Monday, November 15, 2010

நேட்டோ: "ரஷ்யாவே! மீண்டும் ஆப்கானிஸ்தான் வருக!!"

ஆப்கானிஸ்தான் பிரச்சினையை தீர்ப்பதற்கு நேட்டோ தலைமையகம் ரஷ்யப் படைகளின் உதவியைக் கோரியுள்ளது. நேட்டோ செயலதிபர் Anders Fogh Rasmussen, "ரஷ்ய-நேட்டோ உறவில் புதிய தொடக்கம்." என்று கூறியுள்ளார். போதைவஸ்து கடத்தலை தடுக்கவும், ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சியளிக்கவும் ரஷ்யாவின் உதவி தேவைப்படும் எனத் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் அடுத்த மாதம் லிஸ்பனில் கூடவிருக்கும் நேட்டோ உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் "புதிய தொடக்கம்" காரணமாக, நேட்டோ சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, "முன்னாள் சோவியத் குடியரசுகளில் நிலை நிறுத்தப் பட்டுள்ள படைகளில் அதிக பட்சம் 3000 வீரர்களே இடம்பெறுவர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக பட்சம் 24 போர் விமானங்களை, வருடத்திற்கு 42 நாட்கள் மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டும் என ரஷ்யா கேட்டிருந்தது. பால்கன், பால்ட்டிக், மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கத்திய படைகளை அனுப்பும் விடயத்தில், ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப் படுகின்றது. மெட்வெடேவ் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. இருப்பினும் அரை வாசி நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், அது ரஷ்யாவுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையை தீர்ப்பதற்கு நேட்டோ தவறுமானால், அது மத்திய ஆசிய நாடுகளின் ஸ்திரத் தன்மையை பாதிக்கும். அதனால் தான் ரஷ்யா நேட்டோவுக்கு உதவ முன்வந்ததாக ரஷ்ய அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யா, மத்திய ஆசியாவுக்கான நேட்டோ விநியோகப் பாதையை தடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது. ரஷ்யாவை தோழனாக கொண்டு செயற்படுவதன் மூலம், ஆப்கான் பிரச்சினையை சுமுகமாக தீர்க்கலாம் என்று நேட்டோ எண்ணுகின்றது. ரஷ்யாவுடன் நட்புறவை விரும்பும் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு பக்கம். ரஷ்யாவை எதிரியாக கருதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மறு பக்கம். இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கும், ரஷ்யாவுடனான "புதிய தொடக்கம்" வழிவகுக்கலாம்.

"ஆப்கானிஸ்தானில் ரஷ்யப் படைகள், நேட்டோ படையினருடன் சேர்ந்து போரிட மாட்டார்கள். பீரங்கிக்கு தீனியாக ரஷ்ய வீரர்களை அனுப்ப வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கலாம். ஆப்கான் சகதிக்குள் இரண்டாவது தடவையும் மாட்டிக் கொள்ள ரஷ்யா தயாராக இல்லை." இவ்வாறு தெரிவித்தார், ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதுவர் Dmitry Rogozin . ஆயினும், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நேட்டோ நாடுகளின் ஆயுத தளபாடங்களை ரஷ்ய வான் பரப்பினூடாக கொண்டு செல்லும் உடன்படிக்கை ஒன்றுக்கு ரஷ்யா இசைந்துள்ளது.


No comments: