Saturday, March 28, 2009

சூடான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல், ஈரானுக்கு எச்சரிக்கை?


வட சூடான் பகுதியில், இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் ஒரு வாகனத் தொடரணியை குண்டு வீசித் தாக்கியுள்ளன. ஹமாசிற்கு ஈரானில் இருந்து ஆயுத விநியோகம் செய்த வாகனங்களையே தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. "போர்ட் சூடான்" என்ற துறைமுக நகரில் இருந்து எகிப்து நோக்கி சென்ற வாகனங்கள், பாலைவனப் பகுதியில் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகின. கொல்லப்பட்டவர்கள் எரித்திரிய அகதிகள் என்று சூடான் அரசு தெரிவிக்கின்றது. தாக்குதலுக்குள்ளான வாகனங்களுக்கும் தமக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது. ஹமாசிற்கான ஆயுதங்கள் சூடானில் இருந்து கடத்தப்படுவதாக நீண்ட காலமாகவே இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. இதே நேரம், ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பா செல்லும் (அல்லது கடத்தப்படும்) அகதிகள்/குடியேறிகள் சூடானில் தாக்குதலுக்குள்ளான பாதை ஊடாகவே பயணிப்பது வழக்கம் என்றும் தெரிய வருகின்றது. Asharq Al-Awsat பத்திரிகை இது போன்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த விமானத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக சூடான் குற்றஞ்சாட்டியிருந்தது. நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க அதிகாரிகளை இது குறித்து விசாரித்தது. அப்போது தான் இந்த தாக்குதலை இஸ்ரேலிய விமானங்களே நடத்தியதாக தெரிவித்தனர். இறைமையுள்ள நாடொன்றின் வான் பரப்பினுள் புகுந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், எவருடைய கண்டனத்தையும் பெறவில்லை. பிரிட்டிஷ் நாளேடு ஒன்று, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு பங்கிருக்கலாம் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நாளேடான "ஹாரெட்ஸ்", பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்த செய்தியின் படி: "ஈரான் ஹமாசிற்கு Fajr ஏவுகணைகளை வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றது. இஸ்ரேலின் தொழிற்துறை நகரமான "டெல் அவிவ்" வை தாக்கக் கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்கள் இவை. ஹமாசின் கைக்கு கிடைத்தால், இஸ்ரேலின் மீதான போரில் ஹமாஸ் வெல்லும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கும். இதனால் முன் கூட்டிய தடுப்பு நடவடிக்கை அவசியம்." என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சூடான் அதிபர் பஷீரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப் பட்டிருப்பதால், அமெரிக்க இராணுவ தலையீடு இடம்பெறலாம் என்று சூடான் அஞ்சுகின்றது. டார்பூர் பிராந்தியத்தில், சூடான் அரசு இன அழிப்புப் போரில் ஈடுபடுவதாக, ஐ.நா.மன்றமும், அமெரிக்காவும் ஏற்கனவே கண்டனக் கணைகளை வீசிக் கொண்டிருந்தன. சூடான் எண்ணை வளம் கொண்ட நாடு என்பதும், சீன நிறுவனங்களே அவற்றை நிர்வகித்து வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

Sudan suspects Israel of attacks

சூடான் தொடர்பான முன்னைய பதிவுகள்:
சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்
சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

No comments: