Saturday, February 14, 2009

உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?


ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் தயாரித்துள்ள "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றவர்களை காப்பாற்றுவதற்கு எந்த சட்டமும், வக்கீலும் உதவப்போவதில்லை. சட்டங்களால் ஆளப்படும் மேற்கத்திய நாடுகளில் கூட, "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" என்ற பெயரில் மெல்ல மெல்ல சர்வாதிகாரம் பரவிவருகின்றது.

"அல் கைதாவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தக்கதி, எனக்கில்லை" என்று அப்பாவித்தனமாக இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவ்வாறு சந்தேகிக்கப்பட்ட நபர்களோ, அல்லது நிறுவனங்களோ கூட, பின்னர் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் கூட கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் மீது அரச உளவுத்துறை தயாரித்த குற்றப்பத்திரிகைகளை, கைது செய்யப்பட்டவரோ, அல்லது அவரது வக்கீலோ பார்க்க முடியாது. அதெல்லாம் "தேச நலனை முன்னிட்டு இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை."

ஒரு நாள், நீங்கள் வங்கியில் தானியங்கி இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க எத்தனிக்கின்றீர்கள், என்று வைத்துக் கொள்வோம். பணம் வரவில்லை, அதற்குப் பதிலாக "ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் பேரில்" உங்களது வங்கி அட்டை தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வருகின்றது. நீங்கள் சம்பந்தப் பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டு விசாரிக்கின்றீர்கள்.

"எந்தக் குற்றமும் செய்யாத உங்களை, சந்தேகத்திற்குரிய வேறொரு நபர் என்று தவறுதலாக கணித்து விட்டிருக்கலாம்", என முறையிடுகின்றீர்கள். வங்கியிலிருந்து உறுதியான பதில் வருகிறது: "மன்னிக்கவும், எமக்கு கிடைத்த தகவல்கள் சரியானவை. நிச்சயமாக அது நீங்கள் தான்." உளவுத்துறை தயாரித்துள்ள, பயங்கரவாதிகளுக்கு காசு அனுப்பும் சந்தேகநபர்களின் பட்டியலில், உங்களது பெயர் இடம்பெற்றுள்ள விஷயம் அப்போது தான் தெரிய வரும்.

பணம் அனுப்புவது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக பேசுவது, அது பற்றிய நூலை வாங்குவது, நூலகத்தில் இரவல் பெறுவது, கூட உங்கள் பெயரை பயங்கரவாத சந்தேகநபர்கள் பட்டியலில் வரவைக்கும். இதுவரை எந்த ஒரு தமிழ் ஊடகமும் வெளியிடாத செய்தி என்னவெனில், இந்தப் பட்டியலில் (பல நாடுகளில் வதியும்) தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும், இதுவரை பலர் அந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதையும் தான். அதுமட்டுமல்ல, சில மேற்குலக நாடுகளில் அரச உயர்பதவிகளில், அல்லது உயர் தொழில்நுட்ப படிப்புகளில், அனுமதி மறுக்கப்பட்டவர்களில் தமிழர்களும் அடங்குவர்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை கண்காணிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது தான். உதாரணத்திற்கு ஒருவரது மாதாந்த வருமானம் 1500 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே ஒருவர் மாதம் 1000 டாலர் சேமிக்க முடியுமாகில், வருட முடிவில் அதிக பட்சம் 12000 டாலர்கள் கணக்கில் இருக்கலாம். இதற்கு மீறிய தொகையை வைத்திருப்பவர்கள், சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டனர்.

திடீரென இரண்டு பொலிஸ்காரர்கள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டி, நீங்கள் ஏதாவது கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறீர்களா என விசாரிப்பது, வழக்கமாக நடந்து வருவது தான். ஆனால் இப்போது அதுவே பயங்கரவாத குற்றமாக நோக்கப்படும் என்பது தான் வித்தியாசம். இதனை விட இன்னொரு பாரம்பரிய வேவு பார்க்கும் முறையும் மேற்குலக நாடுகளில் உள்ளன. கிராமங்களில், நகர வட்டாரங்களில் நியமிக்கப்பட்டுள்ள, உளவுத்துறையுடன் தொடர்புடைய ஆட்காட்டிகள், அந்த இடத்திற்கு புதிதாக குடி வருபவர்களை பற்றிய தகவல்களை கொடுத்து வருகின்றனர். இந்த நடைமுறை இன்றைய காலத்தில் இன்னும் விரிவுபடுத்தப் படலாம்.

"பயங்கரவாதிகளின் பட்டியலை" யார் தயாரிக்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலனாய்வுத்துறை தீவிரவாத அரசியலில் ஈடுபடுபவர்களின் விபரங்களை சேர்த்து வருகின்றது. ஒரு சில ஆயிரம் பேர்களே சேவையில் உள்ள தேசிய புலனாய்வுத் துறை, காவல்துறையை விட சக்தி வாய்ந்தது. ஒரு சாதாரண திருட்டுக்குற்றத்திற்கே சாட்சியம் உண்டா எனக்கேட்டு வெளியே வந்து விடலாம். ஆனால் புலனாய்வுத்துறை எவ்வாறு அந்த தகவல்களைப் பெற்றது? அதைப்பார்க்க முடியுமா? இந்தக் கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதி கூட கேட்க முடியாது.

புலனாய்வுத்துறையை எதிர்த்து வழக்கு போட முடியாது. பயங்கரவாத சந்தேக நபர்களின் பட்டியல், சம்பந்தப்பட்ட அரசாங்கங்களால் அமெரிக்காவுக்கு, (அல்லது ஐ.நா.சபைக்கு) அனுப்பப்படுகின்றன. மறுபக்கத்தில் விரிவான தகவல் மையத்தை (Data Base) கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது பட்டியலில் உள்ளவரை தடுத்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாட்டிற்கு ஓலை அனுப்பும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் கூட இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் ஒன்றாக செயற்படுகின்றன.

சாதாரண காவல்துறை, ஒரு குற்றம் நடந்த பிறகு தான் துப்பறிந்து, குற்றவாளியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஆனால் புதிதாக வந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் படி, குற்றம் புரிய எண்ணியிருந்ததாக ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம். அதாவது "ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை தான் வெறுப்பதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும்" ஒருவர் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துகிறார் என வைத்துக் கொள்வோம்.

இதனை பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு நபர் (நெருங்கிய நண்பராக கூட இருக்கலாம்) உளவுத்துறைக்கு தகவல் தருமிடத்து, அந்த "வீர வசனம்" பேசிய நபர் கைது செய்யப்படலாம். இந்த நடைமுறை "பயங்கரவாத சம்பவம் ஒன்று இடம்பெறுவதை முன்கூட்டியே தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என அழைக்கப்படுகின்றது. இதுவரை பல "வாய்ச்சொல் வீரர்கள்" பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் மேற்கத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றிற்கு சார்பானவர்களை கண்டுபிடிப்பது, உளவுத்துறைக்கு கைவந்த கலை. சில நேரம் உளவுத்துறையால் பணியில் அமர்த்தப்படும் நபர்களே, பெருமளவு பலியாடுகளை கவர்ந்திழுத்து பொறியில் மாட்டி விடுகின்றனர். குறிப்பிட்ட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பாளராக காட்டிக் கொள்ளும் "போலி தீவிரவாதிக்கும்", "நிஜ தீவிரவாதிக்கும்" இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். இந்த போலி தீவிரவாதிகளின் நிஜ முகம் அம்பலமாகும் போது தான், சில பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் உளவுத்துறை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின்றன.

-- தொடரும் --


Part 2:நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி

13 comments:

Anonymous said...

Its very shocking news.. But its going to be true.

-Vibin

Kalaiyarasan said...

Thank you for the comment, Vibin.

Nilavan said...

மிக மிக அதிர்ச்சியான செய்திதான்..

Kalaiyarasan said...

உங்கள் கருத்துக்கு நன்றி, நிலவன்.

Anonymous said...

தொடருங்கள்.......
அருமையான பதிவு

Anonymous said...

தொடருங்கள்.......
அருமையான பதிவு

Kalaiyarasan said...

நன்றி, கவின். உங்கள் போல பலரின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த பதிவுகளும் இது போன்ற வெளிவராத பல தகவல்களை தாங்கி தொடர்ந்து வரும்.

fifufi said...

man ur great
thanks for the info
kalai king

fifufi said...

Good
thanks for tha info
kalai king

benza said...

why not cat and paste work here? please

benza said...

Sorry my last post should read as:

Why NOT Cut and Paste work here??? please.

Kalaiyarasan said...

Thank you 614207.

Kalaiyarasan said...

Thank you benzaloy