Wednesday, December 09, 2009

நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்

வருகிற டிசம்பர் 11 ம் திகதி, "நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசு" பிரகடனம் செய்யவிருப்பதாக மாவோயிஸ்ட்கள் அறிவித்துள்ளனர். புதிய குடியரசு 13 சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சிப் பிரதேசங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் 11 தேசிய இனங்களின் பெயர்களைக் கொண்ட "நாடு"களாக இருக்கும். தற்போதுள்ள அரசு நிர்வாகத்திற்கு சமாந்தரமாக, போட்டி அரசு ஒன்று ஸ்தாபிக்கும் எண்ணம் தமக்கில்லை என்று, மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாவோயிஸ்ட்களின் குடியரசு பிரகடனம், மீண்டும் ஒரு போரின் அறிவிப்பாக கருதப்படும் என அரசு சார்பான அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே நவம்பரில் சில நாட்கள் அரசுக்கு சவாலாக விளங்கிய மக்கள் எழுச்சியை, மீண்டும் கொண்டு வருவதற்காக மாவோயிச ஆதரவாளர்கள் திரட்டப்படுகின்றனர். டிசம்பர் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவோயிஸ்ட்களை ஓரங்கட்டிய நேபாள அரசு புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி வருகின்றது. அதன்படி 22 மே 2010 ல் நேபாளம் புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் ஆளப்படும். இந்த புதிய யாப்பின் பிரகாரமும் நேபாளம் சமஷ்டிக் குடியரசாவது நிச்சயம். அரசாங்கத்திற்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் கொள்கை வேறுபாட்டில் இருந்து எழுந்துள்ளது. அரசாங்கம் முன்மொழியும் சமஷ்டி அலகுகளுக்கான அதிகாரப் பரவலாக்கல், வெறும் நிர்வாகப் பிரிவுகள் தாம். அமெரிக்காவும், இந்தியாவும், தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக மேற்குறிப்பிட்ட சட்டவாக்கத்திற்கு உதவி புரிந்துள்ளன. ஆனால் மாவோயிஸ்ட்கள் முன்மொழியும் சமஷ்டி குடியரசு, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

மாவோயிஸ்ட் கொள்கை வகுப்பாளர்கள், தமது "நேபாள சோஷலிச குடியரசு" எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே எழுதி வைத்துள்ளனர். மாவோயிஸ்ட் போராட்டத்திற்கு முந்திய நேபாளம் "உலகின் ஒரேயொரு இந்து நாடாக" இருந்தது. அங்கே பல்வேறு மொழிகள் பேசும் இனங்களின் தனித்துவம் மறுக்கப்பட்டு, நேபாள மொழியின் மேலாதிக்கம் நிலவியது. ஆட்சி மொழியான நேபாள மொழியை பேசுவோர் 50 வீதமானோர் மட்டுமே.(The World Factbook - Nepal) நெவர், மகர், தரு, மைதலி, தமாங் போன்ற மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய நேபாள மொழி பேசும் பிராமணர்களும், சத்திரியர்களும் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். சீனர்களைப் போல தோற்றமளிக்கும், பல்வேறு இனங்களை சேர்ந்த பூர்வீக குடிகளின் பிரதேசங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளன. எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் இன்றி புறக்கணிக்கப்பட்ட பிரதேச மக்கள் நிரந்தர வறுமைக்குள் வாழ்கின்றனர்.

மாவோயிஸ்ட் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை. உலகின் மிகவும் வறுமையான நாடு, சாதி அடிமைத்தளைகளில் இருந்து விடுதலை பெற விரும்பிய மக்கள், மாவோயிஸ்ட்களின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர். தாழ்த்தப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட இனங்கள், மாவோயிஸ்ட் போராளிகளாக அணிதிரண்டனர். புதிய சமதர்ம நேபாளம், ஒவ்வொரு மொழி பேசும் இனமும் தன்னைதானே ஆளும் அதிகாரம் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும், என்று கட்சி பிரச்சாரம் செய்தது. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் காலத்தில், போராளிகள் தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தலைமைப் பீடத்தை நெருக்குகின்றனர். பதவி சுகம் கண்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் கொள்கைகளை மறந்து விடாமல் இருப்பதற்காக, கீழ்மட்ட உறுப்பினர்கள் புரட்சியை வலியுறுத்தி வருகின்றனர். தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்காக மாவோயிஸ்ட்கள் "நேபாள சமஷ்டிக் குடியரசு" பிரகடனத்தை கையில் எடுத்துள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் மக்கள் புரட்சியை துரிதப்படுத்தும் திட்டத்திற்கு வேறொரு காரணமும் உண்டு. "சிறி லங்கா நிலைமை" நேபாளத்திலும் தோன்றலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இந்தியாவின் பக்க பலத்துடன், இலங்கை அரச படைகள், "புலி அழிப்பு யுத்தத்தை" நடத்தி முடித்த பின்னர் உருவான அதிர்வலைகள் நேபாளத்தை எட்டியுள்ளது. இந்திய அரசு அறிவித்துள்ள, தனது நாட்டு மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போரானது, நேபாளத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது. இந்திய மாவோயிஸ்ட்களுக்கும், நேபாள மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் நேபாள இராணுவமும் "மாவோயிஸ்ட் அழிப்பு போரை" தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது கிடைத்து வரும் இது போன்ற தகவல்கள் யாவும், நேபாளத்தில் மீண்டும் ஒரு போர் தோன்றும் வாய்ப்பு இருப்பதைக் காட்டுகின்றன. மாவோயிஸ்ட்களின் மக்கள் புரட்சிக்கான அறைகூவலும், சமதர்ம சமஷ்டிக் குடியரசு பிரகடனமும், அவர்களும் போருக்கு தயாராகி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு:
Maoists to go on warpath again
-----------------------------------------------------------------------------------------------

முன்னைய பதிவு:
நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!

No comments: