Saturday, December 06, 2008

ஆதலினால் போர் செய்வீர்!


ஒரு சிறு தீப்பொறி கூட இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போரை ஆரம்பித்து வைத்து விடும் நிலைமை தற்போது உள்ளது. இந்தியாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று பாகிஸ்தான் இராணுவத்தை போருக்கான துரித தயார்படுத்தலில் கொண்டுவந்து விட்டுள்ளது. Dawn பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் அல்லது அந்த அமைச்சு அலுவலகத்தில் இருந்து ஒரு அனாமதேய பேர்வழி, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். "மும்பை தாக்குதல் தொடர்பாக தேடப்படும் தீவிரவாதிகளை ஒப்படைக்காவிட்டால், இந்தியா பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, அந்த ஆசாமி தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு வந்த உடனே இந்திய ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து பாகிஸ்தான் இராணும் விழிப்புடன் இருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ போல பாவனை செய்த அந்த அனாமதேய நபர், அமெரிக்க இராஜாங்க அதிகாரி கொண்டோலீசா ரைசுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் கடுமையான பாதுகாப்பு ஏற்பட்டுகள் காரணமாக, அலுவலகத்தில் அந்த அழைப்பு தொடர்பு படுத்த மறுத்து விட்டனர். இதை அறிந்த ரைஸ், பிரணாப் முகர்ஜீயை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர் தான் அப்படி யாருக்கும் தொலைபேசி எடுக்கவில்லை என்று மறுத்து விட்டார். சர்தாரியின் அலுவலகத்தில் தொலைபேசி அழைப்பினை அடையாளம் காணும் சாதனமான CLI (caller's line identification) பொருத்தப் பட்டுள்ளது. அதன் மூலம் அந்த அழைப்பு இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இருந்து வந்தது என்பதாலேயே சர்தாரிக்கு தொடர்பு கொடுக்கப்பட்டது, என்று அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நடைபெற்ற சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, இந்திய அரசு மட்டத்தில் சில சக்திகள், இந்தியாவை பாகிஸ்தானுடன் போரிட வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கின்றமை தெளிவாகின்றது. உலக வல்லரசுகளும் அப்படி ஒரு போர் மூண்டால் தாம் ஆயுத விற்பனை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா என்பன இந்தியாவுக்கும், சீனா பாகிஸ்தானுக்கும் ஆயுத விநியோகம் செய்ய தயாராக இருப்பதை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் சண்டை பிடித்தால், வல்லரசு கழுகுகளுக்கு கொண்டாட்டம். போரினால் ஆயுத உற்பத்திசாலைகள் லாபமீட்டுவது, நிதி நெருக்கடியில் இருந்து மீள ஒரு குறுக்கு வழியாகும். ஆதலினால் போர் செய்வீர்!

இதற்கிடையே அமெரிக்கா, நான்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளின் பெயர்களை, தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் போடுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வழங்கியுள்ளது. இதனை அமெரிக்கா தனது "இந்திய நண்பர்களுக்கு உதவும் நன்னோக்கோடு" செய்யவில்லை. இதற்குப் பின்னால் அமெரிக்க நலன்கள் ஒளிந்திருக்கின்றன. குறிப்பாக அந்த நான்கு பேரில் ஒருவரான ஓய்வு பெற்ற ஐ.எஸ்.ஐ. ஜெனரல் ஹமிட் குல் முக்கியமானவர். அந்நாள் சோவியத் எதிர்ப்பு ஆப்கான் முஜாகிதீன் குழுக்களின் பிதாமகன். இந்நாள் தாலிபான் மற்றும் காஷ்மீர் இயக்கங்களின் தீவிர ஆதரவாளர். அதேநேரம் பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிராக பேசி வரும் உயர்மட்டத் தலைவர். அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என அழைக்கப்படும் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக முஸ்லீம்கள் ஓரணியில் திரள வேண்டும், என்று முழங்கிவரும் கொள்கைப் பற்றாளர். அமெரிக்கா பாகிஸ்தான் அரசமட்டத்தில் தனக்கு எதிராக இருக்கும் இது போன்ற சக்திகளை ஓரங்கட்ட விரும்புகின்றது. அமெரிக்காவின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாத சர்தாரி போன்ற கையாலாகாத நபர்கள் ஆளவேண்டும் என எதிர்பார்க்கின்றது.

மும்பை தாக்குதலுக்கும், பாகிஸ்தான் அரசிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்தாலும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது அழுத்தம் பிரயோகித்து, தாலிபானுக்கு எதிரான போரை தொடர விரும்புகின்றது. அதேநேரம் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தாய்நாட்டை பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து, இந்தியாவை எதிர்த்து போரிட தயாராக உள்ளதாக தாலிபான் கொமான்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவினுள் ஊடுருவ ஆயிரக்கணக்கான தற்கொலைப் போராளிகள் காத்திருப்பதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஆகவே அப்படிட்ட போர் இன்று எதிரிகளாக உள்ள பாகிஸ்தான் இராணுவத்தையும், தாலிபானையும் ஒன்று சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் மும்பை தாக்குதல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும், அதற்காக பழிக்குப்பழி வாங்குதல் தீர்வாகாது, என்பது இருபக்க சமாதான விரும்பிகளின் கருத்து. "கண்ணுக்கு கண் என்று பழிவாங்க துடித்தால், உலகில் அரைவாசிப் பேர் கண்ணில்லாமல் இருப்பார்கள்." என்று கூறிய மகாத்மா காந்தி பிறந்த இந்தியா, இன்று பேரழிவு தரும் போர் வேண்டி நிற்கின்றது. இதுவரை பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும், அவை யாவும் சாதாரண உழைக்கும் மக்கள் கூடும் இடங்களில் நடந்ததால், "பாகிஸ்தான் மீது போர் தொடு" என்று அப்போது யாரும் கோரவில்லை. ஆனால் மும்பையில் உயர்வர்க்க மக்கள் கூடும் ஐந்து நட்சத்திர ஹொட்டேல் போன்றன தாக்கப்பட்டதும், உடனே அமெரிக்காவின் 9/11 தாக்குதலுடன் ஒப்பிடப்பட்டது. உள்துறை அமைச்சர் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அதுவும் போதாதென்று, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும், என்று இந்திய மத்திய தர வர்க்கம் தேசபக்தி கோஷம் எழுப்புகின்றது. அப்படியான போர் தொடங்கினால், மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை காட்டிலும், பலமடங்கு அதிகமான மக்களை பலி கொடுக்க நேரிடும் என்று யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

இது தொடர்பான முன்னைய பதிவு:
மும்பையில் அரங்கேறிய சதி நாடகம்


_______________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

5 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//"கண்ணுக்கு கண் என்று பழிவாங்க துடித்தால், உலகில் அரைவாசிப் பேர் கண்ணில்லாமல் இருப்பார்கள்." //

அப்படி என்றால் அவர்கள் என்ன செய்தாலும் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா? :((

அகரம் அமுதா said...

வணக்கம் நண்பரே! தங்கள் கட்டுரையின் இறுதிப் பத்திகளில் இருக்கும் உண்மைகளை மறுப்பதற்கில்லை. மேல்மட்டமக்கள் தாக்கப் படும் போது கவனத்தில் எடுத்துக்கொள்ளும் அரசு கீழ்மட்ட மக்கள் அன்றாடம் தீவிரவாதிகளின் துமுக்கிக்குப் பலியாவதைத் தடுக்கவும் தட்டிக் கேட்கவும் மறுத்தவண்ணம் மெத்தனப் போக்கைக் கடைபிடித்தே வந்துள்ளது. பொதுவாக இந்திய மக்கள் எல்லை தாண்டிய தீவிர வாதத்தை வெறுத்தொதுக்கிய வண்ணம் உள்ளனர். எளிய பாமரன் தீவிர வாதத்திற்குப் பலியானபோது அவர்களுக்கிருந்த வெகுளி மேல்தட்டு மக்களும் அத்தீவிர வாதத்தினால் கொள்ளப்படும் போது அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொது அவ்வேளையைச் சரியாகப்பயன்படுத்திப் போரே சரியான தீர்வு என முயங்குகின்றனர்.

எளிய காட்டு:-

ஓர் பந்தில் காற்றடிக்கிறோம். ஓர் எல்லையைக் கடந்தபிறகு இனியும் காற்றை உள்வாங்கிக் கொள்கிற தன்மையைப் பந்து இழந்து விடுகிறபோது அப்பந்து வெடித்துச் சிதறுகிறது. இவ்வளவு நேரம் வெடிக்காத பந்து இப்போது ஏன் வெடிக்கவில்லை என யாரும் கேட்பதில்லை. அதுபோல்தான் இந்திகழ்வும். பொதுவாக காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு அமைதிவழியில் செல்வதால்தான் இத்துணைச் சிக்கல்கள். இதே இஸ்ரேல் நாட்டில் இந்நிலையென்றால் அவர்கள் இத்தனைநாள் காத்திருக்க மாட்டார்கள். முதலில் போர் தொடுத்துவிட்டே பிறகு நாளேடுகளுக்குப் போஸ் கொடுப்பார்கள்.

அகரம்.அமுதா

Kalaiyarasan said...

வணக்கம், எல்லோரும் இந்திய பக்கத்தில் இருந்தே பிரச்சினையை பார்க்கிறார்கள், அல்லது அப்படி சிந்திப்பதற்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்துவது போலவோ, அல்லது அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது போலவோ இந்த பிரச்சினையை பார்க்க முடியாது. இஸ்ரேலின் இராணுவ வலிமைக்கு முன்னால் பாலஸ்தீனியர்களோ, அல்லது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆப்கானிஸ்தானோ எதுவும் திருப்பி தாக்க முடியாத அளவு பலவீனமானவை. ஆனால் இந்திய, பாகிஸ்தான் பிரச்சினை அப்படியல்ல. இரு நாடுகளையும் பேரழிவு தரும் போரினும் தள்ளி விடும். இந்தியா தாக்கினால் பாகிஸ்தானியரின் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்களும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து தாக்கப் போகிறார்கள்.

இப்போதுள்ள பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கா விட்டால், பொது மக்கள் ஆதரவு தாலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்கள் பக்கம் திரும்பும். இந்தியா இன்று யாரையெல்லாம் மும்பை தாக்குதலுக்கு காரணம் என்று சொல்கின்றதோ, அவர்கள் பாகிஸ்தானில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினால் எப்படியிருக்கும்? அப்படியான நிலைமை மும்பையில் ஏற்பட்ட அழிவை விட பல மடங்கு அதிக அழிவு இந்தியாவிற்கு ஏற்படுத்தும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆயுத விநியோகம் செய்ய பல நாடுகள் காத்திருக்கின்றன. ஒரு பக்கம் இந்தியாவுக்கும், மறு பக்கம் பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா ஆதரவு வழங்கும். ஏனெனில் பாகிஸ்தானில் தாலிபான் கை ஓங்குவது அமெரிக்க நலன்களுக்கு எதிரானது. இதனால் கடைசியில் யாருமே வெல்லப் போவதில்லை. மனித அழிவுகள் தான் மிஞ்சும்.

பிற்குறிப்பு: 9/11 தாக்குதலை காரணமாக காட்டி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்னமும் போரில் வெல்லவில்லை. ஒரு காலத்தில் விரட்டப்பட்ட தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்குமளவிற்கு பலம் பெற்று வருகின்றனர். பாலஸ்தீனிய தீவிரவாத தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் இஸ்ரேல் கூட அறுபது ஆண்டு கால முடிவுறாத போரினுள் சிக்கியுள்ளது. பிரச்சினையை பேசித் தீர்க்குமாறு தான் சர்வதேச சமூகம் இன்று வரை இஸ்ரேலுக்கு அறிவுறுத்தி வருகின்றது.

வாசுகி said...

//கண்ணுக்கு கண் என்று பழிவாங்க துடித்தால், உலகில் அரைவாசிப் பேர் கண்ணில்லாமல் இருப்பார்கள்.//
உண்மை தான் .
அனால் எல்லோரும் பழுவாங்கும் மனதுடன் தான் இருக்கிறார்கள்.

உயர்மட்ட தலைவர்கள் இதனால் பாதிக்கப்பட போவது இல்லை.
பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான். போர் என்று ஒன்று ஆரம்பித்தால் அதற்கு முற்றுப்புள்ளி இடுவது ரொம்பவே கடினம்.
முடியுமான வரை சமாதானமாக இருப்பது எல்லோருக்கும் நல்லது. ஆனால் எல்லை என்று ஒன்றும் இருக்கிறது.

malar said...

உங்கள் தகவல்கள் படிக்க பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் இருக்கிரது.தகவல் எல்லாம் உண்மையானதாக இருக்க வேண்டும்.தயவு செய்து உண்மைக்கு புறம்பாக எளூதாதிர்கள்.