Friday, July 31, 2009

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12

இங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு, அங்கோலாவின் தசாப்தகால சூடான பனிப்போர் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அங்கோலாவின் உள்நாட்டுப் போரை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று, பனிப்போர் காலகட்டம். பதினைந்து வருடங்களாக நடந்த யுத்தத்தில் இருதரப்பாலும் வெல்ல முடியவில்லை. இரண்டு, உலகமயமாக்கல் காலகட்டம். இதில் அரச படைகள் இறுதியாக வெற்றியீட்டியுள்ளன. நவீன கால போரியல் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு, அங்கோலா போர் ஒரு நல்ல பாடம்.

16 ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் வரும் வரை, அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் இருந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலுமாக மூன்று இராஜ்யங்கள் இருந்துள்ளன. ஒரு இராஜ்யத்தை ஆண்ட “நுகொலா (கிளுவஞ்சே)” என்ற மன்னனின் பெயரை, போர்த்துகேயர் முழு நிலப்பரப்பிற்கும் வைத்து விட்டனர். காலனிய காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் காலனி நாடுகளுடன் இரண்டு வகையான உறவைக் கொண்டிருந்தனர். ஒன்று, வர்த்தக மையம் ஒன்றை நிறுவி வியாபாரம் செய்வது. இரண்டு, அந்தப் பிரதேசத்தை தமது நேரடியான ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர்கள், அங்கோலா மன்னனுடன் சமமான இராஜதந்திர உறவை பேணி வந்துள்ளனர். இந்த நல்லுறவு காரணமாக மன்னனும் கத்தோலிக்க மதத்தை தழுவி, தேவாலயம் கட்டவும் அனுமதி அளித்துள்ளான்.

பிரேசிலுக்கு தேவையான அடிமைகளை போத்துக்கேயர்கள் அங்கோலாவில் பிடித்து ஏற்றுமதி செய்து வந்தார்கள். மன்னர்களுடன் ஏற்பட்ட வியாபாரப் பிரச்சினையை தொடர்ந்து, போர்த்துக்கேய இராணுவ நடவடிக்கைகள் அரசாட்சிக்கு முடிவு கட்டின. கரையோரப் பகுதிகளை கைப்பற்றியதுடன் நில்லாது, கனிம வளங்களை தேடி நாட்டின் உள்பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்தனர். இவ்வாறு போர்த்துகேய காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளை அடக்கக் கூடிய அளவு பரந்த நிலப்பரப்பை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரத்தின் மீது சர்வதேச தடை வந்தது. போத்துகல்லும் அதற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அங்கோலாவை முழுமையான காலனியாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அங்கோலா கறுப்பர்களை “நாகரீகப்படுத்துவதற்காக” கிறிஸ்தவ மதம் பரப்புபவர்களை அனுப்பி வைத்தார்கள். கத்தோலிக்க மிஷனரிகள் மட்டுமல்ல, புரட்டஸ்தாந்து மிஷனரிகளும் தாராளமாக ஆட்சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு மதப்பிரிவுகளுக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே இருந்தது. கத்தோலிக்க மதத்தை தழுவுபவர்கள் போர்த்துக்கேய மொழியை சரளமாக கற்று, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.

போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்கர்களை “நாகரீகப் படுத்திய” பின்னரும் அவர்களுக்கு சம உரிமை வழங்கவில்லை. சமூக மேல்தட்டில் வெள்ளையர்களும், அவர்களுக்கு கீழே கலப்பின “mestiços” உயர்ந்த அந்தஸ்தில் இருந்தனர். வெள்ளையின ஆணுக்கும், கறுப்பின பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகளே கலப்பினத்தவர்கள் ( mestiços). அன்றைய காலத்தில் ஒரு வெள்ளையின பெண் கறுப்பின ஆணுடன் உறவு வைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. தடையை மீறிய உறவு கொள்ளும் வெள்ளைப் பெண்ணை அவமானப்படுத்தி ஒதுக்கி வைப்பதுடன், கறுப்பு ஆணை கொலை செய்து விடுவார்கள். போர்த்துகேய மொழி சரளமாக பேசத் தெரிந்த ஆப்பிரிக்க கறுப்பர்கள் தனது அந்தஸ்தை உயர்த்த முடிந்தாலும், அவர்கள் மூன்றாவது தட்டிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள் assimilados என அழைக்கப்பட்டனர். போர்த்துக்கேய மொழி பேசும், மேலைத்தேய கல்வி கற்ற, கத்தோலிக்க assimilados, பிற ஆப்பிரிக்கர்களை விட நாகரீகமடைந்தவர்களாக கருதப்பட்டனர்.

1910 ம் ஆண்டு, அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஒரு பகுதியாகியது. 1932 ல் போர்த்துக்கல்லில் ஆட்சியை கைப்பற்றிய பாஸிஸ சர்வாதிகாரி சலசார் காலத்தில், வெள்ளையர்கள் அங்கோலா சென்று குடியேறுமாறு ஊக்குவிக்கப்பட்டது. அதற்கு முன்பு, போர்த்துகல்லில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தமான் தீவைப் போல, போர்த்துகல்லுக்கு அங்கோலா பயன்பட்டது. பிற்காலத்தில் திரவியம் தேட விரும்பும் போர்த்துகேய பிரசைகள் அனைவருக்கும் அங்கோலா திறந்து விடப்பட்டது. பெருந்தோட்டங்களில் மேலாளராக, மாவட்ட வரி அறவிடுவோராக பணியாற்ற ஆயிரக்கணக்கான வெள்ளையினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக புதிய தொழில் வாய்ப்புகள் பெருகின. எண்ணை அகழ்வு, வைரக் கல் பட்டறைகள் என்பன தொழிற்துறை வளர்ச்சி கண்டன. இதைத் தவிர தாயகத்தில் வாய்ப்பற்ற வெள்ளையின உழவர்கள், அங்கோலாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரனாக முடிந்தது. அங்கோலாவில் குடியேறிய வெள்ளையர்கள், மொத்த சனத்தொகையில் 6 சதவீதமாக மாறிவிட்டிருந்தனர். 1974 ம் ஆண்டு, அங்கோலா சுதந்திரமடையும் வரை மூன்று லட்சம் வெள்ளையினத்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அங்கோலாவின் வரலாற்றில் அசிமிலாடோஸ்(assimilados) உருவாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தூய வெள்ளையரோ, அல்லது கலப்பினமோ அல்ல. கருப்பினத்தவரில் இருந்து தோன்றிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எமது சமூகத்தில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதும் “தமிங்கிலர்கள்” என்றொரு பிரிவு உண்டல்லவா? அங்கோலாவின் அசிமிலாடோக்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். போத்துக்கேய மொழியை பேசுவதில் மட்டுமல்ல, கலாச்சாரத்தை பின்பற்றுவதிலும் பெருமை கொண்டவர்கள். தாம் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பா என்று நினைத்துக் கொள்பவர்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை போர்த்துக்கல்லிற்கு உயர்கல்விக்காக அனுப்பி வைப்பார்கள். பெற்றோர் தமது பிள்ளை போர்த்துக்கல்லில் படிப்பதாக ஊர் முழுக்க பெருமையடித்துக் கொண்டு திரிவார்கள்.

சனத்தொகையில் அசிமிலடோக்களின் தொகை முப்பதாயிரத்தை தாண்டி விட்டிருந்தாலும், என்னதான் போர்த்துகேய பண்பாட்டை வழுவுறாது பின்பற்றி வந்தாலும், வெள்ளையர்கள் அவர்களை சமமாக மதிக்கவில்லை. சிறந்த அரச பதவிகள் எல்லாம் ஒன்றில் வெள்ளையருக்கு, அல்லது கலப்பினத்தவருக்கே ஒதுக்கப்பட்டன. அரசின் இனப் பாகுபாட்டுக் கொள்கை அசிமிலாடோக்கள் மத்தியில் விரக்தியை தோற்றுவித்தது. இளைஞர்கள் மத்தியில் தேசியவாத சிந்தனைகள் தோன்றின. அவர்களில் ஒருவர் அகொஸ்திஞோ நேட்டோ, போத்துக்கல்லில் மருத்துவப் பட்டம் பெற்ற கவிஞர். நேட்டோவும் அவரது தோழர்களும் போர்த்துக்கல் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் போது, மார்க்சிஸ அரசியலில் ஈடுபாடு காட்டினர். போத்துகேய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆப்பிரிக்கர்களை சமமாக மதித்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்கள், தமது தாயகத்திற்கான தேசிய விடுதலைக்காக போராடுவது நியாயமானது என்று கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்ற MPLA (Movimento Popular de Libertação de Angola) ஸ்தாபிக்கப்பட்ட போது, சில வெள்ளையின கம்யூனிஸ்ட்களும் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக அங்கோலா விடுதலைப் போராட்டம், ஒரு போதும் அனைத்து வெள்ளயினத்தவர்களுக்கும் எதிராக திரும்பவில்லை. இன்றும் பல வெள்ளையினத்தவர்கள் அங்கோலா பிரசைகளாக வாழ்வதைக் காணலாம். மார்க்சிஸ-லெனினிச தத்துவத்தை வரித்துக் கொண்ட MPLA, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தது. இன்று MPLA மார்க்சிஸ சித்தாந்தத்தை கைகழுவி விட்டாலும், பொதுத் தேர்தல்களில் மாநகர சேரிகளில் MPLA க்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன.

ஒரு சாராரால், படித்த புத்திஜீவிகளின் இயக்கமாக MPLA கருதப்பட்டது. அங்கோலாவில் மேலும் இரண்டு இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டன. அங்கோலா தேசிய விடுதலை முன்னணி (FNLA) என்றொரு கம்யூனிச விரோத, பழமைவாத கட்சியொன்று இருந்தது. இழந்த மன்னராட்சியை மீட்பது அவர்களது கொள்கை. அதாவது ஆண்ட பரம்பரைக் கனவுகளை கொண்ட வலதுசாரி தேசியவாதம் பேசியது. 1975 ம் ஆண்டு, சுதந்திரம் கிடைத்த கையோடு, MPLA க்கும், FNLA க்கும் இடையில் அதிகாரத்திற்காக சண்டை மூண்டது. FNLA க்கு அயல்நாடான காங்கோ, மற்றும் சி.ஐ.ஏ., ஆகியன உதவி செய்தன. இருப்பினும் ஒரு வருட யுத்தத்தின் இறுதியில் FNLA தோல்வி கண்டது. எஞ்சிய உறுப்பினர்கள் காங்கோவில் தஞ்சம் புகுந்தனர். மூன்றாவது இயக்கமான “அனைத்து அங்கோலா சுதந்திரத்திற்குமான தேசிய கூட்டணி” (União Nacional para a Independência Total de Angola) UNITA பல தசாப்தங்களுக்கு நின்று பிடித்து சண்டையிட்டது. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அங்கோலாவின் விடுதலைப் போராட்டம், 1960 ம் ஆண்டு விவசாயிகளின் எழுச்சியுடன் ஆரம்பமாகியது. காலனிய அரசு பருத்தி பயிரிடுமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தியது. விவசாயிகள் இந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து கலகம் செய்தனர். அதே நேரம் இன்னொரு பக்கத்தில் கோப்பி தோட்ட முதலாளிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடிகள் போதாதென்று, அதிகரிக்கப்பட்ட வரி வேறு விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருந்தது. விவசாயிகளை கிளர்ந்தெழ வைக்க ஏதுவான காரணங்கள் அங்கே நிலவின. அங்கோலாவின் வட பகுதியெங்கும் புரட்சித்தீ பற்றியது. காலனிய அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் போர்த்துக்கேயர்கள், கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். போர்த்துக்கேய இராணுவம் பதிலடி கொடுப்பது என்ற பெயரில், கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. குறைந்தது இருபதாயிரம் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பேர் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சம் கோரினர்.

விவசாயிகள் எழுச்சி அடக்கப்பட்டாலும், விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. MPLA, FNLA, UNITA ஆகிய இயக்கங்கள் காலனிய அரசுக்கு எதிரான கெரில்லா போராட்டம் நடத்தின. காலனிய அரசினால் கெரில்லாக்களை எதிர்த்து போரிட முடியாமல் போனதால், புதிய தந்திரம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அங்கோலா முழுவதும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கே தங்கவைக்கப்பட்டனர். மக்கள் என்ற தண்ணீரையும், கெரில்லாக்கள் என்ற மீன்களையும் பிரிக்கும் வேலையில் போர்த்துக்கேயர் ஓரளவு வெற்றிபெற்றனர் எனலாம். 1975 ம் ஆண்டு, சுமார் 75000 போர்த்துகேய படையினரும், 20000 கெரில்லாக்களும் மீள முடியாத போர்ச் சகதிக்குள் சிக்கியிருந்தனர். அவ்வருடம் போர்த்துக்கல்லில் இடம்பெற்ற அரசியல் மாற்றம், போரில் திருப்புமுனையாக அமைந்தது.

போர்த்துகல்லில் இராணுவ இயந்திரம் சர்வாதிகாரி சலசாரின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியது. இடதுசாரி இராணுவ அதிகாரிகள் புரட்சிக்கு தலைமை தாங்கினர். இளம் போர்வீரர்களை அரசியல்மயப்படுத்தினர். முகாம்களில் இருந்த படைகளை தலைநகர் லிஸ்பனை நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஒரு சில மணிநேரமே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர், சலசார் நாட்டை விட்டு ஓடினான். மிகக் குறைந்த உயிரிழப்புகளுடன், போர்த்துக்கல்லில் சோஷலிச புரட்சி வென்றது. கம்யூனிஸ்ட்களும், சோஷலிஸ்ட்களும் லிஸ்பனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். புதிய இடதுசாரி அரசாங்கம் ஆப்பிரிக்க காலனிகளுக்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அங்கோலா விடுதலைக்காக போராடிய மூன்று இயக்கங்களும், போர்த்துகேய அரசும், 15 ஜனவரி 1975 அன்று, “அல்கார்வே” என்ற இடத்தில் வைத்து, ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 11 நவம்பர் 1975 அன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட நேரம், MPLA, FNLA, UNITA ஆகிய மூன்றும் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று இயக்கங்களும் தாம் மட்டுமே ஆள வேண்டுமென விரும்பினார்கள். போர்த்துக்கேய கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், சோவியத் யூனியன் MPLA க்கு ஆதரவளித்தது. தலைநகர் லுவான்டாவும், எண்ணை வளமுள்ள கரையோர பகுதிகளும் MPLA இன கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அமெரிக்கா FNLA, UNITA வுக்கு ஆதரவளித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் உதவியை நிறுத்திக் கொண்டது. MPLA சந்தர்ப்பத்தை பயன்படுத்தி FNLA யை ஒழித்துக் கட்டியது. ஆனால் UNITA மட்டும் நிலைத்து நின்றது. எதிர்பாராவிதமாக தென் ஆப்பிரிக்காவின் ஆதரவு கிடைத்தது அதற்கு காரணம்.

அப்போது தென் ஆப்பிரிக்காவை வெள்ளை நிறவெறி அரசாங்கம் ஆட்சி செய்தது. பாசிச தென் ஆப்பிரிக்கா தனது எல்லையில் ஒரு சோவியத் சார்பு கம்யூனிச நாடு வருவதை விரும்பவில்லை. மறுபக்கத்தில் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை MPLA தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டத் தொடரில் UNITA வுக்கு தென் ஆப்பிரிக்க உதவி கிடைப்பதை அம்பலப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவை சார்ந்து நிற்பது மனித விழுமியங்களுக்கு எதிரானதாக கருதப்பட்ட காலத்தில், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் MPLA அரசாங்கத்தை அங்கீகரித்ததில் வியப்பில்லை. இன்னொரு பக்கத்தில் UNITA விற்கு சீனாவிடம் இருந்தும் உதவி கிடைத்து வந்தது. மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது. அனேகமாக MPLA க்கு சோவியத் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால், அதற்குப் போட்டியாக சீனா UNITA வுக்கு உதவியது.

அப்போதெல்லாம் MPLA இராணுவம் பலமானதாக இருக்கவில்லை. MPLA அரசின் நிர்க்கதியான நிலைமையை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா அங்கோலா மீது படையெடுத்தது. அங்கோலாவின் தெற்கு எல்லையில் இருக்கும் நமீபியா, அப்போது நிறவெறி தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. தென் ஆப்பிரிக்க படையெடுப்பை சமாளிக்க முடியாமல் MPLA இராணுவம் பின்வாங்கிக் கொண்டிருந்தது. தக்க தருணத்தில் பிடல் காஸ்ட்ரோ தலையிட்டு இருக்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா அங்கோலாவை ஆக்கிரமித்திருக்கும். காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் அன்றைய சோவியத் அதிபர் குருஷோவுடன் தொடர்பு கொண்டு, ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். MPLA அரசை தூக்கி நிறுத்துவதற்காக 250 கியூபா வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கியூபா படையினர் சோவியத் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி அளிப்பதிலும், இராணுவ ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

தென் ஆப்பிரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை கியூபர்கள் விரட்டியடித்த பிறகு அமெரிக்கா விழித்துக் கொண்டது. கியூபா படைகளை வெளியேற்றினால், நமீபியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வழிவகுப்பதாக இராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. அதே நேரம் அமெரிக்கா UNITA வுக்கு சாம்பியா ஊடாக ஆயுதங்களை வழங்கி வந்தது. பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. MPLA வும், UNITA வும் சமபலத்துடன் போரிட்டு வந்தார்கள். போரில் யாரும் வெல்லமுடியாது என்ற எண்ணம் நிலவியது. MPLA கரையோர பிரதேசங்களில் பலமாக இருந்தது. உள் நாட்டுப் பகுதிகள் பல UNITA வின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ் காலத்தில் கள நிலைமை வேகமாக மாறியது.

1991 மே முதலாம் திகதி, அமெரிக்கா, சோவியத், ஐ.நா., மேற்பார்வையின் கைச்சாத்தான சமாதான உடன்படிக்கை போரை முடிவுக்கு கொண்டுவருமென அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் இறுதியில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. அனைத்து அந்நியத் துருப்புகளும் வெளியேற வேண்டும். UNITA போராளிகள் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆயுதங்கள் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றை கண்காணிக்க Unavem என்ற ஐ.நா. சமாதானப்படை நிறுத்தப்படும். அதே ஆண்டு சோவியத் யூனியனும் மறைந்து போனதால், அமெரிக்கா உலகின் ஒரேயொரு வல்லரசாக மாறி விட்டிருந்தது. ஒப்பந்தப் படி கியூப படைகளை வெளியேற்றிய MPLA அரசு, அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியது. ஏற்கனவே அங்கோலாவின் எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகள் நிர்வகித்து வந்தன. அங்கோலா எண்ணை முழுவதும் இனி தனக்குத்தான் என்ற மகிழ்ச்சியில், அமெரிக்கா MPLA அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. பகைவர்கள் நண்பர்களான இன்னொரு கதை இது.

இதற்கிடையே UNITA இயக்கம் சர்வதேச அரசியல் மாற்றங்களை கவனிக்காமல் தப்புக்கணக்கு போட்டது. UNITA போரை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவே கருதியது. தனது பலத்தில் கொண்ட அசாத்திய நம்பிக்கையினால் மட்டுமல்ல, அமெரிக்க செனட் சபையில் இருந்த நண்பர்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஆதரவு தொடரும் என்று கருதியது. இதற்கிடையே 1992 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் இடம்பெற்றது. சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற சர்வசன வாக்குப் பதிவு, எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்தேறியதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 220 ஆசனங்களில், MPLA 129 ஆசனங்களை கைப்பற்றியது. எதிர்பார்த்த படி பெரும்பான்மை கிடைக்காத UNITA, இந்தத் தேர்தல் ஒரு மோசடி என்று பிரேரித்தது. தேர்தலை கண்காணித்த ஐ.நா. உயரதிகாரி UNITA வின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த உயரதிகாரி “வைரக் கடத்தல்காரர்” என்று தூற்றப்பட்டார். உண்மையில் UNITA இயக்கத்தின் முக்கிய வருமானம் வைர விற்பனையால் கிடைத்து வந்தது. போரின் இறுதிக் காலங்கள், வைரச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

பனிப்போர் காலத்தில், அமெரிக்க, சோவியத் எதிர் வல்லரசுகள் தமது பதிலிப் போர்களை மூன்றாம் உலக நாடுகளில் நடத்திக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் பதிலிப் போர்கள் தேவையற்றுப் போயின. அங்கோலா அரசாங்கமே அமெரிக்காவின் கைகளுக்குள் வந்த பின்னர், UNITA என்ற போராளிக் குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் அங்கிருக்கவில்லை. ஆயினும் UNITA இந்த உண்மையை உணரவில்லை. அமெரிக்கா அதரவு நிலையானது என்ற இறுமாப்பில் யுத்தத்திற்கு தயார் படுத்தியது. மறு பக்கத்தில், MPLA அரசும் இறுதிப்போருக்கு தயாராகவே இருந்தது. தனக்கு சார்பான பொது மக்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது. தேர்தல் நடந்த அதே ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் யுத்தம் வெடித்தது. இரகசியத் திட்டமொன்றின் படி, தலைநகர் லுவான்டாவில் UNITA ஆதரவாளர்கள் அனைவரும் ஒழித்துக் கட்டப்பட்டனர். போரினால் நாடு முழுவதும் சுடுகாடாக்கியது.

அங்கோலாவின் மத்தியில் அமைந்துள்ளது “குய்த்தோ” நகரம். பொதுத் தேர்தலில் UNITA விற்கு ஆதரவாக இந்தப் பகுதியில் பெருமளவு வாக்குகள் கிடைத்தன. பொதுத் தேர்தலில் UNITA விற்கு வாக்களித்த அத்தனை பேரும் ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது. தசாப்த கால யுத்தத்தினால் மக்கள் வெகுவாக கலைத்து போயிருந்தனர். குய்த்தோ போன்ற UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், எப்படியாவது UNITA சமாதானமாகப் போனால் நல்லது என்ற எதிர்பார்ப்பில் வாக்களித்துள்ளனர். UNITA மக்களின் அபிலாஷைகளை மதிக்கத் தவறியதும், அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இறுதியாக நடந்த போரில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த குய்த்தோ நகரை, UNITA போராளிகள் சுற்றி வளைத்தனர். 9 மாதங்களாக நான்கு சதுர மைல் நிலப்பரப்பிற்குள் முப்பதாயிரம் மக்கள் அடைபட்டுக் கிடந்தனர். கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க் காலத்தில் ஐ.நா. சமாதானப் படையின் கைகள் கட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ஐ.நா. அதிகாரிகள் கோரிய சர்வதேச உதவி கடைசி வரை கிட்டவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், எப்படியாவது போரில் ஒருவர் வெல்லட்டும் என்று வாளாவிருந்து விட்டனர். UNITA சமாதானமாகப் போகாமல் முரண்டு பிடிக்கின்றது என்ற ஏமாற்றத்தால் விளைந்த ஓரவஞ்சனை காரணமாக இருக்கலாம். சர்வதேச நாடுகளின் மௌனம் அரசுக்கு சார்பாக அமைந்தது. UNITA தலைவர் சாவிம்பி, அரச படைகளின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், போர் முடிவுக்கு வந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் எஞ்சிய போராளிகள் அனைவரும் சரணடைந்தனர். போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், UNITA தளபதி ஒருவரும் அவரது ஆதரவாளர்களும், அரசுடன் சேர்ந்து கொண்டார்கள். “புதிய UNITA” என்ற கட்சியை ஸ்தாபித்து, அரச இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்டனர். UNITA வின் வீழ்ச்சிக்கு முன்னாள் தளபதியின் துரோகம் மட்டும் காரணமல்ல. யுத்தம் தொடங்கிய நேரம், UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை அரசு வெளியேற்றியிருந்தது. UNITA சில தொண்டர்களை வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக வைத்திருந்தும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

அங்கோலா யுத்தம் ஒரு வழியாக முடிவுற்று, சமாதானம் நிலவினாலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அங்கோலா ஆப்பிரிக்காவின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்று. பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால், விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதைத் தவிர பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக எஞ்சிய காலத்தை கழிக்க வேண்டிய பரிதாப நிலை. நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோ ஒரு வகையில் போரினால் பாதிக்கப் பட்டுள்ளது. போரினால் ஏற்பட்ட ஆழமான வடுக்கள் காரணமாக, மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான ஏக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அனைவரும் அரசை ஆதரிக்கிறார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. நீண்ட கால போரின் விளைவாக, அரசிற்கெதிரான எதிர்ப்பு மழுங்கிப் போயுள்ளது. இதனால் வறுமை கூட சகித்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகி விட்டது.

இன்று அங்கோலா அமெரிக்காவிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது. ஒரு காலத்தில் இருந்த சோஷலிசப் பொருளாதாரம் கைவிடப்பட்டு, முதலாளித்துவ மயமாகி விட்டது. MPLA தலைவர்கள் கூட எண்ணை விற்று கிடைத்த லாபத்தில் பணக்காரர்களாக வாழ்கின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவிற்கு உவப்பான செய்திகள் தான். இருப்பினும் அங்கோலாவின் அசைக்க முடியாத இராணுவ பலமும், காங்கோவில் அதன் சாகசங்களும் அமெரிக்காவின் கண்ணை உறுத்துகின்றது. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மூன்றாம் உலக நாடுகள், மேற்குலகம் விதிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அடங்கிக் கிடந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்று அங்கோலா போன்ற சில நாடுகள் தேசிய அரசியல், பொருளாதாரத்தை தாமே தீர்மானிக்க வேண்டுமென விரும்புகின்றன. அங்கோலா நிலையான ஆட்சி, பலமான இராணுவம் போன்ற அரசியல் ஸ்திரத் தன்மையும், பெற்றோலியம், வைரம் போன்ற அதிக வருவாய் ஈட்டித் தரும் பொருளாதார வளங்களையும் ஒருங்கே கொண்டது. இவையெல்லாம் அங்கோலா மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவுமா?

அங்கோலாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆரம்பத்தில் MPLA க்கும், UNITA விற்கும் இடையிலான போரில் சில இன வேற்றுமைகள் தொக்கி நின்றன. அசிமிலாடோஸ் என அழைக்கப்பட்ட போர்த்துகேய மயப்பட்ட கறுப்பர்கள், கலப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் MPLA இற்கு ஆதரவளித்தனர். அதற்கு மாறாக உள்நாட்டில், பாரம்பரிய ஆப்பிரிக்க சமூக கட்டமைப்பை பேணி வரும் இனங்களின் வாழ்விடங்கள், UNITA வின் ஆதரவுத் தளமாக இருந்தது. போருக்குப் பின்னான காலத்தில், அரசுடன் ஒத்துழைக்கும் முன்னாள் UNITA பிரமுகர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று வரை அரசாங்கம், கண்ணிவெடி இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் பிரச்சினை குறித்து மட்டுமே பேசி வருகின்றது.

இதற்கிடையே கபிண்டா மாகாணத்தின் பிரச்சினை, சர்வதேச கவனத்தைப் பெறாவிட்டாலும், அதுவும் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கோலாவின் பெரு நிலப்பரப்புடன் சேராமல், கொங்கோ எல்லையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தனியான மாகாணம் கபிண்டா. சுருக்கமாக அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துடன் ஒப்பிடலாம். அங்கோலாவிற்கு சொந்தமான 3000 சதுர மைல் நிலப்பரப்பு, பிராசவில்-கொங்கோவிற்கும், கின்சாசா கொங்கோவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. மாகாணம் சிறிதாக இருந்தாலும் அதன் மகாத்மியம் பெரிது. அங்கோலாவின் 70 வீதமான எண்ணை கபிண்டாவில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. அதாவது அங்கோலாவின் பெருமளவு அந்நிய வருமானத்தை கபிண்டா வழங்குகின்றது.

FLEC என்ற ஒரு ஆயுதமேந்திய இயக்கம் கபிண்டாவின் விடுதலைக்காக போராடி வருகின்றது. 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தியும், அங்கோலா அரசுக்கு தலைவலியை தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. FLEC இன்று சிறு குழுக்களாக பிரிந்துள்ளதால், அவர்களது போராட்டம் இனியும் வெல்லுமா என்பது சந்தேகமே. கபிண்டாவில் அங்கோலா படையினர் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கபிண்டா விடுதலை இயக்கத்தினருக்கு உள்ள ஒரேயொரு சர்வதேச ஆதரவு, ஐ.நா.சபையின் “பிரதிநிதித்துவப் படுத்தாத நாடுகளின் மன்றம்”(UNPO). எந்த வித அரசியல் அதிகாரமும் இல்லாத இந்த மன்றத்தில், திபெத், மேற்கு சஹாரா, போன்ற சுதந்திர தேசத்திற்காக போராடும் பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

FLEC தனது தேசியவாதத்திற்கு இன அடிப்படை இருப்பதாக கூறுகின்றது. காங்கோலிய இனத்தை சேர்ந்த “பகொங்கோ” மக்களின் தாயகமாக கபிண்டாவை வரையறுக்கின்றனர். அங்கோலா அரசு இந்த தேசிய இனக் கருத்தியலை நிராகரிக்கின்றது. வட அங்கோலா மாகாணமான ஸயரிலும் பகொங்கோ இனத்தவர்கள் வாழ்வதை சுட்டிக் காட்டி, கபிண்டர்களின் போராட்டம் வெறும் பொருளாதாரக் காரணத்தை மட்டும் கொண்டுள்ளதாக பதிலளித்து வருகின்றது. கபிண்டா விடுதலை இயக்க தலைவர்களும் பெற்றோலிய வருமானத்தை பங்கிடுவதை தமது பிரதான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். செல்வத்தை சமமாகப் பங்கிடாவிட்டால் அங்கோலாவின் பிற பகுதிகளும் எதிர்காலத்தில் கொந்தளிக்க வாய்ப்புண்டு.

Thursday, July 30, 2009

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants

பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தாலிபான் பிரம்படி தண்டனை வழங்கும் வீடியோ ஒன்று சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்றது. அந்த வீடியோ உலக மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, பாகிஸ்தான் அரச படைகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த உதவியது. அதே நேரம் மேற்குறிப்பிட்ட மலேசிய வீடியோ பெருமளவு சர்வதேச ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதற்குக் காரணம், மலேசிய ஆட்சியாளர்கள் மேற்குலகின் உற்ற நண்பர்கள் என்பதாலா?

Sunday, July 26, 2009

கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்


கொழும்பு மாநகரம் வழக்கத்திற்கு மாறாக சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்னர், இனக்கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. அரச போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் வண்டியில், எங்களைத் தவிர வேறு தமிழர்கள் இருப்பதாக தெரியவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிங்களத்திலேயே உரையாடிக் கொண்டோம். 

கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைந்திருக்கும் அகதி முகாம் நோக்கி பயணம் செய்கிறோம். வழி நெடுகிலும், அரை குறையாக எரிந்து போன தமிழர்களுடைய வீடுகள். அந்த வீடுகளில் வசித்தவர்கள் என்னவானார்கள்? நெருப்பில் கருகி இறந்திருப்பார்களா? அல்லது உடுத்த உடையோடு கிளம்பிப் போய் அகதிமுகாம்களில் அடைக்கலம் புகுந்திருப்பார்களா? நினைக்கவே ஒரு கணம் மெய் சிலிர்த்தது.

அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பில் எமது வீடு இருந்ததால், கலவரத்திற்குள் அகப்படாமல் தப்பிப் பிழைத்தது. இன வெறியூட்டப்பட்ட காடையர் கூட்டத்தை அப்போது சில அரசியல்வாதிகள் தான் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிங்களக் காடையர்கள் எங்கெங்கே அப்படியெல்லாம் கொலை செய்தார்கள், கொள்ளையடித்தார்கள், பாலியல் பலாத்காரம் செய்தார்கள், போன்ற கதைகளை எமது வீடுகளில் கூடும் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். 

வசதி படைத்தோரின் குடியிருப்புகளுக்குப் பக்கத்திலேயே சேரிகளும் இருந்தன. சேரிகளில் இருந்த சிங்களவர்கள், வசதியான தமிழரின் வீடுகளை எரிக்கவும், கொள்ளையடிக்கவும் முன் நின்றதாக கேள்விப்பட்டோம். சில பணக்காரத் தமிழரின் வீடுகளில் வேலை செய்த சிங்கள வேலைக்காரர்கள், கலவரத்தை பயன்படுத்தி தமது எஜமானர்களையே கொலை செய்தனர், அல்லது காட்டிக் கொடுத்தனர். விதி விலக்காக சில கருணையுள்ள சிங்களப் பொது மக்கள் தமிழருக்கு அடைக்கலம் கொடுத்த கதைகளையும் கேள்வியுற்றோம். இத்தகைய சம்பவங்களை அறியும் வேளை, அப்போது சிறுவனான நானும் விரும்பியோ, விரும்பாமலோ அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டேன்.
தமிழர்கள் அதிகமாக வசித்து வந்த நகர்ப்பகுதியிலேயே, தற்காலிக அகதி முகாமாக மாற்றப்பட்ட அகதி முகாம் இருந்தது. பாடசாலை நுழை வாயிலில் ஆயுதமேந்திய காவல்துறையின் பிரசன்னம். 'சப் மெஷின் கன்' என்ற இயந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீசாரை அப்போது தான் பார்த்தேன். இந்த ஆயுதங்களால் ஏன் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, என்பது எனக்கு அப்போது புரியவில்லை. போலிஸ் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். போலீஸ என்பது புனிதமான ஒரு நிறுவனமல்ல என்ற உண்மை எனக்கு அப்போதே புரிந்தது. சாதாரண சிங்கள மக்களைப் போலவே, பொலிஸ் மற்றும் பல அரச துறைகளில் கடமையாற்றிய சிங்களவர்களின் இன உணர்வும் இருந்தது. நான் வசித்த குடியிருப்பில் பல தமிழ் அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் இருந்தன. தமிழர்கள் என்ற ரீதியில் நாம் கூடிப் பேசுவது வழமை. சக சிங்கள பணியாளர்கள் "தமிழர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என்று திட்டுவது பற்றிய கதைகள் கலந்துரையாடலில் இடம்பெறும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கொழும்பு மாநகரில் அதிக தமிழர்கள் பெரிய பதவிகளை வகித்து வந்தனர். அரசாங்கம் மற்றும் பல நிறுவனங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் சற்று அதிகமாகவே இருந்தது. இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள் மட்டும் மிக மிகக்குறைவு. ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில், கலப்பின பரங்கியர்களுக்கு (Burghers) மட்டுமே இடமளித்து வந்தனர். 1961 ம் ஆண்டு, பரங்கி இராணுவ அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியுற்றது. அதன் பிறகு, பெருமளவு பரங்கியர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இராணுவத்தில் அதிகளவு சிங்கள இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கொழும்பில் வசித்த யாழ்ப்பாண தமிழர்கள் எப்போதும் பதவிகளை எதிர்பார்த்து தம்மை தயார்படுத்திக் கொள்பவர்கள். அதைக்காட்டியே இனவாதத்தை தூண்டி விட்ட சிங்கள அரசியல்வாதிகள், இனக்கலவரங்கள் மூலமும், சிங்கள மொழி மட்டும் சட்டம் மூலமும், தமிழரின் பதவிகளை பறித்துக் கொண்டனர்.

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் கடமையாற்றிக் கொண்டிருந்த தமிழ் அரச உத்தியோகத்தர்கள், சிங்களம் சரளமாக தெரிந்திருந்தால் மட்டுமே அரச பதவிகளில் நிலைக்க முடியும் என்ற சட்டம் வந்த போது எதிர்த்தனர். கூடவே சிங்களமயமாக்கல் நாடெங்கும் தொடர்ந்தது. தமிழர்கள் எதிர்ப்பு காட்டிய போது, அதை அகம்பாவம் என்று சிங்களவர்கள் புரிந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொரு தடவையும் தமிழரின் எதிர்ப்புக்கு பதிலடியாக இனக்கலவரம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது கலவரக் காலத்திற்கு மீண்டும் வருவோம்.

இந்துக் கல்லூரி அகதிமுகாமில், இரண்டு மாடிகளில் இருந்த வகுப்பறைகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனேகமாக அனைவரும் உடுத்த உடையுடன் வந்திருந்தனர். அவர்களில் பலர் வசதியாக வாழ்ந்தவர்கள். டாக்டர்கள், பொறியியலாளர்கள் என்று கௌரவமான பதவிகளை வகித்தவர்கள். சேர்த்து வைத்திருந்த, நகைகள், பணம் எல்லவாற்றையும் பறி கொடுத்து விட்டு வந்திருந்தனர். முகாமில் நிலவும் வசதிக் குறைபாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, ஓரிடத்தில் சலசலப்பு காணப்பட்டது. சனங்கள் இரண்டு பகுதியாக பிரிந்து வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு விசாலமான மண்டபம். அகதிகள் சுவர்ப்பக்கமாக இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று வாய்ச் சமரில் ஈடுபட்டனர்.

நடுப்பகுதி மட்டும் வெற்றிடமாக இருந்தது. அங்கே 'சாக்' கட்டியால் கோடு கீறப்பட்டிருந்தது. எனக்கு உடனே அசோகவனத்தில் சீதை கிழித்த கோடு ஞாபகம் வந்தது. கோட்டுக்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமுமாக இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அங்கே என்ன நடக்கின்றது என்பது, ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்க மாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

எமது பாடசாலையில் அகதிகள் அதிக காலம் தங்கி இருக்கவில்லை. அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு கப்பல், மட்டக்களப்பிற்கு ஒரு கப்பல் என்று ஒழுங்கு செய்து, அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பி வைத்தது. அதுவரை இலங்கை என்பது அனைத்து சமூகத்தினருக்குமான தாயகம் என்று தான் என்னைப் போன்ற பலர் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வடக்கு, கிழக்கு மட்டுமே எமது இடம் என்பதும், கொழும்பில் தமிழர்கள் "வந்தேறுகுடிகளாகவே" கணிக்கப்படுகின்றனர் என்பதும் அப்போது தெளிவாகியது.

அரசு என்ற அமைப்பு கலவரத்தின் போது தனது தமிழ் பிரசைகளை பாதுகாக்கத் தவறியது. இப்போது அதுவே தமிழருக்கு ஒரு தாயகப் பிரதேசத்தை சுட்டிக் காட்டியது. இனப்பிரச்சினையை இன்று பலர் பல்வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். யானையை பார்த்த குருடர்களைப் போல, அவரவர் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமே இனப்பிரச்சினைக்கான புரிதலை உருவாக்குகின்றது. தமிழர் என்று தம்மை பகிரங்கமாக அடையாளப்படுத்த முடியாதது ஒரு சிலரின் பிரச்சினை. கலவரத்தில் உறவினர்களை, வீடுகளை இழந்தது இன்னொரு பிரிவினரின் பிரச்சினை. பிற்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போரில் ஏற்பட்ட இழப்புகளை முன்னிலைப்படுத்தினர். இவ்வளவுக்கும் மத்தியில் சிங்கள பேரினவாத அரசு அமைதியாக தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
...............................................................................................................................
(83 கருப்பு ஜூலையின் 26 வது நினைவுதினத்தையொட்டி பதிவிடுகின்றேன்.)

Saturday, July 25, 2009

இலங்கையில் சீனப் பூச்சாண்டி

இலங்கையில் மார்க்சிச-லெனினிச பாதையில் இயங்கி வரும் "புதிய ஜனநாயகக் கட்சி" யினரால் மாதமொருமுறை வெளியிடப்படும் வெகுஜனப் பத்திரிகையான "புதிய பூமி"யில் வந்த கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகின்றது.

இலங்கையில் இந்திய அமெரிக்க மேலாதிக்கப் போட்டியை மறைக்கச் சீனப் பூச்சாண்டி
- மோகன் -


மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர் முயற்சிகட்கு உறுதுணையாக நிற்பதும் உலக நாடுகள் அனைத்தையும் விடப் பெருமளவில் பொருளாதார உதவி வழங்கி வருவது சீனா தான் என்று வலியுறுத்தும் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்டு காட்டப்படும் என்று எதிர்பார்ப்போமாக.

மேற்படி கட்டுரை கட்டுரையாளரான ஜெரமி பேஜின் சொந்தச் சரக்கல்ல. லண்டன் டைம்ஸ் ஒரு இடதுசாரி விரோத ஏடு. சீனாவும் ரஷ்யாவும், சோஷலிஸத்திலிருந்து விலகிய பின்பும் அவற்றைப் பற்றிய குரோதம் பாராட்டுகிற கட்டுரைகள் தொடர்ந்தும் அதில் வருவதற்கான காரணம் அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய உலக மேலாதிக்கத்திற்கு அவை சவாலாக இருப்பது தான். ஜெரமி பேஜ் என்றுமே முற்போக்கான பத்திரிகையாளராக அறியப்பட்டவரல்ல. மேற்கூறிய கட்டுரைக்கான தகவல்கள் ஒட்டு மொத்தமாக பி. ராமன் எனப்படும் முன்னாள் றோ உளவு நிறுவன ஆணையாளரின் மூலம் பெறப்பட்டவை என்று கட்டுரை மூலம் தெரிய வருகிறது. இந்திய-சீன உறவைச் சீர்குலைக்கும் விதமாகச் சீனாவைப் பற்றிய செய்தித் திரிபை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிற 'ஆய்வு நிறுவனங்கள்" மூன்றிலாவது ராமன் முக்கியப் பொறுப்பில் உள்ளார். அவற்றுக்கான இணையத் தளங்கள் உள்ளன. அவை வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தியே காலஞ் சென்ற டி.பி. சிவராம் உட்பட்ட தமிழ்த் தேசியவாதிகள் தங்களுடைய "ஆய்வுகளை" வழங்கினர். அவற்றின் ஆதாரத்தின் மீது அமைந்த அரட்டைகளும் அரை உண்மைகளும் மறுபடியும் மறுபடியும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு உண்மைகளாக முன்வைக்கப் படுகின்றன.

தமிழிற் சீனா பற்றிய விமர்சனம் முன்வைக்கப்படும் போது பொதுவாகவும் ரஷ்யா பற்றியவை முன்வைக்கப்படும் போது இடையிடையிலும் அவை சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்ற் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதற்கு அழுத்தந் தெரிவிக்கப்படுவது வழமையாகி விட்டது. அதன் நோக்கம் விளங்கிக் கொள்ளக் கடினமானதல்ல. எவ்வாறு திரிபுவாதிகளதும் சமசமாஜிகளதும் தவறுகளைக் காட்டி நேர்மையான இடதுசாரிகளை எல்லாம் களங்கப்படுத்தி வந்துள்ளார்களோ அவ்வாறே முதலாளியம் வேரூன்றி விட்ட சீனாவையும் முற்றாகவே முதலாளிய நாடாகி அல்லற்பட்டு அதிலிருந்து மீளப் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அந்தரித்து நிற்கும் ரஷ்யாவையும் காட்டி, அவற்றின் குறைபாடான நடத்தையைச் சோஷலிச நாடுகளது நடத்தையாக அடையாளங் காட்டுவது விஷமத்தனமன்றி வேறல்ல. அதே வேளை சீனாவும் முன்னாள் சோவியத் யூனியனும் சோஷலிஸத்திலிருந்து விலகியதை முன்னிட்டு அவற்றுடன் கண்மூடித்தனமான பகைமை பாராட்டுகிற இடதுசாரிகள் உள்ளனர். சீன-சோவியத் முரண்பாடு இருந்து வந்த காலத்தில் ஒரு தரப்பை ஆதரித்து மற்றதை விமர்சித்தவர்களுட் சிலர் அக் காலத்தில் இருந்தவாறே தமது பழைய பகைமைகளைப் பேணி வருகின்றனர். இத்தகையோர் சீனாவையோ ரஷ்யாவையோ யார் குற்றஞ் சாட்டினாலும் அதற்கான காரண காரியங்களை ஆராயாமல் அவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதையுங் காணலாம்.

நாம் உலகத்தை எந்த நிலைப்பாட்டிலிருந்து நோக்குகிறோம் என்பதைச் சார்ந்தே உலக நிகழ்வுகள் பற்றிய நமது மதிப்பீடுகள் அமைகின்றன. நமது நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் உண்மைகளை மூடி மறைக்கவும் புனைவுகளை உண்மையென்று பரப்புரை செய்யவும் நாம் முற்படுவோம் என்றால், முடிவில் நாம் நம்மையே ஏய்த்துக் கொண்டோராவோம். தமிழ்த் தேசியவாதிகள் சிலர் இலங்கைத் தமிழரின் பிரதான எதிரி சீனாவே என்று காட்டுவதற்காக ராமன் போன்றோரது தகவல்களையும் ஏகாதிபத்தியவாதிகளதும் இந்திய மேலாதிக்கவாதிகளதும் புனைவுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இப் போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

எனினும், அனைத்தினதும் சாராம்சம் பின்வருமாறு எனலாம்.

1. சீனா இந்தியாவுக்கு எதிரான மேலாதிக்கப் போட்டியில் இறங்கியுள்ளது.
2. சீனா இந்தியாவிற்கெதிரான கடல் முற்றுகை ஒன்றுக்கு ஆயத்தப்படுத்துகிறது.
3. சீனா இலங்கைக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கித் தமிழ் இன ஒழிப்பை மும்முரமாக ஆதரிக்கிறது.
4. சீனா இலங்கையின் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிலை நிறுத்த உதவி அதன் மூலம் இலங்கை மீது பூரண ஆதிக்கஞ் செலுத்த முயலுகிறது.
5. மேற்கூறிய காரணங்களாலேயே இந்தியா இலங்கை அரசாங்கத்தின் பேரினவாதப் போருக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.


மேற்கூறிய அடிப்படையிலேயே இந்தியா தனது அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கும் விதமாகக் கடந்த நாற்பதாண்டுகட்கும் மேலாக நடந்து கொண்டமையையும் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.

சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுக்கப்பட்ட அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறலாம் என்பது வேறு விடயம். சாத்தியப் பாடுகளை எல்லாம் சமகால உண்மைகளாகக் கருதுவது அறிவுடைமை அல்ல.

தன்னுடைய கடற் பகுதியிலேயே எல்லைத் தகராறுகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடாகத் தொடருகிறது. இதுவரை தனது எல்லைப்புற நாடுகள் எதன் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தாத ஒரு நாடாகச் சீனா இருந்து வந்துள்ளது. எனவே இந்து சமுத்திரத் தென்னாசிய வலயத்தில் மேலாதிக்கப் போட்டி என்று சில இந்திய மேலாதிக்கவாதிகள் அலறுவது திருடனே எல்லாரையும் முந்திக் கொண்டு "திருடன்! திருடன்!!" என்று கூவுவது போன்றதே.

ஆபிரிக்கக் கரையோராம் முதலாக மியான்மார் வரையிலான பகுதிகளில் உள்ள நாடுகளில் சீனா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளது. அதற்கு நோக்கங்கள் உள்ளன. அதை வெறுமனே சீன மேலாதிக்கமென்று மொட்டையாக முடிவு காணாமற், சாத்தியமான காரணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்வது அறிவுடைமையாகும்.

சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல மூலவளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. அண்மையிற் கூடச் சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டது. எனினும் அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை மதிப்பதாக இல்லை.

இந்தியாவை அமெரிக்காவுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பிராந்திய மேலாதிக்க வல்லரசாக்குகிற முயற்சிக்கு இந்திய ஆட்சியாளர்கள் மிகவும் உடந்தையாகவே நடந்து வந்துள்ளனர். இந்தியா-இஸ்ரேல்-ஈரான் என்ற அடிப்படையில் அமெரிக்கா திட்டமிட்டு வந்துள்ள ஆசிய இராணுவக் கூட்டணிக்கு ஈரான் மட்டுமே இதுவரை தடையாக இருந்து வந்துள்ளது. இப் பின்னணியில், ஏதாவது காரணங் காட்டிச், சீனாவின் கடல் வணிகம் தடைகட்கு உட்படலாம. அத் தடை இந்து சமுத்திரத்தின் எப்பகுதியிலும் நிகழலாம். அவ்வாறான நிகழ்வுகள் சென்ற நூற்றாண்டின் போர்கட்குக் காரணமாய் இருந்துள்ளன. அவ்வாறான ஒரு சூழ்நிலையை மட்டுமன்றி அமெரிக்கா சீனாவுக்கு வேண்டிய கடல் வழிப் பாதைகளிற் தடைகளை விதிக்கக் கூடிய பல்வேறு சாத்தியப்பாடுகளைச் சீனா புறக்கணிக்க இயலாது.

சீனாவின் ஒரு பகுதியான தாய்வான் 1949 முதல் இன்னமும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ளது. திபெத்தில் அமெரிக்கா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது. வடமேற்கில் மத அடிப்படையிற் தேசியவாதிகளைத் தூண்டி விடுகிறது. இவற்றையெல்லாம் கணிப்பிற் கொள்ளுகிற போது, சீனா தன் பாதுகாப்புப் பற்றி எச்சரிக்கையின்றி இருக்க இயலாது என்றே விளங்கும்.

இதுவரை சீனா தனது பொருளாதாரச் செல்வாக்கை வலுப் படுத்துவதிலேயே முக்கிய கவனங்காட்டி வந்துள்ளது. அத்துடன் இந்து சமுத்திரம் பிராந்தியத்தில் அமெரிக்கா கடல்வழிப் பாதை எதையும் மறிக்க முற்பட்டாற் தனது கப்பல்கட்குத் துறைமுகங்களும் மற்றும் கடல்வழிகளும் பண்டங்களைக் கொண்டு செல்லத் தரை வழிகளும் தேவை என்கிற அடிப்படையிலேயே சீனா இப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளிற் துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுவதன் மூலம் தனது கப்பல்கட்கான துறைமுக வசதிகட்கு ஒரு உத்தரவாதத்தைப் பெற முயலுகிறது. இவற்றில் எந்தத் துறைமுகந் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நாட்டை வற்புறுத்துகிற விதமான உடன்படிக்கை எதுவும் இல்லாததோடு சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தப் படுவதற்கான எந்தவிதமான சாடையுமே இல்லை.

சீனா இலங்கைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுக விருத்திக்கு வழங்குகிற கடனும் அதை நிர்மாணிக்கும் பணியும் முற்றிலும் வணிக அடிப்படையிலானவை. அந்தக் கடன் தொகை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டை வைத்து, இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளில் சீனா யப்பானையும் மீறி விட்டது என்று ஜெரமி பேஜ் எழுதியிருந்தார். அவருடைய செய்தித் திரிப்புகளை மறுத்துச் சீன வெளி அலுவல் அமைச்சு கடும் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும் ராமன், பேஜ் போன்றோர் பரப்புகிற வதந்திகள் போய்ச் சேரவிருக்கும் பல இடங்களிற் சீனாவின் மறுப்புப் பற்றியோ உண்மை நிலைமைகள் பற்றியோ அக்கறை இல்லை.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்காகப் பலவேறு நிதி வழங்கல்களை மேற்குலகு நிறுத்துவதாகக் கூறிச் சில நிதி வழங்கல் வசதிகளை இடைநிறுத்தினாலும் யப்பான் தொடர்ந்தும் நிதி வழங்கி வந்துள்ளது. இது அமெரிக்க ஆசியுடன் நடக்கிறதா, அல்லது அமெரிக்காவை மீறி நடக்கிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர் இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளுகிற முயற்சிகள் பற்றிப் பேசுவதில்லை. சம்பூரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்பூரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் இந்தியா எண்ணெய் அகழ்வுக்கு உடன்படிக்கை செய்ததை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்கு உரியன.

இலங்கையில் ராணுவ மேலாதிக்கத்திற்கான போட்டி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலானதாகவே கடந்த பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. கொலனியத்தின் இறுதிச் சுவடுகள் போன பின்பு இலங்கை மண்ணில் அடி பதித்த படைகள் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அல்லாமல் வேறெந்த நாட்டினவையும் அல்ல. இவற்றில் இந்தியாவினது படைகள் 1971ல் நேரடியான குறுக்கீட்டுக்கு ஆயத்தமாய் இருந்தன. 1987ல் நேரடியாகக் குறுக்கிட்டன.

இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவதற்குச் சீன மிரட்டல் காரணமாக இருக்கவில்லை. அது இப்போது ஒரு வசதியாக்கப் பட்டுள்ளதே ஒழிய உண்மையான காரணங்கள் வேறு. இலங்கையின் அணிசேராக் கொள்கை முழுமையானதாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் தரப்பிலே இலங்கை நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு முரணாக 1962 வரை எதுவும் நடக்கவில்லை. எனினும் இந்திய-சீன எல்லை மோதலின் போதும் 1971இல் இந்திய-பாக்கிஸ்தான் மோதலின் போதும் இலங்கை வகித்த நடுநிலையை இந்தியா வெறுத்தது. குறிப்பாக மேற்குப் பாக்கிஸ்தானில் இருந்து கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு (இன்று பங்களாதேஷ்) பாக்கிஸ்தான் விமானங்கள் இலங்கையில் எரிபொருள் நிரப்ப நின்று போனதை இந்தியா வெறுத்தது.

எனினும் ஒரு நேச நாடு தனது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தனது படைகளைக் கொண்டு செல்ல உதவுவது இந்திய-பாக்கிஸ்தான் முரண்பாட்டில் ஒரு பக்கம் சார்வதாகி விடாது. எனினும், இந்தியாவின் மேலாதிக்கப் பார்வையில் அந்த நியாயம் விளங்கியிராது. எவ்வாறாயினும் இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் தலையிடுவதில் எச்சரிக்கையுடனேயே இருந்து வந்தது. ஆனாலுந் தமிழ்த் தேசியவாதிகள் இந்த அதிருப்தியைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் நோக்கத்துடனே இருந்தனர். இந்தியா இலங்கையிற் குறுக்கிடுவதற்கான சூழ்நிலை தமிழர் மீதான அக்கறையாலன்றி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி அமெரிக்காவின் சார்பான திசையில் அயற் கொள்கையை நகர்த்திய போது ஏற்பட்டது. இந்தியா பற்றித் தமிழர் மனதில் உருவாக்கப்பட்ட உன்னதமான படிமம் 1987ல் தான் உச்சத்தை எட்டியது. ஆனால் 1988 அளவிலேயே அது நொறுங்கி விழுந்தது.

1987இல் இந்தியா இலங்கைத் தமிழருக்குச் செய்த துரோகத்திற்கு என்ன சீனத் தலையீடு காரணமாயிருந்தது என்று யாருமே சொல்வதில்லை. ஏனென்றால் சீனா 1952 முதல் எப்போதுமே இலங்கையுடன் நட்புறவைப் பேணி வந்தது. 1957இல் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்ட பின்பு அது வலுப்பட்டது. 1970களில் சீனா ஏகாதிபத்திய விரோத காலனிய விரோத விடுதலைப் போராட்டங்களை வலுப்படுத்து முகமாகச் சில ஆபிரிக்க நாடுகட்குப் பெரிய பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது. இவை எல்லாம் சீனாவின் மேலாதிக்க நோக்கிலானவை என்று யாராலுமே குற்றஞ்சாட்ட இயலவில்லை.

சீனாவின் அயற் கொள்கையிற் சர்வதேச நிகழ்வுகளும் போக்குக்களும் முக்கியமான பங்களித்துள்ளன. எப்போதுமே அமெரிக்கா பற்றிய ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து வந்துள்ளது. 1961க்குப் பிறகு, சோவியத் யூனியனுடனான முரண்பாடு, 1967இல் சோவியத் யூனியன் செக்கோஸ்லவாக்கியவக்குப் படைகளை அனுப்பியதிலிருந்து வலுப் பெற்றது. சோவியத் யூனியனில் பிரெஷ்னெவ் ஆட்சி இருந்த காலம் முழுவதும் சீன-சோவியத் உறவில் முறுவல் நிலை இருந்து வந்தது. 1980களில் தொடங்கிய நெகிழ்வு சோவியத் யூனியனின் உடைவின் பின்பு, சீனாவின் அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் ரஷ்யாவில் அமெரிக்காவின் ஆதிக்க முனைப்பு கடும் எதிர்ப்பைக் கண்டதன் பயனாகவும், ஒரு புதிய உறவை வலுப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ராணுவ வல்லரசாக உள்ளது. அதன் ராணுவத் தளங்கள் அமெரிக்க எல்லைகட்கும் அப்பால் வெகு தொலைவிற் பலவேறு நாடுகளில் உள்ளன. இப்பபோது இந்திய மேலாதிக்கம் அதன் கூட்டாளியாகி விட்டதோடு அதன் அயல்நாடுகளது உள் அலுவல்களில் தீவிரமாகக் குறுக்கிடுகிறது. இக் குறுக்கீடுகள் மூலம் சார்க் அமைப்பு என்பதும் இந்திய மேலாதிக்கத்தின் ஒரு கரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதை எல்லாம் மூடி மறைக்கவே, சீன மிரட்டல் என்பது சிலரால் முன்னெடுக்கப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் இந்திய அரசாங்கமோ அமெரிக்காவோ குற்றஞ் சாட்டுகிற விதமாகச் சீனா இதுவரை எந்த நாட்டின் உள் அலுவல்களிலுங் குறுக்கிட்டதில்லை. சீனாவின் 'முத்துமாலை" எனப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத் துறைமுக வசதிகளின் விருத்திக்கான உதவி பற்றி இதுவரை முற்குறிப்பிட்ட விஷமிகளை விட வேறு எவரும் குறிப்பாக எந்த நாட்டின் அரசாங்கமுமே விமர்சிக்கவுமில்லை ராணுவ நோக்கங் கற்பிக்கவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் ஆதாரங்களும் இருந்திருந்தால் இந்தியாவும் அமெரிக்காவும் அதைப்பற்றி வெளிவெளியாகப் பேசத் தயங்கி இரா.

சீனா இலங்கைக்குப் பொருளாதார உதவி வழங்குவதாலும் ஆயுதங்களை வழங்குவதாலுமே இலங்கை அரசாங்கத்தால் தனது பேரழிவுப் போரை முன்னெடுக்க இயலுமாக உள்ளது என்பது ஜெரமி பேஜின் கட்டுரையின் சாராம்சம் எனலாம். ஆனால் இலங்கை அரசாங்கப் படைகள் பயன்படுத்தி வருகிற பேரழிவுப் போர்க்கலங்களில் ஏகப் பெரும்பான்மையானவை எங்கிருந்து வந்தன என்பதற்கான விபரங்களை டைம்ஸ் கட்டுரையாளரோ அவரது தகவல்களின் தோற்றுவாயான ராமனோ தரவில்லை. தர விரும்பவும் மாட்டார்கள். அவை மேறகுலகினதும் இந்தியாவினதும் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டும் என்பதே அதற்கான காரணமாகும்.

சீனா இலங்கைக்குக் கடற்படைக்கான விசைப்படகுகள், ராடார் கருவிகள், விமானங்கள் என்பனவற்றையும் சிறிய வகையான ஆயுதங்களையும் விற்றுள்ளது. அது சரியா பிழையா என்பது ஒரு கேள்வி. ஆனாற் சீன ராணுவ உபகரணங்கள் கொண்டே தமிழர் அழிக்கப்படுகின்றனரா என்பது இன்னொரு கேள்வி. சீனா தனது பாதுகாப்புக்காகவும் ஏகாதிபத்திய, கொலனிய, மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டச் சக்திகட்கும் பாதிக்கப்பட்ட நாடுகட்கும் ஆயுதங்களை வழங்குவதும் சரியானதே. இதையே சீனா 1970கள் வரை செய்தது. எனினும் சீனா முதலாளியப் பாதையில் போகத் தொடங்கிய பின்பு, ஆயுத உற்பத்தி, பாதுகாப்பு என்பதற்கும் அப்பால், வணிக நோக்கிலும் நடைபெறுகிறது. இது சில முன்னாள் சோஷலிஸ நாடுகளின் சீரழிவின் போது தொடங்கிய ஒரு போக்காகும். இதை மாக்ஸிய லெனினிஸவாதிகள் விமர்சித்தே வந்துள்ளனர். எனினும் இவ் விடயத்தில் சீனாவையோ ரஷ்யாவையோ தனித்து நோக்கி விமர்சிப்பது தவறானது.

இலங்கை உட்படப் பலவேறு நாடுகளின் இடையிலும் நாடுகட்குள்ளும் போரை மூட்டி அதன் மூலம் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகிற நாடுகளின் வரிசையில் சீனா உள்ளடங்காது. எனினும் தனது நேச நாடு ஒன்றின் பாதுகாப்புக்கு என்று சீனா வழங்குகிற ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டுக்குப் போருக்கோ ஒரு சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போருக்கோ பயன்படாத முறையில் சீனா கட்டுப்பாடு எதையும் விதிக்க இயலாது. எனவே தான் சீனா உலக ஆயுதச் சந்தையில் முன்வரிசையில் இல்லாவிடினும் அதன் ஆயுத விற்பனை சோஷலிச, மனித விடுதலைக் கண்ணோட்டங்களில் விமர்சனத்துக்கு உரியதாகிறது.

மறுபுறம், இந்திய, அமெரிக்க மேலாதிக்கங்கள் தமது ராணுவச் செயற்பாடுகள் மூலமும் பிற குறுக்கீடுகளின் மூலமும் சீனாவுடன் உறவுடைய நாடுகளைத் தமது ஆதிக்க மண்டலங்கட்குள் கொண்டு வர முற்படுகிற போது சீனாவும் தனது தேசிய நலன்களின் பேரில் அங்கு இழுபடுகிறது. ஆதனால், அது சரியான நடத்தையாகி விடாது. எனினும் சீனா ஆயுதம் வழங்குவதாலேயே இந்தியா ஆயுதம் வழங்குகிறது என்கிற வாதம் உண்மைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதாகும்.

அமெரிக்கா உலகளாவிய முறையில் ஒவ்வொறு மூன்றாமுலக நாடுகட்கும் எதிரான ஒரு மிரட்டலாக உள்ளது என்பதையும் அது உலகின் பலவேறு பகுதிகளிலும் தனது படைகளை நீண்ட காலத்திற்கோ குறுகிய காலத்திற்கோ தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகிறதா என்பதையும் தென்னாசியாவின் சிறிய நாடுகட்கு இந்தியா ஒரு பெரிய மிரட்டலாக வளர்ந்து வந்துள்ளதா என்பதையும் நாம் முதலில் விசாரிக்க வேண்டும. அதன் அடிப்படையில் சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்வதும் விமர்சிப்பதும் கூடப் பொருத்தமாயிருக்கும்.

ராமன் போன்றோரின் பொய்ப் பிரசாரங்கட்கு எளிதாக எடுபடுவோரைவிட அவ்வாறான பொய்த் தகவல்களை வலிந்து தேடிப் பரப்புரை செய்வோர் மூலம் ஏமாற்றப்படுவோர் அனேகர் என நம்புகிறேன். ஏனெனில் ராமனுடைய நோக்கங்களை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அவை மறுவர்த்தம் பெற்று வழமையான ஊடகங்கள் மூலம் வெளிவருகிற போது அவற்றுக்கு ஒரு நடுநிலைத் தோற்றம் உருவாகிறது.

சீனாவைத் தமிழர் நம்புவதாலோ நம்பாததாலோ அவர்களது உரிமைகட்கும் விடுதலைக்குமான போராட்டங்களிற் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை. ஆனால் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் குறுக்கீடுகளின் இயல்பு வேறுபட்டது. அவற்றை நம்புவதா விடுவதா என்பதற்கு நடைமுறை முக்கியத்துவம் உள்ளது. தமிழ் மக்கள் தம்மை விட யாரையுமே அதிகம் நம்பாமல் இருப்பது பாதுகாப்பானது. அவர்கள் நம்பக்கூடிய சக்திகள் யாரென் அவர்களது போராட்ட அரசியல் எவ்வாறு விரிவடைகிறது என்பதே தீர்மானிக்கும். அவை நிச்சயமாக எந்த மேலாதிகக வல்லரசாகவும் இரா என்பது மட்டும் உறுதி.

(நன்றி: "புதிய பூமி" ஜூன்,2009)

தொடர்புகளுக்கு:
New Democratic Party
S-47, 3rd Floor
C.C.S.M.Complex
Colombo -11
SriLanka

+94714302909

+94112473757

nfo@ndpsl.org

Tuesday, July 21, 2009

பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்

பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு கட்டமாக பிலிப்பைன்ஸ்சிற்கு அமெரிக்க இராணுவம் போகின்றது, என அறிவித்த உடனேயே அது பல நினைவுகளைக் கிளறிவிட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா ஸ்பெயினுடன் சண்டையிட்டு பறித்த காலனிகளில் பிலிப்பைன்சும் ஒன்று. அதன் பின்னர், 1946 ல், சுதந்திரம் அடையும் வரையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்கக் காலனியாகவிருந்தது.

சுதந்திரம் பெற்றாலும் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்து வைத்திருக்க புதிய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இராணுவத் தளங்களினால் வாடகைப்பணம் கிடைப்பதையிட்டு பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்களுக்குக் கிடைத்ததென்னவோ எய்ட்ஸ், சமுகச் சீரழிவு, அசுத்தமான சுற்றச்சூழல், போன்ற விரும்பத்தகாத விளைவுகள்தான். பத்து வருடங்களுக்கு முன்பு ஒபப்ந்த காலம் முடிந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியிருந்தது. ஆனால் "உலகை மாற்றிய 11 செப்டம்பர்" மீண்டும் அமெரிக்க இராணுவம் வர வழி சமைத்துக் கொடுத்து விட்டது. போன மச்சான் திரும்பி வந்த கதைதான்.

பிலிப்பைன்ஸின் தென்பகுதித்தீவுகளில் ஓடித்திரியும் ஒரு சிறிய ஆயுதபாணிக் கும்பலான "அபுசயாப்" என்ற இயக்கத்தை அடக்க வந்ததாகக் கூறிக் கொள்கிறது அமெரிக்கா. இந்த இயக்கத்திற்கும் பின் லாடனின் அல்கைதாவிற்கும் தொடர்பிருப்பதாக சர்வதேச நியாயமும் கற்பிக்கின்றது. அபுசயாப்பின் உறுப்பினர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தீவிரமான மத-அரசியல் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதுதான் அவர்களின் மிகத்தீவிரமான அரசியல் வேலை. இவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவுகூட அப்படியொன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.

உண்மையில், இன்னொரு விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள்தான் அபுசயாப் குழுவினர். பிலிப்பைன்ஸின் தென்பகுதியல் இருக்கும் பெரிய தீவான மின்டானாவோ மற்றும் சூலு, பலவான் ஆகிய தீவுகளில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். தகலொக் மொழி பேசும் பெரும்பான்மைப் பிலிப்பீனியர்களிடமிருந்து வேறுபட்ட மொழி, இன அடையாளங்களைக் கொண்டுள்ளமை வேறு விடயம். இந்தத் தீவுகள் முன்பு தனியாக ஒரு முஸ்லீம் சுல்தானால் ஆளப்பட்டன. பின்னர் அமெரிக்காவால் பிலிப்பைன்ஸ் என்ற தேசத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் மற்றத்தீவுகளிலிருந்த கிறிஸ்த்தவர்கள் சென்று குடியேற ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாகவும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் "மோரோ தேசிய விடுதலை முன்ணணி" என்ற இயக்கம் மின்டானாவோ தீவு தனி நாடாக வேண்டுமெனக் கூறிப்போராடியது. ஆரசுக்கெதிரான கெரில்லாப் போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிந்தது. ஒப்பந்தத்தின்படி, மின்டானோவை விசேட மாநிலமாக்கி அதிகாரப் பரவலாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மோரோ தேசிய விடுதலை முன்ணணி ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு அரசியல் நடாத்தப்போய்விட்டது. இந்தத் தீர்வுடன் உடன்படாதவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக கூறினர். அப்படி ஆயதங்களைக் கைவிடாத ஒருசிலரின் அமைப்புத்தான் அபுசயாப்.

மேற்கத்தைய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகளை கடத்தியதன் முலம் இவர்களுக்குச் சர்வதேசப் பிரபல்யம் கிடைத்தது. அதற்கு முன்னர் பல பிலிப்பைன்ஸ் நாட்டுப்பிரஜைகள் கடத்தப்பட்டிருந்தாலும், வெளியுலகில் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், ஒருசில அமெரிக்க, ஐரோப்பியப் பிரஜைகள் கடத்தப்பட்ட உடனேயே உலகத்தொலைக்காட்சிச் சேவைகளின் கமெராக்கள் அடர்ந்த காடுகளுக்குள் செய்தி சேகரிக்கப் போய்விட்டன. பின்லாடனின் ஆட்களைத் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு அமெரிக்க இராணுவமும் காடுகளுக்குள் அபுசயாப்பைத் தேடி வேட்டையாடலாமெனப் போய்விட்டது. உண்மையில், பிலிப்பைன்ஸ் இராணுவம்தான் அபுசயாப்புடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டது. அமெரிக்க இராணுவம் பின்னால் நின்று ஆலோசனை வழங்கியது.

இராணுவ நடவடிக்கை தொடங்கி சில மாதங்களிலேயே அபுசயாப் தலைவர் மரணமடைய, அந்த இயக்கம் அநேகமாக அழிந்துவிட்டது என்றே பலர் கருதுகின்றனர். அதற்குப் பின்னும் அமெரிக்க இராணுவம் அங்கேயிருப்பது பலரின் கண்களை உறுத்துகின்றது. இந்த ராணுவ நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே பல விமர்சனங்களைக் கிளறிவிட்டிருந்தது. முன்னர் குறிப்பிட்டதுபோல, தெளிவான அரசியற் கொள்ளையற்ற ஒரு கொள்ளைக் கூட்டம் போல செயற்பட்ட சில நூற்றுக்கணக்கான அபுசயாப் ஆயுதபாணிகளைப் பிடிக்க அமெரிக்க இராணுவம் வரவேண்டுமா? சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்களில் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், இது என்னவோ காடுகளுக்குள் எலிகளைத் தேடி வேட்டையாடுவது போலுள்ளது. இனித்தான் புலிவேட்டை நடக்கப் போவதாக பிலிப்பைன்ஸ் மக்களிடையே கதை அடிபடுகின்றது.

பிலிப்பைன்ஸில் நீண்டகால அமெரிக்க எதிர்ப்புச் சக்தியாகவிருப்பது "புதிய மக்கள் படை" . பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப்பிரிவான இது முன்பு அமெரிக்க காலனி யாதிக்கத்திற்கெதிராக போராடியது. பின்னர் அமெரிக்க சார்பு மார்க்கோசின் சர்வாதிகாரத்திற்கெதிராக கொரில்லாப் போராட்டத்தைத் தொடர்ந்தது. மார்கோஸ்சிற்கு பின்னர் வந்த ஜனநாயக அரசாங்கங்களுடன் பலமுறை சமாதானப் பேச்சுவார்தைதைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் இன்னும் பிலிப்பைன்ஸின் பல பகுதிகள் புதிய மக்கள் படை கெரில்லாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

அமெரிக்க அரசு வெளியிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புதிய மக்கள் படையும் இடம்பெறுகின்றது. அதனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் பிலிப்பைன்ஸிலும் வெளிநாடுகளிலும் எடுக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தினதும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சில உறுப்பினர்கள் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து செயற்படுவதாகவும் கூறி, இவர்களின் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க அரசு கேட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் புதிய மக்கள் படை வெளியிட்ட அறிக்கையொன்று அமெரிக்க இராணுவம் தமக்கு எதிராகத் திரும்பினால் தாம் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், அமெரிக்க இராணுவ நிலைகள் மட்டுமன்றி பொருளாதார இலக்குகளும் தாக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளது.

இவற்றைவிட, அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் நிரந்தரமாகத் தங்குவதற்கு பல அரசியற் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. முதலாவது பூகோள அமைவிடம்: சீனாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் நடுவில் பிலிப்பைன்ஸ் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கை கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை அமெரிக்கா கண்காணிக்க விரும்புகின்றது. மேலும் இந்தோனேசியா எண்ணை உற்பத்தி செய்யும் நாடென்பதால் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதைவிட அமெரிக்கப் பாராளுமன்ற ஒப்புதலுடன் பிலிப்பைன்ஸ்க்கு ஆயுத, இராணுவ உதவிகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையால் பிலிப்பைன்ஸ் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. ஒரு ஏழை நாடான பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து இராணுவ உபகரணங்களையும், தொலைத்தொடர்புக் கருவிகளையும் வாங்கவுள்ளது. மறுபக்கமாகப் பார்த்தால், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு ஆசிய சந்தை கிடைத்துள்ளது. அமெரிக்க அரசின் இராணுவ நிதி உதவிகூட இதுபோன்ற விற்பனையைக் கருதிச் செய்யப்படுவதுதான்.

முன்புகூட அமெரிக்க அரசாங்கம் பல மூன்றாம் உலக நாடுகளுக்கான இராணுவ நிதியுதவித்திட்டத்தை முன்வைத்திருந்த போதிலும் அதற்குப் பாராளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை. செப்டம்பர் 11 ற்குப்பின் தாராளமாகவே ஒப்புதல் வழங்கப் படுகின்றது. பிலிப்பைன்சுடன் சேர்ந்து பாகிஸ்தான், கொலம்பியா போன்ற நாடுகளுக்கும் இராணுவ நிதியுதவி வழங்கப்படுகின்றது. இந்த நாடுகளில் நிலைமை எப்படிப் போகிறதென அவதானித்து வருங்காலத்தில் பிற நாடுகளுக்கும் உதவி வழங்கப்படும்.

சுருக்கமாகப் பார்த்தால், அமெரிக்க இராணுவம் தனது (வெளிநாட்டு) துணைப்படைகள் மூலம் பலத்தைக் காட்டுகின்றது. கடந்த கால அமெரிக்க இராணுவ வரலாற்றில் மனித உரிமைகளை மீறும் அரசுகளுடன் துணை நின்றதைத் திரம்பிப் பார்த்தால், எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதற்கான காரணங்கள் தென்படவில்லை.

Saturday, July 18, 2009

தமிழரின் பாலியல் வேட்கை - ஒரு ஐரோப்பிய கண்ணோட்டம்


தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஒரு நெதர்லாந்து எழுத்தாளர் தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார். ஐரோப்பியர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தமிழர்களும் தெரிந்து கொள்வது நல்லது. "Te gast in India" என்ற நூலில் இருந்து தமிழாக்கம் செய்து தருகிறேன்.
_____________________________________________________________

பல நூற்றாண்டிற்கு முந்திய இந்தியாவை தமிழ்நாட்டில் தரிசிக்கலாம். ஆரியரின் பழக்கமான புலால் உண்ணும் முறை இங்கே கலாச்சாரமாகவில்லை. மொகலாயர்கள் தெற்கைப் பற்றி அதிகம் அக்கறைப்படவில்லை. தமது மதமாற்றும் நடவடிக்கையை வடக்கத்திய பிரதேசங்களுடன் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். பிரிட்டிஷார் கூட தமிழ்நாட்டில் அதிகளவு மாற்றங்களை கொண்டுவரவில்லை. மதராஸ் துறைமுகத்துடன் அவர்கள் திருப்தியடைந்தார்கள். இத்தகைய காரணங்களால் இங்கே திராவிட கலாச்சாரம் என்றென்றும் நிலைத்து நின்றது. பிரபலமான இந்துக் கோயில்கள் தெற்கில் காணப்படுவது ஒன்றும் அதிசயமல்ல. கோயில் கட்டடக்கலை ஒப்புவமை இல்லாதது.

"தமிழ் என்றால் இனிமை என்று அர்த்தம்" - எனக்கு அருகாமையில் இருந்த இளைஞர் சரளமான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். நிச்சயமாக, ஆரியரின் வருகைக்கு முன்பிருந்தே தென்னிந்திய பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் குறிக்க, இனிமை என்ற சொல் சிறந்த வரைவிலக்கணம். தமிழர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், அன்பானவர்கள் என்று வாய் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். நெற்றியில் வந்து விழும் அடர்ந்த சுருளான முடிகளுக்குள், கண்கள் பளிச்சிடுகின்றன.

 அவர் தன்னை வின்சென்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
"அது ஒரு கிறிஸ்தவப் பெயர் அல்லவா?"
"ஆமாம், நீங்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருந்து வருகிறீர்கள் அல்லவா?"
நிறைய அர்த்தங்களுடன் கண் சிமிட்டுகிறார்.
நாம் கிறிஸ்தவர்கள் இல்லை, எனக் கூறிய போது துணுக்குற்றார். நாம் கடவுளை நம்பவில்லை என்று சொன்னதும் பொறி பறந்தது. நாம் சொன்னதை அந்த இளைஞர் தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு மொழி பெயர்த்து கூறிய பின்னர், அவர்களும் நம்ப மறுத்து எம்மை உற்று நோக்கினார்கள்.

வின்சென்ட் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் இருந்து மகாபலிபுரத்திற்கு வந்திருந்தார். கொடைக்கானல் கிறிஸ்தவ கேரளாவின் எல்லை அருகில் உள்ளது. "தமிழர்கள் இனிமையானவர்கள். ஆனால் மலையாளிகள் வேறு விதமானவர்கள்." விரலால் சைகை காட்டியபடி தொடர்கிறார். "மலையாளிகளை நம்ப முடியாது. ஆனால் அவர்கள் கெட்டவர்கள் அல்ல." 

வின்சென்ட் ஒரு டாக்சி சாரதி. பல இடங்களைப் பார்த்திருக்கிறார். நாம் பாறையில் தாவும் போது, வின்சென்ட் தமிழர்களைப் பற்றிய இன்னொரு கருத்தை உதிர்க்கிறார். "இன்றைய காலம் தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருகின்றது. நிறைய ஆபாசப்படங்களைப் பார்க்கிறார்கள். 'வின்சென்ட் அப்படி இல்லை.' நாம் கேட்காமலே, அவர் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மேற்கொண்டு சொல்ல முடியாத படி, பாதையில் ஒரு பெண் பக்தைகளின் குழு எதிர்ப்படுகின்றது. அவர்கள் தமது தலைமுடிகளை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, மொட்டந்தலையில் மஞ்சள் சந்தனம் தடவி இருந்தார்கள்.

"அங்கே பாருங்கள்!" வின்சென்ட் சுட்டிக்காட்டிய இடத்தில் 'இன்டியானா ஜோன்ஸ்' சுவரொட்டிகள் காணப்பட்டன. "விறுவிறுப்பான நல்ல படம். பார்த்தீர்களா?" "ஆனால் இப்போதெல்லாம் ஆபாசப்படங்களைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது." தலையை ஆட்டுகின்றார். "இப்போதெல்லாம் நிறையப்பேர் புகைக்கிறார்கள். கெட்ட பழக்கம். பெண்களும் புகைக்க ஆரம்பித்திருப்பது இன்னும் மோசமானது." - ஒரு 'கப்' பாலைக் குடித்துக் கொண்டே விரிவுரையாற்றுகிறார். "ஏன், அப்படி?" என்ற எமது கேள்விக்கு, "பெண்கள் தீய பழக்கங்களைப் பழகக் கூடாது. பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள். அது உடைந்தால் அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. ஒரு பெண் எப்போதும் நல்ல விஷயங்களைத் தான் செய்ய வேண்டும். வேற்று ஆண்களைப் பார்க்கக் கூடாது. தரையைப் பார்த்து நடக்க வேண்டும்."

இன்னொரு தடவை தபால் கந்தோர் சென்றிருந்தோம். கல்லாவில் இருந்த இளைஞன் முன்னால் நிற்கிறோம். "ஆஹா! நெதர்லாந்திற்கு அனுப்புகிறீர்களா?" நாம் கொடுத்த தபாலில் இருந்த முகவரியைப் பார்த்து விட்டு கூறுகிறார். பின்னர் குரலை சற்றுத் தாழ்த்தி கேட்கிறார். "நெதர்லாந்து. அங்கே யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம். அப்படியல்லவா? உங்கள் நாட்டில் அப்படி நடப்பதாக இங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன." பத்திரிகையில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என நாம் அந்த இளைஞனை எச்சரிக்கிறோம். 

இளம் இந்தியர்கள் மனதில் மேலைதேசத்தவர்களின் பாலியல் பழக்கவழக்கம் பற்றிய தகவல்கள் சற்று தூக்கலாகவே இருக்கின்றன. ஆனால், எப்படி தபால் அலுவலக பணியாளர் அதைப்பற்றி பேசமுடியும்? அல்லது வின்சென்ட் போன்றவர்களை எடுத்துக் கொள்வோம். "தமிழர்களின் பாலியல் வேட்கை" பற்றி முறையிடுகிறார்கள். மகாபலிபுரத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் கவர்ச்சி அலை வீசுவதை உணர்கிறோம். நட்பாகப் பழகும், மென்மையான இந்த மனிதர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்று எம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.

எமது விடுதியில் ஒவ்வொரு காலையும் அந்தப் பணியாளர் தேநீருடன் வந்து எம்மை எழுப்புவார். ஆண்-பெண் உறவு பற்றி என்ன நினைக்கிறார் என்று, அந்த முதிய பணியாளரைக் கேட்கிறோம்.
"மேற்கத்திய பெண்கள், தெரியாத ஆண்களோடு பேச்சுக் கொடுப்பார்கள். எமது சமூகத்தில் அது ஏற்புடையதல்ல."
"மேற்கத்திய பெண்கள் இந்தியர்களைப் போல அடக்கமாக உடை உடுப்பதில்லை."
"ஒரு இந்தியப் பெண், உடல் பாகங்களை காட்டும் படி உடை உடுத்தியிருந்தால், அத்தோடு புகை பிடிக்கவும் குடிக்கவும் செய்தால், அந்தப் பெண் விற்பனைக்கு கிடைப்பாள், என்று அர்த்தம்."
நாம் குறுக்கிட்டு, "இந்தியப் பெண்கள் வயிறும், முதுகும் தெரியும் படி சேலை உடுக்கிறார்களே?" எனக் கேட்டோம்.
"அது அந்தப் பெண்ணின் கணவன் ஒழுங்காக சாப்பாடு போடுகிறானா, என்று பார்ப்பதற்கு." சொல்லி விட்டுச் சிரிக்கிறார். "ஆனால் தோள், தொடை, மார்பைக் காட்டிக் கொண்டு ஆடை அணிவது தவிர்க்கப்பட்டுள்ளது."

"இந்தியாவில் ஆணும், பெண்ணும் கையேடு கை கோர்த்து நடப்பதில்லை. வீதியில் முத்தமிடுவதில்லை. ஒரு இந்திய ஆண் ஒரு போதும் ஒரு பெண்ணின் அருகில் அமருவதில்லை. விருந்தினராக ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்லும் ஒரு இந்திய ஆண், அந்த வீட்டுப் பெண்களுடன் பேசுவதில்லை. வெளிநாட்டினருக்கு இந்த பழக்கவழக்கங்கள் தெரியாது. இதனால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன." சிரிப்புடன் சிறிய இடைவெளி விட்டு தொடர்கிறார். "உங்களது நாட்டில் விருந்துபசரிக்கும் வீட்டு பெண்களுடன் பேசாமல் விடுவது அநாகரீகம் எனக் கேள்விப்பட்டேன்."

அடுத்த நாள் டாக்சியில் சென்னை செல்லும் வழியில் "Womens Club" என்ற செக்ஸ் படத்திற்கான போஸ்டர்களைப் பார்த்தேன். போஸ்டரின் மேலே ஒரு அறிவிப்பு. "அளவுக்கு மிஞ்சிய பாலியல் உங்கள் உடல்நலத்திற்கு கேடாகலாம்." என்ற சுகாதார அமைச்சின் அறிவித்தல். தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருவது அரசாங்கத்திற்கும் தெரிந்து விட்டது.

- Kees Rienstra
(Te sexy in Tamil Nadu)

te gast in India
Informtie Verre Reizen
Postbus 1504
6501 BM Nijmegen
The Netherlands


Thursday, July 16, 2009

லால்கரில் நடந்தது என்ன? - நேரடி அறிக்கை

லால்கரில் நடப்பது என்ன?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் உண்மையறியும் குழுவின் அறிக்கை

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் சமீபத்தில் லால்கர் பகுதிக்கு அப்பகுதியில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்ய சென்று வந்தோம். அங்கு நாங்கள் நேரில் கண்டவற்றை ஒரு முன்வரைவு அறிக்கையாக இங்கு முன்வைத்துள்ளோம். அங்குள்ள மக்கள் இயக்கத்தை குறித்து வெளியில் வராத சில செய்திகளை நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம். தாங்கள் அதனை தங்களது தினசரியிலோ, செய்தியிலோ மின்னணு தொடர்பு சாதனத்திலோ வெளியிடுமாறும் அதனை தனிச்சிறப்பு செய்தியாக அளிக்குமாறும் கோருகிறோம்.

நவம்பர் 2008ஆம் ஆண்டு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பாதுகாப்பு வண்டிகளின் மீது கண்ணிவெடி தாக்குதல் நடந்த பின்பு லால்கரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரிய அளவிலான அரசு ஒடுக்குமுறை இருப்பதாக நாங்கள் செய்தி ஊடகங்கள் மூலமும் பிற ஆதாரங்களில் இருந்தும் அறிய வந்தோம். குறிப்பாக சோட்டோபேலியா மற்றும் கட்டாபஹாரி போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் கடுமையான போலீசு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை கேட்டறிந்தோம். அந்த காவல்துறையினரின் வெறியாட்டத்திற்கு பின்பு, காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்கள் அப்பகுதிகளில் (லால்கர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்) காவல்துறை மற்றும் பிற நிர்வாக துறையினரின் ஆளுமையிலிருந்து விடுவித்து, தடையரண் எழுப்பியுள்ளனர் என்பதையும் கேட்டறிந்தோம். இத்தகைய முன்னறிந்த செய்திகளுடன் நாங்கள் லால்கர் பகுதிக்கு சென்றோம்.

நாங்கள் அங்கு ஜூன் 7 முதல் ஜூன் 10ம் தேதி வரை தங்கியிருந்தோம். சோட்டாபேலியா, கட்டாபஹாரி, போஹர் டங்கா, சிஜூவா, டைன் டிக்ரி, சிந்தூர்பூர், மதுபுர், பபூய் பாஷா, ஷாலுகா, மோல்டோலா கட்டாசோல், பஸ்பான், பாப்புரியா, கோம்லாடாங்கா, புக்ரியா, கேஎதென்கா புரா, கோபால்நகர், காஷ் ஜொன்கோல், ஷால்போனி, ஷால்டாங்கா, அந்தர்மாரி, டரிகேரா, புலாடென்கா, சிடாராம் டஹி, டேஷா பந்த், புலா டங்கா கிராமங்களை சென்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களுடன் விரிவாக பேசினோம். லோதாஷ{ல்லி என்ற பகுதியில் அக்குழுவினரால் கூட்டப்பட்ட பெரும் கூட்டத்தைப் பார்வையிட்டோம். மேலும் கிராமங்களில் நடந்த வேறு சிறு கூட்டங்களிலும் பங்கு பற்றினோம். தற்போதைய சமீபத்தில் தரம்புறா மற்றும் மதுபுர், ஷிஜீவா பகுதிகளில் அரசுடனும், சிபிஎம் கட்சியுடனும் மக்கள் நேரடியாக போராட்ட களத்தில் இறங்கியதும், அதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடும் நாங்கள் அப்பகுதியை சென்று பார்வையிட்ட நேரத்தில் துவங்கியதாகும். எனவே, இந்த மக்கள் இயக்கத்தின் பன்முகங்களை மிக அருகாமையில் இருந்து நாங்கள் கண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

லால்கருக்கு சென்று அந்த மக்களை நேரில் சந்தித்ததானது நாங்கள் செல்வதற்கு முன்பு அது குறித்து எங்களிடமிருந்த பிரமைகளை உடைத்து எறிந்தது. அப்பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடுமைகளை வரலாற்று ரீதியாக வரிசைக்கிரமமாக மக்களிடம் கேட்டறிந்த பின்பு, நவம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒரு தனித்துவமானதாக எங்களால் கருத இயலவில்லை. இது, 2000ம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான அரசு பயங்கரவாதம் மற்றும் காவல்துறை கொடுமைகளின் தொடர்ச்சியேயாகும். மக்களிடம் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வே தற்போது காணப்படும் தனித்துவம் ஆகும்.

காவல்துறையினர் மக்களை எவ்வாறு சித்ரவதை செய்தனர் என்பதையும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரவு நேரம் வீட்டை உடைத்து நுழைந்தனர் என்பதையும் எவ்வாறு மக்களை அடித்து உதைத்தனர் என்பதையும் தனது கால்நடையை தேடுவதற்காக வேண்டி இரவு நேரத்தில் வெளியே உலவுவது தடைசெய்யப்பட்டிருப்பதையும், ஒவ்வோர் குடும்பத்தில் இருந்தும் ஏதோ ஒரு நபர் “மாவோயிஸ்ட்’’ என்று குறிப்பிடப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதையும், 90 வயதான மைக்கூ முல்மு என்ற தேஷபந்த் பகுதியை சேர்ந்த வயது மூத்தவர் 2006ஆம் ஆண்டில் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதையும் குறித்து மக்கள் எங்களுக்கு நடைமுறை காட்சியாக சித்திரித்து காட்டினர்.

‘உடல் பரிசோதனை’ என்ற காரணம் காட்டி இளம் சிறுமிகள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இரவு நேரத்தில் ‘’தேடுதல் வேட்டை’’யின் போது பாலினத்தை நிரூபணம் செய்ய உள் உறுப்புகளை காண்பிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டனர். எதிர்கட்சியினரை வலுவிழக்க செய்ய வேண்டி, தேர்தல் நேரத்தில் கிராமத்தை சேர்ந்த 30-40 பேர் “மாவோயிஸ்ட்’’ என்ற பெயரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். சோட்டாபேலியாவில் பல பெண்களை மிருகத்தனமாக அடித்து உதைக்கப்பட்டதும், அதில் ஒருவரான சித்தாமோனி என்பவர் தனது கண்களை இழக்க நேரிட்டதும் மக்களின் பொறுமையை பெரிதும் சோதித்தது. இந்த நீண்ட காவல்துறையினரின் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் தற்போது திரண்டு எழுந்துள்ளனர்.

காவல்துறையினரின் பயங்கரவாதத்தை தொடர்ந்து சிறிவி ன் பயங்கரவாதம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். சிறிவி ன் கீழ்மட்ட உறுப்பினர்களும்இ தலைவர்களும் காவல் துறைக்கு உளவாளிகளாக செயல்பட்டுள்ளனர் என்று மக்கள் எங்களிடம் குறிப்பிட்டனர். அனுஜ் பாண்டேயின் வீட்டை இடித்த பின்பு மக்களிடம் பெரும் ஆர்ப்பரிப்பு இருப்பதை நாங்கள் கண்டபோது, அவர்களின் உணர்ச்சியை எங்களால் உணர முடிந்தது. ஏனெனில்இ சிறிவி மீது மக்கள் அந்த அளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தனர்.

ஹர்மத் வாஹினி என்ற குண்டர் படையின் முகாமாக வட்டார பஞ்சாயத்து அலுவலகம் மாறியிருப்பதை மதுபுர் பகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கு சுட்டிக் காட்டினர். இந்த குண்டர் படையினர் எவ்வாறு கிராமம் முழுவதும் “மோட்டார் சைக்கிள் படையினராக’’ உலவி திரிந்தனர் என்றும், மக்களை பயமுறுத்தி வந்தனர் என்றும், மக்களின் வீட்டை மிருகத்தனமாக உடைத்து எறிந்தனர் என்றும், வானத்தில் துப்பாக்கி சூடு நடத்தியபடியும், மக்களை உதைத்தும் திரிந்தனர் என்றும் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த ஹர்மத் வாஹினி குழுவினர் ஒரு கிராமவாசியின் வீட்டை உடைத்த போது அவர் காவல்துறையினரை அழைத்தும் பயனின்றி, அவரது வீடு இடிக்கப்பட்டது குறித்தும் விரிவாக எங்களிடம் குறிப்பிட்டார். ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்பே ஹர்மத் குண்டர் படையினர் மெமுல் மற்றும் ஷிஜீவா பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதுபோலவே, காஷ் ஜொன்கோல் பகுதியில் ஆயுத தயாரிப்புடன் கிராமக்குழுவினர் இல்லாத காரணத்தால் ஹர்மத் குண்டர் படையினர் கிராமத்தில் காவல்துறையுடன் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் (கிராம மக்கள்) உயிரிழந்ததும், மூவர் காயமுற்றதும் கிராம மக்களால் நினைவுகூரப்பட்டது.

காவல்துறையினரும், சிறிவி கட்சியினரும் கூட்டணியாக செயல்படுவதாக கருதத் தேவையில்லை. இருவரும் ஒரே முகம் தான். ஹர்மத் என்ற சிறிவி ன் குண்டர் படையினர் வெறியாட்டம் நடத்தும் போது காவல்துறையினர் எவ்வாறு கைகட்டி வேடிக்கை பார்த்தனர் என்று கிராம மக்கள் எங்களிடம் குறிப்பிட்டனர். இவர்கள் காவல்துறையினரின் ஜீப் வண்டிகளை கூட சில சமயங்களில் பயன்படுத்தினர். கிராமத்தில் உள்ள மக்கள் குறித்த விபரங்களை சி.பி.எம். அடிமட்ட உறுப்பினர்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.

கிராம மக்களின் குழு காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக உருவாக்கப்பட்டது. எங்களை பெரிதும் கவர்ந்தது என்னவெனில் இக்குழுவினரும், கிராம மக்களும் கடந்த 7 மாதமாக லால்கரில் நடைமுறைப்படுத்தி வரும் மாற்று வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடே ஆகும். இப்பகுதி முழுவதும் பெரிதும் ஏழ்மையாலும், பிற்போக்கு நிலைமையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவு இப்பகுதியில் மிகவும் குறைவு. மக்கள் இப்பகுதியில் விவசாயத்திற்கு வானத்தையே நம்பி உள்ளனர். செயல்பாடற்ற அரசு கால்வாய், வற்றி கிடப்பதை நாங்கள் நேரில் கண்டோம். அரசு நீர்தேக்கங்கள் யாவும் பாழ்பட்டுக் கிடப்பதையும் இதன் காரணமாக இயற்கை மழையளவு பாதிக்கப்படுவது குறித்தும் அவர்கள் எங்களுக்கு விவரித்துக் கூறினர். மழைக்காலங்களில் சாலைகள் பயன்பட ஏற்றவாறு இல்லாமல் போவதும் அதன் மோசமான நிலைமை குறித்தும் அவர்கள் எங்களுக்குக் காண்பித்தனர்.

இந்தக் கிராமக்குழுவினர் தமது சொந்த முயற்சியில் 20km நீளத்தில் சாலை விதித்தனர். இந்த சாலைகளை உருவாக்க மக்கள் தமது சொந்த உழைப்பைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சாலையை உருவாக்க 20கி.மீ நீளத்திற்கு; 47000 ரூபாய் மட்டுமே செலவிட்டனர் என்றும், ஆனால், பஞ்சாயத்தினர் 1கி.மீ. நீள சாலை அமைக்க 15000 ரூபாய் செலவு ஆவதாகக் காண்பிப்பதையும் மக்கள் சுட்டிக் காட்டினர். அவர்கள் பல குழாய்க் கிணறுகளைப் பழுதுபார்த்துள்ளனர். பஞ்சாயத்தினரின் செலவை காட்டிலும் 50வீத அளவு செலவில் புதிய குழாய்கிணறைத் தோண்டியுள்ளனர். பஹார்டங்கா பகுதியில் நீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ஒரு தடுப்பு நீர்தேக்கத்தை அவர்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.

மேலும் இரு முக்கிய செயல்பாடுகள் என்னவெனில் இக்குழுவினர் கட்டாபஹாரி பகுதியில் நிலப்பகிர்வு செய்தனர். மற்றும் தனியான உடல் ஆரோக்கிய மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேற்கு வங்க அரசாங்கத்தின் ஒரு சட்ட மசோதாவின்படி காட்டு நிலங்கள் அம்மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆயின், அது இந்நாள்வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, பனஸ்பரி மற்றும் பிற கிராமங்களில் நிலத்தை பகிர்ந்தளிக்க இக்குழுவினர் முன்முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் பட்டா பகிர்ந்து அளிக்கப்படுவதை நாங்கள் நேரில் கண்டோம். கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்கான வசதிகள் இன்றி இருப்பதையும், அங்கு கிராம உடல் ஆரோக்கிய மையம் ஏதும் இல்லாதிருப்பதையும் எங்களால் அறிய முடிந்தது. லால்கரிலும், ராம்கரிலும் இருக்கும் உடல் ஆரோக்கிய மையமே மிக அருகாமையில் இருந்ததாகும். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நோயாளிகள் உயிரிழப்பது என்பது சாதாரண நிகழ்வாக இருந்துள்ளது.

மழைக்காலத்தில், பாம்புக்கடிக்காக சிகிச்சை பெற கிராம மக்கள் மருத்துவமனை வருவது அதிகம். கட்டாபஹாரியில் உள்ள உடல் ஆரோக்கிய மையம் செயலற்று கிடந்தது. அதனை காவல்துறையினருக்கான முகாமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்திருந்தது. காவல்துறையினருக்கு எதிரான சமூக தடை விதிக்கப்பட்ட பின்பு அது மீண்டும் உடல் ஆரோக்கிய மையமாக மாற்றப்பட்டிருந்தது. கல்கொத்தா மற்றும் பிற பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் வாரம் மூன்று முறை இம்மருத்துவமனைக்கு வந்து சென்றனர். தினமும் 150 நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள லோதாஷல்லியின் அழுந்தும் எஃகு தொழிற்சாலைக்கு எதிராக அக்குழுவினர் அழைத்த கூட்டத்திற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். நாங்கள் அந்த தொழிற்சாலைக்குச் சென்று அதனால் ஏற்படும் மாசு எவ்வாறு மரம் மற்றும் வட்டாரத்தை பாதிக்கிறது என்பதை நேரில் கண்டோம். அங்குள்ள நெல் வயல் முழுமையும் கறுத்துப் போயிருப்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினர். பஞ்சாயத்தினர் நெல் சாகுபடி கறுத்து இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த சம்பவமும் உண்டு. இந்தத் தொழிற்சாலையின் அருகாமையில் மருத்துவமனையும் பள்ளிகளும் அமைந்துள்ளன. சி.பி.எம். கட்சியினரால் பஸ் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்தக் கூட்டத்திற்கு, பெருமளவிலான மக்கள் திரள் அணி திரண்டு வந்திருந்தனர். இதில் பங்கேற்ற மக்கள் அனைவரும் இத்தொழிற்சாலைக்கு எதிராக போராடி, தொழிற்சாலையை நிறுத்தச் செய்வது என முடிவு எடுத்தனர்.

லால்கரில் மாவோயிஸ்டுகள் காணப்படுகின்றனர் என்பது அனைவராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் மாவோயிஸ்டுகள் அங்கே இருப்பதையும் அதனை மக்கள் ஏற்றுக் கொண்டதையும் வெளிப்படையாகக் கண்டோம். அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவதும் பத்தாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதையும் கண்டோம். மாவோயிஸ்டுகள் ஜார்கண்டிலிருந்து வந்த வெளிமாநிலத்தவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக மாவோயிஸ்ட் படையினரை சூழ்ந்து அவ்வட்டார மக்கள் இருப்பதை நாங்கள் கண்டோம். சி.பி.எம். மற்றும் அரசினால் நடத்தப்பட்டு வரும் தொடர்ந்த தாக்குதலுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மரபு ரீதியான ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு அரசு தடைவிதித்துள்ளது என்பதே இயக்கத்தை செயலிழக்க செய்வதாக உள்ள ஒரு அடையாளமாக காணமுடிந்தது.

லால்கரைவிட்டு வரும்போது இந்த போராட்டம் ஏற்கனவே தீவிரமடைந்திருந்தது தற்போது மக்கள் தனது உடனடி எதிரியான சி.பி.எம் மற்றம் காவல்துறையினர் தப்பி ஓடும் அளவு வெற்றிகரமாக முன்னேறியுள்ளனர். மக்களிடம் நாங்கள் கண்ட ஆர்வம் மிக அபரிதமாக இருந்தது. முதன் முறையாக அவர்கள் ஓட்டுக்களை குவித்து செல்லும் அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவாக இல்லாமல் தமக்கே சொந்தமான ஒரு குழுவின் பங்காக இருந்தனர். அரசு பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர். தமக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை தாமே கட்டி எழுப்பினர். பல்வேறு கிராமங்களில் தங்கியிருந்த பலர் ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்தினர். “தமக்கு முதன்முறையாக இப்போதுதான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது’’- என்பது தான் அது. அவர்களுடைய போராட்டம் பல ஆண்டுகளாக அவர்கள் சுரண்டபடுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் அவர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும், அவர்கள் உரிமை மறுக்கப்படுவதற்கும் எதிராக இருந்தது. இவ்வகையில் இது ஒரு வரலாற்று பூர்வமான போராட்டமாகும். “அராஜகம்’’ என்று கருதப்படுவது யாவும் உண்மையில் விடுதலைக்கான போராட்டம் தான் என்று நாங்கள் உறுதியாக உணருகிறோம்.

ஊடகங்கள் யாவும் லால்கருக்கு மீண்டும் சென்று திரும்ப வேண்டும் என நாங்கள் அழுத்தமளிக்க விரும்புகிறோம். இந்த இயக்கம் அரசின் செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள மக்களின் மிகவும் ஏழ்மையான சமூக பொருளாதார நிலைமையை ஆதாரமாக கொண்டுள்ளது. மக்களின் இந்தப் போராட்டத்திற்கு எதிராக அரசு திருப்பித் தாக்கவே செய்யும். உறுதியாக இருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையைப் பெற்று மத்திய ரிசர்வ் காவல் படை மீண்டும் திரும்பக்கூடும். மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு கொடூரமான கேவலமான கோப்ரா படையினரும், கிரே வேட்டை நாய்களும் தேவை என மாநில அரசாங்கம் வெட்கமின்றி கோரிக்கை வைத்துள்ளது. அது மிக துரதிஸ்டமானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். பெருமளவிலான அரசு பயங்கரவாதம் குறைவளர்ச்சி, ஊழல் ஆகியவற்றிற்கு. எதிரான மக்களின் கோபம் மிகவும் சரியானதே. அதுபோன்றே அதற்கு எதிரான நீண்ட காலமாக எதிர்பார்த்த தாக்குதலும் சரியானதே. இது குறித்த விரிவான அறிக்கை எங்களால் பின்னர் சமர்ப்பிக்கப்படும். வங்காளத்தின் வட்டார ஊடகங்கள் நந்திகிராம் இயக்கத்தின் போது மிகச்சரியான முற்போக்கான பங்கை ஆற்றியது என்பதை நாங்கள் நினைவு கூர்கிறோம். எனவே அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலை நிகழ்த்துவதற்கு முன்பு லால்கரில் உள்ள மக்களுக்கும் உண்மையான போராட்டத்திற்கும் ஆதரவாக துணை நிற்க கோருகிறோம்.

நன்றி

-ப்ரியரஞ்சன்
-பனோஜ்யோத்சனா
-அளீர்பான் ர கொகோல்
-குசூம்
-ரியாஸ்
-ஏதுவின்தர்
-வீர்சிங்
-சுமதி

தொடர்புஎண் : 09711826861


இது தொடர்பான முன்னைய பதிவு:
இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

Wednesday, July 15, 2009

வேலையில்லை எனில் தொழிலகம் தகர்த்திடுவோம்

பிரான்ஸ், Nortel தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், நஷ்டஈட்டுத் தொகை வழங்காவிட்டால் தொழிற்சாலையை தகர்க்கப் போவதாக அறிவித்துள்ளனர். Nortel நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட 480 தொழிலாளர்கள், தொழிற்சாலையை ஆக்கிரமித்திருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் சிலின்டர்களில் இன்னும் 'காஸ்' நிரப்பப்படவில்லை, என்று Le Parisien நாளேடு தெரிவித்துள்ளது. கனடிய வர்த்தக நிறுவனமான Nortel நிதி நெருக்கடிக்கு உள்ளானதால், கடன்களை அடைக்கும் காலக்கெடுவை ஒத்தி வைக்குமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

New Fabris என்ற வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிலாளரை நஷ்ட ஈடு வழங்காமல் பணி நீக்கம் செய்தது. இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளிகள், தாம் வேலை செய்த தொழிற்சாலையை ஆக்கிரமித்ததுடன் மட்டும் நில்லாது, எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தகர்க்கப் போவதாக எச்சரித்துள்ளனர். இம்மாத இறுதியில் ஆளுக்கு 30000 யூரோ நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வாகன உதிரிப்பாக தொழிலகம் கடந்த ஜூன் 16 ம் திகதி திவாலானதாக அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலை இயந்திரங்களின் மொத்த பெறுமதி இரண்டு மில்லியன் யூரோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் வழங்கிய பிரெஞ்சு அரசு இயந்திரங்களை விற்று, தொழிலாளிகளின் பணத்தை கொடுக்குமாறு, தொழிற்சாலை நிர்வாகம் கையை விரித்துள்ளது. பிரான்ஸில் ஏற்கனவே இது போன்ற போர்க்குணம் மிக்க தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பெற்றுள்ளனர். மேலதிக விபரங்கள் தொடரும்.

ஏப்ரல் மாதம், பிரான்ஸ், கிரனோபில் நகரில் அமைந்துள்ள Caterpillar தொழிற்சாலையில் 733 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கம்யூனிச தொழிற்சங்கத்தின் தலைமையில் அணி திரண்ட தொழிலாளர்கள், நான்கு உயர்மட்ட நிர்வாகிகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். நிர்வாகிகள் நாட்கணக்காக தமது அலுவலகத்தினுள் கைதிகளைப் போல அடைந்து கிடந்தனர். இருதய சுகயீனமுற்ற ஐந்தாவது நிர்வாகி ஒருவரை மட்டும் வீடு செல்ல அனுமதித்தனர். அதுவும் "முரட்டு முதலாளி" என்ற வசவுகளுக்கு மத்தியில் தான் வெளியேற வேண்டியிருந்தது. பிரான்ஸில் பணயமாக தடுத்து வைப்பது ஐந்து வருட தண்டனை வாங்கித் தரும் குற்றமாக கருதப்படுகின்றது. இருப்பினும் பிரெஞ்சு அரசு தொழிலாளரை தண்டிக்க முன்வரவில்லை. ஒரு சில வாரங்களுக்குள், பிரான்ஸில் இது போன்ற நான்கு சம்பவங்கள் நடந்து விட்டன.

பிரான்ஸில் 'பிதிவியேர்' என்ற சிறிய நகரில் உள்ள 3M தொழிலகத்தில் 110 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படப்போகிறார்கள், என்ற முடிவை கேள்வியுற்ற அந்தக் கணமே, நிர்வாகி தனது அலுவலகத்தில் 24 மணிநேரம் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யும் முடிவை வாபஸ் வாங்கிய பின்னரே வீடு திரும்ப முடிந்தது. ஒக்செர் என்னும் நகரில் தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியும் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அதாவது அந்த முதலாளி தன்னையே எதிர்த்து கோஷம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதுவரை நடந்த போர்க்குணாம்சம் மிக்க தொழிற்சங்க போராட்டங்கள் பல வெற்றியடைந்துள்ளன. பிரெஞ்சு அரசாங்கம் ஒன்றில் தொழிலாளர் பக்கம் நிற்கின்றது, அல்லது நடப்பதை வேடிக்கை பார்க்கின்றது. இதே நேரம், தொழிற்சாலைகளில் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. யாருடைய போராட்ட அணுகுமுறை சிறந்தது, என்பதில் அவர்களிடையே ஒரு போட்டியே நடக்கின்றது.


மேலதிக தகவல்களுக்கு:
French workers take boss hostage
French auto workers threaten to blow up factory

Tuesday, July 14, 2009

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 11

ஐரோப்பிய நகரமொன்றின் சனநெருக்கமுள்ள மையப்பகுதி. பலர் கூடும் இடத்தில் நான்கு பக்கமும் கண்ணாடியிலான கூண்டு. அதற்குள்ளே ஒரு வானொலி நிலையம். வானொலி அறிவிப்பாளராக, தொழில்நுட்ப பணியாளராக சில வெள்ளை இளைஞர்கள். உறைய வைக்கும் குளிர்கால கிறிஸ்துமஸ் நாட்களில், ஒரு சிறிய கண்ணாடிக் கூண்டுக்குள், அந்த இளைஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் ஒரு பிராந்திய வர்த்தக வானொலி சேவையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சூடானில் டார்பூர் மாநிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளம்பர நடவடிக்கை. அந்த நிகழ்ச்சி வேடிக்கை பார்க்க வரும் பொது மக்களின் அதீத ஆர்வம் காரணமாக மில்லியன் யூரோக்களை சேர்த்து விட்டிருந்தது. இதைத் தவிர டார்பூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பல உதவி நிறுவனங்கள் கூட்டாக ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்தன. ஊடக கருத்துக் கணிப்பொன்று, பெரும்பான்மை மக்கள் டார்பூர் பிரச்சினை குறித்து அதிக அக்கறைப் படுவதாக தெரிவித்தது. அப்போது தான் அமெரிக்காவும், ஐ.நா.சபையும் டார்பூரில் இனப்படுகொலை நடப்பதாக அறிவித்திருந்தன. நாஸி ஜெர்மனியில் யூத இனப்படுகொலை நடந்த பிற்பாடு, ஐ.நா.சபை மிகக் கவனமாக ஆராய்ந்த பின்னர் தான் இனப்படுகொலை அறிவிப்பு செய்வது வழக்கம். சூடான் மீது இனப்படுகொலை குற்றஞ்சாட்டுமளவிற்கு அங்கே என்ன நடக்கிறது?

நாள் தோறும் சின்னத்திரையில் காட்டப்படும் பிம்பங்கள் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில், பட்டினியால் பரிதவிக்கும் மக்கள், கால்நடைகளாக இடம்பெயரும் மக்கள், முகாம்களுக்குள் அகதிகள், இவற்றை பின்னணியாக கொண்டு மனிதப் பேரவலம் பற்றி விபரிக்கும் செய்தியாளர்கள். தொலைக்காட்சி கமெராக்கள் பார்வையாளரின் மனதை நெகிழ வைக்கும் படங்களை பதிவு செய்யும்.

சூடானில் டார்பூர் போரில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை? 30 லட்சம் என்கின்றன ஐ.நா.விற்கு அறிக்கை சமர்ப்பித்த நிறுவனங்கள். இல்லை, 2 லட்சம் மட்டுமே என்று சொல்கிறது சூடான் அரசு. இனப்படுகொலையில் ஈடுபட்ட துணைப்படைக்கு சூடான் அரசு உதவி வழங்கியது என்பது ஐ.நா. குற்றச்சாட்டு. நாம் உதவி செய்யவில்லை, அவர்கள் சாதாரண கொள்ளைக்காரர்கள், என்று மறுக்கிறது சூடான் அரசு. டார்பூர் பிரச்சினையில் உலகம் இரண்டாக பிரிந்து நிற்கிறது. அமெரிக்கா போன்ற பல மேற்குலக நாடுகள் அரசுக்கெதிரான போராளிக் குழுக்கள் வழங்கும் தகவல்களை நம்புகின்றன. அரபு-இஸ்லாமிய நாடுகள் சூடான் அரசுக்கு ஆதரவாக நிற்கின்றன.

சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தேசம். எகிப்துடனான வடக்கு எல்லை முதல் உகண்டாவுடனான தெற்கு எல்லை வரை, லண்டனில் இருந்து மொஸ்கோ போகுமளவு தூரம். உலகின் நீளமான நைல் நதியின் பிறப்பிடம். இயற்கை அன்னை வழங்கிய கொடையான நைல் நதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்படும். வெள்ளம் வடிந்த பின்னர் தேங்கிவிடும் மணல் விவசாய விளைநிலமாக மாற்றப்படும். முரண்நகையாக நைல் நதியோர விவசாயத்தின் பலன்களை உள்நாட்டு மக்கள் அனுபவிப்பதில்லை. இங்கே பயிரப்படும் உணவுப்பொருட்களில் பெரும்பகுதி வளைகுடா அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. பணக்கார பாலைவன நாடுகள் உணவுக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பதை தவிர்க்க, சூடானின் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளன.

115 மொழிகளைப் பேசும், பலவித கலாச்சாரம் கொண்டவர்களின் தாயகமாக இருந்த போதிலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். அரபுக்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்த பொதுவான கட்டமைப்பில் இருந்து சூடானிய அரபுக்கள் மாறுபடுகின்றனர். அவர்கள் கருநிற மேனியராக ஆப்பிரிக்கர்களைப் போல தோற்றம் கொண்டவர்கள். மொழி, பண்பாடு, மதம் என்பன மட்டுமே அவர்களை அரபுக்கள் என அடையாளப்படுத்தும் காரணிகள். இதைப் பற்றி இன்னொரு தடவை டார்பூர் பிரச்சினையில் நாம் பார்க்கப் போகிறோம். இந்தியத் தமிழரை விட, ஈழத்தமிழர்கள் தீவிரமான தமிழ் தேசியவாதிகளாக இருப்பதை அவதானிக்கலாம். அதே போல பிற அரபுநாடுகளில் வாழும் இஸ்லாமிய-அரேபியரை விட, சூடான் அரபுக்கள் மத்தியில் மதப்பற்றும், இனப்பற்றும் மேலோங்கி காணப்படுகின்றது. உண்மையில் நவீன மத அடிப்படைவாதக் அரசியல் கருத்துகள் யாவும், 19 ம் நூற்றாண்டு மஹ்தி என்ற விடுதலைப் போராளியின் காலத்திலேயே நிறுவனமயப் படுத்தப்பட்டிருந்தன.

சூடானின் வடக்குப் பகுதி 8000 வருடங்களுக்கு முன்னரே நாகரீகமடைந்த சமுதாயத்தைச் கொண்டிருந்தது. அன்று எகிப்தின் தெற்குப் பகுதியையும் (அஸ்வான்) சேர்த்துக் கொண்டு, "நுபியர்களின் ராஜ்யம்" சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. தமக்கு அருகில் இருந்த மகிமை பொருந்திய எகிப்தில் இருந்து, மதத்தையும், கட்டடக் கலையையும் கடனாக பெற்றிருந்தனர். எகிப்தில் இருப்பதை விட நுபியாவில் அதிகளவு பிரமிட்கள் கட்டப்பட்டதாக, அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நுபியப் பாலைவனத்தில் நிமிர்ந்து நிற்கும் காலத்தால் அழியாத பிரமிட்கள் அதற்கு சாட்சி. கி.மு. 1500 ற்கு பின்னர், "மெரோயே" அரசாட்சியில் ஐரோப்பாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகம், தேசப் பொருளாதாரத்தை வளர்த்தது. நுபிய வியாபாரிகள் தான் முதன் முதலாக ஒட்டகங்களை சுமை தூக்கும் வாகனமாக பயன்படுத்தினர். "நுப்" என்றால் நுபிய மொழியில் தங்கம் என்று அர்த்தம். அன்று உலகம் முழுவதும் தங்கம் ஏற்றுமதி செய்து வந்ததால், பிறநாட்டவரால் நுபியா என அழைக்கப்பட்டிருக்கலாம். பொறாமை கொண்ட எகிப்தியரால் அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளானாலும், கி.பி. 324 ம் ஆண்டு வரை தனது சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டது.

அப்போது கிழக்கே எத்தியோப்பியாவில் "அக்சும்" என்ற கிறிஸ்தவ ராஜ்யம் தோன்றியிருந்தது. அக்சும் படையினரால், நுபியா போரில் தோற்கடிக்கப்பட்டது. வெற்றிகொள்ளப்பட்ட நுபிய மக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். கிரேக்கத்தில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியும், மதம் மாற்றும் பணிக்காக பாதிரியார்களை அனுப்பிவைத்தார். கி.பி.700 ம் ஆண்டு வேறொரு மதம் கிழக்கே இருந்து வந்தது. இஸ்லாம் என்றார் புதிய மதத்தை கொண்டுவந்த அரேபியர்கள், நுபியர்களையும் முஸ்லிம்களாக மாற்றினார்கள். அன்று வந்த அரேபிய ஆக்கிரமிப்பாளருக்கு ஒரு சாம்ராஜ்யம் நிறுவுவதை விட, மதக் கருத்துகளை பரப்புவதே முக்கியமானதாகப் பட்டது. நுபியாவில் "சென்னர்" என்ற (கறுப்பின) சுல்த்தான் ஆட்சி உருவானது. தேசங்கடந்த வியாபாரிகளிடம் வரி அறவிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, தனது பொருளாதார சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டது. 14 ம் நூற்றாண்டில் வடக்கே இருந்து படையெடுத்த "மம்மலுக்" துருக்கி வீரர்கள், சுதந்திர சுல்த்தான் ஆட்சிக்கு முடிவு கட்டினர். 19 ம் நூற்றாண்டு வருவதற்குள், சூடான் முழுவதும் துருக்கியின் ஓட்டோமான் சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் புதிய உலக வல்லரசொன்றின் பிரசன்னம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. பிரித்தானியாவிற்கும், ஓட்டோமான் துருக்கிக்கும் இடையில் அப்போது நட்புறவு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக எகிப்தில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட முகம்மது அலி பாஷாவின் படைகளுக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வந்தனர். சூடானில் நிலை கொண்டிருந்த துருக்கியப் படைகளுக்கு உள்ளூர் மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டிருக்கவில்லை. "நாகரீகமடையாத" தெற்கு சூடான் மக்கள், அடிமை வியாபாரிகளின் மனித வேட்டையால் அதிகளவு பாதிக்கப்பட்டனர். மொத்த சனத்தொகையில் 5% அடிமைகளாக்கப் பட்டனர். "நாகரீகமடைந்த" வடக்கு சூடானை சேர்ந்த மக்கள், அதிக வரி கேட்டு கசக்கி பிழியப்பட்டனர். துருக்கி ஆக்கிரமிப்பு இராணுவம் வரி என்ற பெயரில் மக்களை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தது. 1880 ல் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட கிளர்ந்தெழுந்தார் மஹ்தி என்ற மாவீரன். துருக்கி ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்.

அல் மஹ்தி அல் முந்தசார் (சரியான பாதையில் வழிநடத்த தெரிவானவர்), தன்னை இறைத்தூதர் முஹம்மது நபியின் வழிதோன்றல் என அழைத்துக் கொண்டார். ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான விடுதலைப் போரை, அதாவது "ஜிஹாத்" அறிவித்தார். சூடானின் மேற்குப் பகுதி மாநிலமான டார்பூரில் பல்லாயிரம் இளைஞர்கள் ஜிஹாத்திற்கு அணிதிரண்டனர். துருக்கி ஆக்கிரமிப்பு படைக்கு, பிரிட்டிஷ் இராணுவ உதவி கிடைத்த போதும், மஹ்தியின் போராளிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. அப்போது லண்டனில் இராணியில் மாளிகையில் கூட மஹ்தியை பற்றி சிலாகிக்கும் அளவிற்கு, மஹ்தி பிரிட்டிஷாரின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தார். அன்றைய காலகட்டத்தில், "மாக்ஸிம்" என்ற இயந்திர துப்பாக்கியை கண்டுபிடித்திருந்த, ஒரு உலக வல்லரசான பிரிட்டனால் கூட, சில ஆயிரம் போராளிகளை வெல்ல முடியவில்லை. தலைநகர் கார்ட்டூம் முற்றுகையிடப்பட்டு, பிரிட்டிஷ் படைகளுக்கு தலைமை தாங்கியவரும், கவர்னருமான மேஜர் ஜெனரல் சார்லஸ் கோர்டன் உட்பட, ஆயிரக்கணக்கான அரசாங்க சார்பானவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இருப்பினும் சூடானின் சுதந்திரம் அதிக காலம் நீடிக்கவில்லை. நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மஹ்தி மரணமடைந்தவுடன் ஏற்பட்ட, பதவிக்கான போட்டி பூசல் மஹ்தி இராணுவத்தை பலவீனமாக்கியது. இதே நேரம் பிரிட்டனுக்கு சூடான் இழக்க முடியாத பொக்கிஷமாகப் பட்டது. இது 1898 ம் ஆண்டு, சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டு ஆசியாவிற்கான கப்பல் போக்குவரத்து நேரத்தை வெகுவாக குறைத்து விட்டிருந்தது. சுயெஸ் கால்வாய் அமைந்துள்ள செங்கடல் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதே நேரம் ஆப்பிரிக்காவை ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் பங்கு போட்டிருந்தன. பிரான்ஸ் செனகல் முதல் சாட் வரை உரிமை கொண்டாடியது. பிரிட்டன் அவசர அவசரமாக சூடானை பிடிக்க பெரும் பிரயத்தனப் பட்டது. இம்முறை பிரிட்டிஷ் படைகள், எகிப்தின் துருக்கிப் படைகளுடன் இணைந்து மஹ்தி இராணுவத்தை தோற்கடித்து, சூடான் முழுவதையும் கைப்பற்றின. அன்றிலிருந்து சூடான் பிரிட்டிஷ் காலனியாகியது.

பிரிட்டிஷ் காலனியானவுடன் பருத்தி பயிரிடும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, பருத்தி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானது. பிரிட்டிஷார் சூடானிலும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர். தெற்குப்பகுதி மாநிலங்களில் டிங்கா, நுவெர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். குடும்பம், குலம், குலத்தலைவன் இதற்கப்பால் அவர்களது சமூக நிறுவனம் விரிவடையவில்லை. 18 ம் நூற்றாண்டில் தான் அந்த மக்கள் வெற்றினத்தவரை (துருக்கியர்) பார்த்தார்கள். கால்நடை வளர்ப்பை தவிர வேறு பொருளாதார அபிவிருத்தி கிடையாது. குலதெய்வங்களை வழிபட்டு வந்த இவர்களை, ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவமயப்படுத்த ஆரம்பித்தனர். மிஷனரிகள் ஆங்கில வழிக் கல்வி புகட்டின. கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கற்பித்தன. அதே நேரம் இந்த பழங்குடியின மக்கள் அபிவிருத்தியடைந்த வடக்கு சூடானில் வேலை தேடிச் செல்வது தடை செய்யப்பட்டது. வடக்கு சூடானியர்கள் தென் பகுதி வருவதும் தடை செய்யப்பட்டது. வடக்கையும் தெற்கையும் ஆளரவமற்ற சூனியப்பகுதி ஒன்று பிரித்தது. பிரிட்டிஷார் இந்த பிரித்தாளும் கொள்கையை 1930 ம் ஆண்டு சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தினர்.

1956 ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரில் பலவீனமடைந்த பிரிட்டன், சூடானுக்கு சுதந்திரம் வழங்கி விட்டு வெளியேறியது. போகும் போது ஆட்சிப்பொறுப்பை அரபு மொழி பேசும் பெரும்பான்மையினரின் கையில் ஒப்படைத்து விட்டு சென்றது. தேசியவாத, மதவாத சக்திகளின் பிடியில் இருந்த அரசியல் கட்சிகள், நாடுமுழுவதும் அரபுமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கின. தெற்கு மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் வெளியேற்றப்பட்டன. அந்த இடத்தில் மதம் பரப்புவதற்கு இஸ்லாமிய மிஷனரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தெற்குப் பழங்குடியின மக்கள் இதனை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் வரட்சி, உணவுப்பற்றாக்குறை மக்களை பாதித்தது. தொழிலாளர்கள், மாணவர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இராணுவ ஆட்சியாளர்கள் திரும்ப பாராளுமன்றத்தை இயங்க அனுமதித்த போதும் மக்கள் புரட்சி அடங்கவில்லை.

1969 ம் ஆண்டு மீண்டும் ஒரு இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை ஆட்சியை பொறுப்பெடுத்த நிமேரிக்கு சூடான் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக சோவியத் யூனியனின் ஆதரவு கிடைத்தது. சில சோஷலிச சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. 1971 ம் ஆண்டு டார்பூர் பிராந்தியத்தில், முதன் முதலாக எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த நிமேரி ஒரு கம்யூனிஸ்டோ, அல்லது சோஷலிஸ்டோ அல்ல. தேவைக்கு யாரையும் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி. நிமேரி லிபியாவுடனும், எகிப்துடனும் ஒரு பொருளாதார கூட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டங்களில் இறங்கினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எரிச்சலூட்டியது. முரண்பாடுகள் தீர்க்கமுடியாமல் போன கட்டத்தில், கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், அல்லது கொலை செய்யப்பட்டனர். தலைவர்கள் நாட்டை விட்டோடி வெளிநாடுகளில் புகலிடம் தேடினர். இதன் விளைவாக சோவியத் யூனியன் தனது உறவை துண்டித்துக் கொண்டது.

சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்த அமெரிக்கா நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நுளைந்தது. சூடான் அரசுக்கு ஆயுத, நிதி உதவி வழங்கியது. நிபந்தனையாக தெற்குப் பகுதி கிளர்ச்சியாளருடன் பேச்சுவார்த்தையில் தீர்வு காணும்படி வற்புறுத்தப்பட்டது. சர்வதேச அழுத்தத்தின் பிரகாரம் (எத்தியோப்பிய தலைநகர்) "அடிஸ் அபெபா"வில் கைச்சாத்திட்ட சமாதான ஒப்பந்தம் சில வருடங்கள் அமுலில் இருந்தது. கம்யூனிஸ்ட்களை விரட்டி விட்டு, மத்திய அரசில் வலதுசாரிகளோடு கூட்டுச் சேர்ந்திருந்த நிமேரி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் படுத்தினார். சிறுபான்மையினங்களுக்கு இடையில் பூசல்களை ஏற்படுத்தும் நோக்கோடு, தெற்குப் பகுதியை மூன்று நிர்வாக அலகுகளாக பிரித்தார். நாடாளாவிய ஷரியா சட்ட ஆட்சியை எதிர்த்து தென்பகுதி மாநிலங்கள் கிளர்ந்தெழுந்தன.

"பொர்" நகரில் இருந்த இராணுவ முகாம்களில் சிப்பாய்க் கலகம் மூண்டது. கிளர்ச்சியை அடக்க அனுப்பபட்ட கேணல் ஜோன் கறேங் கிளர்ச்சியாளருடன் சேர்ந்து கொண்டார். சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) ஆரம்பிக்கப் பட்டது. தென் பகுதியில் டிங்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதும், ஜோன் கறேங் ஒரு டிங்கா இனத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவில், எதுவும் எப்போதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறும் குணவியல்பு கொண்டவை. SPLM ஆரம்ப காலங்களில் மார்க்ஸிஸம் பேசியது. அதற்கு காரணம், அமெரிக்கா மத்திய அரசை ஆதரித்தது மட்டுமல்ல. அயலில் இருந்த (கம்யூனிச) எத்தியோப்பியாவின் உதவி கிடைத்து வந்ததும் தான்.

தெற்கில் பிரச்சினை தீர்ந்த நேரம், வடக்கில் பிரச்சினை ஆரம்பமாகியது. சமாதான உடன்படிக்கை வடக்கில் இஸ்லாமிய கடும்போக்காளர்களை தீவிரப்படுத்தியது. "தெற்குப் பயங்கரவாதிகளிடம் தேசத்தை அடமானம் வைத்து விட்டதாக" செய்த பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகியது. மீண்டும் கார்ட்டூமில் சதிப்புரட்சி இடம்பெற்றது. பதவியில் இருந்த நிமேரி, எத்தியோப்பிய யூதர்களை இஸ்ரேலுக்கு செல்ல உதவியமை, ஐரோப்பிய அணுக்கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதித்தமை போன்ற காரணங்களும் சதிப்புரட்சிக்கு மேலதிக மக்கள் ஆதரவை கொடுத்திருந்தன. 1989 ல் , இராணுவத் தளபதி பஷீர், இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியான தேசிய இஸ்லாமிய முன்னணியுடன்(NIF) சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார். (பிரிட்டிஷ் கால) அரசியல் நிர்ணய சட்டம் இரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக முழுமையான இஸ்லாமியச் சட்டத்தை அமுல்படுத்தியது. கடும்போக்காளரான NIF தலைவர் ஹசன் அல் துரபி, பாரிஸ் சொர்போன் பல்கலைகழகத்தில் கற்ற விரிவுரையாளர். அரபு-இஸ்லாமிய காங்கிரஸ் ஸ்தாபகர்களில் ஒருவர்.

புதிய சூடானிய அரசாங்கத்தில், அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை. உடனடியாக மத்திய அரசுடனான உறவை துண்டித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக தெற்கில் இருந்த கிளர்ச்சியாளருக்கு (SPLM) உதவி செய்தது. அதே காலகட்டத்தில் எத்தியோப்பியாவில் கம்யூனிச அரசு கவிழ்ந்திருந்தது. அதனால் SPLM ற்கு அமெரிக்காவின் உதவி ஒரு வரப்பிரசாதம். நான் சந்தித்த முன்னாள் SPLM போராளிகள் சிலர், யார் உதவி செய்தாலும் தமது நலன்களே முக்கியம் என்று நியாயப்படுத்தினர். அதே நேரம் தாம் தென் சூடானில் கிறிஸ்தவ மதத்தை பாதுகாக்க போராடுவதாக கூறுவது கூட, மேற்குலகை கவரும் தந்திரம் மட்டுமே என ஒப்புக் கொண்டனர். இந்த முன்னாள் போராளிகள் கொடுத்த தகவல்களின் படி, SPLM தலைவர்கள் எண்ணைக் கம்பெனிகளை அச்சுறுத்தி வாங்கும் கப்பப்பணத்தில் தம்மை வளம் படுத்திக் கொள்கின்றனர். மேற்குலக மக்கள், SPLM கிறிஸ்தவ சிறுபான்மையினரின் உரிமைக்காக, இஸ்லாமிய பேரினவாத வடக்குடன் மோதிக் கொண்டிருப்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் போர் முழுக்க முழுக்க எண்ணை உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை பங்கு போடுவதற்காகவே நடக்கிறது.

மேற்குலக நாடுகள் சூடான் அரசிற்கும், தென்பகுதி போராளிக் குழுக்களுக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாக நடந்த பேச்சுவார்த்தையின் நிமித்தம், 2002 ம் ஆண்டு ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. 2005 ம் ஆண்டு அமுலுக்கு வந்த Comprehensive Peace Agreement (CPA), தென் மாநிலங்களுக்கு 6 வருடங்கள் தன்னாட்சி அதிகாரம் வழங்கியது. தலைநகராக ஜூபாவை கொண்ட மாநில அரசு சொந்தமாக கொடி வைத்திருக்க முடியும். 2011 ம் ஆண்டு நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் மூலம் சூடானுடன் இணைந்திருப்பதா, அல்லது சுதந்திரமாக பிரிந்து போவதா என தீர்மானிக்கப்படும். மத்திய அரசிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கிளர்ச்சித் தலைவர் ஜோன் கறேங் உப-ஜனாதிபதியானார். சமாதானமும் கண்காணிக்க ஐ.நா. மன்றம் UNMIS என்ற சமாதானப் படையை அனுப்பி வைத்தது.

அமைதி உடன்படிக்கையின் பின்னரான காலத்தில், தென் பகுதி மக்களுக்கு மெல்ல மெல்ல மாயத்திரை விலகியது. அரசியல் சுதந்திரம், அதிகாரப் பரவலாக்கல் எல்லாம் சரி தான். ஆனால் பிரதேச அபிவிருத்திக்காக சர்வதேச சமூகம் வாக்களித்த நிதியுதவி எங்கே? இதுவரை சொற்பத் தொகை மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. அதைவிட தெற்கிற்கு உரிமையான எண்ணை வருமானத்தில் ஒரு பகுதி இன்று வரை கிடைக்கவில்லை. சர்வதேச சமூகம் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருபகுதியினரையும் சமாதானம் செய்து வைத்தவுடன் தமது மத்தியஸ்தம் முடிந்து விட்டதென்று ஒதுங்கி விட்டனர். அவர்களுக்கு சூடானில் இன்னுமொரு வேலை பாக்கி இருந்தது. 2003 ம் ஆண்டு மேற்கு சூடானில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் கிளர்ச்சி வெடித்தது. அது தென் பகுதி கிளர்ச்சியை விட, அதிகளவு சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

Fur இன மக்களின் உறைவிடம் என அர்த்தப்படும் டார்பூர், ஒரு மலைப்பிரதேசம். Fur இன மக்கள் ஒரு பகுதியினர் சொந்த மொழியும், ஒரு பகுதினர் அரபு மொழியும் பேசினாலும், இஸ்லாம் மதத்தை பின்பற்றும் கறுப்பின மக்கள். டார்பூரில் இனப்படுகொலை நடப்பதாக தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா.சபையும், அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் பிரச்சினையின் பரிமாணங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. கறுப்பின இனங்களை, அரேபிய இனம் அழித்து வருவதாக சுலபமாக கூறிவிட்டுச் செல்கின்றனர். அதை நம்பி டார்பூர் சென்ற உதவி நிறுவன ஊழியர்களும், ஊடகவியலாளரும் வெளி உலகம் அறியாத உண்மைகளை கண்டுபிடித்தனர்.

தென் பகுதி மாநிலங்கள் சுதந்திரம் கோரி போராடியதன் காரணம், தெளிவாகத் தெரியும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். நகரமயமாக்கல், தொழிற்துறை அபிவிருத்தி எல்லாம் வடக்கே மட்டும் காணப்பட்டன. தெற்கு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. தென் பகுதி ஆப்பிரிக்க பழங்குடியினரின் பின்தங்கிய நிலை காரணமாக, வடக்கில் அவர்கள் தாழ்ந்தவர்களாக பார்க்கப்பட்டனர். தலைநகர் கார்ட்டூமில் வாழும் இரண்டு லட்சம் டிங்கா பழங்குடியினர் "நாகரீகமடையாத மனிதக்குரங்குகள்", "அடிமைகள்" என்றெல்லாம் அரபு பேசும் மக்களால் தூற்றப்படுகின்றனர். பெரும்பான்மை சமூகத்தில் இனவாதம் நன்றாக வேரூன்றியுள்ளது. இதே போன்ற பொருளாதார, கலாச்சார ஏற்றத்தாழ்வு டார்பூரிலும் நிலவுகின்றது. சூடானில் டார்பூரில் தான் முதன் முதல் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் வருவாய் முழுவதும் கார்ட்டூமில் தங்கிவிடுகின்றது. டார்பூரின் அபிவிருத்திக்காக அரசு பணம் செலவழிப்பதில்லை. தென்பகுதி SPLM இயக்கத்தின் ஆயுதப்போராட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, டார்பூர் விடுதலை முன்னணி தொடங்கப்பட்டது.

இதற்கிடையே ஜனாதிபதி பஷீரின் ஆலோசகர் அல் துரபி, தெற்கு சூடானில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டதை எதிர்த்து வந்தார். இதனால் பஷீர் துரபியை வீட்டுக்காவலில் வைத்துவிட்டார். துரபி பின் லாடனின் நெருங்கிய நண்பர் என்பது உலகறிந்த உண்மை. துரபியின் ஆதரவாளர்கள், அல் கைதாவுடன் சேர்ந்து அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தை டார்பூரில் இருந்து ஆரம்பித்தனர். Justice and Equality Movement (JEM) என்ற இயக்கத்தை ஸ்தாபித்து, பிராந்திய போலீஸ நிலையங்களை தாக்கி கைப்பற்றினர். ஒரு சில நாள் சண்டையிலேயே 550 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். பிற அரச நிறுவனங்களும் தாக்கப்பட்டன. அதே நேரம் எரித்திரியா ஆதரவைப் பெற்ற SLM (முன்னாள் டார்பூர் விடுதலை முன்னை) அரசுக்கெதிரான போரில் இணைந்து கொண்டது. அரசு பதிலடியாக கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சு நடத்தி கிளர்ச்சியை அடக்கியது.

மத்திய அரசு ஆயுத, நிதியுதவியில் "ஜன்ஜவீட்" என்ற துணைப்படை அமைக்கப்பட்டது. இந்த துணைப்படை தான் நேரடியாக இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானது. "குதிரையில் வரும் பிசாசுகள்" என்ற பொருள்படும் ஜன்ஜவீட் கிளர்ச்சியாளருக்கு ஆதரவான கிராமங்களை தாக்குவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. கண்ணில் பட்ட ஆண்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர், குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சில இடங்களில் மொத்த கிராமமே பூண்டோடு அழிக்கப்பட்டது. மக்கள் அகதிகளாக அயல்நாடான சாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். சில நேரம் சாட் எல்லை கூட அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. அரசாங்கம் கலாச்சார வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு, ஜன்ஜவீட் எதிர்ப்புரட்சியாளரை உருவாக்கியுள்ளது.

கொல்பவர்களும், கொல்லப்படுபவர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே மதத்தை பின்பற்றுபவர்கள். ஆனால் அவர்களை இரு வேறு கலாச்சாரங்கள் பிரிக்கின்றன. ஒரு பகுதி (ஜன்ஜவீட்) அரபு கலாச்சாரத்தையும், மறு பகுதி (போராளிக் குழுக்கள்) புராதன ஆப்பிரிக்க கலாச்சாரத்தையும் பின்பற்றுகின்றனர். சில நேரம் இந்த வித்தியாசம் அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை. இதற்கிடையே JEM இஸ்லாமிய அடிப்படைவாத போராட்டத்தை முன்னெடுக்கின்றது. அல் கைதாவுடன் தொடர்புள்ளது. ஆனால் அதைப் பற்றி சர்வதேச சமூகம் அதிக அக்கறை கொள்ளவில்லை. JEM இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக காண்பிக்கப்படுகின்றது. JEM தலைவர்கள் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்தில், கடும்போக்கு இஸ்லாமிய முகத்தை வெளிநாடுகளில் காட்டுவதில்லை.

2006 ம் ஆண்டு, சர்வதேச அழுத்தம் காரணமாக, டார்பூர் போராளிக் குழுக்களுக்கும், சூடான் அரசுக்குமிடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டது. அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று யாரும் நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. இம்முறை குட்டையைக் குழப்பியது சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள் என்று திருத்தி வாசிக்கவும்). சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் டார்பூர் போர்க்கால குற்றங்கள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பிரகாரம், சூடான் அதிபர் பஷீர் குற்றவாளியாக காணப்பட்டு, கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சூடான் அரசு சர்வதேச நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்தது. நீதிமன்றத்திற்கு சவால் விடுவது போல பஷீர் அரபு நாடுகளிற்கு விஜயம் செய்தார். சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் சூடானில் அமைதியைக் கெடுக்கும் என்று அரபு நாடுகளின் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதே நேரம், தமது பங்காளி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், தாம் இனிமேல் சமாதான ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கிளர்ச்சிக் குழுக்கள் அறிவித்துள்ளன.

உலக நாடுகளால், டார்பூர் யுத்தம் ஒரு இனப்படுகொலை என்று புரிந்து கொள்ளப்பட்டாலும், அது தண்ணீருக்காக நடந்த யுத்தம் என்றும் கருதப்படுகின்றது. மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே இயற்கை வளத்தை கைப்பற்றுவதற்கான போட்டியால் விளைந்த யுத்தங்கள், வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்றன. டார்பூர் பிராந்தியத்தில் உள்ள நீர் நிலைகள், மக்கள் பெருக்கத்தினால் ஏற்பட்ட தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை. இதனால் கிணறுகள், குளங்களை கைப்பற்றுவதற்காக இனக்குழுக்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழமை. இதனால் "ஒரு இனம் மற்ற இனத்தினை கொன்று குடியிருப்புக்களை எரித்து, நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கை", நவீன அரசியல் அகராதியின் படி இனப்பிரச்சினை என்று கூறப்படுகின்றது. டார்பூரில் அபரிமிதமான நிலத்தடி நீர் காணப்படுவதாகவும், இதை பாவனைக்கு கொண்டுவரும் வேளை இனங்களுக்கிடையிலான பூசல்கள் மறையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போர் காரணமாகவும் சூடான் மக்கள் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகின்றனர். மேற்குலக எதிரிகளின் பட்டியலில் முதன்மையான இடம்வகிக்கும் சூடான், சீனாவுடன் சிறந்த வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றது. மேற்குலகம் பொருளாதார திட்டங்களுக்கு, மனித உரிமை பிரச்சினையை நிபந்தனைகளாக விதிப்பதைப் போல, சீனா நடந்து கொள்வதில்லை. சீனா உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாத போக்கை கடைப்பிடிக்கின்றமை, சூடானிய அரசுக்கு அனுகூலமானது. சூடானில் உள்ள என்னைக் கிணறுகள் யாவும் சீன நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அமெரிக்கா என்ன தான் மனித உரிமைகளுக்காக பாடுபடுவதாக வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், சூடான் எண்ணை வளத்தின் மீது கண் வைத்திருப்பதை மறைக்க முடியாது. நைல் நதியின் நீர்வளத்தை வர்த்தக நோக்கோடு பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. மனித உரிமை மீறல்களை காரணமாக காட்டி, சீனா சூடானுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என, அமேரிக்கா ஐ.நா.சபை மட்டத்தில் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. ஆனால் இப்போதெல்லாம் சீனாவோ மனித உரிமை மாய்மாலங்களுக்கு ஏமாறும் வகையாக தெரியவில்லை.
(தொடரும்)


முன்னைய பதிவுகள்:
லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு
சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1