Saturday, February 21, 2009

மீண்டும் லெனினிடம்?



மோல்டாவா (அல்லது மோல்டோவியா) முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் ஒன்று. சோவியத் யூனியன் வீழ்ந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆனபின் புதிதாகக் குடியரசான அந்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஏறக்குறைய எழுபது வீதமான பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எமக்குத் தெரிந்தவரையில் முதலாளித்துவப் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது அந்த நாட்டில்தான்.

 வழக்கம் போலவே பல செய்திகளை மறைக்கும் சர்வதேசச் செய்தி ஊடகங்கள் இந்தச் செய்தியையும் இருட்டடிப்புச் செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. உலகில் பல செய்திகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு வரிசையில் இது இன்னொரு உதாரணம்.

மோல்டோவியா ரோமானிய மொழி பேசும் மக்கள் வாழும் முன்னாள் சோவியத் குடியரசு. 1990 ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மை ரோமானியர்கள் தமக்கு அயலில் இருக்கும் ரோமானியாவுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டனர். 500 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் மன்னராட்சி நிலவிய காலத்தில் மோல்டோவியா 'பெஸ்ஸராபியா' என அழைக்கப்பட்டது. ஒரு சிற்றரசின் கீழ் தனியாக ஆழப்பட்டு வந்தது. ஐரோப்பாவினுள் பல பிரதேசங்களைக் கைப்பற்றிய ரஷ்யா துருக்கிய ஒட்டோமான்களுடன் யுத்தத்தில் இறங்கியது. அவ்வாறுதான் மோல்டோவியா ரஷ்ய செல்வாக்குக்குட்பட்ட நாடாக உருவாகியது. முதலாம் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் சார் ரஷ்யாவுடன் தன்னைத் துண்டித்துக்கொண்டது.

உலகில் பல மாற்றங்களை உருவாக்கிய இரண்டாம் உலகப்போர் மோல்டோவியாவிலும் தாக்கங்களை உருவாக்கியது. நாஷிப் படைகளுக்கெதிராக வெற்றிவாகை சூடிய செம்படை மோல்டோவியாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. மோல்டோவியாவைத் தனி சோவியத் சோஷலிசக் குடியரசாக அங்கீகரித்த ஸ்டாலின், அங்கு பெரும்பான்மையாக இருந்த ரோமானியர்களின் தேசியவாதத்தை அடக்கும்பொருட்டு உக்ரைனின் பகுதியொன்று அந்தக்குடியரசுடன் இணைக்கப்பட்டது. இந்த உக்கிரேனியப் பகுதி திரான்ஸ்நியேஸ்டர் (Transnistria அல்லது Trans Dniester) என அழைக்கப்பட்டு ரஷ்யர்களையும் உக்கிரேனியர்களையும் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்தது. பெரும்பான்மையினர் பேசிய ரோமானிய மொழி 'மோல்டோவிய மொழி' என அழைக்கப்பட்டது.

நமது காலத்திற்கு மீண்டும் வருவோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் தனிநாடாகப் பிரகடனம் செய்த குடியரசுகளில் மோல்டோவியாவும் ஒன்று. அங்கே பெரும்பான்மையாக வாழ்ந்த ரோமானிய மொழி பேசும் மக்கள் (ஸ்டாலினால் மோல்டோவியர் என அடையாளப் படுத்தப்பட்டனர்) ரோமானியாவுடன் சேர விருப்பம் தெரிவித்தனர். இது சிறுபான்மையினரான ரஷ்யருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் 'திரான்ஸ்நியேஸ்டர்' என்ற குடியரசைப் பிரகடனம் செய்தனர்.

தொடர்ந்தது உள்நாட்டுப்போர். (கிட்டத்தட்ட அதே காலத்தில் போஸ்னியப் போர் நடந்ததால் மோல்டோவிய யுத்தம் அசட்டை செய்யப்பட்டது.) முன்னாள் கே.ஜி.பி அதிகாரி சிமிர்னோவ் தலைமையில் நடத்தப்பட்ட பிரிவினைக்கான யுத்தம் அங்கே நிலைகொண்டிருந்த ரஷ்ய இராணுவப்பிரிவின் உதவியுடன் மோல்டோவியாவிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டது. இதுவரை இந்தத் தனிநாடு உலகில் எந்தவொரு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

இனி மோல்டோவியா என்பது திரான்ஸ்நியேஸ்திரியா தவிர்ந்த பிரதேசம் என்பதை வாசகர்கள் நினைவில் இருத்தல் வேண்டும். 'நிஸ்திரு' (ரோமானிய மொழியில்) அல்லது 'நியேஸ்தர்' (ரஷ்ய மொழியில்) என்ற ஆறு மோல்டாவியாவை வடக்குத்தெற்காக ஊடறுத்துப் பாய்கிறது. இந்த ஆறு தற்போது மோல்டோவியா - திரான்ஸ்நியேஸ்திரியாவை பிரிக்கும் இயற்கை எல்லையாகிவிட்டது. இரண்டுக்குமிடையில் எல்லைக் காவற்படை நிறுத்தப்பட்டு சுங்கப்பரிசோதனையும் நடக்கிறது.

மோல்டோவியாவின் தலைநகரம் 'கிஸினவ்', திரான்ஸ்நியேஸ்திரியாவின் தலைநகரம் 'திராஸ்பொல்'. 1992 ல் ரஷ்யாவின் மத்தியஸ்த்துடன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தப் பிரிவினை இன்றுவரை தொடர்கிறது. இந்தத் தனிநாட்டிற்கான போரின் வெற்றிக்கு மோல்டோவியாவின் பலவீனமான நிலையும்(இன்றும் அது ஐரோப்பாவின் மிக வறிய நாடு) ரஸ்யாவின் மறைமுகமான உதவியும் முக்கிய காரணங்கள்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் லெனினின் சிலைகள் போன்ற பழைய சோவியத் சின்னங்கள் நிலைத்து நிற்கும் சில அரிய இடங்களில் திரான்ஸ்நியேஸ்திரியாவும் ஒன்று. அங்கே ஒரு கே.ஜி.பி. அதிகாரி ஆட்சி செய்வதால் கம்யூனிசம் தொடர்கிறதா என யாரும் பதறத் தேவையில்லை.

ஜனாதிபதி சிமிர்னோவ் கம்யூனிஸட்டுமல்ல, நாட்டை நிர்வகிப்பது பொதுவுடைமைக் கொள்கையுமல்ல. (இந்த உண்மைக்கு மாறான செய்திகளே வெளியில் பரப்பப்படுகின்றன). பழைய கூட்டுறவுப் பண்ணைகள் தொடர்ந்து நடப்பதும், வெளிநாட்டு முதலீடுகள் மிகக்குறைவு என்பதும் , தெருக்களில் விளம்பரப் பலகைகளைக் காண்பதரிது என்பதும் உண்மைதான்.

இருப்பினும் பெரும்பான்மையான நாட்டின்பொருளாதாரத்தை ஒரேயொரு உள்ளூர் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. 'ஷெரிப்' என்ற அந்த வர்த்தக நிறுவனம் சுப்பர் மார்க்கட்டுகள், பெற்றோல் விற்பனைச் சாலைகள், தொலைக்காட்சி, இறக்குமதி என்பவற்றில் ஏகபோக உரிமை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கும் ஜனாதிபதியின் குடும்பத்திதிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது பரகசியம். திரான்ஸ்நியேஸ்திரியா தமது நாணயமாக ரூபிளை புழக்கத்தில் விட்டுள்ளது. (மோல்டோவியாவில் லெய் புழக்கத்தில் உள்ளது.)

சிமிர்னோவின் திரான்ஸ்நியேஸ்திரியா ஒரு மாபியாக் குழுவால் நிர்வகிக்கப்படும் நாடு போன்றுள்ளதாக சிலர் விமர்சிக்கின்றனர். இருப்பினும், யூகோஸ்லாவியாவில் நடந்ததைப் போல, போர் முடிந்தவுடன் அங்கு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. ரோமானிய மோல்டோவியர்கள் அங்கு தொடர்ந்து வாழலாம், ஆனால் லத்தீன் எழுத்துவடிவத்தைப் பயன்படுத்த முடியாது. ரஷ்ய மொழி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழி.

இந்தப் புதிய சுதந்திர நாட்டில் ரஷ்யர்களைத்தவிர, உக்கிரேனியர்களும் கிறிஸ்தவத் துருக்கியர்களும் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை சிமிர்னோவ் அரசாங்கத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கக் கட்சி ஆகியவற்றிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் சமாதானத்திற்கும், ஒற்றுமைக்குமான இயக்கம் (மேற்கைரோப்பாவின் ஆதிக்கத்திலுள்ளது) மோல்டாவியப் பிரச்சினையிலும் தலையிட்டுள்ளது. திரான்ஸ்நியேஸ்திரியாவை இணைத்து மோல்டோவியாவைச் சமஸ்டி அரசாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக இரண்டு பக்கமும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மோல்டோவியாவின் கம்யூனிச ஜனாதிபதி கூட திரான்ஸ்நியேஸ்திரியாவை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கிடையில் சுமூகமான நல்லுறவு நிலவுகிறது. 2001 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற மோல்டோவிய (ரோமானிய மொழிபேசும்) கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் காலத்தில் இருந்ததைப் போல ரஷ்ய மொழியையும் உத்தியோக பூர்வ மொழியாக்க விரும்புகிறது. இதற்கெதிராக ஆட்சியிழந்த தேசியவாதக் கட்சியினர் வீதியல் இறங்கி ஆரப்பாட்டம் செய்த காட்சிகளை சி.என்.என் மறக்காமல் காட்டியது. இதற்கு முன்பு வறுமையில் வாடிய ஓய்வூதியக்காரரும், சம்பள உயர்வு கேட்ட தொழிலாளர்களும், உணவு கேட்ட சாதாரண மக்களும் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சி.என்.என் உட்பட எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் தமது நாடு ஒரேயிரவில் மேற்குலகிற்கு நிகரான பணக்கார நாடாகிவிடும் என்று மோல்டோவிய மக்களும் கனவு கண்டனர். ஆனால், சோவியத் யூனியனில் இருந்த போது கிடைத்த பொருளாதார உதவிகளும், சலுகைகளும் திடீரென நின்று போக அநாதரவான நிலையில் ஐரோப்பாக் கண்டத்திலேயே மிக வறுமையான நாடானதுதான் கண்ட மிச்சம்.

ரோமானிய தேசியவாத உணர்வினால் உந்தப்பட்ட பல மக்கள் தமது 'தாய்நாடான' ரோமானியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். ஆனால், அது பாலும் தேனும் ஆறாய் ஓடும் நாடல்ல என்ற உண்மையை அனுபவத்தில் கண்டபின்னர் திரும்பி வந்தார்கள். நாளாக ஆக மோசமடைந்த பொருளாதாரப் பிரச்சினைகள் அரசியலிலும் பிரதிபலித்தது. பாராளுமன்ற ஆசனங்களை நிரப்பிய ஆளும் கட்சிகள் எந்த அற்புதத்தையும் நிகழ்த்திக்காட்டாததால் ஏமாந்த மக்கள் தமது எதிர்ப்பு வாக்குகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தனர்.

வெளியுலகம் கண்டுகொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றி மேற்குலகை அதிர்ச்சியடைய வைக்கவில்லை.அதற்குக் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட்கட்சியும் புரட்சிகரப் பாதையைக் கைவிட்டு சமரசப் பாதைக்கு வந்திருப்பதுதான். பல முக்கிய நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்படலாமென எதிர் பார்க்கப்படுகிறது. அதே நேரம் தனியார் முதலீட்டையும் நிராகரிக்கவில்லை.

கம்யூனிச ஜனாதிபதி வோரோரின் தனது ஆட்சியை இன்றைய சீனாவின் அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நட்புறவையும் நாடியுள்ளார். அதே நேரம் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. மறுபக்கத்தில் ஐ.எம்.எப், உலகவங்கி ஆகியவற்றின் கடனுதவிகளைப் பெறுவதற்கான பேச்சுகள் நடக்கின்றன. இது மீண்டும் சிவப்பு மஞ்சளாக நிறம் மாறிய கதைதான். மோல்டோவியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் லெனினை மட்டும்தான் மீட்டெடுத்துள்ளனர். அவரது கொள்கைகளையல்ல.

9 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆழமான கட்டுரையாக இருக்கிறது நண்பரே... மீண்டும் வாசிக்கிறேன் :))

Kalaiyarasan said...

சிறிய இடைவேளைக்குப் பிறகு பின்னூட்டமிட்டுள்ளீர்கள். நன்றி, விக்னேஷ்.

மருதன் said...

தோழர் கலையரசன், விரிவான கட்டுரைக்கு நன்றி. தற்போதைய சீனாவுக்கும் பொதுவுடைமைக் கட்சிக்கும்கூட தொடர்பேதும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. பொதுவுடைமைக் கட்சி என்று பெயரளவில் இருந்துவிட்டாலே அங்கே புரட்சிகர அரசுதான் நடந்துகொ்ண்டிருக்கிறது என்று பலரும் முடிவு செய்துவிடுகிறார்கள்.

Kalaiyarasan said...

நீங்கள் சொல்வது உண்மை தான் தோழர் மருதன்.
பொதுவுடமைக் கட்சி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு திகிலாக இருக்கிறன்றது. இதிலே அது புரட்சிகர கட்சியாகவும் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். எதிர்மறையான பிரச்சாரங்களை தொடங்கி விடுவார்கள்.

Anonymous said...

நல்ல தகவல்

Anonymous said...

நல்ல முயற்சி. ஆனால் எதுக்கு?

Anonymous said...

நல்ல முயற்சி. ஆனால் எதுக்கு?

Kalaiyarasan said...

நன்றி கவின்.
நன்றி pukalini. உங்கள் கேள்வி என்ன? தெளிவாக சொல்லவும்.

haja said...

very nice keep it up