Saturday, January 16, 2010

இங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்

இரண்டாவது உலகப்போரின் முடிவில் அமெரிக்காவை அதிகம் குடைந்து கொண்டிருந்த கேள்வி இது. மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட விடாமல் தடுப்பது எங்ஙனம்? முதலாம் உலகப்போரின் பின்னர் எழுந்த சோஷலிச எழுச்சி அலைகளை யாரும் மறந்து விடவில்லை. மீண்டும் அதே போன்று பேரழிவை கொடுத்த போர் இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. ஐரோப்பிய மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கின்றனர். (அன்றைய ஜெர்மனி எத்தியோப்பாவை விட மோசமாக இருந்தது.) ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும்பான்மை மக்கள் வறுமையின் கோரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இத்தாலி, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்களில் கம்யூனிசக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சி ஆட்சியமைக்க முடியவில்லை.

"இது என்ன ஜனநாயகம்?" என நீங்கள் கேட்கலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு தலையிட்டு தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய வைத்தது. முடிந்த அளவு தகிடுதத்தங்களை செய்து, அமெரிக்க சார்பு கட்சிகளை தேர்தலில் வெல்ல வைத்தனர். இத்தாலியில் நடைபெற்ற மறுதேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்குப் போடுபவர்களை, (கிறிஸ்தவ) மதத்தை விட்டு ஒதுக்கி வைப்பதாக வத்திக்கான் அறிவித்தது. அபிவிருத்துப் பணிகளுக்கென பெருமளவு நிதி ஒதுக்குவதாக அமெரிக்கா வாக்களித்தது. "மார்ஷல் உதவி" என்ற நிதி அமெரிக்க சார்பு அரசுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது பிற்காலத்தில் சர்வதேச நாணய நிதி நிறுவனமாக உருமாறியது. அமெரிக்க நிதியில் "நலன்புரி அரசுகள்" (சோஷலிசத்திற்கு மறு பெயர்) தோன்றின. கிட்டத்தட்ட இதே போன்ற சூழ்நிலை, சோவியத் படைகள் ஆக்கிரமித்த கிழக்கு ஐரோப்பாவிலும் காணப்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய நலன்புரி அரசுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தின. பெரிய கம்பனிகள் சிறிது காலத்திற்கு லாபவெறியை கட்டுப்படுத்த முன்வந்தன. நலன்புரி அரசு அள்ளி வழங்கிய மானியங்களும், சலுகைகளும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவியது. மறுபக்கத்தில் பண வசதி படைத்த மக்கள், அதனை செலவளிக்க வழிகாட்டும் நுகர்வுக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர். இதனால் அரசு அளித்த மானியம், கம்பனிகளின் லாபமாகவும், லாபத்தில் ஒரு பகுதி அரசுக்கு வரியாகவும், பணப் பரிமாற்றம் ஒரு சுழற்சிக்குள் நின்றது. இந்த "பொருளாதார இரகசியம்" எல்லாம் மூன்றாம் உலக மக்களுக்கு தெரியாது. மேற்கு ஐரோப்பா பணக்கார நாடுகளாக மாறிய அதிசயம், கடவுளின் கொடை, என ஏழை நாடுகளின் மக்கள் வியந்தனர்.

"இரும்புத் திரை" என அழைக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்கு அப்பால், சோஷலிச நாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன. மேற்குலகிற்கு நிகராக இல்லாவிட்டாலும், ஏதோ தம்மாலியன்ற பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தன. சர்வதேச மூலதனத்தில் இருந்து அன்னியப்பட்டதால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. குறுக்கு வழியில் பணக்காரனாக விரும்பிய சுயநலம் மிக்க கும்பல் இன்னும் அங்கே இருந்தது. மேலும் ஒரே கட்சி ஆட்சியினால் சுதந்திரம் மறுக்கப்பட்ட, பிற அரசியல் போக்குகளைக் கொண்ட நபர்களும் மூச்சு விட வழி தேடினர். மேற்குலக நாடுகள், சோஷலிச அரசாங்கங்களுடன் முரண்பட்ட மக்களை கவர்ந்திழுக்க எண்ணின. அவர்களை குறி வைத்து, கவர்ச்சிகரமான வசதிகளுடன் அகதி அந்தஸ்து வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. வசதியான வீடு, வட்டியில்லாக் கடன், உடனடி வேலைவாய்ப்பு, "சோஷலிச அகதிகளுக்கு" வெகுமதிகள் காத்திருந்தன. இரும்புத்திரையைக் கிழித்துக் கொண்டு, சுதந்திர மேற்கு ஐரோப்பாவிற்குள் நுழைந்த லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது.

"சோஷலிச அகதிகள்" விவகாரம் எல்லாம், மூன்றாம் உலகத்தில் இருந்து வரும் அகதிகளுக்கு தெரியாது. அவர்களும் "அழையா விருந்தாளிகளாக" மேற்கு ஐரோப்பாவிற்குள் புகுந்து தஞ்சம் கோரினார்கள். "நாங்கள் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்வோம்." என்று சட்டம் போட முடியுமா? அப்புறம் ஐரோப்பியரின் உன்னத நாகரீகத்திற்கு களங்கம் ஏற்படாதா? அதனால் உலகின் எப்பாகத்தில் இருந்து வந்தாலும், அகதிகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. "வெள்ளை கிறிஸ்தவ" ஐரோப்பிய நாடுகள், பல்லின மக்கள் வாழும் நாடுகளாகின. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அபரிதமான உழைப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். இதற்கென கூலியாட்களை துருக்கி, மொரோக்கோ ஆகிய "முஸ்லிம்" நாடுகளில் இருந்து தருவித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இரண்டு உலகப் போர்களினால், ஐரோப்பிய சனத்தொகை வெகுவாக குறைந்திருந்தது.

எண்பதுகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. நெருக்கடி உருவானது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. அதே நேரம், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச அரசுகள் நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தன. அந் நாடுகளில், முதலாளித்துவம் மீட்கப்படும் காலத்திற்காக காத்திருந்த முதலாளிகள், தொழிற்சாலைகளை அங்கே கொண்டு சென்றார்கள். மேற்கு ஐரோப்பாவில் பல ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உற்பத்தி துறைகள் புறக்கணிக்கப்பட்டு, சேவைத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இருப்பினும் வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இம்முறை அரசின் கவனம், மூன்றாமுலக அகதிகள் மீது திரும்பியது.

பெல்ஜியத்தில் டச்சு மொழி பேசும் மாகாணங்களில், "பிலாம்ஸ் ப்ளாக்" (தற்போது பெயர் மாற்றி விட்டார்கள்) என்ற பாசிசக் கட்சி ஒன்று பிரபலமாகி வருகின்றது. இந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார். "தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட அகதிகளைப் பிடித்து வாடகை விமானங்களில் ஏற்றி, அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும், என நாம் கூறி வந்தோம். ஆனால் அன்று எமக்கு எதிராக கூச்சல் போட்டார்கள். இன்று அரசாங்கமே நாம் முன்மொழிந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றது." ஒரு காலத்தில் பாசிசக் கட்சிகளின் வெற்றுக் கோஷங்கள் எனக் கருதப்பட்ட கருத்துகள், இன்று அரசினால் சட்டமாக்கப் பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகள், வாக்குரிமை இல்லாததால் விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்கின்றனர். சட்டப்படி இவர்களுக்கு என பல உரிமைகள் இல்லை. உள் நாட்டு மக்களோடும் தொடர்பு இல்லை. ஆகவே அதிகம் அறியப்படாத அகதிகளை திருப்பி அனுப்பும் போது, எந்த சலசலப்பும் ஏற்படாது. நெதர்லாந்தில் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில், பாசிசக் கட்சி தான் வைத்திருந்த இரண்டு ஆசனங்களையும் இழந்தது. இதனால் தீவிர வலதுசாரிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று அர்த்தமில்லை. அது குறித்து பொது மக்கள் கருத்துகளைக் கேட்போம்: "நவ-நாசிசக் கட்சிகள் என்னவெல்லாம் சொல்கின்றனவோ, அவற்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்துகின்றது. ஆகவே சின்னச்சிறு தீவிர வலதுசாரிக் கட்சிக்கு வாக்குப் போடுவதை விட, ஆளும் கட்சிகளுக்கு போடலாம்."

மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியது. இன்று அடுத்தடுத்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்கின்றன. "எமது பிரஜைகளுக்கே தொழில் வழங்க முடியாமல் தடுமாறும் காலத்தில், அகதியாவது, ஆட்டுக்குட்டியாவது. என்ன செய்தும் புதிய அகதிகள் வருவது குறையவில்லையே." என்று அங்கலாய்கின்றன மேற்குலக நாடுகள். அகதிகளுக்கு அனுப்படும் தஞ்ச மனு நிராகரிப்புக் கடிதங்களில் பின்வரும் வாசகங்கள் காணப்படுகின்றன. "இந்த நாட்டில் வேலையற்றோர் தொகை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. ஆகவே அகதியாக வருபவரால் நாட்டுக்கு நன்மை விளையும் என்றால் மட்டுமே, இங்கே தங்க அனுமதிக்க முடியும்."

*******************************