Saturday, June 19, 2010

போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை

(23 May 2010) போலந்து தலைநகர் வார்சொவில் நைஜீரிய நடைபாதை வியாபாரி ஒருவரை போலிஸ் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து அங்கே கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறிந்த மேலதிக தகவல்கள். வார்சா நகரின் பிராஹா வட்டாரத்தை சேர்ந்த ஸ்டேடியம் அருகில் நடைபாதையில் நைஜீரிய வியாபாரிகள் காலணிகள் விற்றுக் கொண்டிருந்தனர். மே 23 அன்று, அதிரடியாக பாய்ந்த போலிஸ் அவர்களை அப்புறப்படுத்த எத்தனித்தது. ஒரு நைஜீரிய வியாபாரியை கைது செய்து நிலத்தில் போட்டு அமுக்கினார்கள். அருகில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அதே நாட்டவரான மாக்ஸ், தனது தோழனை காப்பாற்ற ஓடி வந்தார். திடீரென ஒரு போலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சீறியதில், வயிற்றில் சன்னம் பாய்ந்து மாக்ஸ் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். பட்டப் பகலில் நடந்த படுகொலை அங்கிருந்த பிற நைஜீரிய வியாபாரிகளை எழுச்சி கொள்ள வைத்தது. போலீசார் மீது கல்வீச்சு நடத்தினார்கள். நான்கு போலிஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டதற்காக 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

"தம்மை சுற்றி வளைத்து தாக்கிய ஆப்பிரிக்கர்களை தடுப்பதற்காக தற்பாதுகாப்புக்காக சுட்டதில் மாக்ஸ் கொல்லப்பட்டதாக...." ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது. இருப்பினும் தொலைக்காட்சி ஒன்று மாற்றுக் கருத்தை அறியும் பொருட்டு, மாக்ஸின் மனைவியை பேட்டி கண்டது. அப்போது தான் முன்னர் குறிப்பிட்ட உண்மைகள் வெளிவந்தன. ஒரு போலந்து பெண்மணியை திருமணம் செய்து சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த மக்ஸ், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். குடும்பக் கஷ்டம் காரணமாக மேலதிக வருமானம் ஈட்டுவதற்காகவே நடைபாதை வியாபாரம் செய்து வந்தார். மக்சின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பம் தற்போது நடுக்கடலில் தத்தளிக்கின்றது.

படுகொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தன் எழுச்சியான ஊர்வலம் ஒன்று போலிஸ் நிலையம் நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்தில் ஆப்பிரிக்க குடிவரவாளர்களுடன், போலந்து குடிமக்களும் கலந்து கொண்டனர்.

படுகொலை குறித்து போலந்து ஊடகங்களில் வந்த செய்தி:
தொலைக்காட்சி வீடியோ (போலிஷ் மொழியில்)
பத்திரிகை செய்தி (போலிஷ் மொழியில்)

2 comments:

Prakash said...

துரத்தி சுட்டதாக நினைவு தோழர்.தானாக குண்டு வெடித்ததா? எப்படியாயினும் இது ஒரு அசம்பாவிதமே.

போலந்தில் கருப்பு இனமக்களின் தொகை கம்மி (நான் பார்த்தவரையில்) அதனாலயே அவர்கள் பெரிய அளவில் ஒரு கூட்டு கலாச்சாரத்துக்கு தயார் நிலையில் இல்லை மற்ற நாடுகள் போல்

Kalaiyarasan said...

போலந்தில் கறுப்பின ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, எளிதில் இனம் பிரித்து அறியக்கூடிய இந்தியர்கள், ஆசியர்களும் குறைவு. "சம்பாதிக்க முடியாது", "குடியுரிமை கிடைக்காது என்பதால் நீண்ட காலமாக போலந்து மாதிரியான நாடுகளை தவிர்த்து வந்தார்கள்.