Sunday, April 26, 2009

மனிதக் காட்சிச் சாலை


வெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் "மனிதக் காட்சி சாலைகள்" (Human Zoo) ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளெங்கும் பிரபலமாக இருந்துள்ளன. காலனியாதிக்க நாடுகள், தமது காலனிகளில் காணப்பட்ட, "விசித்திரமான" மனிதர்களை பிடித்து வந்து, தமது மக்களுக்கு காட்சிப் படுத்தினர். இந்தியர்கள், தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், செவிந்தியர்கள், அபோரிஜின்கள் இவ்வாறு பல வேறுபட்ட இனங்களில், உதாரணத்திற்கு சிலரை தெரிந்தெடுத்து, ஐரோப்பிய நகரங்களுக்கு கூட்டிக்  கொண்டு வந்தனர்.

இந்த "விசித்திரமான  விலங்குகளை" அருங்காட்சியகத்தில் மட்டும் கொண்டு வந்து வைக்கவில்லை. நகரில் உள்ள, வழமையான மிருகக்காட்சிச் சாலையில் ஒரு பகுதி, இதற்கென ஒதுக்கப்பட்டது. சில நேரம் நகரங்களில் நடக்கும் கானிவல் களியாட்ட நிகழ்வுகளின் போதும், கண்காட்சிகளில் வைக்கப்பட்டனர். குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல, மனிதர்களை  வைத்து சிலர் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.

" காட்டுமிராண்டி பச்சை மாமிசம் உண்ணும் காட்சியை பார்க்க வாரீர்!" என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பார்வையாளரை கவர்ந்திழுத்தார்கள். பெரும்பாலான காட்சிகளில், இந்த காலனிய மக்கள், தமது பாரம்பரிய குடிசைக்குள், பாரம்பரிய உடையில் இருப்பார்கள். பாரம்பரிய நடனமும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். சில நேரம் சண்டைக் காட்சி நாடகமும் அரங்கேறும். இவர்களைப் பார்த்து இரசிக்கும் வெள்ளையினத்தவர்கள், காலனி நாடுகளின் மக்கள், விலங்குகளை காட்டிலும் கொஞ்சம் அதிகமாக வளர்ச்சி  அடைந்துள்ளதாக கருதிக் கொள்வார்கள்.

1875 லிருந்து 1940 ம ஆண்டு வரை, அதாவது காலனியாதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில், "மனிதக் காட்சிச் சாலைகள்" பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்பட்டன. ஜெர்மனியில் இது "Völkerschau" என்றும், இங்கிலாந்தில் "Human Zoo" என்றும் அழைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த வெள்ளையின மக்கள், தம்மை விட வேறுபட்ட மனிதர்களைப் பார்த்திராததால், அவர்களுக்கு இது புதுமையாக இருந்தது. வித்தியாசமான தோற்றம், மேனி நிறம், பழக்க வழக்கங்கள் என்பன அவர்களை கவர்திழுத்தன. மேலும் பயங்கர திகில் காட்சிகளைப் பார்ப்பது போன்ற ஆர்வமும் அவர்கள் மத்தியில் காணப்பட்டது. திகில் காட்சிகளுக்கு மெருகூட்டுவதற்காக, சில நேரம் மண்டை ஓடுகள் காட்சிப் படுத்தப்பட்டன. புராதன காலத்து காட்டுமிராண்டிகள், மனித தலை கொய்வதே வேலையாக இருப்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு.

வெள்ளையின வியாபாரிகளுக்கு காலனிகளில் உயிருள்ள மனிதர்கள் மட்டும் தேவைப்படவில்லை. வெப்ப மண்டல நாடுகளில் வாழும் பல்வேறு இனத்தவர்களின் மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் கூட தேவைப்பட்டன. ஐரோப்பிய நகரங்களின் அருங்காட்சியகங்களில் வைப்பதற்கும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கும் அவை பயன்படுத்தப்பட்டன.

காலனிகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளும், எலும்புக் கூடுகளும் இதற்கென எடுத்து வரப்பட்டன. மண்டையோடு வாங்கி விற்கும் முகவர்கள், காலனிய இந்தியாவின் தெருக்களிலும் அலைந்து திரிந்து மண்டையோடுகளை சேகரித்ததாக, நெதர்லாந்தின் லைடன் நகர அருங்காட்சியக நிர்வாகி தெரிவித்தார். (அந்தக் காலங்களில் ஏராளமான இந்தியர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்ததாலும்,போர்களினாலும், மண்டையோடுகள் தாராளமாக கிடைத்து வந்தன.)

காலனிய மக்களை நிறவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்து ரசிக்கும் கலாச்சாரம் இன்றைக்கும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றது. ஐரோப்பிய நகரங்களில் "காலனிய மக்களின் கண்காட்சிகள்" யாவும், அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட காலத்தில் தான் இடம்பெற்றன. ஐரோப்பியர்கள் தமது காலனிய அடிமை மக்களை நாகரீகமடையாத காட்டுமிராண்டிகளாக மட்டும் கருதவில்லை. பிரான்ஸின் காலனிகளான அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற அரபு நாடுகளை சேர்ந்த இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள், ஐரோப்பிய நகரங்களில் சூடாக விற்பனையாகின.

இன்றைக்கு சில தொலைக்காட்சித் தொடர்கள், "கலாச்சார பரிமாற்றம்" என்ற பெயரில், நிறவெறிக் கூத்துகளை அரங்கேற்றுகின்றன. இந்தத் தொடரில், தெரிந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய குடும்பங்கள், ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களின் வீடுகளில் சில காலம் வசிப்பார்கள். பதிலுக்கு விருந்துபசரித்த ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பா வந்து சில காலம் வசிப்பார்கள். இது தான் தொடரின் சாராம்சம். ஆப்பிரிக்க பழங்குடியின குடியிருப்புகள் பாரதிராஜா படத்தில் வரும் கிராமங்களைப் போல வசதிக் குறைபாடுகளுடன் காணப்படும். படப்பிடிப்பின் போது, பழங்குடியின குடும்பத்தவர்கள், செல்லிடத் தொலைபேசி, கைக்கடிகாரம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. தப்பித் தவறியும், ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசக்கூடாது. 

ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களும், பணத்திற்காக படப் பிடிப்பாளர்கள் கூறிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டனர். அதை விடக் கொடுமை, ஆப்பிரிக்க குடும்பங்கள் ஐரோப்பிய நகர வாழ்க்கைக்கு பழக்கப்படாதவர்களாக பல வேடிக்கையான காரியங்களை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டது தான். தொலைக்காட்சி பார்வையாளர்கள், பட்டணத்தில் பட்டிக்காட்டானின் அவதிகளைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள். மனிதக் காட்சி சாலைகள், வெறும் கோட்பாடாக இருந்த  நிறவெறிப் பாடத்தை, மக்களுக்கு நடைமுறையில் கற்பித்து வந்தன. அதன் தாக்கம், பல தலைமுறைகளுக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.



மேலதிக தகவல்களுக்கு:
Human zoo

3 comments:

Unknown said...

அடிமை முறைகளின் மற்றொரு வடிவம் தான் இந்த "Human Zoo" என்று நினைக்கிறேன். கிளாடியேட்டர் படத்தில் சில காச்சிகள் இது போல் சித்திகரிக்கப் பட்டிருக்கும்(நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்)...அடிமை முறை எல்லா இடங்களிலுமே ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இதில் ஐரோப்பிய, அமெரிக்க முறையை மட்டும் சொல்லி குற்றமில்லை.

Kalaiyarasan said...

நீங்கள் சொல்வது சரி தான் கிருஷ்ன பிரபு. அவர்கள் அடிமைகளாகத் தான் நடத்தப்பட்டார்கள். என்ன தான் இலகுவான வேலையாக இருந்தாலும், சங்கிலியால் பிணைக்கப்படா விட்டாலும் அவர்களும் அடிமைகள் தான். ஐரோப்பிய, அமெரிக்க அடிமை முறை நமது நவீன காலத்தில் இடம்பெற்றதாலும், அதன் தாக்கங்கள் தற்போதும் உணரப்படுவதாலும் முக்கியத்துவம் பெறுகின்றது. சரித்திரத்தில் ரோமர்களும், கிரேக்கர்களும் அடிமைகளின் உழைப்பை பயன்படுத்தி வளர்ந்தவர்கள் தான். ஆனால் பண்டைய அடிமைகளின் வம்சாவழியினர் இன்று அடையாளம் காண முடியாத அளவிற்கு முழுமையான பிரஜைகளாக மாறிவிட்டனர்.

Jagapriyan said...

//ஆனால் பண்டைய அடிமைகளின் வம்சாவழியினர் இன்று அடையாளம் காண முடியாத அளவிற்கு முழுமையான பிரஜைகளாக மாறிவிட்டனர்.//அதுதான் பண்டைய அடிமை அமைப்புக்கும் அதற்கொப்பான இந்திய சாதி அமைப்புக்கும் உள்ள வித்தியாசம். பின்னையது மதங்களுடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டதனால் அதிலிருந்து மீட்சி அடைய நீண்ட காலம் எடுக்கின்றது. ஆனால் இரண்டுக்கும் அடிப்படை பொருளாதார சுரண்டலே