Saturday, January 02, 2010

திபெத் மடாலய மர்மங்கள்

"தலாய் லாமா", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை. மேற்குலகிலும் தலாய் லாமாவின் புகழ் பரவி வருகின்றது. பல நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் திபெத்திய பௌத்த மதத்திற்கு மாறியுள்ளனர். மேற்குலக ஊடகங்கள் தலாய் லாமாவை கருணையுள்ளம் கொண்ட சமாதான விரும்பியாக சித்தரிக்கின்றன. திபெத்திய பிரபுக்கள் மக்களை மந்தைகளாக மேய்த்த வரலாறு பேசப்படுவதில்லை. "நாடு கடந்த திபெத்திய அரசாங்கம்" அமைந்துள்ள இந்தியாவிலும், தலாய் லாமாவின் குண்டர்கள் திபெத்திய அகதிகளை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். தலாய் லாமாவின் சர்வ வல்லமை கொண்ட அதிகாரத்தை விமர்சிப்பவர்கள், சீனாவின் கைக்கூலிகள் என முத்திரை குத்தப் படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில், அரச ஆதரவு பெற்ற திபெத் ஆதரவு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பொருட்காட்சிக்கு செல்லும் குழந்தைகளையும் அரசியல்மயப் படுத்துகிறார்கள். "திபெத்தில் இருந்து தப்பிக்கும் அகதி விளையாட்டு", தற்போது வீடியோ கேம் களிலும் கிடைக்கிறது. திபெத் அகதி போன்ற உடையணிந்த சிறுவர்கள், இமாலய சிகரங்களின் ஊடாக, சீன எல்லைக்காவல் படையிடமிருந்து தப்ப வேண்டும். ஐரோப்பிய சிறுவர்கள் மனதில் திபெத் மீது அனுதாபத்தையும், சீனா மீது வெறுப்பையும் விதைக்கும் விபரீத விளையாட்டு. அதே போல, "அல்ப்ஸ் மலைச் சிகரங்களின் ஊடாக, ஐரோப்பிய எல்லைக்காவல் படைகளை தாண்டி வரும் இலங்கை அகதி" விளையாட்டும் தயாரிக்க முன்வருவார்களா?

அமெரிக்க அரசியல்வாதிகள், ஹாலிவூட் நட்சத்திரங்கள் பலர் இன்று தலாய் லாமா பக்தர்கள். பிரபல ஹாலிவூட் நடிகர் ரிச்சார்ட் கியர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வலதுசாரி அரசியல்வாதிகளை அழைத்து விருந்து வைக்கிறார். திபெத் அகதிகளுக்கு உதவுவதற்காக அந்தக் கொண்டாட்டம். அதே அமெரிக்காவில், திபெத் பௌத்த மடாலயத்தின் தலைமைக் குருவான "சொய்கள் ரிம்போச்சே" யின் காமலீலைகள் அம்பலத்துக்கு வந்தது. மடாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்லும் அமெரிக்க பக்தைகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். தன்னுடன் பலவந்தமாக உடல் உறவுக்கு முயன்றதாக (பௌத்தராக மாறிய) அமெரிக்க பெண்மணி போலீசில் புகார் செய்தார். "துறவியுடன் உடல் உறவு கொள்வது கடவுளின் அருட்கொடை." என்று சொய்கள் ரிம்போச்சே விளக்கம் அளித்துள்ளார்.

தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சாதிகாரம் நிலவியது. பொருளாதாரத்தில் மேன் நிலையில் இருந்த நிலப்பிரபுக்கள், மதகுருக்களாகவும் இருந்தனர். பண்ணையடிமைகளாக உழைத்து ஓடாய்ப் போன மக்களை மூடர்களாக வைத்திருக்க மதம் உதவியது. விவசாயக் கூலிகளான உழைக்கும் மக்கள் குடிசைகளுக்குள், வறுமையின் துயருடன் வாழ்ந்தார்கள். அதே நேரம் அவர்களை சுரண்டிக் கொழுத்த தலாய் லாமாக்களும், மத குருக்களும் மாட மாளிகைகளில் வசதியாக வாழ்ந்தார்கள். மிகப் பெரிய மாளிகை ஆயிரம் அறைகளை கொண்டிருந்தது என்றால், அவர்களின் செல்வச் செழிப்பை புரிந்து கொள்ளலாம். அடக்குமுறைச் சின்னங்களான அரண்மனைகளும், மாளிகைகளும் திபெத் முழுவதும் காணப்பட்டன. சீனர்கள் வரும் வரை திபெத்தில் 6000 மடாலயங்கள் இருந்தன.

சாதாரண திபெத் மக்களின் வாழ்க்கை நரகமாக இருந்தது. அரைப் பட்டினியுடன் காலந் தள்ளினார்கள். உணவுக்காக திருடியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. சமூகப் படிநிலை ஒன்பது பிரிவுகளைக் கொண்டிருந்தது. பெண்களின் நிலையோ சொல்லுந்தரமன்று. இந்த ஒன்பது பிரிவுகளிலும் அவர்கள் அடங்கவில்லை. அதாவது திபெத்திய மடாதிபதிகளைப் பொறுத்தவரை, பெண்கள் "பேசும் மிருகங்கள்". மக்களை மூடர்களாக வைத்திருக்க புராணக் கதைகள் பாராயணம் செய்யப்பட்டன. அதையும் மீறி எவராவது கேள்வி கேட்டால், பாதாளச் சிறைகளில் போட்டு வதைக்கப் பட்டனர். நிச்சயமாக சீனர்களின் படையெடுப்பு, நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து அடிமைகளை விடுதலை செய்தது.

இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் திபெத்தியர்கள், அங்கேயும் தலாய் லாமாவின் இரும்புக்கரத்திற்கு தப்ப முடியவில்லை. தலாய் லாமாவின் ஏக பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு, அகதிகள் மிரட்டப்படுகின்றனர். திபெத்திய அகதிகள் மத்தியில் இருந்து கிளம்பும் பிற அரசியல் இயக்கங்கள் முளையிலேயே கிள்ளப் படுகின்றன. பன்முகப் பட்ட அரசியல் கலாச்சாரத்திற்கோ, அல்லது பலகட்சிகள் பங்குபற்றும் பாராளுமன்றத்திற்கோ, தலாய் லாமா தயாராக இல்லை. அரசியல் வேறுபாடுகளை விட்டு விடுவோம். பிற மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை சகித்துக் கொள்ளும் தன்மை கூட தலாய் லாமாவிடம் கிடையாது. திபெத்தில் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர் தான். இருந்தாலும் ஷக்டன் என்ற இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் திபெத் அகதிகள் ஷக்டன் மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கூட மதச் சுதந்திரம் கிடையாது. அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் தலாய் லாமாவின் குண்டர்களால் இடிக்கப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்து கூட சாமிப் படங்களை கிழித்துப் போட்டார்கள்.

தலாய் லாமா இந்தியாவில் உள்ள தலையகத்தில் இருந்து கொண்டே வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொடர்பு கொள்கின்றார். உலகின் பிற பகுதிகளில் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கிய சி.ஐ.ஏ. அவரது உற்ற நண்பன். அறுபதுகளில் ஆயிரக்கணக்கான திபெத் அகதிகளுக்கு சி.ஐ.ஏ. ஆயுதப் பயிற்சி வழங்கியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத்தினுள், சி.ஐ.ஏ. விமானங்கள் ஆயுதப் பொட்டலங்களை வீசின. தயாராக இருக்கும் விடுதலைப்படை திபெத்தை விடுவிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் சீன இராணுவம் ஈவிரக்கம் பாராமல் அடக்கியதால், கிளர்ச்சி தோல்வியுற்றது. அதற்குப் பிறகு, "கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும்" இராஜதந்திர நகர்வை மேற்கொண்டார்.

தலாய் லாமாவுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் உதவுகிறார்களோ, அவர்கள் எல்லாம் நண்பர்கள் தாம். ஜப்பானில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும், "ஓம்" மதக்குழுவின் தலைவர் அசஹரா கூட தலாய் லாமாவின் மதிப்புக்குரிய நண்பர் தான். அசஹாரா "நாடு கடந்த திபெத் அரசாங்கத்திற்கு" தாராளமாக நிதி வழங்கிய புரவலர். ஒரு தடவை ஒரு லட்சம் டாலர் அள்ளிக் கொடுத்திருக்கிறார். டோக்கியோ சுரங்க ரயில்நிலையத்தில் நச்சுவாயு பிரயோகித்த குற்றத்திற்காக அசஹாரா கைது செய்யப்பட்ட பின்னர் அந்த தொடர்பு அறுந்தது. சீனாவிலும், ஜப்பானிலும் ஞானவாத பௌத்த மதப்பிரிவு, உத்தியோகபூர்வ மதமாக உள்ளது. திபெத்திய பௌத்தம் பல தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. இதனால் ஓம் மதக்குழுவுடன் தந்திரோபாய கூட்டு அமைத்ததாக தலாய் லாமா கொள்கை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

திபெத் ஹிட்லரைக் கூட வெகுவாக கவர்ந்திருந்தது. ஆரியர்களின் பூர்வீகம் திபெத் என்று அவருக்கு யாரோ கற்பித்திருக்கிறார்கள். நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா கூட திபெத்தில் இருந்து கடன்வாங்கியது தான். அப்படி சொல்லிக் கொடுத்தது வேறு யாருமல்ல. "தெயோசொபி" என்ற ஆன்மீக அமைப்பு. (சென்னை, அடையாரில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.) 1939 ம் ஆண்டு, நாஸிஸ அரசு அமைச்சர் ஹிம்லர் ஒரு தூதுக் குழுவை திபெத்திற்கு அனுப்பினார். திபெத்திய மடாலயங்களில் வாழும் "ஆரிய பூர்வகுடிகளிடம்" இனத்தூய்மை பற்றி படிப்பது அவர்கள் நோக்கம்.

திபெத் சென்று, "மாபெரும் ஆசான்களிடம்" கற்ற தூதுக்குழுவை சேர்ந்த பெர்கர் என்பவர் ஜெர்மனிக்கு திரும்பி வந்தார். நாஸி கொலைக்களங்களில் நச்சுவாயுவுக்கு பலியான யூதர்களின் மண்டையோடுகளை வைத்து "இன உடற்கூற்றியல்" பரிசோதனை செய்தார். நாசிகளின் குழுவிலிருந்த ஆஸ்திரிய நாட்டுக்காரரான ஹைன்றிஷ் ஹாரெர் 1950 வரை திபெத்தில் தங்கி இருந்தார். தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய பரப்புரையாளராகவும், வெளிநாட்டு தொடர்பாளராகவும் கடமையாற்றினார். அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து, "திபெத்தில் ஏழு வருடங்கள்" என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளிவந்தது. கதையின் நாயகன் ஹாரெரின் நாஸிஸ தொடர்பு, படத்தில் எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. திபெத் சார்பு திரைப்படத்தை ஆவலோடு வரவேற்ற தலாய் லாமாவும், சிறு வயதில் ஜெர்மன் நாசிகளுடானான தனது உறவு குறித்து மூச்சு விடவில்லை. வருங்காலத்தில் தலாய் லாமாவும், ஹாலிவூட்டும் தம்மை நல்லவர்களாக காட்டுவார்கள் என்று, நிச்சயமாக நாசிகளும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


***********************************************************
திபெத் தொடர்பான முன்னைய பதிவுகள்:

*********************************************************
மேலதிக தகவல்களுக்கு:
Revolt of the Monks
Guardian: Down with the Dalai Lama

Dalai Lama, Tibet, and Nazi Germany Collaboration

3 comments:

தமிழ் உதயம் said...

மதங்களை பிரித்து, பிரித்து விமர்சிக்க வேண்டியதில்லை. சகல மதங்களும் படுகொலைகளை புரிந்தவையே.

வெத்து வேட்டு said...

hehehe...
so simply our Praba is just like Dalai Lama.... if Praba was alive he may have got Nobel Prize

மகா said...

உங்கள் உழைப்பிற்கு என வாழ்த்துக்கள் ....