்டஹார் நகரில் இருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்..." என்று தெரிவித்தார்.

1998 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலே, தாலிபானின் கொள்கை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த அமெரிக்க தூதுவராலய குண்டுவெடிப்புக்கு பதிலடியாகவே அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்கு பிறகு தாலிபான் தலைவர் ஒமார், அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பதிவு செய்யப்பட்டு அமைச்சக ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள உரையாடலில், "பின் லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதற்கான ஆதாரங்களை கொடுக்குமாறும், அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும்..." தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு பின்னர் தாலிபான் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின் லாடன்: "மத நம்பிக்கையாளர்களின் தலைமைக் கமாண்டர் ஓமாரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக..." அல் ஜசீரா பேட்டியில் தெரிவித்தார்.

1998 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் பின் லாடனை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்து விட்டு, சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க தாலிபான் அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு முன்னர், அமெரிக்காவிடம் கேட்ட ஆதாரங்களுக்காக காத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டு அமைச்சர் முத்தாவாகில் இது குறித்து மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தி இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆவணங்கள், வீடியோக்கள் யாவும் பழையவை. அவை எதுவும் பின் லாடனை நேரடியாக தொடர்பு படுத்தவில்லை, என்றும் தெரிவித்துள்ளார். (ஆதாரம்: இஸ்லாமாபாத்தில் கடமையாற்றிய அமெரிக்க பிரதிநிதியுடனான உரையாடல். அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிக்கை.) போதுமான சாட்சியங்கள் இல்லாததால், பின் லாடன் சொந்த விருப்பின் பேரில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறலாம், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

1999 ம் ஆண்டு, தாலிபான், பின்லாடன் உறவில் பாரிய விரிசல் தோன்றியது. பின்லாடனுக்கு பாதுகாப்பாக இருந்த அரபு (அல் கைதா) மெய்ப்பாதுகாவலர்களின் ஆயுதங்களைக் களைய எத்தனிக்கப்பட்டது. தாலிபான் அனுப்பிய ஆப்கான் மெய்ப்பாதுகாவலர்கள் பின்லாடனின் பாதுகாப்பை பொறுப்பு எடுக்க சென்றனர். 10 பெப்ருவரி 1999 ல், பின்லாடனின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆப்கான் வீரர்கள், அல் கைதா உறுப்பினர்களுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக நீடித்த சண்டையின் முடிவில், பின்லாடனின் இல்லம் ஆப்கான் தாலிபான் பாதுகாவலர்களால் பொறுப்பு எடுக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது, பின்லாடன் பாவித்த செய்மதித் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. (ஆதாரம்: New York Times , 4 மார்ச் 1999 )

ஆப்கானிஸ்தானில் இருந்த அல்கைதா பயிற்சி முகாம்கள் யாவும் தாலிபான் உத்தரவின் பேரில் மூடப்பட்டன. ஆயுதங்கள் களையப்பட்ட வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், ஆப்கானிஸ்தானை விட்டு நாடுகடத்தப் படுவோம் என அஞ்சினார்கள். 2001 ம் ஆண்டு, வடக்கு ஆப்கானிஸ்தானில் யுத்தம் மூண்ட காலத்தில், வெளிநாட்டு ஜிகாதிகளுக்கும் போர்க்களத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்போது கூட பின்லாடன் மீது முல்லா ஒமாருக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அல்கைதாவுக்கு போட்டி இயக்கமான உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணி தலைவர் தாகிர் யுல்டாஷின் நேரடிப் பொறுப்பின் கீழ் விடப்பட்டனர்.

மேலதிக விபரங்களுக்கு:
Taliban Did Not Refuse to Hand Over Bin Laden
New offer on Bin Laden
CTC Sentinel’s January Edition
US Air Strike: Isolated in Taliban bastion capital

Thursday, February 11, 2010

ஏழை ஹெயிட்டியும் யூத ஆயுத தரகர்களும்

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த காலத்தில் இருந்தே யூதர்கள் "புதிய பூமி"யில் சென்று குடியேறி இருந்தனர். ஹெயிட்டி அமைந்திருக்கும் ஹிஸ்பானியோலா தீவுக்கு, கொலம்பசுடன் ஒரு யூத மொழிபெயர்ப்பாளரும் சென்றிருக்கிறார். அன்றைய ஸ்பானியாவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் யூதர்களை வேட்டையாடி கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ அடக்குமுறைக்கு தப்பிய யூதர்கள் பலர், கடல் கடந்து ஹெயிட்டியில் வந்து குடியேறினார்கள். ஹெயிட்டியில் வாழ்ந்த யூதர்கள் பெருந்தோட்ட தொழில் அதிபர்களாக, அடிமைகளின் எஜமானர்களாக அல்லது வியாபாரிகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்துள்ளனர். ஹெயிட்டியில் முன்னர் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளை, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள் இனவழிப்பு செய்து விட்டனர். அதனால் பிரெஞ்சுக்காரர்களால் ஆப்பிரிக்க அடிமைகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டனர்.

1685, ம் ஆண்டில், பிரெஞ்சு மன்னன் லூயி "Code Noir " சட்டத்தை பிறப்பித்தான். அந்த சட்டத்தின் படி பிரெஞ்சுக் காலனிகளில், கத்தோலிக்க சமயத்தை தவிர்ந்த பிற கிறிஸ்தவ பிரிவுகள் தடை செய்யப்பட்டன. யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஹெயிட்டியை ஆண்ட பிரெஞ்சு அதிகாரிகள் யூதர்கள் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட அனுமதித்தனர்.

1804 ம் ஆண்டு, ஹெயிட்டி கறுப்பின அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு சாத்தியமானது. ஹெயிட்டியில் இருந்த வெள்ளையினத்தவர்கள் அனைவரும் கொன்று குவிக்கப் பட்டனர். யூதர்களும் எழுச்சியுற்ற அடிமைகளின் கோபாவேசத்திற்கு தப்பவில்லை. புரட்சியினால் பெருந்தோட்டங்கள் கைவிடப்பட்டன. வர்த்தகம் தடைப்பட்டது. மிகக் குறைந்த யூதர்கள் புதிய ஆளும்வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டனர்.

19 ம் நூற்றாண்டில், போலந்து நாட்டில் இருந்து சில யூத குடும்பங்கள் ஹெயிட்டி வந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் சில யூதர்கள் துணி வியாபாரத்தின் நிமித்தம் வந்துள்ளனர். இஸ்ரேலின் உருவாக்கம், ஹெயிட்டி யூத சமூகத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தது. எழுபதுகளில் ஹெயிட்டிக்கான இஸ்ரேல் தூதுவர் யூத குடும்பங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

1968 ல் ஆட்சிக்கு வந்த கொடுங்கோல் சர்வாதிகாரி டுவாலியரின் அரசுக்கு இஸ்ரேல் ஆயுத விநியோகம் செய்ததாக ஒரு அமெரிக்க நாளேடு செய்தி வெளியிட்டது. (Christian Science Monitor,27 Dec. 1982) 1971 ல் தகப்பனின் அடிச்சுவட்டை பின்பற்றிய, டுவாலியரின் மகனின் கொடுங்கோல் ஆட்சி தொடர்ந்தது. அப்போதும் இஸ்ரேலின் ஆயுத விற்பனை தொடர்ந்தது. ஹெயிட்டி மக்களை கொடூரமாக அடக்கி ஆண்ட சர்வாதிகாரிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்த விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. பல ஆயுத தளபாடங்கள் நீண்ட கால தவணைக் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டன. ஏழை ஹெயிட்டியர்கள், தங்களைக் கொலை செய்ய வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான பணத்தை, இன்று வரை கட்டிக் கொண்டிருக்கின்றனர். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் சிறப்பு காவல்படையினர், அப்பாவி மக்களை சித்திரவதை செய்து, கேள்வியின்றி சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலைகாரப் படைப்பிரிவின் ஜெனெரல் அவ்ரிலுக்கு இஸ்ரேலில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.

1990 ல், "சர்வாதிகார பரம்பரை" ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. பொதுத் தேர்தலில் மக்களின் மனங்கவர்ந்த பாதிரியார் அரிஸ்தீத் அமோக வெற்றி பெற்றார். ஆனால் மீட்கப்பட்ட ஜனநாயகம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. 1991 இராணுவ சதிப்புரட்சியினால் அரிஸ்தீத் அகற்றப்பட்டார். இராணுவ சதிப்புரட்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர், இஸ்ரேலில் இருந்து "ஊஜி" இயந்திரத் துப்பாக்கிகள் பெட்டி பெட்டியாக வந்திறங்கின. (The Independent, 14 Oct. 1991) அந்த ஆயுதங்கள் யாவும் சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவப் பிரிவின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.

அண்மைக் காலமாக ஹெயிட்டியில் அட்டகாசம் செய்து வரும் கிரிமினல் மாபியக் குழுக்களும், அமெரிக்கா, புளோரிடாவில் இருந்து இஸ்ரேலிய ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டன. ( Jane's Intelligence Review , 1 Aug. 2005)

மேற்குறிப்பிட்ட ஆயுத விற்பனை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு இன்று வரை கருத்து எதுவும் கூறவில்லை.

----

Nirit Ben-Ari is a doctoral student in political science who teaches at Israel's Sapir College. This article first appeared in Hebrew in the Israeli daily Ha'aretz on Jan. 22


The Jewish Community of Haiti
___________________________________________________
ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்

Wednesday, February 10, 2010

இஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்


["இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி" தொடரின் 4 ம் பகுதி]
மெக்கா நகருக்கு அருகில், "அல் உஸ்ஸா" என்ற பெண் தெய்வத்தின் கோயில் இருந்தது. இஸ்லாமிய மதத்தில் புதிதாக புதிதாக சேர்ந்த காலித், தனது (மத) விசுவாசத்தை நிரூபிக்க, அந்த தெய்வத்தின் உருவச் சிலையை உடைத்து சேதப்படுத்தினார். மெக்கா மேட்டுக்குடியை சேர்ந்த காலித், சில வருடங்களுக்கு முன்னர் முகமதுவின் முஸ்லிம் படையை எதிர்த்து போரிட்டிருந்தார். அனால் பின்னர் ஒரே இறைவன் கோட்பாட்டிலும், சமூகநீதியிலும் கவரப்பட்டு தீவிர இஸ்லாமியரானவர். இவ்வாறு இறைதூதர் முகமது நபிக்கும், முதலாவது கலீபா அபு பாக்கரின் நம்பிக்கைக்கு பாத்திரமான காலித்திடம் சிரியா மீது படையெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 24 ஏப்ரில் 634 அன்று, காலித் தலைமையிலான அரபு-முஸ்லிம் படைகள் சிரியா மீது படையெடுத்தன.

அன்று ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் எல்லாம் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாகாணமாக இருந்தன. அங்கே வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் அரபு, அல்லது அரேமிய மொழி பேசுபவர்கள். ஆனால் அரச-இராணுவ அதிகார வர்க்கம் கிரேக்கர்களை அல்லது ஆர்மேனியர்களைக் கொண்டிருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. இந்த மூவின மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். டமாஸ்கஸ் அன்றைக்கும் சன நெரிசல் கொண்ட வளர்ச்சியடைந்த நகரமாக இருந்தது. டமாஸ்கசில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களான (கிறிஸ்தவ) அரேபியர்கள், படையெடுத்து வந்த முஸ்லிம் படைகளின் பக்கம் சாய்ந்து விட்டனர். கிரேக்க சாம்ராஜ்யத்தின் படையணிகளில் கிரேக்க, ஆர்மேனிய, அரபு மொழி பேசும் வீரர்கள் கலந்திருந்தனர். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்தது.

அரபு-முஸ்லிம் படையெடுப்புகள் நடந்த காலங்களில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அவர்களை சூழவிருந்த ஈரானிய, கிரேக்க பேரரசுகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. ஏற்கனவே இவ்விரண்டு வல்லரசுகளும் தமக்குள் மோதிக் கொண்டதால், எல்லைப்புற மாகாணமான சிரியா பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது. அதை விட அந்தக் காலகட்டத்தில் பரவிய தொற்று நோய் ஒன்று, ராஜ்யத்தின் தற்காப்பு வலிமையை குறைத்து விட்டிருந்தது. முஸ்லிம் படைகள் காசா நகரை கைப்பற்றியதால், எகிப்துக்கான வழி திறந்து விடப்பட்டது. அதே போல தற்கால சிரியா-ஈராக் எல்லையில் இருக்கும் எடேசாவின் வீழ்ச்சி ஈராக் மீதான போர் முனையை திறந்து விட்டது. சின்னஞ்சிறிய "எடேஸா" தேச மன்னனே, உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய முதலாவது அரசன் என்பது குறிப்பிடத் தக்கது.

அரபு-முஸ்லிம் படைகள் நகரங்களை கைப்பற்றிய போதிலும், இராணுவ தலைவர்கள் அவற்றை காலனிப்படுத்த நினைக்கவில்லை. போரில் பங்குபற்றிய வீரர்கள் நகரங்களுக்கு அருகில் புதிய குடியிருப்புகளை அமைத்தனர். பாலைவனத்தில் இருந்த தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியமர்த்தினர். கிறிஸ்தவர்களின் மத சுதந்திரம் பூரணமாக அங்கீகரிக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பழமையான டமாஸ்கஸ் தேவாலயத்தின் கதை அதற்கு சாட்சி. டமாஸ்கஸ் நகர மத்தியில் இருந்த பாரிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் அரைவாசிப் பகுதி முஸ்லிம்களின் மசூதியாக்கப் பட்டது. 60 வருடங்களுக்கு பின்னர், நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், அந்த பாரம்பரிய தேவாலயம் முழுமையான மசூதியாகியது. அப்போது கூட (இஸ்லாமிய) அரசு கிறிஸ்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கியது. மசூதிக்கு மிக அருகில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்விரண்டு பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களையும், இன்றைக்கும் டமாஸ்கஸ் நகரில் காணலாம்.

சிரியாவை கைப்பற்றும் வரை முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான மசூதி இருக்கவில்லை. இஸ்லாத்தின் படி எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம். டமாஸ்கஸ் கிறிஸ்தவ தேவாலய கட்டிடத்தின் வடிவமைப்பு, பிற்காலத்தில் மசூதிக் கட்டிடக்கலைக்கு ஆதாரமாக அமைந்தது. கவனிக்கவும்: டமாஸ்கசில் இருந்தது ஒரு "கிரேக்க கிறிஸ்தவ" தேவாலயம். அவை கத்தோலிக்க தேவாலய வடிவமைப்பில் இருந்து மாறுபடுகின்றன. இன்றைக்கும் கிரீசுக்கு பயணம் செய்பவர்கள், அங்கிருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை காணலாம்.

அரேபிய பாலைவனத்தில் இருந்து வந்த முஸ்லிம்கள், நிர்வாகம் செய்யும் நடைமுறைகளையும் சிரியாவிலே கற்றுக் கொண்டனர். ஆட்சி அதிகாரம் அரபு-முஸ்லிம்களின் கையில் இருந்தது. ஆயினும் நிர்வாக அலுவல்களை கிரேக்க மொழி பேசிய நடுத்தரவர்க்கம் ஒன்று கவனித்துக் கொண்டது. முன்னர் கிரேக்க சாம்ராஜ்யத்தில் கடமையாற்றிய அதிகாரிகள், குமாஸ்தாக்கள், கணக்காளர்கள், நிர்வாகிகள் அப்படியே இருந்தனர். இதனால் தொடர்ந்து சில வருடங்களுக்கு அரபு-இஸ்லாமிய ராஜ்யத்தின் நிர்வாகம் கிரேக்க மொழியில் நடந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மெல்ல மெல்ல அரபுமயமாகியது.

இஸ்லாமியப் பேரரசில் கிரேக்க மொழியின் செல்வாக்கு, அறிவியல் துறையையும் வளர்த்தது. பிற்காலத்தில் கிரேக்க மொழயில் இருந்த கணித, விஞ்ஞான நூல்கள், அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அவை யாவும் கிரேக்கத்தில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முந்திய அறிவியலை, கிறிஸ்தவ மதம் அஞ்ஞானமாக கருதியது. நீண்ட காலமாக தடை செய்யப்பட்டிருந்த நூல்கள், இஸ்லாமிய ஆட்சியில் புத்துயிர்ப்பு பெற்றன. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பின்னர், ஸ்பானியாவில் அந்த நூல்கள் லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அவை பின்னர் ஐரோப்பியர்களால் தமது காலனிகளிலும் பரப்பப்பட்டன. இன்றைக்கும் நமது பாடசாலைகளில் கற்பிக்கப்படும் தாவரவியல், விலங்கியல், கேத்திர கணிதம் ஆகியன அரேபியரால் வழங்கப்பட்ட கொடைகள்.

சிரியா, கோலான் குன்றுகளுக்கு அருகில், யார்மூக் என்ற இடத்தில் அரபு-முஸ்லிம் படைகளும், கிரேக்க-கிறிஸ்தவ படைகளும் மோதிக் கொண்டன. மத்திய கிழக்கின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த போர்க்களத்தில், இஸ்லாமியப் படைகள் வெற்றிவாகை சூடின. "யார்மூக் யுத்தம்", "ரிட்டா போர்கள்" என்பன அரேபிய தீபகற்பம் முழுவதும் இஸ்லாமிய மதம் பரவ உதவின. இஸ்லாமிய மதம் சாந்தியையும், சமாதானத்தையும் மட்டுமே போதிப்பதாகவும், அது ஒரு போதும் வாள் முனையில் பரப்பபடவில்லை என்று சில மதவாதிகள் கூறலாம். இஸ்லாமியர் மட்டுமல்ல, கிறிஸ்தவர், இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், என்று அனைத்து மதத்தவர்களும் அவ்வாறு தான் கூறிக் கொள்கின்றனர். வன்முறைப் போர்கள், அல்லது வாளேந்திய அரசு அதிகாரம் இன்றி உலகில் எந்த மதமும் பரவவில்லை. ஆயுத பலமற்ற மதங்கள் அழிந்து போனதை உலக வரலாறு நெடுகிலும் காணலாம்.

ஆரம்பத்தில் முகமது நபியின் போதனைகளைக் கேட்டு முஸ்லிமாக மாறியவர்கள், மெக்காவை சேர்ந்த ஒரு சிறு தொகையினரும், மெதீனாவாசிகளும் தான். இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள். பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தில் இருந்து பிரிந்து சுதந்திரமாக விரும்பிய கிழக்கு அரேபிய கிளர்ச்சியாளர்கள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டனர். அன்று அந்தக் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டிருக்கா விட்டால், இன்றைய ஓமானும், யேமனும் நூறு சத வீத முஸ்லிம் நாடுகளாக மாறியிருக்க மாட்டா. சிரியா, பாலஸ்தீனம் மீது படையெடுத்து வெற்றி கொள்ளப்பட்டிருக்கா விட்டால், அங்கே முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள்.

வாள் முனையில் மத அதிகாரத்தை நிலை நாட்டுவது வேறு, வாள் முனையில் மக்களை மதம் மாற்றுவது வேறு. இஸ்லாமிய வரலாற்றில் இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இரத்தம் சிந்திய போர்களின் மூலம் தான், இஸ்லாமியப் படைகள் பிரதேசங்களைக் கைப்பற்றின. எந்தப் பிரதேசம் எப்போது கைப்பற்றப்பட்டது? எந்த ஆண்டு, எந்த இடத்தில் அதற்கான யுத்தம் நடந்தது? போர்வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எந்தெந்த ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன? போர்முனையில் நேர்ந்த இழப்புகள் எத்தனை? இது போன்ற விபரங்களை எல்லாம் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இஸ்லாமியத் தளபதிகள் போரில் நிகழ்த்திய வீர சாகசங்கள், மக்கள் மத்தியில் கர்ணபரம்பரைக் கதைகளாக உலாவின. "இஸ்லாமிய மதம் வாள் முனையில் இருந்து பிறந்தது", என்பதை கூறிக் கொள்ள அன்றைய முஸ்லிம்கள் வெட்கப்படவில்லை. அதை பெருமையாக கருதிக் கொண்டனர்.

இன்று பலர் நினைப்பதற்கு மாறாக, முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பலாத்காகாரமான மதமாற்றம் இடம்பெறவில்லை. "மதம் மாறா விட்டால், கொலை செய்து விடுவேன்" என்று யாரையும் பயமுறுத்தவில்லை. ஆனால் மிக நாசூக்காக, சாத்வீக வழியில் மத மாற்றம் நடந்தது. இஸ்லாமியப் படைகளால் வெல்லப்பட்ட பகுதிகள், அரபு மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தன. நகரங்களில் அரச நிர்வாகத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் அரச உத்தியோகம் பெற விரும்பிய பிற மதத்தவர்கள் முஸ்லீமாக மாறினார்கள். காலப்போக்கில் அரபியை தாய்மொழி ஆக்கிக் கொண்டனர்.

நாட்டுப்புறங்கள் அரபு-இஸ்லாமிய நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இஸ்லாமியரல்லாதோர் இவர்களின் கீழே குத்தகை விவசாயிகளாக வேலை செய்தனர். பிற மதங்களை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களில் ஒரு பகுதியை, முஸ்லிம் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இஸ்ரேல்-எகிப்து எல்லையில் இருக்கும் பண்டைய நெசானா நகரில், அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரச ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க, அரபி இரு மொழிகளில் எழுதப்பட்ட அரச ஆணை அது(674 -675 ). இஸ்லாமியரல்லாத குடி மக்கள் எவ்வளவு கோதுமை, ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஏழை உற்பத்தியாளருக்கும், செல்வந்த நுகர்வோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வான பொருளாதார உறவு, பலரை முஸ்லீமாக மதம் மாறத் தூண்டியது.

நவீன காலத்தில் அரேபியரின் இஸ்லாமியமயமாக்கல் யுக்தி, ஆங்கிலேயரால் சிறந்த முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், ஒரு நாளும் தமது மதமான ஆங்கலிக்க-கிறிஸ்தவ மதத்தை வாள் முனையில் பரப்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காலனிகளில் நிர்வாகப் பொறுப்புகளில் (அன்க்லிகன்) கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். உள்ளூர்வாசிகள் பலர் பதவிக்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி, ஆங்கிலத்தை தாய்மொழி ஆக்கிக் கொண்டனர். பிரிட்டிஷ் கொள்கைக்கு சாட்சியமாக "ஆங்கிலோ-இந்தியர்கள்" என்ற சமூகம் இன்றைக்கும் இந்தியாவில் உள்ளது. "ஒரு சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி?" என்ற பாடங்களை, ஆங்கிலேயர்கள் அரேபியரிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
3.வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்
2.இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்
1.இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

Monday, February 08, 2010

வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்


["இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி" தொடரின் 3 ம் பகுதி]
சராசரி மனிதனின் வாழ்வில், முப்பது வயதிற்கு பின்னர் பக்குவம் ஏற்படுகின்றது. இயேசுவும், முகமதுவும் தமது முப்பதாவது வயதில் இருந்தே மதப் பிரசங்கங்களை ஆரம்பிக்கின்றனர். கி.பி. 600 ம் ஆண்டளவில் முதன் முறையாக பிரசங்கித்த முகமதுவுக்கு, "கப்ரியேல்" என்ற தேவதை மூலமாக "குர் ஆன்" என்ற திருமறை இறக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் போலன்றி, பொதுவாக இஸ்லாமிய மதத்தில் அற்புதங்களை காண்பதரிது. முகமதுவின் வாழ்க்கையில் நடந்ததாக கூறப்படும், இது போன்ற ஒரு சில அற்புதங்களைத் தவிர, மற்ற எல்லாமே சரித்திரக் குறிப்புகளாகவே காணப்படுகின்றன. புனித குர் ஆனின் வாசகங்கள் யாவும், முகமது நபிக்கு இறைவனால் வழங்கப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது.

அன்றைய காலத்தில் சிரியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் முகமதுவின் போதனைகளை ஏற்கவில்லை. இத்தனைக்கும் வியாபார நிமித்தம் சிரியா சென்று வந்த முகமது, அங்கிருந்த (கிறிஸ்தவ/யூத) ஞானிகளுடன் தத்துவ விசாரங்களை நடத்தியுள்ளார். பைபிளில் உள்ள கதைகள் அப்படியே புனித குர் ஆனில் உள்ளன. இதனாலும் கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் முகமதுவின் போதனைகளில் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்தக் காலத்தில், முகமது பைபிளை பிரதியெடுத்து, அல்லது திரித்து போதிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. (யூதர்களின்) தோராவுக்கும், பைபிளுக்கும், குர் ஆனுக்கும் பொதுவான மூல நூல் ஒன்று இருந்தது. அது இன்று வழக்கொழிந்து விட்டது என்று முஸ்லிம்கள் வாதிடுகின்றனர். ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல பைபிள் நூல்கள் இருந்த காலத்தில், ஒரே பைபிளுக்கு யாரும் உரிமை கோர முடியாது.

பாட்டாளி வர்க்கப் பிரதிநிதியான (ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன்) இயேசு கிறிஸ்து, அடிமைகளின் விடுதலை குறித்தெல்லாம் போதனை செய்த போதிலும் அதிகார வர்க்கத்தை அசைக்க முடியவில்லை. இயேசுவின் சீடர்களில் பலர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவரை பின்பற்றியவர்கள் ஏழை எளியவர்கள். இருப்பினும் இயேசு ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை விரும்பவில்லை. அன்பினால் அடக்குமுறையாளனின் மனதை மாற்றலாம் என போதித்தார். இயேசுவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ், ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் குறித்து வாதிட்டார். எனினும் இயேசு வன்முறைப் பாதையை நிராகரித்திருந்தார். முடிவு எப்படியிருந்தது என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை.

முகமது, இயேசுவின் அஹிம்சா வழியை பின்பற்றவில்லை. தான் உறுதியாக பற்றிக் கொண்ட கொள்கைக்காக வாளேந்தி போராடுவதில் தவறில்லை என்பது அவரது வாதம். நமது காலத்திய சோமாலிய புத்திஜீவியான ஹிர்சி அலி, "முகமது ஒரு தீவிரவாதி!" எனக் கூறி சர்ச்சையை உருவாக்கினார். முகமதுவின் மதத்திற்கான போராட்டத்தை அந்தக் கால பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மேட்டுக்குடியில் பிறந்த முகமது நபி, அடிமையையும் சகோதரனாக சமத்துவமளித்த புதிய சமுதாயத்தை உருவாக்கியது சாதாரண விடயமல்ல. அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இன்னொரு பக்கத்தில், அரேபியாவில் இஸ்லாமின் எழுச்சியை வணிக சமூகத்தின் விரிவாக்கத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட முதலாளித்துவக் கூறுகள் சில, அன்றைய இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டன.

அன்றைய பாலஸ்தீனம், சிரியா, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், ஆட்சியிலிருந்தவர்கள் கிரேக்கர்கள். ஆட்சியாளர்கள் தம்மை ரோமர்கள் என்று அர்த்தப்படும் "Romaioi " (உச்சரிப்பு: ரொமேயீ ) கிரேக்க மொழியில் அழைத்துக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலோ-இந்தியர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்தப் பட்டதைப் போல, கிரேக்க மொழி பேசும் அரபுக்களையும், ரோமர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் நியமித்தனர். பைபிள் இவர்களையும் ரோமர்கள் என்று தான் குறிப்பிடுகின்றது. இயேசு முன்னெடுத்தது ஒரு சீர்திருத்த இயக்கம். அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் பேசிய அரேமிய மொழி இயேசுவுக்கும் தாய்மொழி. இயேசுவின் இயக்கம் அரசியல் தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், அரேமிய மக்களின் தாயகம் உருவாகியிருக்கும். இருப்பினும் யூத-ரோம கூட்டு முயற்சியால் அந்த இயக்கம் நசுக்கப்பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம், கிரேக்க-ரோம சாம்ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மதமாகியது ஒரு வரலாற்று முரண்நகை.

ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் விழவில்லை, அது கிறிஸ்தவ மதத்தால் பொறுப்பேற்கப்பட்டது. சுருங்கச் சொல்லின், அன்றைய மத்திய ஆசியாவில் கிறிஸ்தவ மதம் என்ற பெயரில், ஒரு மேற்கத்திய அரசு அதிகாரம் கோலோச்சியது. அரேபியாவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியப் படைகள், அதற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதின. இந்தப் பின்னடைவு நவீன கால அரசியலிலும் எதிரொலிக்கின்றது. மத்திய ஆசியாவில் அரபு-இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சகோதர மொழியான அரேமிய மொழி பேசும் மக்களை வென்றெடுக்க முடிந்தமை. இரண்டு, உள்நாட்டுப் பிரச்சினைகளால் பலவீனமடைந்த கிரேக்க-ரோம சாம்ராஜ்யம்.

ஆரம்பத்தில் முகமதுவை பின்பற்றிய முதல் முஸ்லிகள் அனைவரும் மெக்கா நகரின் ஆதிக்க வர்க்கமான குறைஷி குலத்தை சேர்ந்தவர்கள். நிச்சயமாக முகமது தனது சொந்த ஊரான மெக்காவில் தான் முதலில் போதித்திருப்பார். அவரால் சிலரை இஸ்லாம் என்ற புதிய மார்க்கத்திற்கு மாற்ற முடிந்தாலும், பல எதிரிகளையும் சம்பாதித்தார். அந்த எதிரிகளும் குறைஷிகள் தாம். குறைஷிகள் ஏற்கனவே நல்ல வருமானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த மெக்கா கோயிலை பராமரித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் விட்டு விட்டு, சில "உதவாக்கரை இளைஞர்களின்" பேச்சைக் கேட்க அவர்களுக்கென்ன பைத்தியமா? "தம்மைத் தாமே முஸ்லிம் என அழைத்துக் கொள்ளும் இளைஞர்கள் சமூகநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்கள். சாதியில் உயர்ந்த குறைஷிகளான நாம் அடிமைகளையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டுமாம்...." குறைஷி மேலாதிக்கவாதிகள் இஸ்லாம் என்ற மதத்தை முளையிலேயே கிள்ளியெறிய முனைந்தனர். மெக்கா நகரில் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர்.

622 ம் ஆண்டு, முகமதுவும், முஸ்லிம்களும் மெக்காவில் இருப்பது தமக்கு ஆபத்து என உணர்ந்தனர். மெக்காவில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் இருக்கும் மெதினா நகரில் இருந்து எதிர்பாராத உதவி கிட்டியது. பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்.

இறைதூதர் முகமதுவும், அவரை பின்பற்றியவர்களும், மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெர்ந்த சம்பவம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இல்லாவிட்டால் மெக்காவில் முஸ்லிம்களை அன்றே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெயர்ந்த நாளில் (ஹிஜ்ரா) இருந்து இஸ்லாமியக் கலண்டர் தொடங்குகின்றது. முகமதுவுடன் மெக்காவில் இருந்து சென்றவர்கள் "முஜாஹிரூன்' என்றழைக்கப் பட்டனர். மெதினா நகரில் புதிதாக இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் "அன்சார்" (உதவியாளர்கள்) என அழைக்கப்பட்டனர். மெதீனா சென்ற முகமது தற்பாதுகாப்புக்காக ஒரு படையை உருவாக்கினார். முகமது ஒரு மதப்பிரசாரகராக மட்டுமலல்லாது, தலைசிறந்த இராணுவத் தளபதியாகவும் திகழ்ந்தார்.

முகமது தலைமையிலான முஸ்லிம் படைகள், மெக்கா படைகளை போரில் வென்றன. 630 ம் ஆண்டில், மெக்கா நகரம் முகமதுவின் தலைமையை ஏற்றது. இதனால் மெதீனாவுடன், மெக்காவும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. எனினும் புதிய முஸ்லிம் தேசத்தின் நிர்வாகத் தலைநகராக மெதீனா விளங்கியது. சிரியா, ஈராக் மீதான படையெடுப்புகள் யாவும் மெதீனாவில் இருந்தே திட்டமிடப்பட்டன. ஆரம்ப காலங்களில் இஸ்லாமியப் படைகளை வழிநடத்திய கட்டளைத் தளபதிகள் அனைவரும் குரைஷிகளாக இருந்தனர். இதனால் அன்சாரிகள் எனப்படும் மெதீனாவாசிகள் அதிருப்தியுற்றனர். இந்த முரண்பாட்டை தீர்க்க வேண்டிய அவசியத்தை, தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் உணர்ந்தனர். இருப்பினும் முகமதுவின் இறப்புக்குப் பின்னர், இஸ்லாமிய சமூகத்தினுள் வேறு சில பிளவுகள் தோன்றின.

முகமதுவின் காலத்திலேயே, அரேபிய தீபகற்பத்தில் முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் நிறுவப்பட்டு விட்டது. பெரும்பாலும் சமாதான வழிகளிலேயே அந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப் பட்டது. அரேபிய தீபகற்பத்தில் இருந்த குட்டி தேசங்கள் மெதீனாவிற்கு வரி கட்ட சம்மதித்தன. இறைதூதர் முகமது நபியின் மரணத்தின் பின்னர், சில பிரதேசத் தலைவர்கள் வரி கொடுக்க மறுத்தனர். அதாவது முஸ்லிம்களாக தொடர்ந்து இருந்த போதிலும், மெதீனாவின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இன்று யேமன் இருக்கும் இடத்தில், பானு ஹனீபா என்ற அரபு குலத்தை சேர்ந்தவர்கள், தமக்கென ஒரு இறைதூதரை தெரிவு செய்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தென் கிழக்கு அரேபியாவின் பிற குலங்கள், ஒரு பெண் தீர்க்கதரிசியின் பின்னால் அணி திரண்டனர். மெதீனாவில் இருந்து சென்ற படையணிகள் அத்தகைய கிளர்ச்சியை அடக்கின. இஸ்லாமிய சமூகத்தினுள் தோன்றிய முதலாவது சகோதர யுத்தம், "ரிட்டா போர்கள்" என அழைக்கப்பட்டன.

இஸ்லாமுக்கு முந்திய அரபு சமுதாயத்தில் பெண்கள் தலைமைப் பாத்திரம் வகிக்குமளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். இஸ்லாம், பிற மத நிறுவனங்களைப் போலவே, சட்டத்தின் பெயரில் பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிவான நிலைக்கு தள்ளியது. இன்றும் கூட, இஸ்லாத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் பெண்கள் மதப்பிரசங்கம் நினைத்தே பார்க்க முடியாது. மெதீனாவுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய ஸாஜா என்ற பெண், தன்னை இன்னொரு இறைதூதராக நியமித்துக் கொண்டார். இஸ்லாமிய சரித்திரத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. சாஜாவும், அவர் சார்ந்த தக்லீப் குலமும் கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்டிருந்தமையும் (சிறிது காலமே நீடித்த) கிளர்ச்சிக்கான புறக்காரணிகள். மெதீனாவுக்கு எதிராக கலகம் செய்த அரபுக் குழுக்களை ஒடுக்கிய படையணிக்கு தலைமை தாங்கியவர் காலித் இபுன் வாலித். இவர் பின்னர் சிரியா மீதான படையெடுப்புகளுக்கு சிறப்புத் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார்.
(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்
1.இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி