Saturday, January 09, 2010

ஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது

[ ஒன்றிணைந்த ஜெர்மனி: மறைந்திருக்கும் ஆபத்து கட்டுரையின் இரண்டாம் பகுதி ]

ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்து சென்ற காலத்தில், மேற்கில் பலர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். போல்ஷெவிக் புரட்சியினால் தமது செல்வங்களை இழந்த மேற்கத்திய முதலீட்டாளர்களே அவர்கள். சோவியத் செஞ்சேனையின் வெற்றிகரமான முன்னோக்கிப் பாயும் தாக்குதலின் பின்பு, நாசி படைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பின்வாங்கின. செஞ்சேனை முழு ஐரோப்பாவையும் விடுவித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது தான், அமெரிக்க, பிரிட்டிஷ் படையணிகள் மேற்கு-ஐரோப்பாவில் தரையிறங்கின.

ஏற்கனவே பல கிழக்கைரோப்பிய நாடுகளை விடுவித்த சோவியத் படைகள், கிரீசிற்கும் செல்லலாம் என பிரிட்டன் எதிர்பார்த்தது. கிரீசின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும், மத்தியதரைக் கடல் மீதான கட்டுப்பாடையும் கருத்தில் கொண்டு, பிரிட்டன் முந்தி விடத் துடித்தது. பிரிட்டிஷ் படைகள் கிரீசில் தரையிறங்கின. கிரீசில் கம்யூனிச கெரில்லாக்கள் ஏற்கனவே பல பகுதிகளை விடுதலை செய்திருந்தனர். அங்கே பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்த கிரேக்க பாசிஸ்ட்கள் பிரிட்டிஷ் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தனர். இதனால் இரண்டாம் உலகப்போரின் பின்னரும், கிரீசில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் சில வருடங்கள் இழுத்தது.

ஐரோப்பாவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பாசிஸ்ட்கள் புகலிடம் தேடி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். ஜெர்மன் நாஸிக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், முதலில் சுவிட்சர்லாந்து சென்றனர். சுவிட்சர்லாந்து அந்நேரம் "நடுநிலை" வகித்தது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து பலர் வத்திக்கான் உதவியுடன் அர்ஜென்தீனா சென்றனர். ஹிட்லரின் இனவெறிப் பரிசோதனைகளுக்கு உதவிய ஜெர்மன் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் அமெரிக்கா, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் சென்று குடியேறினார்கள். அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள் அவர்களின் வெளியேற்றத்திற்கு உதவின.

ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு (மேற்கு ஜெர்மனி) உருவான போது, முன்னாள் நாசி அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்தன. நாஸிச படை அதிகாரிகள் பலர் பின்னர் 'நேட்டோ' விலும் உயர் பதவிகளை வகித்தனர். இன்று கூட ஜெர்மன் இராணுவத்தினுள், நாஸிச பரப்புரை அமோகமாக நடக்கிறது. ஜெர்மனியில் அகதி முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நவ-நாசிகள் பலர் முன்னர் படைவீரர்களாக இருந்தவர்கள். முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் "நாஸிகள் களையெடுப்பு" பகிரங்கமாக நடந்தது. நாஸிக் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் சிறையிலடைக்கப்பட்டனர். முன்னாள் நாஸி ஆதரவாளர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கை எதுவும் மேற்கு ஜெர்மனியில் காணப்படவில்லை. கண்துடைப்புக்காக சில நாஸிச தலைவர்கள் நியூரன்பெர்க் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

1989 ம் ஆண்டு, பெர்லின் மதில் வீழ்ந்ததுடன், கிழக்கு-மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைந்தன. கிழக்கு ஜெர்மன் அரசில் அங்கம் வகித்த பலர் கைது செய்யப்பட்டனர். பெர்லின் மதிலை கடக்க முயன்ற அகதிகளை சுட்டுக் கொன்ற குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட்டது. 1989 ல் வீழ்ந்தது ஒரு சிறிய மதில். இன்று ஒன்றிணைந்த ஜெர்மனியின் எல்லையில் நீளமான கண்ணுக்குப் புலப்படாத மதில் கட்டப்பட்டுள்ளது. ஆசியா, மற்றும் பல மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளை தடுக்க கட்டப்பட்ட மதில் அது. செல்வந்த ஜெர்மனிக்குள் நுழைய முனையும் அகதிகள் எல்லையில் வைத்து தடுக்கப்படுகின்றனர். சில நேரம் சுடப்பட்டு மரணமடைகின்றனர். இந்தக் கொலைகளுக்காக யாரையும் நாம் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான ஜெர்மனி, புதிய ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தது. ஏற்கனவே ஐரோப்பாவில் பொருளாதார பலம் மிக்க நாடான ஜெர்மனி, இராணுவரீதியாக பலவீனமாக இருப்பதாக கருதுகின்றது. (இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி இராணுவம் வைத்திருக்க தடை போடப்பட்டது.) இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவம் என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கின்றது. 19 ம் நூற்றாண்டில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரண்டு வல்லரசுகள் உலகை பங்குபோட்டன. 20 ம் நூற்றாண்டில் ஹிட்லரின் ஜெர்மனி தனது பங்கை கேட்டு போரிட்டது.

"அன்றொரு நாள் ஹிட்லர் உலகை ஆள ஆசைப்பட்டான்" என பிரிட்டிஷார் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில், தமக்கு போட்டியாக ஜெர்மனி வந்து விட்டதே என்ற காழ்ப்புணர்ச்சி அப்படி சொல்ல வைத்தது. முன்யோசனையற்ற ஹிட்லரின் வியூகங்களால், அன்று ஜெர்மனி மண் கவ்வியது. சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ஜெர்மனி தலைநிமிர்கிறது. வன்முறையைக் கைவிட்டு விட்டு, ராஜதந்திரங்களை பயன்படுத்தி முன்னுக்கு வரத் துடிக்கிறது. மிக நுணுக்கமாக, ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. "ஒரே தேசம், ஒரே குடிமக்கள், ஒரே நாணயம்." போன்ற கோஷங்கள் மீண்டும் ஒலிக்கின்றன. ஆனால் பெயர்கள் மட்டும் தான் மாறியுள்ளன.

(முற்றும்)

Part 1: ஒன்றிணைந்த ஜெர்மனி: மறைந்திருக்கும் ஆபத்து

4 comments:

Anonymous said...

தங்களின் சிறப்பான இந்த இந்த பதிவு www.tamiljournal.comபதிவுகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதோடு தங்களின் தளத்துக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்
மொழிவேந்தன்

Kalaiyarasan said...

நன்றி, மொழிவேந்தன்.

தமிழ் உதயம் said...

நாம் பார்வையாளர்களாக நின்று வேடிக்கை பார்ப்போம். வேறு என்ன தான் முடியும்_ நம்மால்

malar said...

உங்கள் பதிவு எல்லாமே படிக்க நல்ல சுவாரசிய மாக இருகிறது .புத்தக வடிவில் பொட்டால் தெரிவிக்கவும்