Saturday, August 21, 2010

நெதர்லாந்தை உலுக்கிய அரசியல் படுகொலை

பிம் போர்தைன் (Pim Fortuijn) என்ற வலதுசாரி அரசியல் தலைவர் 6-5-2002 சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது, ஐரோப்பா எங்கும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. இது வரை காலமும் தென் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இடம்பெற்று வந்த அரசியல் படுகொலைகள் அமைதியான, அரசியல் சகிப்புத்தனமை மிக்க நெதர்லாந்திலும் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்று ஐரோப்பா எங்கும் அரசியல் கட்சிகள் வளர்ந்து வரும் நிலையில் அப்படியான தலைவர் கொல்லப்பட்டதும் அதிர்ச்சிக்கு காரணம்.

நெதர்லாந்தில் நீண்ட காலமாகவே நவ நாசிச, அல்லது தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகள் காலூன்ற முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக "தாழ்நில மாதிரி" (Polder Model ) என்று அழைக்கப்பட்ட அரசியல் கொள்கை நடைமுறையில் இருந்தது. இந்த கொள்கையின் படி, முதலாளிகளும் சமரசவாத தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது முதலாளிகள் வாழ்க்கைச் செலவுக்கேற்ற (மேலதிகமாக சேமிக்கக் கூடிய) ஊதியம் வழங்குவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தங்கள் எதிலும் இறங்கக் கூடாது. இது போன்ற உடன்படிக்கைகள் தான் மேற்கத்திய நாடுகளில் தொழிலாளர்கள் வளமாக வாழ்வது போன்ற தோற்றத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது.

ஆனாலும் எவ்வளவு காலத்துக்கு தான் முதலாளிகள் பொறுத்துக் கொள்வார்கள்? எண்பதுகளின் இறுதியில் தோன்றிய பொருளாதார வளர்ச்சியின்மை, தொழிலாளரின் நலன்களை பாதிக்கும் சீர்திருத்தங்களுக்கு நிர்ப்பந்தித்தது. இதற்கிடையே கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் முடிவுக்கு வந்த பின்னர், "கம்யூனிசம் இறந்து விட்டது." என்று அறிவித்தாகி விட்டது. ஆகவே இனி "கம்யூனிச அபாயம்" வரவே வராது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டன மேற்கு ஐரோப்பிய அரசுகள். முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை ஏற்று மெல்ல மெல்ல பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். விளைவு: லட்சக்கணக்கான மக்களின் வேலையிழப்பு, வருமான இழப்பு, வறுமை. பணக்கார நாடுகளில் வளர்ந்து வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு நெதர்லாந்தும் விதிவிலக்கல்ல.

சமூகப் பொருளாதார பிரச்சினைகளை தீவிர வலதுசாரிக் கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. வேலையில்லாத பிரச்சினை அதிகரிப்பதற்கு காரணம், "அகதிகளும், வெளிநாட்டவர்களும் எமது வேலைகளை பறிப்பது தான்." என்று பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில் "அழுக்கான, கடினமான வேலைகள்" என்று இந்நாட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட தொழில்களைத் தான், வெளிநாட்டவர்கள் செய்கிறார்கள். வெளிநாட்டு தொழிலாளருக்கு குறைந்த சம்பளம் கொடுத்து, அதிக உழைப்பை சுரண்டலாம் என்ற காரணத்தால் தான் முதலாளிகள் அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். வெளிநாட்டு உழைப்பாளிகளோ நாணய மதிப்பு உயர்வு காரணமாக, தாம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வருகின்றனர். அதனால் தாம் சுரண்டப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. இத்தகைய உண்மைகளை தீவிர வலதுசாரி சக்திகள், தம் மக்களுக்கு கூறுவதில்லை. வெளிநாட்டவர்களை வெளியேற்றினால், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

இரண்டாம்தரப் பிரஜைகளாக தாம் நடத்தப்படுவதாக உணர்ந்த, இரண்டாம் தலைமுறை அரபு, கறுப்பின இளைஞர்கள், தைரியமாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது செல்வம் சமமாக பகிர்ந்தளிக்கப்படாத, இரண்டு பட்ட சமூகத்தை காட்டுகின்றது. அதாவது வேலைவாய்ப்புகள், வருமானம் இரண்டு சமூகங்களுக்கும் சமமாக கிடைப்பதில்லை. ஆனால் இந்த உண்மையும் மறைக்கப்பட்டு, வெளிநாட்டு குடியேறிகள் அனைவரும் குற்றப்பரம்பரை போல காட்டுகின்றனர். வெளிநாட்டு கிரிமினல்களிடம் இருந்து உள்நாட்டு (வெள்ளையின) மக்களை பாதுகாப்பது என்ற கொள்கை அடிப்படையில் ஒரு வலதுசாரிக் கட்சி தோன்றியது. "வாழ்வதற்கேற்ற நெதர்லாந்து" என்ற கட்சியின் தலைவராக பிம் போர்தைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிம் தலைவரான உடனே பல அதிரடி அறிவிப்புகளால் பிரபலமானார்.
"சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமன் என்ற ஷரத்தை அகற்ற வேண்டும்."
"புதிதாக அகதிகள் வருவதை முற்று முழுதாக தடுக்க வேண்டும்."
"இஸ்லாம் ஒரு பிற்போக்கு மதம்" போன்ற சில உரைகள் உதாரணத்திற்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இந்த உரைகள் நாஜிகளின் உரைகள் போன்றிருப்பதாக கண்டனம் எழவே, கட்சி பிம்மை வெளியேற்றியது. பிம் வெளியேற்றப்பட்டதும் நெதர்லாந்தின் பிரதான வர்த்தக நிறுவனங்கள் தாம் கட்சிக்கு வழங்கிய நன்கொடைகளை திருப்பித் தருமாறு கேட்டன. இந்தச் செயல் முதலாளிகளுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுக்கு சான்று.

பிரபலத்தை தேடிக் கொண்ட பிம் போர்தைன் தனது பெயரிலேயே புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் சார்பாக அத்தேர்தலில் நின்றவர்கள் அரசியல் முன்னனுபவம் அற்றவர்கள், அல்லது வணிகர்கள். இது வரை காலமும் இனவாதக் கதைகளை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பேசிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், பிம்மை தம்மில் ஒருவராக கண்டனர். பெரும்பான்மை மக்கள் தமது கருத்துக்கு உடன்பாடான அரசியல்வாதியாக பிம்மை கருதியதால், ஊடகங்கள் அவரை "நவநாஜி" என்று விமர்சிக்க தயங்கின. அதற்கு மாறாக செய்தி ஊடகங்கள் அவருக்கு "வெகுஜன அரசியல்வாதி" என்று பெயர் சூட்டின. முன்னொரு காலத்தில் ஹிட்லர் கூட அவ்வாறு தான் அழைக்கப்பட்டார்.

தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் பிரபலமடைவதற்கு தொடர்பு ஊடகங்களும் ஒரு காரணம்.
வலதுசாரிகளின் ஒவ்வொரு சொல்லையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விளம்பரப்படுத்தும் ஊடகங்கள், இடதுசாரி அரசியல்வாதிகளின் பேச்சுகளை கண்டுகொள்வதில்லை. அதிகம் பேசப்படுவதால் தீவிர வலதுசாரிகளுக்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது. எதிர்பாராத விதமாக, பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர், வானொலி நிலையம் அருகில் வைத்து பிம் போர்தைன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டவன் ஒரு தீவிர இடதுசாரி வாலிபன் என்று கூறுகிறார்கள். ஆனால் கொலைக்கான காரணமோ, அல்லது அவனுக்குப் பின்னால் ஒரு இயக்கம் இருந்ததாகவோ இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இதற்கிடையே கொலை சம்பந்தமான விசாரணையை மேற்கொண்ட வழக்கறிஞர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் கொலையில் நெதர்லாந்து புலனாய்வுத் துறை சம்பந்தப் பட்டிருந்ததா என்ற கேள்வியும் எழுந்தது. இந்தக் கேள்விகளை ஒரு கலைஞர் திரைக்கதையாக வடிவமைத்து ஒரு சினிமாப் படம் தயாரித்தார். சில வருடங்களுக்குப் பின்னர், தேயோ வான் கொக் என்ற அந்த சினிமாக் கலைஞர் பட்டப் பகலில் நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு இஸ்லாமிய தீவிரவாதி கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கிலும், வக்கீலும், சில புலனாய்வு ஊடகங்களும் மேற்கொண்ட விசாரணைகள் மேற்கொண்டு நகர முடியாது தடைகள் வந்த வண்ணம் உள்ளன.
****************************************
சினிமாக் கலைஞர் தேயோ வான் கொக் எடுத்த, பிம் கொலை மர்மத்தை துப்பறியும் திரைப்படம் (May 6th.). படம் தயாரித்த சில மாதங்களின் பின்னர் அந்த சினிமாக் கலைஞரும் அதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

7 comments:

Mohamed Faaique said...

கட்டுரை இவ்வளவு'தானா .. பாதியில் நிற்பது போன்று தோன்றுகிறது...

சிங்கக்குட்டி said...

எப்போதும் போலவே ஒரு நல்ல பகிர்வு.

உங்கள் உலக விசைய ஆர்வமும் அறிவும் என்னை வியக்க வைக்கிறது.

Kalaiyarasan said...

நன்றி, சிங்கக்குட்டி, Mohamed Faaique இந்தக் கட்டுரை கொலை நடந்த அதே வருடம் எழுதப் பட்டது. முடிவை மட்டும் மாற்றியுள்ளேன். இரண்டாவது கொலை வேறொரு பிரச்சினைக்காக நடந்தது. இரண்டுக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை. அதனால் முடிவு மர்மமாகவே இருக்கட்டும் என்று அப்படியே விட்டுள்ளேன்.

மரா said...

அண்ணே. நீங்க போட்டிருக்கிற மாதிரி ரெண்டு பனியன் எனக்கு தாட்டி வுடுங்க கூரியர்ல...நல்லா இருக்கு.

மரா said...

மே-6 படம் பாக்கோனும்.

pithan said...

கலை,
இப்போது புதியதாக பரவிவரும் அமைப்புகளை யும்,அவர்களின் வலதுசாரி தன்மைகளும் தமிழ் சூழழுக்கும் ஒத்துபோகும்படுயாக உள்ளது. இக் கட்டுரை,சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது.
ஆதி

Kalaiyarasan said...

மரா, தாரளமாக எத்தனை சே பனியன் தேவை? அனுப்பி வைக்கிறேன். 06 /05 திரைப்படம் அரைவாசி கற்பனை என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்கிறேன். மேலும் படத்தை தயாரித்தவரும் ஒரு தீவிர வலதுசாரி ஆர்வலர் தான்.

ஆதி, நீங்கள் கூறுவது சரி. நாடுகள் வேறாக இருக்கலாம் ஆனால் பிரச்சினை ஒன்று தான்.